அக்டோபர் மாத ஆவநாழி இதழ் வாசித்தேன்.
சிறுகதைகள்:
எட்டும் கனி – அ.பிரகாஷ்
வளரும் பருவத்தில் இருப்பவர்களின் பிரச்சினையைப் பேசும் கதை.
நாம் இன்னும் படிக்க வேண்டும் என்ற தெளிவு இருந்தால், யாராலும் தடுக்க முடியாது. எத்தனை தடைகளையும் தாண்டி விடலாம்.
ஆனால் தோழியைப் போன்ற, வயசுக்கே உரிய, தடுமாற்றம் கொண்டவர்களின் வாழ்க்கை?
ஒசரம் – ரம்யா அருண் ராயன்
அரசாங்கத்தின் கருணையற்ற கரங்களின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் மற்றொரு வயதான தம்பதியர்களின் கதை.
ரோடு ஏற ஏற, சுவரில் இருந்த போஸ்டர் கொஞ்சம் கொஞ்சமாக மறைவது அருமை.
கடைசியில் வளனின் கையிலிருந்த மருந்து மழையால் இணைவதை, முதியவரோடு சேர்ந்து நாமும் வெறுமனே பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இங்கே கதை முடிந்து விடுகிறது.
மருந்து கரைந்து போன பிறகு, அருள் தனது மகனைக் தூக்கிக் கொண்டு வருவது, எழுத்தாளரின் பழிவாங்கல் என்றே நினைக்கிறேன்.
மொழிபெயர்ப்புச் சிறுகதை:
கரிய நிறத்தொரு பூனை – தமிழில் அரவிந்த் வடசேரி
மனித மனத்தின் ஆழத்தை யாராலும் கணிக்க இயலாது. மறைந்திருக்கும் குணங்களில் வன்மமும் ஒன்று.
தனது வன்மத்தை, தனக்கு மிகவும் பிடித்த, தனது பூனையின் மீதே காண்பிக்கிறான் கதையின் நாயகன்.
மதுவின் போதை, நமது இருண்ட பகுதிகளை வெளிக் கொண்டு வருவது பயப்பட வேண்டிய ஒன்று.
மிகச் சரியான, ஆனால், எதிர்பாராத முடிவு. அருமையான மொழி பெயர்ப்பு.
குறுநாவல்:
நான்கு ஜென் தோட்டங்களில் சபர்மதி – யதிராஜ ஜீவா
மனசைப் பதற வைக்கும் தொடக்கம். ஒகேனக்கல் அருவி குறித்த அருமையான விவரிப்பு. பிறகு திடீரென, தத்துவம் கதையை எழுதுகிறது.
ஜே.கே மற்றும் ரமேஷ் ஆகியோரின் தத்துவங்கள் கதாசிரியர் வழியாக மிகச் சிறந்த முறையில் கடத்தப் பட்டுள்ளது.
இக்கணமே வாழ்க்கை என்பதை சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது போல் உணர வைக்கும் குறுநாவல்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
அக்டோபர் மாத, உயிர் எழுத்து இதழ், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் அறுபதாவது அகவை சிறப்பிதழாக வந்துள்ளது.
ஆசிரியர் சுதீர் செந்தில் அவர்களின், தலையங்கம் மற்றும் நீண்ட நேர்காணல் இரண்டுமே, மிகச் சிறப்பு. நேர்காணல் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது.
கவிஞர் கரிகாலனின் கட்டுரை, எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவல் பற்றி மேலும் அறிய உதவுகிறது. எழுத்தாளர் கண்.குறிஞ்சி அவர்களின் கட்டுரை, மாதொரு பாகன் நாவல் பிரச்சினையில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது.
காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் அவர்களின் கட்டுரை, மாதொரு பாகன் நாவல் பிரச்சினையைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. ஒரு திரில்லர் நாவலை வாசிப்பது போன்ற உணர்வு.
எழுத்தாளர் அரவிந்தன் அவர்களின் கட்டுரை, எழுத்தாளர் பெருமாள் முருகனின் மொத்த படைப்புகளையும் அலசும் மிகப்பெரிய சாதனையை, வெற்றிகரமாகவே செய்கிறது.
மொழிபெயர்ப்பாளர் கவிதா முரளிதரன், பெருமாள் முருகனின் படைப்புகளை மொழிபெயர்ப்பதிலிள்ள சவால்களை விவரிக்கிறது.
கவிஞர் இசை மற்றும் கவிஞர் சுகுமாரன் கட்டுரைகள் அருமை.
கவிஞர் க.மோகனரங்கனின் கட்டுரையில், பெருமாள் முருகன் வீட்டிற்கு, முதல் முறையாகச் சென்றதை விவரித்திருக்கிறார். நானும் அவருடன் பெருமாள் முருகன் வீட்டிற்குச் சென்ற ஞாபகம். ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததாக ஞாபகம். நாமக்கல் என்றே நினைக்கிறேன்.
எழுத்தாளர் ஜார்ஜ் ஜோசப்பின் கட்டுரை, பெருமாள் முருகன் படைப்புலகை நுணுக்கமாக ஆராய்கிறது.
எழுத்தாளர் க.திருமூர்த்தி அவர்களின் கட்டுரை, வேல்! சிறுகதைத் தொகுப்பை விமர்சிக்கிறது.
மிகவும் அரிதான புகைப்படங்கள், ஆசிரியரின் உழைப்பைக் காட்டுகிறது.
இந்த இதழ், நமது சமகால இலக்கிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளரைப் பற்றிய ஆவணம்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
சித்திரை -ஆவணி 2025 கண்ணாமூச்சி இதழ் கிடைக்கப் பெற்றேன்.
உடல் உழைப்பிற்கு விருது வழங்க இருக்கும், ஆசிரியர் குழுவின் சிறப்பான முன்னெடுப்பு பாராட்டத்தக்கது.
சிறப்பான அட்டைப் படம்.
எழுத்தாளர் கோ.அருணகிரி அவர்களின் ‘சாவுமுதல்’ சிறுகதை நெகிழ வைத்தது. படித்து முடித்தவுடன் கண்ணீர் தழும்பியது.
வட்டார வழக்கு மிகச் சிறப்பு.
தோணி பற்றிய சூ.இராமசுப்பிரமணியனின் கட்டுரை மிகச் சிறப்பு. விரிவாகவும் ஆழமாகவும் ஒரு ஆய்வுக் கட்டுரையை நெருங்குகிறது.
கவிஞர் காசி ஆனந்தன் குறுங்கதைகளில், நுண் அரசியல்.
எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமாரின் தேனீக்களின் நடனத்தில், செயற்கையின் வாசனை.
கவிஞர் ரவிசுப்ரமணியனின் கட்டுரை, பாரதி பற்றிய புதிய ஆவணப் படம் பற்றி விவரிக்கிறது.
பாரதியாரின் ஆன்மிகப் பக்கங்களே இந்த ஆவணப் படம்.
கவிஞர் குகை மா.புகழேந்தி அவர்களின் குறுங்கவிதைகள் அருமை. ஹைக்கூ கவிதைகளுக்கு மிகவும் அருகில், இயற்கையை ஒட்டி எழுதப்பட்ட கவிதைகள்.
ரஷ்ய எழுத்தாளர் மிகாய்லோ கோட்ஸுபின்ஸ்கி அவர்களின், ‘வாழ்க்கைப் புத்தகத்தில் எழுதப்பட்டது’ எனும் சிறுகதை, மலையாளம் வழித் தமிழில், எழுத்தாளர் யூமா வாசுகி. வயதானவர்களின் பிரச்சினையைக் கண்ணீரும் சதையுமாகப் பேசும் மிகச் சிறந்த சிறுகதை. கடைசியில் மகன் மீண்டும் காட்டுக்கு ஓடோடிப் போவதில் வாசகன் மனசு ஆறுதல் அடைகிறது. சில சமயம், ரஷ்யப் படைப்புகளைத் தாண்டி எழுத வேறேதும் உண்டா என்று தோன்றுகிறது. மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பு.
கவிஞர் அன்பாதவனின் கலைநகரம் சிறுகதை அருமையான முயற்சி.
கவிஞர் சுகபாலாவின், ‘வானிந்திரம்’ கவிதைத் தொகுப்பு குறித்த, கவிஞர் பாரதி மோகனின் ஆய்வு ஆழமானது.
கவிஞர் இயற்கை அவர்களின் மூன்று கவிதைகளும் பேச்சு வழக்கில் இருப்பதால், குறங்கதைகளோ என்ற மயக்கத்தைத் தருகின்றன.
கவிஞர் செஞ்சி தமிழினியனின் இரண்டு கவிதைகளும் வலி.
கவிஞர் கலை பாரதியின் சில குறுங்கவிதைகள் அருமை.
போகிற போக்கில் பகுதியில், கவிஞர் பழனி பாரதியின் பாடல்களில், கவிதைகளை இனங்கானுகிறது.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

