இன்று சிதம்பரம் தெற்கு வீதி நுழைவாயில் வழியாக சென்று தாயுமான சுவாமியையும், மூலவரையும், பின்னர் ஊர்த்துவ தாண்டவரையும் தரிசித்து விட்டு இறுதியாக மடைப்பள்ளி அருகேயுள்ள அன்னபூரணியை வணங்கிவிட்டு நாலுகோபுமும் தரிசனம் செய்யும் இடத்திலிருந்து மீண்டும் தெற்கு வீதி வழியாக வெளியேறினேன்.

சிதம்பரம் வந்தபின் இந்த மூன்று ஆண்டுகளில் இதுநாள் வரை கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் போனதில்லை.

வெயில் மண்டை காயவைத்தது. என்ன செய்வது என சில நிமிடங்கள் நிழலோரம் நின்று இளைப்பாறிவிட்டு வாகனத்தை எடுத்தேன். இன்று மகாவீரர் ஜெயந்தி என்பதால் கீழவீதி செல்லும் வழியில் ஜெயின் சமூகத்தினர் நீர்மோர் பந்தல் அமைத்து எல்லோருடைய தாகத்தையும் தணித்து கொண்டிருந்தனர். நாவறட்சி அதிகரித்துக் கொண்டிருந்தது. ஜிலுஜிலு வென மோரும், வெள்ளரியும் சற்று தாக்கத்தை தணித்தது. அமிர்தம் என்பார்களே அப்படியொரு பதத்தில் நீர்மோர் இருந்தது. அங்கேயும் சில நிமிடங்கள் உடல் வெப்பத்தை தணித்துக் கொண்டு கீழவீதி வழியாக வண்டியை  மெல்ல செலுத்னேன்.

அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது. கீழவீதி கோடியில் ஒரு பழைய புத்தகக் கடை ஒன்று உள்ளது போய் பாருங்கள் என்று ஆசிரிய நண்பர் ஒருவர் சொன்னார். சரியாக கடைக்கு அருகில் போய் வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தேன்.

பிராமணர்கள் அதிகம் வசிக்கும் தெரு கீழவீதியில் நகைக் கடைகள், பேக்கரிகள், லாட்ஜுகள் என இருக்க ஒரு வீடு மட்டும் பாழடைந்த நிலையில் இருந்தது. அவ்வீட்டின் முன் கடைவீதியின் நடையிலிருந்து சாலையின் வாகன நிறுத்தம் வரை ஒரு பக்கமாக பழைய ஆன்மீக புத்தகங்கள் பைண்டிங் செய்யப்பட்டும், சில வெள்ளைத் தாள் ஒட்டப்பட்டுமேலே தலைப்புகள் எழுதப்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஊடுபாவாய் கண்களை ஓட்டினேன். பிள்ளையார் ஸ்லோகம், திருவாரூர் தல வரலாறு, என ஒருபகுதியும், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என சுஜாதாவும், நெற்றி நிறைய சந்தனமும் வெள்ளை தாடியுடன்  புன்னகையுடன் பாலகுமாரன் -ன் நூல்களும், தமிழ்வாணனின் மர்மநாவல்களும் என ஒரு பக்கமும், நடுப்பகுதியில் திருத்தி எழுதிய தீர்ப்புகள், இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் என வைரமுத்து ஈர்க்கும் கருவிழிகளோடு கையில் ஒரு ஃபெளன்டைன் பேனாவுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவைகளுக்கு மத்தில் ஏதாவது கிடைக்குமா என்று கண் பழைய நூல்களின் தூசிகளுக்கு இடைய நுழைந்து நுழைந்து புத்தகங்களைத் தேடி சிலவற்றை எடுத்து உள்ளே புரட்டிப்  பார்த்துக் கொண்டிருந்தது. க.நா.சு கவிதைகள், கி.ரா வின் கதவு, ஆகியவை நல்ல தரத்தில் கிடைத்தன.

நகுலனை தேடிய கண்கள் ஏமாந்து போயின. அப்போது மனதில் ஏனோ சுசீலா என்கிற பிம்பம் நடராஜன் கோவிலில் உள்ள மகிஷாசுரமர்த்தினி ரூபமாய் காட்சி கொடுத்து மறைந்தது. தொடர்ந்து டி.கே.துரைசாமி சந்திக்க வேண்டுமென மனம் சொல்லிக் கொண்டது. நகுலனுக்குப் பிறகு டி.கே.துரைசாமியை சந்தித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என தோன்றியது.

மெளனயின் இறுதிக்காலம் மனம்முழுவதும் தோன்றி மறைந்தது. மெளனியும் பிடிபடவும் இல்லை. கிடைக்கவும் இல்லை.

கடைக்காரர் மும்முரமாய் ஹிஜாப் அணிந்த தன் பீவியோடு முகப்பு அட்டை கிழிந்த புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் எடுத்த புத்தகங்களைக் காட்டி “விலை சொல்லுங்க” என்றேன். அவைகளை வாங்கி உள்ளும் புறமும் பார்த்து சற்று நிதானித்து ‘நூறு குடுங்க’ என்றார். நீங்க தான் முதல் ஆள் என லேசாக புன்னகைத்து விட்டு மீண்டும் தம் முகப்பு அட்டை ஒட்டும் பணியில் மூழ்கினார். சட்டைப் பயில் இருந்த நூறை தந்துவிட்டு கிளப்பபுகையில்

“இனி ரெகுலரா கடை போடுவீங்களா என்றேன்”.

“அப்பா இறந்து ரெண்டரை வருஷம் ஆச்சு. நானும் இரண்டு வருஷம் சவுதி அங்க இங்கனு வேலை பார்தேன். செரி அப்பாவோட பழைய புத்தக வியாபாரம் போதும்னு திரும்பவும் இப்போ நான் கடைய போடுறேன்.” என்றார்.

அப்போது தனது திரைச்சீலை சரிசெய்தபடி புத்தகங்களை துடைத்து பரப்பிக் கொண்டிருந்தாள் சிறுமி!. அவளது பதினாலு வயது தம்பி கலைந்து போன புத்தகங்களை வரிசையாக அடுக்கியபடி இருந்தான்.

இறுதியாக புறப்படும் முன் “உங்க பேரு” என்னான்னு கேட்டேன். ” சாகுல்” என்றார்.

என் உதடுகளில் இருந்து ஒரு நட்பார்ந்த புன்னகை வெளிப்பட்டிருக்க வேண்டும்.

திரும்பவும் அடிக்கடி வருவேன். வந்து பாக்குறேன். என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்தேன்.

எதிரில் நாலு வீதிகளையும் சுற்றிவிட்டு மூலவர் தேர் மல்லாரி நடையோடு நாயன ஓசையுடன் தெரு வாசலுக்கு வந்து நின்றது.!

யாரோ ஒரு யாத்ரீகன் கண்ணத்தில் போட்டுக் கொண்டு சன்னதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தோன்றியது.

00

இலட்சுமண பிரகாசம்

சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ‘மிருகத்தின் வாடை’ என்கிற கவிதைத்தொகுதி நடுகல் வெளியீடாக சென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்துள்ளது.

2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *