அண்ணனை கூடத்தில் கிடத்தி இருந்தார்கள். கண்ணாடி பெட்டிக்குள் பார்ப்பது இதுதான் முதல் முறை. அவர் அதிகம் பேசி நீங்கள் பார்த்திருக்க முடியாது.  பேசுவதை விட செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். இல்லை என்றால் அப்பா இறந்தவுடன் மூன்று தம்பிகளையும் ஒரு தங்கையையும் கரை சேர்த்திருக்க இயலாது.

இரைச்சல் பிடிக்காத அண்ணன் பெரும்பாலும் கர்நாடக இசையில் தன்னை மறந்து அமர்ந்து இருப்பார். இல்லை என்றால் பாலகுமாரனையும் கல்யாண்ஜியையும் ஆர்வமாய் படித்துக் கொண்டிருப்பார்.

தலைமாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் அண்ணி எவ்வளவோ சொல்லியும் கடைசி வரை லஞ்சம் வாங்கவே இல்லை. புலம்பிப் புலம்பியே அவளுக்கு ரத்த அழுத்தம் வந்து விட்டது.

பிழைக்க தெரியாத மனிதன் என்ற அடை மொழியோடு குத்திக் கிழித்த போதெல்லாம் அமைதி காப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்றாலும் அண்ணன் கோபித்து கொண்டு நான் பார்த்தது இல்லை. சிரிப்புடன் கடந்து போகுதல் அவருக்கு இயல்பாய் இருந்தது.

தம்பி கல்லூரிக்கு போக வேண்டும் என்பதற்காக வட்டிக்கு பணம் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் நகையை அடமானம் வைத்ததற்கான நன்றியை, அம்மாவின் வைத்திய செலவை பிரித்து கொள்ள முடியாதென்று சண்டை போட்டு காட்டினார் எட்டு வருடங்கள் பேசாத இரண்டாம் அண்ணன்.

இப்போது எதையோ இழந்தது போல் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். ஒரு வேளை இறந்தவர் எழுந்து வர முடியாது என்கிற  நம்பிக்கையாய் இருக்கலாம் அவருக்கு…

நேற்று வரை பரஸ்பரம் புன்னகைத்து கூட பார்க்காத எதிர் விட்டுக்காரர் யாருக்காக காலையிலிருந்து நிற்கிறார் என்பதும் எனக்குப் புரியவில்லை. இப்போதெலாம் பெரு நகரத்தில் இயந்திரத்தனம் புகுந்ததால் எல்லாமே சடங்காக மாறி கொண்டு வருகிறது.

“நீங்க ஆபீஸ் கெளம்பலியா” வாய் வரை வந்த கேள்வியை கவனமாய் அடக்கி கொண்டேன்.

கவனத்தை கலைத்தது அக்காவின் அழுகை குரல். பெரியதாய் ஒப்பாரி வைத்து கொண்டே நுழைந்தவளை சிரமப்பட்டு சமாதானப்படுத்தினேன்

“மெதுவாக்கா, அண்ணனுக்கு சத்தம் பிடிக்காது”

என்ற என்னை எப்போதும் போல் அவள் மதிக்கவில்லை. கிராமத்து மருமகள் என்பதால் எதோ ராகமாய் பாட ஆரம்பித்தாள்.

கடைகுட்டியின் சீரில் இரண்டு பவுன் குறைந்ததென வார்த்தை வலுத்து மாப்பிளையோடு சேர்த்து கொண்டு மண்ணை வாரி சாபம் கொடுத்து போன நல்ல மனது. இன்றும் மாப்பிள்ளை வரவில்லை

இப்போதும் கூட ஊரில் இருக்கிற தாத்தாவின் பழைய வீட்டை எப்படி பங்கு போடலாம் என்ற பேச்சு வார்த்தை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கலாம்.

முகம் திருப்பி கொண்ட அண்ணியையும் அக்கா விட்டு வைக்கவில்லை.

இடை இடையே என் கடைசி மகனும் பக்கத்து விட்டு சிறுவர்களும் கண்ணாடி பெட்டியை சுற்றி ஓடி பிடித்து விளையாடி கொண்டு இருந்தார்கள். ஒரே அதட்டலில் சிதறிப் போனார்கள். நடிக்க தெரியாத வயது.

எப்போதும் சிரித்தபடி வளைய வரும் அண்ணாவின் செல்ல பெண் அப்பாவை தொடு பேசியில் பார்த்து விசும்பி கொண்டு இருந்தாள். அப்பாவை போலவே மற்றவருக்கு கெடுதல் நினைக்க தெரியாத அவளை என் அறைக்கு கூட்டி சென்று தேற்றினேன்.

அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை என்றது முதல் ஒரு வாரமாய் சரியாக சாப்பிடவும் தூங்கவும் இல்லை. அவளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

“எல்லாருக்கும் காபி கொடுக்கலாமாடா” என்றார் மாமா.

“இனியும் யார் வரணும்? எப்ப எடுக்கலாம். இருபது பாமிலி இருக்கற பிளாட் பாருங்க” என்றார் அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரி.

என் முறைத்தலை பொருட்படுத்தாமல் ”மதியத்துகுள்ள எல்லாத்தையும் முடிச்சிகோங்க” என்றார்.

இப்போது எதிர் வீட்டுக்காரர் மௌனமாக தலை அசைத்து கிளம்பினார்.

“இந்த வீட்ல அண்ணன் பதிமுணு வருஷமா வாழ்த்திருக்காரு” என்றேன் ஈனமான குரலில்”

“புரியுது சார். சில ப்ளாட்ல பாடிய மேலயே விட மாட்டாங்க. நாங்க என்ன அப்படியா சொன்னோம்” என்றார்.

வெளி நாட்டில் இருந்து வரும் தம்பிக்காய் இனி காத்திருக்க முடியாது.

அதற்குள் அண்ணனின் மேனேஜர் வந்து விட்டதால் அந்த பேச்சு அப்படியே நின்றது.

“ப்ச் நல்ல மனுஷன் இவ்வளவு சீக்கிரம் போய் இருக்க வேணாம். இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்” என்றார்.

இருக்கும் போது அறிவிக்காததை இறந்த பின் யாருக்காக சொல்கிறிர்கள் என கேட்க வேண்டும் போல் தோன்றியது.

அதற்குள் அண்ணாவின் வேலையை அவரின் வாரிசுக்கு கொடுக்க என்ன செய்ய வேண்டும் என மேனேஜரிடம் பேச ஆரம்பித்தார் அண்ணியின் தம்பி.

‘கொஞ்சம் பொறுமையா இருங்க” என்ற என்னை அவர் சட்டை செய்யவில்லை

“எல்லாம் முடிஞ்ச உடனே என்னோட வந்துரு அக்கா. அந்த பரம்பரை வீடும் உன் பொண்ணுக்கு வேலையும் கெடச்சிட்டா ஒண்ணும் பிரச்சனை இல்ல” என்றான். யாருக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை

அண்ணாவின் பால்ய நண்பர்கள் அலுவலகம் என எல்லோரும் வந்து விட்டார்கள்.

நிறைய பேர் கடிகாரம் பார்த்தும், நகத்தைக் கடித்தும் ஒரு வித அவஸ்தையில் நிபத்தனைக்காய் நின்றிருந்த மாதிரி எனக்கு தோன்றியது. அரைநாள் விடுப்பு ஒரு நாள் ஆகிவிடுமோ என்கிற கவலை.

காபி குடித்ததில் சிலருக்கு தெம்பு வந்ததும் அவரவர் சுக துக்கங்களை பேச ஆரம்பித்தார்கள்.

’எடுத்து விடலாம்’ என்றேன் கம்மி போன குரலில்.. மீண்டும் அழுகைகள் ஆரம்பித்தன.

எல்லாம் முடிந்து திரும்ப வருவதற்கு இரவு மணி எழு ஆகி விட்டிருந்தது. வீட்டை சுத்தமாய் கழுவி விட்டிருந்தார்கள். வெறுமை திசுக்களில் பரவியது. மற்றவர்களுக்கு ஒரு சம்பவம் முடிந்து விட்டிருந்தது.

அண்ணா இல்லாத நம் வீட்டிற்குள் முதல் தடவையாக நுழைகிறேன். அன்பாய், பாசமாய், கனிவாய், ஒவ்வொரு முறையும் ‘நான் இருக்கிறேன்’ என்று என்னுடன் நின்ற அந்த நல்ல ஆத்மா இனி வர போவதில்லை என்ற உண்மை முகத்தில் அறைய பெருங்குரலெடுத்து அழுக ஆரம்பித்தேன்.

000

ச.ஆனந்தகுமார்

பிறந்தது கோவை. வசிப்பது சென்னை. தனியார் பணி. கவிஞர் மற்றும் எழுத்தாளர். கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, காலச்சுவடு, தீராநதி, காக்கை சிறகினிலே, பேசும் புதிய சக்தி, வாசிகசாலை, படைப்பு-கல்வெட்டு,காற்று வெளி, தளம், அம்ருதா உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

முடிவிலியின் நினைவு சங்கிலி மற்றும் மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள் ஆகியவை கவிதை நூல்கள்.

சிறுகதைகள் சில போட்டிகளிலும், கல்கி, குமுதம், சிநேகிதி,  குங்குமம் தோழி, கணையாழி மற்றும் ஆனந்த விகடன் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *