நெல்லை டவுனிலிருந்து குன்னத்தூர் நோக்கிச் செல்பவர்களை முதலில் வரவேற்பது வாய்க்கால் பாலத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆதம்ஷா ஒலியுல்லாஹ் தர்கா தான். டவுனிலிருந்து  வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த போதிலும் குன்னத்தூரி்ல் வற்றாமல் ஓடும் வாய்க்காலும் பசுமையான வயல்வெளிகளும் வேறொரு உலகத்திற்கு  வந்துவிட்டது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். ஆதம்ஷா தர்கா வளாகத்தில் சாமியானா பந்தல் அமைப்பதிலும் ட்யூப் லைட் கட்டுவதிலும் வேலையாட்களும் ஊர்க்காரர்களும் மும்முரமாக  ஈடுபட்டுக் கொண்டிருக்க அதே அளவிலான பரபரப்புடன் காணப்பட்டது குன்னத்தூரின் வாய்க்கால் பாலம் தாண்டி வலது புறம் அமைந்துள்ள பஷீர் பாயின் பெரிய வீடு. 

மூன்று மாதத்திற்கு முன்பு வரை எப்பொழுது அந்த வீட்டைக் கடந்தாலும் வராந்தாவில் பழைய மர நாற்காலியில் அமர்ந்தபடி  செய்தித்தாள்களையும் கதைப் புத்தகங்களையும் படித்துக் கொண்டிருக்கும் பஷீர் பாயை காணும் வாய்ப்பு கிட்டியிருக்கும்.  தினசரி அவரது வீட்டைக் கடந்து செல்லும் விவசாயக் கூலியான  கண்ணையாவிலிருந்து கலெக்டர் ஆபீஸில் வேலை செய்யும்  சையது பாதுஷா வரை ஒரு நொடி அந்த வீட்டு வாசலில் நின்றோ அல்லது தான் செல்லும் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தோ  அவரைப் பார்த்துபுன்னகைத்து விட்டுத் தான் கடந்துசெல்வார்கள்.  பதிலுக்கு அவரும் சலிக்காமல் புன்னகைப்பார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென்று ஏற்பட்ட உடல் உபாதைகளாலும் மாரடைப்பாலும் பஷீர் பாய் இறந்துவிட்ட பிறகும் கூட  இன்றும் அந்த மர நாற்காலி இடம் மாறாமல் அங்கேயே வைக்கப்பட்டிருக்கிறது. தினமும் அவரது புன்னகையை பெற்றுப் பழகிப்போனவர்கள் இன்றும் அவரது வீட்டு வாசலில் நின்று அந்த வெற்றிடமான மர நாற்காலியைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி நகர்வார்கள். இன்னும் சிலர் அவர் இட்டுச் சென்ற வெற்றிடத்தை   எதிர்கொள்ள மனம் இல்லாமல் வேகமாக அவருடைய வீட்டைக் கடந்து செல்வார்கள். குன்னத்தூரில் கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன்பு வசதிக் குறைவான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்த பஷீர் பாயால் வறுமையின் காரணமாக  பள்ளிப்படிப்பிற்கு பிறகு தன்னுடைய கல்வியைத்தொடர முடியாமல்  போனது. உறவினர் ஒருவரின் சிபாரிசின் பேரில் மின்சார வாரியத்தில் மின் கம்பங்களுக்குக் குழி தோண்டும் வேலையில்  சேர்ந்த பஷீர் பாய் அதற்குப் பிறகு தான் சிறுக சிறுக சேமித்த பணத்தில் விட்டுப்போன தன்னுடைய படிப்பைத் தொடர்ந்து பட்டம் பெற்று அதே மின்சார வாரியத்தில் அக்கௌன்ட்டண்ட்டாக பணியில் சேர்ந்தார். தன்னுடைய நாற்பதாவது வயது வரை சிறிய தட்டோடிட்ட வீட்டில் தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவர் காதுகளுக்கு வாசிம் ஹாஜியார் தன் கடன்களை அடைப்பதற்காகத் தன்னுடைய பெரிய வீட்டை விற்கப் போகும் தகவல் எட்டிய போது தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் வாங்கி பணத்தைப் புரட்டி  அந்த வீட்டை வாங்கினார்.

நீங்கள் பஷீர் பாயின் உருவத்தைக் கற்பனை செய்து கொள்ள முயன்றால் ஆறடிக்கு ஓர் அங்குலம் குறைவான உயரத்துடன்  வெளுத்துப்போன அதே சமயம் அடர்த்தியான தலைமுடி மற்றும் தாடியுடன் லேசான தொப்பையுடன் கன்னங்கள் சுருங்கிப் போன ஒரு முதியவரைக் கற்பனை செய்து கொள்ளலாம். எதிரில்  வருபவர்களுக்கு கொடுப்பதற்காக எப்போதும் உதட்டோரத்தில் சிறிய அளவிலான புன்னகையை மிச்சம் வைத்திருப்பார். சட்டமன்றத் தேர்தலில் தொடங்கி கிராம ப்ரெசிடெண்ட் தேர்தல் வரை குன்னத்தூருக்குப் பிரச்சாரம் செய்ய வருபவர்கள் எப்போதும் பஷீர் பாயின் வீட்டிலிருந்தே வாக்கு சேகரிக்கத் தொடங்குவார்கள். அவர் வெளிப்படையாக யாருக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை என்ற போதிலும் அவருடைய அபிமானம் இருந்தால் அங்கிருக்கும் மற்ற இஸ்லாமிய மக்களின் வாக்கு வங்கியை அடைவது எளிது என்பது அவர்களது மனக்கணக்கு. படிப்பறிவில்லாமல் இருந்த அந்த கிராமத்தில் முதன்முதலாக இளங்கலைப் பட்டம் பெற்று அரசாங்க வேலையில் சேர்ந்திருந்த பஷீர் பாயைப் பார்த்து ஊக்கம் பெற்று  படித்தவர்களும் அரசாங்க வேலைக்குச் சென்றவர்களும் பலருண்டு.  

தீவிரமான காங்கிரஸ்காரரான பஷீர் பாய் இந்திரா காந்தியின் மீதிருந்த அபிமானத்தால் தனக்குப் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு ஷாஜிதா காந்தி என்று பெயர் சூட்டினார். ஹிந்தி படங்களை விரும்பிப் பார்க்கும் அவர் தனக்குப் பிறந்த இரண்டாவது பெண் குழந்தைக்கு அந்த சமயத்தில் அவருக்கு மிகவும்  பிடித்துப்போன பிரபலமான “லைலா ஓ லைலா” என்ற ஹிந்தி பாடலை மனதில் வைத்து லைலா என்று பெயர் சூட்டினார்.  இவ்வளவுதான் பஷீர் பாய், தன் மனதில் படும் விஷயங்களை   எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்து முடிப்பார். ஒவ்வொரு பக்ரீத்திற்க்கும் தவறாமல் குர்பானி கொடுக்கும் பஷீர் பாய் அந்த ஆட்டிறைச்சியை  மத பேதமின்றி தலையாரி சதாசிவத்திலிருந்து  செங்கல் சூளையில் வேலை செய்யும் வெள்ளைச்சாமி வரை ஊரில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து மகிழ்வார்.

“ஏன் பாவா, குர்பானி கொடுத்த கறிய நம்ம ஆளுகளுக்கு மட்டும் கொடுக்கிறத விட்டுட்டு எல்லா பயல்களுக்கும் குடுக்கீயலே இது நல்லாவா இருக்கு.” என்று அந்த ஊரில் இருக்கும் சில அதி தீவிர இஸ்லாமியர்கள் கேட்கும்போது

“எல்லாரும் மனுஷனுங்க தானேடே.” என்பார் கண்களைச் சிமிட்டி  புன்னகைத்தபடி. அதற்கு மேல் அவரிடம் எதிர்க் கேள்வி கேட்பதற்கு யாரிடமும் தைரியம் இருக்காது. இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் நாய் வளர்க்கக்கூடாது என்ற பரவலான கருத்து இருந்த போதிலும்  அதைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய நண்பர் அன்பளிப்பாக அளித்த ஒரு ஜெர்மன் செப்பர்ட் நாய்க்குட்டியை வீட்டில் வளர்த்து வந்தார் பஷீர் பாய்.

“இந்த கொடுமைலாம் எங்கேயாச்சும் நடக்குமா, அஞ்சு வேளை தொழுவுற வீட்ல நாயை வளர்க்கலாமா, நீங்களாச்சும் கேட்க கூடாதா.” என்று அந்த ஊரில் உள்ள பெண்கள் பஷீர் பாயின் மனைவி மரியம் பீவியிடம் சொல்லும்போது

“யா அல்லா,  எனக்கு எதுக்கு வம்பு, ஏதோ ஆசைக்கு செய்றாரு செஞ்சிட்டு போகட்டும்.” என்றபடி பதிலுக்குப் பின் வாங்குவாள்.

“பொட்ட புள்ளைகளுக்கு என்னத்துக்குக்கா படிப்பு, நல்ல எடத்துல மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறத விட்டுட்டு எதுக்கு இந்த வேண்டாத வேல.” என்று ஊர் பெண்கள் தூண்டிவிட்டதன் பேரில்  பஷீர் பாயிடம் சென்று இதே கேள்வியை கேட்டாள் மரியம் பீவி.

“எந்த மூதி சொன்னா பொட்ட புள்ளைங்க படிக்க கூடாதுன்னு, இந்திரா காந்தியும் பொம்பள தானே அவங்க படிக்கலயா.” என்று அவர் காட்டமாகப் பதில் சொன்ன பிறகு மீண்டும் அதைப்பற்றி அவரிடம் பேச அவளுக்குத் தைரியம் எழவில்லை. இரண்டு மகள்களையும் கல்லூரி வரை படிக்க வைத்த பஷீர் பாய்  வசதியான படித்த குடும்பத்தில் அவர்களைத் திருமணமும் செய்து  கொடுத்து பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார். அதற்கு பிறகு ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் பஷீர் பாயின் வீடு விழாக்கோலம் பூண்டிருக்கும். பேரப்பிள்ளைகள் சூழ்ந்து அமர்ந்தபடி பழைய எம்ஜிஆர் திரைப்படக் கதைகளைச் சொல்வது அவருக்கு ஒரு புது விதப் பொழுதுபோக்காகவே மாறிப் போனது. விடுமுறை முடிந்து ஊர் திரும்பத் தயாராகும் போது பேரப்பிள்ளைகளின் முகங்களைக் காட்டிலும் அவரது முகமே சோகத்தில் அதிகம் வாடியிருக்கும்.

தன்னுடைய பணி ஓய்விற்குப் பிறகு புத்தகம் படிப்பதிலும்  திரைப்படங்கள் பார்ப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகரிக்க அதற்குள் மூழ்கிப் போனார். கடந்த பத்து வருடங்களில் குடும்பப் பொறுப்புகளாலும் பணிச்சுமையாலும் மகள்களும் பேரப்பிள்ளைகளும் அவரை பார்க்க வருவதைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ள அப்போது தன்னை சூழ்ந்த வெற்றிடத்தையும் தனிமையையும் எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக்கொண்டார் பஷீர் பாய். தான் சார்ந்திருந்த மதத்தின் மீதும் வழிபாடுகளின் மீதும் பெரியளவில் ஆர்வம் காட்டிராத போதிலும் குன்னத்தூரின் ஆதம் ஷா ஒலியுல்லாஹ் தர்காவில் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் சந்தனக்கூடு விழாவை அதீத ஈடுபாட்டுடன் முன்னின்று சிறப்பாக நடத்திக் கொடுப்பார் பஷீர் பாய். குன்னத்தூரிலிருந்து நாட்டின் பல்வேறு மூலைகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் அவர்களது சந்ததிகளும் அன்றைய தினம் தர்காவில் ஆஜராகி விடுவார்கள்.

தர்கா வளாகத்தில் இருக்கும் அறுபது அடி உயரப் புளிய மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பழைய பச்சை நிற கொடியை கழற்றி கீழே இறக்கிவிட்டு  புதிய கொடியை ஊர்வலமாக எடுத்து செல்வார்கள். முதலில் பஷீர் பாய் வீட்டிற்குக் கொண்டு வரப்படும் புதிய கொடி சந்தனம் தெளிக்கப்பட்டுப் பின் ஆலிம்களால் தூஆ ஓதப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அந்த சமயத்தில் தர்காவில் கூடியுள்ள அனைவருக்கும் அவரது வீட்டில் தயார் செய்து கொண்டுவரப்பட்ட மலிதா எனப்படும் ஒருவகை இனிப்பு பரிமாறப்படும். ஊர்வலம் முடிந்து மீண்டும் தர்காவிற்கு எடுத்து வரப்படும் கொடியை வரவேற்பதற்காக  மேலப்பாளையத்திலிருந்து அழைத்துவரப்பட்ட வெள்ளை ஜிப்பாவும் பச்சை தலைப்பாகையும் அணிந்த பத்திற்கும் மேற்பட்ட பக்கீர்கள்  தங்களுடைய கைகளில் இருக்கும் டப்லி எனப்படும் பார்ப்பதற்குப் பறையைப் போன்ற தோற்றம் கொண்ட இசைக்கருவியை இசைத்துப் பாடுவார்கள். பிறகு அந்த ஊரில் இருக்கும் இளவட்டங்களின் உதவியோடு அந்தக் கொடி மீண்டும் அதே புளிய மரத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கட்டப்பட்டதுடன் விழா நிறைவடையும். இவ்வாறாக வருடத்திற்கு ஒருமுறை புளிய மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் கொடி மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய கொடி ஏற்றப்படும். மொத்த விழாவும் முழுவதுமாக நிறைவடையும் வரை பக்கீர்கள் தங்களுடைய பாடலையும் இசையையும் விடாமல் தொடர்ந்து கூடியிருப்பவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பார்கள். அன்றைய நாள் இரவு ஊரில் உள்ள அனைவருக்கும் பஷீர் பாய் வீட்டில் பெரிய விருந்து காத்திருக்கும்.  தனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே சந்தனக்கூடு விழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் பஷீர் பாய் தனது இருபத்தி ஆறாவது வயதிலிருந்து ஒவ்வொரு வருடமும் விழாவை முன்னின்று நடத்திவருகிறார். அலுவலகப் பொறுப்புகளையோ உடல் உபாதைகளையோ காரணம் காட்டி விழா ஏற்பாடுகளிலிருந்து அவர் என்றுமே பின்வாங்கியதில்லை.

“ஏன்  மாமா இன்னும் என்னத்துக்கு அந்த புளிய மரத்துல அவ்ளோ கஷ்டப்பட்டு ஏறி உச்சில கொடி கட்டணும்..மத்த ஊரு ஜமாத்துக்காரங்க மாதிரி நாமளும் ஒரு கொடி கம்பம் நட்டு அதுல வருஷா வருஷம் கொடி ஏத்தலாம்ல.” என்று  அவருடைய  அக்கா மகன் மஜீத் கேட்டபோது

“என்னடே கோட்டி பயலாட்டம் பேசுத, அது எங்க தாத்தா நட்டு தண்ணி ஊத்தி வளத்த மரம், அவர் காலத்துல தான் அந்த மர உச்சியில கொடி கட்ட ஆரம்பிச்சோம், அதுக்கப்புறம் இப்போ வரைக்கும் அந்த மரத்துல தான் கொடி கட்டுறோம், இனிமேயும் அங்க தான் கட்டுவோம், வெவெரம் புரியாம என்னத்தையாச்சு பேசிகிட்டு திரியாத.” என்றபடி தன்னுடைய மர நாற்காலியிலிருந்து எழுந்து கோபத்துடன் துண்டை உதறியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார் பஷீர் பாய்.

மகள்களும் பேரப்பிள்ளைகளும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சந்தனக்கூடு விழாவில் கலந்து கொண்ட போதிலும் மகள்கள், பேரப்பிள்ளைகள், மருமகன் மார்கள் என்று அனைவரையும் ஒரே நேரத்தில் கூட்டி விழாவை விமரிசையாக நடத்த வேண்டும் என்ற பஷீர் பாயின் ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போனது.

அந்தக் குற்ற உணர்ச்சி தனக்குள் இருந்ததாலோ என்னவோ மூன்று மாதத்திற்கு முன்பு அவர் இறந்தபோது மௌத்திற்காக கூடியிருந்த  மகள்களும் மற்ற உறவினர்களும் அவருடைய ஆசைப்படி இந்த வருடச் சந்தனக்கூடு விழாவை முன்னின்று சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும் என்று தனக்குள் முடிவு செய்து கொண்டனர்.

“இங்க பாரு லைலா பாவா இருக்கும்போது எப்படி நடந்துச்சோ அதே மாதிரி சிறப்பா இந்த வாட்டி சந்தனக்கூட நடத்தி  முடிச்சிரணும்டி…” என்று  மூத்த மகள் ஷாஜிதா காந்தி சொன்னபோது அதை எந்த மறுப்புமின்றி ஆமோதித்தாள் இளைய மகள் லைலா.

திட்டமிட்டபடியே விழா தொடங்குவதற்குப் பத்து நாட்களுக்கு முன்னரே ஊருக்கு வந்து விழா முன்னேற்பாடுகளை சிறப்பாகச் செய்து முடித்திருந்தனர் பஷீர் பாயின் மகள்களும் மற்ற உறவினர்களும். வழக்கம் போல புளிய மரத்தின் உச்சியிலிருந்து  பழைய பச்சை நிற கொடி கழற்றி கீழே இறக்கப்பட்டு புதிய கொடி மக்கள் சூழ பஷீர் பாயின் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அங்கே ஆலிம்களால் சந்தனம் தடவி ஓதி முடிக்கப்பட்டதும் அந்த கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தர்காவில் கூடியிருப்பவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தயார் செய்து வைத்திருந்த மலிதாவுடன் வீட்டில் இருந்தவர்கள் தர்காவிற்குக் கிளம்பத் தயாரான போது வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான் பஷீர் பாயின் அக்கா மகனான மஜீத்

“ஏன்பா, தர்கா காலியா கெடக்கு, மேலப்பாளையத்து பக்கீருங்க ஒருத்தர கூட காணலயே, அவுங்களுக்கு தகவல் சொன்னீங்களா இல்லையா.” என்று அவன் சொல்லி முடித்த மாத்திரத்தில் ஷாஜிதாவும் லைலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அத்தனை ஏற்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்த அவர்கள் விழாவின் முக்கிய சம்பிரதாயத்தை மறந்தது சுற்றியிருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும்  தான் பெரிய குறை வைத்து விட்டது போன்ற ஒரு குற்ற உணர்ச்சி அவர்களுக்குள் எழுந்து சோர்வடையச் செய்தது.

“காலங்காலமா நடந்துட்டு இருக்குற வழக்கம்…சரியா பாத்துருக்க வேணாமா…பக்கீருங்களோட பாட்டும் தாளமும் இல்லாம கொடிய தர்காவுக்கு கொண்டு வந்தா பாக்குறதுக்கு நல்லாவாடே இருக்கும்..” என்று கூட்டத்திலிருந்த மற்றொரு பெரியவர் சொன்னதும் அதுவரை  ஷாஜிதாவையும் லைலாவையும் இயக்கிக் கொண்டிருந்த துடிப்பும் உத்வேகமும் மறைந்து போக தர்காவிற்கு செல்ல மனமில்லாமல் இருவரும் அடுப்பங்கறையில் போய் உட்கார்ந்து கொண்டனர். சுற்றியிருந்த மற்ற உறவினர்கள் அவசரமாக பக்கீர்களை ஏற்பாடு செய்ய தனக்குத் தெரிந்த வழிகள் மூலமும் வேண்டியவர்கள் மூலமும் முயன்றபோதிலும் எதுவும் பலனளிக்காமல் போனது.

“ஏ மக்கா, விடுங்க டீ பாவா இல்லாம மொத வாட்டி செய்றீக முன்ன பின்ன இருக்கதான் செய்யும். இதுக்கெல்லாம் இப்புடி இடிஞ்சு உட்காரலாமா, எந்திரிச்சு வாங்கடி போலாம்…” என்று  பஷீர் பாயின் ஒன்றுவிட்ட தங்கையான சகுபர் நிஷா சொன்ன போதும்  அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருவரும் உடைந்து போய் உட்கார்ந்திருந்தனர். பாலில் விழுந்த ஒரு துளி நஞ்சை போல் விழா ஏற்பாட்டில் நடந்த சிறிய கவனக் குறைவு பெரிய மனக்குறையாக மாறி விழா கோலம் பூண்டிருந்த வீடு நொடியில் நிசப்தமாகிப் போனது.

அடுத்த சில நொடிகளில் முழங்கால் வரை நீண்டிருந்த வெள்ளை ஜிப்பாவுடனும் கையால் நெய்யப்பட்ட பச்சை நிற தொப்பியுடனும் முகம் முழுவதும்  தாடியுடனும் சற்றே கூன் விழுந்த  முதுகுடனும் சிரமப்பட்டு நடந்தபடி பஷீர் பாய் வீட்டு வராந்தாவை அடைந்திருந்தார் அந்த முதியவர். அதுவரை யாரும் முன் பின் பார்த்திராத அந்த அடையாளம் தெரியாத முதியவரை பஷீர் பாயின் பேரப்பிள்ளைகள் நெருங்கியபோது

“பஷீர் பாயோட மக்கள பாக்கணும்.” என்று மெல்லிய குரலில்  இருமல் சத்தத்துடன் பதிலளித்தார். சுற்றி இருப்பவர்கள் எவ்வுளவோ சொல்லியும் வீட்டிற்குள் வர மறுத்து வராந்தாவிலேயே அவர் நின்று கொள்ள அடுத்த சில நொடிகளில் சோர்ந்து போய் அமர்ந்திருந்த ஷாஜிதாவும் லைலாவும் வலுக்கட்டாயமாக  அழைத்து வரப்பட்டு அவர் முன்னால் நிற்க வைக்கப்பட்டனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் மா, நான் உங்க பாவாவோட பழைய சேக்காளி, அவரு ஈபில வேல பார்க்கும் போது  பழக்கம், பாவா மௌத்தான சேதி எனக்கு இன்னைக்கு தான்மா தெரியும். எனக்கு நிறைய உதவிகள் பண்ணிருக்காரு. என் நம்பர் கூட அவர் கிட்ட இருக்கு, ஈது பெருநாளு ஹஜ் பெருநாளுலாம் வந்தா தவறாம எனக்கு போன் பண்ணிருவாரு. அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தோஸ்ல நிரந்தர எடத்த கொடுக்கணும்னு துஆ பண்ணிக்கிறேன் மா.” என்று அவர் சொல்லி முடித்ததும் பதிலுக்கு எதுவும் பேசாமல்  இருவரும் மௌனமாக நின்று கொண்டிருந்தனர்.

“வெவெரம் கேள்விப்பட்டேன்மா, பக்கீருங்க யாரும் வரலையாமே.. நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க அதுவும் ஒரு வகையில நல்லதுனு நெனெச்சுகோங்க.” என்று சொல்லி முடித்து அவர் சில நொடிகள் இடைவெளி விட்டபோது கூடியிருந்தவர்கள் குழப்பத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள அங்கே லேசான சலசலப்பு எழுந்து அடங்கியது.

நீண்ட பெருமூச்சிற்குப் பிறகு மீண்டும் பேசத் தொடங்கினார் அந்த முதியவர்

“எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட அம்பது வருஷத்துக்கு மேல இந்த விழாவ பஷீர் பாய் தான் முன்னாடி நின்னு மொத்த வேலையையும் இழுத்து போட்டு சிறப்பா இதுவரைக்கும் பண்ணிட்டு இருந்தாரு, அவர் இல்லாம நடக்குற மொத சந்தனக்கூடு இ்ல்லையா…யாருக்கு தெரியும் எந்த கொண்டாட்டமும் இல்லாம அது அமைதியா தான் நடக்கணும்னு அல்லாஹுத்தாலாவே விரும்புகிறானோ என்னவோ….”

என்று அவர் சொல்லி முடித்ததும் ஷாஜிதாவின் கண்கள் முழுவதும் நீர் திரண்டு அவளுடைய ஒற்றை கண்சிமிட்டலுக்காகக் காத்துக் கொண்டிருந்தன. அவர் கொடுத்த விளக்கம் கூடியிருந்த பெரும்பாலானவர்களுக்கு தெளிவை கொடுக்க

மீண்டும் பழைய உத்வேகத்துடன் இயங்கிப் பரபரப்பாக தர்காவை நோக்கி நடக்கத் தொடங்கினர். ஊர்வலம் முடிந்து திரும்பிய புதிய கொடி கனத்த மவுனத்துடன்  தர்கா வளாகத்திற்குள் எடுத்துவரப்பட்டது. அந்த கொடியை பஷீர் பாயின் பேரப்பிள்ளைகள் கையிலேந்தி அதே புளிய மரத்தில் ஏறி அதன் உச்சியில் கட்டி முடிக்க அதற்கு முன் என்றுமே நடந்திராத அதிசய நிகழ்வாக  அங்கே கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கொக்குகள் புளிய மரத்தைச் சுற்றி கூச்சலிட்டபடி பறந்து வட்டமடித்துக்கொண்டிருந்தன.

++

“ரூ” என்கிற புனைபெயரில் நான் எழுதிய இரண்டு சிறுகதைகள்   நீலம் மாத இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *