ஏசுக்கள் கொண்டாடிய கிருஸ்மஸ்

*

தச்சன் வாழ்வை முறிக்க கடலில் குதித்தான்…

மரச்சீவல் போல சுழலலைகள்

அவனை உருட்டி விளையாடின..

தமுருகூடாகிய உடலை இழுகயிறு சுற்றி

சுண்டி இழுத்தது சூறாவளிக் காற்று…

விண்ணுயரப் பறந்தான்…

வானில் மிதந்த நாள்மீன் கடலில் நீந்த

ஆசைப்பட்டு மின்னலாக விழுந்தது… 

முட்தோதலிகளின் மூதாயரைக் கண்ட நொறுங்கு வீண்மீன்கள்…

அவனும் கண்டான் கடவுளை…

அவர் இவனைப் புதுவாழ்வுக்கு வித்திட்டார்…

மட்டம் சரி பார்க்கச் சொல்லி பலகை ஒன்று

இவனிடம் கெஞ்சி வேண்டியது..

அதனைத் தொற்றிக் கரை அடைந்தான்…

மரத்துண்டில் மடித்து அடிக்கப்பட்ட ஒராயிரம் ஆணிகள்…

அனைத்தையும் கொரடு வைத்துப் பிடுங்கி எறிய எறிய…

ஏசுப்பிரான்கள் பிறந்தார்கள்…

அவர்களோடு கடற்கரையில் உலாவினான்…

கூடவந்த அனைவரிகளின் கைகளில் அரத்தால் வருவின

கூர்மிகு இரும்புத் துண்டுகள் சொருகி இருந்தது…

நஞ்சாகிய  ஆயுள்ரேகைகள்…

பல்லாயிரம் திசையறிந்த மணிக்கட்டுகள்

முறிந்த கிளை போல் தொங்கியது…

பாரபாஸ் நிம்மதி பெருமூச்சுவிட்டான்…

இவை யாவும் நீ நாளை அணியும் புத்தாடைக்கும், புளித்த

திராட்ச்சை ரசத்திற்க்கு மட்டுமே…!!!

—————————————————————————————

வேட்டைக்காரர்கள்  

*

தன் பசிக்கு வைத்திருந்த ஒத்தக் கனியைத் திருடித் தின்ற எலியைத் துரத்தினாள்…

அவளது ஊரை வாடகைக்கு எடுத்த பிணக்கிடங்குவைக் களைத்தும்

அவளால் கண்டுடைய முடியவில்லை…

கடைசி குண்டு பயனற்று போன பீராங்கியில் அது குடியிருந்தது…

தனது அப்பா,அம்மாவை பொளந்த பெரிய அருவா அது…

அதனை நெருங்கவே அவளுக்கு மூத்திரமும் குருதியும் கசிந்தது …

பிய்ந்த பூட்ஸ்களால் சுரண்ட சுரண்ட கொட்டியது

செதில்கள் போல் அவள் உடலில் ஒட்டியிருந்த ரெத்த விளிர்கள்…

தம்பியின் நெஞ்சில் பதிந்த 9வது நம்பர் வலதுகால் பூட்ஸ்…

அவனது கண்ணாமூச்சி விளையாட்டில் தொலைந்தவள் …

நிசப்தம்  ஏங்கி இரத்த எண்ணெய் சுமந்த ஆற்றில் குதித்தாள்…

அம்மாவின் ரப்பர் செருப்பைக் åகவ்வி உயிருக்குப் போராடிய பூனையை மீட்டாள்…

இருவரும் வேட்டையாட சென்றார்கள்…

——————————————————————————————

மூடப்பட்ட கிணறு   

*

எந்தத் தாத்தான் கண்ட ஊற்று

என் தாத்தான் கொடுத்த

கிணற்றை அகலம் படுத்தினோம்

கான்கிரீட்டால் புதுபிக்கப்பட்டது வீடு

மோட்டர் முழ்கியது

நெல் வெந்து கொண்டே இருந்தது

பத்தாயமில் பாம்பு குட்டிகள் கூடின

ஆற்றில் பிடித்த மீனை வளர்த்தேன்

உள்நீச்சல் வீரன் ஆனேன்…

ஊர் முழுவதும் சோளக் காடு

ரேகை தெரிந்தன வயற்காட்டில்

இடம்பெயர்ந்தன கீரிகள்

பலூனாக மிதந்தார் அப்பா

கயிற்றைக் கட்டி இழுத்தோம்

வாக்கரிசிக்கு மடி எந்தினோம்

களத்தில் போலீஸ்கள் வங்கி அதிகாரிகள்

குடிப்பெயர்ந்தோம் கிணற்றுக்கு

துர்வாரப்படமால் மூடப்பட்டது…

—————————————————————————————

மோட்சம் வேண்டி அம்மன்

*

கிழக்கு வாசலை வேகமாக மூடினார் பூசாரி

பூங்கரகத்திற்கு கத்திப் போட்ட மலையபெருமாள்

இறுதியாக கோவிலைக் கடக்கிறான்

அம்மன் சாத்திய கதவின் சாவித் துவாரம் வழியே பார்க்கிறாள்

அவளை விட அவனுக்கு மாலைகள் அதிகம்

கொள்ளிச்சட்டி தூக்கிய சிறுவனின் கைகளில் இன்னும் ஆறாத தீப்புண்கள்

இருவரும் சேர்ந்து பூக்குழியில் தவறி விழுந்தவர்கள்

ஆறு மாதம் படுக்கையில் பிழைத்தவன் சிறுவன் மட்டுமே

தாலி அறுத்தவளின் சாபத்தைக் காது கொடுத்துக் கேட்க முடியமால்

அம்மன் கடைசி ஆளாக ஊர்வலத்தில் சென்றாள்

களிமண்ணைப் பூசி விறட்டியைப் பற்ற வைத்துப் புகை மூட்டினார்கள்

மலையபெருமாளை

அனைவரும் சென்ற பின் தீ மித்தாள் அம்மன் !!!

——————————————————————————————

பிஞ்சு நொண்டிக்கருப்பன்

*

எப்போதும் அவன் உடலில் பிராந்தி துளிகளின் கோர்வை

மணமேடையில் உணர்ந்தாள் அங்களம்மா…

நடுச்சாமத்தில் தொடங்கி நடுபகல் வரை ஆடிய கால்களும் ஆடிய கைகளும்

கதவின் நிழல்கள்…

காலி ஊறுகாய்ப் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கப்கள்

புகுந்த வீட்டு வாசலின் கோலங்கள்…

பூசணிப் பூ தேவைப்படவில்லை…

பாட்டிலுக்கு 30 ரூபாய் கூடுதல் விலை குடும்பத்தின்

நல்லது கெட்டதுக்கு

தினமும் ஒரு பாட்டில் கருப்பனுக்குக் காணிக்கை

வானம் நிலாவை உள்வாங்கிய அன்று இவளின் பெருபூசை…

கருவுற வேண்டி சகோதரனிடம் சண்டையிட்டு

வாங்கி வந்த  வெள்ளாடு கருப்பனை முறைத்தது…

ஆட்டின் உயரமுள்ள அருவாவின் கூர்முனைகளை 

பூசாரி  சோதனையிட்டான்…

பிய்ச்ச ரத்தங்களை வாரி அள்ளி மிளகைத் தூவி வறுத்து

புருசனை முறுக்கு ஏத்தினாள்…

நொண்டிக் கருப்பனை அச்சு அசலாக நகலெடுத்தாள்…

கோவிலைச் சூரையாடினாள் , அழுதாள், நிர்கதியானாள்..

தட்டிக் கேட்க, குடும்பத்தை நிலை நாட்ட பிறந்தவன்

நொண்டி கருப்பனானென்று…

அப்பா கொடுத்த மரப்பாச்சி குதிரை வேட்டைக்குத் தயாரானது

தனது மகனின் கையில் வாசலில் கிடந்த பாதிச் சுருட்டைப் புகுத்தினாள்…

வேறு வழியின்றி நெடுசாண் வென விழுந்தாள்…

விபூதியைத் தூவினான் செல்ல மகன்…

——————————————————————————————

சீதா காலிங் இரவாணன்   

*

கைதான ராமை விடுதலை செய்ய வேண்டி விண்ணப்பமிட்டாள் சீதா

நீதிபதி தர்க்க காரணங்களைக் கேட்டு நோட்டீஸ் விட்டார்

பதில் மனு எழுத அனுமனை நாடினாள்

கொளுந்து எரியும் நாட்டிலில் பேப்பர், மை கிடைக்கமால்

திணறினான்…

சீதா என்று அறியாத சில சீடர்கள் அவளின் கொங்கை

அளவை அளக்க சேலையை உறுவினார்கள்

அவளின் குருதியைச் சிவப்பு மையெனக் கருதி ,

கிழிந்து காணப்பட்ட வெள்ளைப் பட்டுத் துணியில்

சீதாவைத் தேடிக் கிடைக்காமல் அவள் சொன்னதை எழுதினான்…

ராம் பல கொலைகளை வேடிக்கை மட்டும் பார்த்தார்

பாத யாத்திரையோ, செங்கல்களையோ அவர் கேட்கவில்லை

ராமை தூங்கவிடமால் எப்போதும் ஓலங்கள்

ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் கோஷங்கள் எங்களைப்

பதற்றம் ஆக்கின

நீதிபதி ராமை விடுதலை செய்தார்

சீதையைத் தேடி அனுமனுடன் பறந்தான்

எண்ணற்ற பெண்களின் நிர்வாண கோலங்கள்

அதன் மையத்தில் சீதா கதறினாள்

மீண்டும் நடத்தையைச் சந்தேகித்து அவளை

உடன்கட்டை ஏறச் சொன்னான்

இரவாணனை அழைத்தாள் சீதா…

———————————————————————————————

மீச்சமன ஆணி   

*

சிலுவையின் அருகிலிருந்த ஆணிகளைப் பொறுக்கினாள்

தனது வீட்டில் கை உடைந்திருந்த மர ஏசுவைச் சரி செய்ய…

——————————————————————————————-

சதையால் ஆன பொம்மை

*

நீலநிற உடை அளவு கொஞ்சம் பெரியது

தொள தொளவெனத் தொங்கியது

காட்டுப்பன்றிகள் உறுமல் இல்லை

சோலைகள் கொஞ்சல் உரசல் இல்லை

கொப்பரைத் தேங்காய் விழும் சத்தம் இல்லை

பூச்சிகளின் ரீங்காரம் இல்லை

வாய்க்காலில் நீந்தும் பாம்புகளின் அலசல் கேட்கவில்லை

சைரன் சத்தம் கேட்டு தடுமாறி எழ

எ.டி.எம் வருகை பதிவில் காக்கி கையொப்பம் இட்டார்

அவரின் பூட்ஸ் தேய்மானம் சத்தம் காதை கொய்ங்கனது

சதையால் போர்த்தப்பட்ட சோளக்காட்டு பொம்மை

ரோந்தில் மஞ்சள்,சிவப்பு விளக்கொளியில்

கழிந்தன முதலிரவு

——————————————————————————————

நல்லாசிரியர்

*

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ பாடம் எடுத்த ஆசிரியர்

அவசரம் அவசரமாக கிளம்பினார் சாதி சங்க மாநாட்டிற்கு

வாழ்த்துரையில் தலைவரின் பேனரைக் கிழித்தவனை,

கடுங்சொற்களில் வசைப்பாடினார்…

மணிக்கு ஒரு முறை ஆசிரியர் பேசிய

வீடியோவைப் பார்க்கிறான்,

சேரியில் அரிவாளுடன் திரிகிறான்

கையில் கலர் கயிறு கட்டியிருக்கும்

முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன்

சக மாணவனின் வீட்டைக் கொளுத்துகிறான்

———————————————————————————-

கடும்பசி

*

பசித்த வயிறுகளுக்காக சீமக்காட்டில்

அலைந்து திரிந்து பெருத்த பன்றியை

வேட்டையாடி வறுவலிட்டு குடும்பாக உண்டார்கள்.

அடுத்த நாள் இறந்த பன்றியின்

சந்ததி இவர்களின் வருகைக்காக

காத்திருந்தது அதன் உணவுக்காக.

———————————————————————————-

ஆசிர்வதிக்கப்பட்ட உடல்

*

துப்பாக்கித் துளையிட்ட வழியில் புகுந்த சூரியன் சிறுமியின் தூக்கத்தைக் கலைத்தது

அவளோ !!!

பதுங்குக் குழியை ஒழுங்குபடுத்திச் சமைக்கத் தொடங்கினாள்…

மூதாதையர்களின் எலும்புத் துண்டுகளை விறகாக்கினாள்…

புகைமூட்ட, பக்கத்தில் இருந்த பைபிளைக் கிழித்தாள்…

அவளது உள்ளங்கையில் குடியிருந்த தோட்டா ஒன்று விழுந்தது…

சிந்திய இரத்ததைத் துடைக்க உதவிய தாளில் பொறிக்கப்பட்டிருந்தது

 “நீ ஆசிர்வதிக்கப்பட்ட உடலென்று..!!!”

 ஆமென்…

*

———————————————————————————

சதீஷ் கிரா

எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள துறையூர். கோயம்புத்தூரில் பொறியியல் படித்தேன். தற்போது சினிமாத் துறையில் பணியாற்றி வருகிறேன். இலக்கிய வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *