ருக்மணியில் மாட்டுக்கார வேலன் இரண்டாம் ஆட்டம் முடிந்து, நச நச வென்று வாத்தியார் புகழைப் பேசிக்கொண்டே மெல்ல நகரும் கூட்டத்தில், முன் செல்லும் எவர் கால்களிலும் இடிக்காமல் சைக்கிளை உருட்டிக் கொண்டு சினிமாக் கொட்டகைக்கு வெளியே ரெங்கன் வந்த போது நள்ளிரவு தாண்டியிருந்தது. இருளில் தெருநாய்களின் தலைகள் தெரியவில்லை. சாலையில் இறங்கியதும் சைக்கிளை ரோட்டில் ஸ்டாண்டு போட்டு விட்டு லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டவன், சட்டைப் பாக்கெட்டில் இருந்து பீடி, தீப்பெட்டியை எடுத்து, பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாய் ஒரு இழுப்பை இழுத்தவன், புகையை விட்டுக்கொண்டே சைக்கிளில் ஏறி அமர்ந்து செலுத்த ஆரம்பித்தான். மிதி விசையைப் பெற்றுக் கொண்டு உற்சாகமாய் ஒடத் தொடங்கியது சைக்கிள். மின் விளக்கு ஒன்று தூரத்தில் மஞ்சளாய் எரிந்து கொண்டிருந்தது. ஊருக்குள் முதன்முதலில் சைக்கிள் வாங்கியவன் என்ற பெருமை இன்னமும் யாராலும் பங்கிடப் படவில்லை. மிலிட்டரிப் பச்சை நிறத்தில், பஞ்சு வைத்த எடுப்பான சீட் கொண்டது. அழுத்தமான சைக்கிள் மணியோசை எவரையும் விலகி நடக்கச் சொல்லும். பின்பக்கக் கேரியர் வலுவான இரும்புப் பட்டைகளால் ஆனது. முன்பெல்லாம் சினிமா பார்க்க நடந்தே தான் வர வேண்டும். சைக்கிள் வந்த பிறகு ஊர்கள் எல்லாம் பக்கத்தில் நெருங்கிக் கொண்டது போல ஆனது. உறையூரில் நுழைந்து திரும்பிய சாலையில் சைக்கிள் ஒடும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. ஹேண்டில் பார் பிடித்திருந்த வலக்கை விரல்களுக்கிடையே பீடி புகைந்து கொண்டிருக்க, சிறிது நேரத்தில் இருண்டு கிடக்கும் கோணக்கரை சாலைக்குள் நுழைந்தது சைக்கிள்.

கோணக்கரை சாலை, குடமுருட்டி ஆற்றின் போக்கில் உறையூரிலிருந்து, கரூர் செல்லும் சாலையோடு இணையும் வரை, ஆற்றின் கரையிலேயே போடப்பட்டு வளைந்து நெளிந்து கோணலாகச் செல்லும் சாலை அது. இரண்டு கிலோ மீட்டர் தூரம் நீண்ட, மையிருட்டில் கிடக்கும் சாலையின் இடது பக்கம் பள்ளத்தில் ஆறு ஓடிக் கொண்டிருக்க ஆற்றின் மறுகரையில் தென்னை மரங்கள் வரிசையாய் எல்லைக் கோடாய் வளர்ந்து இருளில் அசைந்து கொண்டிருந்தன. அதற்கு அப்பால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நெல் வயல்கள் பகலில் பசுமை போர்த்திக் கிடப்பதைக் காணலாம். வலப்பக்கம் ஆற்றுக்கு மேட்டில் சாலை இருந்தது. எட்டிப் பார்த்தால் சரிவுகளில் முளைத்துக் கிடக்கும் வேலிக் கருவை புதர்களைத் தாண்டித் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். சரிவிலிருந்து மேலேறி சாலைக்குள்ளும் கைகளை நீட்டியபடி சில முட்செடிகள் வளர்ந்து கிடக்கும். மணல் ஏற்றும் மாட்டு வண்டிகள் தொடர்ந்து ஓடுவதால் சாலை முழுவதும் மணல் கொட்டிக் கிடந்தது. மாட்டு வண்டிகளின் மரச்சக்கரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் இரும்புப் பட்டைகள் நசுக்கி அரைப்பதால் மணல் துகள்கள் காற்றைப் போல மென்மையாய் பறந்தலையும். இருட்டில் கொஞ்சம் நிதானம் தவறினாலும் ஆற்றின் இறக்கத்தில் விழ வேண்டியது தான். கோணக்கரை சாலையில் நுழைந்ததும் இருநூறு தப்படி தூரத்தில் இடதுபக்கம் ஒரு பெரிய படித்துறை உண்டு. சாலையை ஒட்டிய சுற்றுச் சுவருடன் செங்கல் அடுக்குகள் சிவப்பாய் வெளியே தெரியுமளவிற்கு சிதிலமடைந்த குறுகிய படிக்கட்டுகள் ஆற்றுக்குள் இறங்கிக் கொண்டிருந்த படித்துறை அது. கொஞ்சம் கவனம் பிசகினாலும் தலைகீழாய் விழ வைக்கும் அளவிற்கு இறக்கம். சுற்றுச் சுவரை ஒட்டி வெளியே குப்பை மேடாய் கிடக்க அங்கே மிகப்பெரிய அரசமரம் சாலையை ஒட்டி இருளுக்குள் நிற்கும். தொடர்ந்து சென்றால் அடுத்த ஐந்து நிமிடங்களில் சுடுகாடு, இடுகாடு இரண்டும் அடுத்தடுத்து வரும். அதையும் கடந்து செல்லும்போது இறுதியாய் ரயில்வே கேட் பாதுகாப்போடு இருப்புப்பாதை, சாலைக்கு குறுக்காக ஓடி குடமுருட்டி பாலத்தின் வழியாக கரூர் செல்கிறது. கேட்டைத் தாண்டியதும் கோணக்கரை சாலை கரூர் செல்லும் முக்கிய சாலையில் முட்டிக் கரைந்து மறைந்து விடும். சைக்கிள் நகர்ந்தபோது சாலையில் பிறை நிலவின் குறைபட்ட வெளிச்சமும் பீடியின் சிவப்புப் பொட்டும் மட்டுமே தெரிந்தது. இருட்டுக்கு கண்கள் பழகியபோது, படித்துறை நெருங்கி விட்டது. ஆற்றில் நீரோடும் ஓசை கேட்டது. குளுமையான காற்றில் அசையும் அரசமரத்தின் இலைகள் கீழே ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீருக்கு போட்டியாய் “சலசல” சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. இருட்டில் கண்களுக்கு சுற்றுச் சுவர் தெளிவாகும் போது படித்துறையை பார்த்த கணத்தில், அதிர்ச்சியில் கையிலிருந்து பீடியைத் தவற விட்டான்.

படித்துறையின் சிறிய வாசல் அருகே சுவரில் சாய்ந்தபடி பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். சினிமா நடிகைகளைப் போல வடிவான முகம். சிவந்த நிறம்.  பளிச்சென்று இருந்தாள். அழுந்த வாரப்பட்ட தலைமுடி பரவிக் கிடந்த இருட்டை விட கருமையாய் கிடந்தது. உடுத்தியிருந்த அடர் நீல நிற சேலையில் வெண்ணிற ரோஜா மலர்கள் பரவிக் கிடந்தன. வெண்ணிற புறாவைப் போல சிறிதாய் அழகாய் இருந்தாள் அவள். அந்த அகால நேரத்திலும் மல்லிகையின் சரம் ஒன்று கூந்தலை அலங்கரித்துக் கிடந்தது. பிறை நிலவின் ஒளி மொத்தமும் குவிந்து அவள் மீது மட்டும் பொழிவது போல அவள் அத்தனை பொலிவாய் இருந்தாள். சைக்கிள் தானாகவே அவளருகில் நின்றது. ஒற்றைக்காலில் எக்கி நின்றபடி, எதையோ கேட்க வாயைத் திறந்தான். அவளது அழகில் வார்த்தைகள் தத்தளித்தன அவனுக்கு.

“யாரு…நீ…? எதுக்கு இந்த நேரத்துல இங்க நிக்கிற..?” என்றான். அமைதியாய் இருந்தாள்.

 “எங்க போகனும்…?” பதில் வார்த்தைகள் வரவில்லை.

 “எங்க போகணும், சொல்லு,” என்று சைக்கிளை விட்டு கீழே இறங்கினான். பதிலாக புன்னகை செய்தாள். அவளை நெருங்கிச் சென்று உற்றுப் பார்த்தான். ‘அடேயப்பா எவ்வளோ அழகு இவ…!’ என்று எண்ணிக் கொண்டான்.

“என்கூட வர்றியா…?”

“ம்”

“எந்த ஊரு நீ. உன்ன இந்தப் பக்கம் பார்த்ததே இல்லியே…?”, என்றபடி, சைக்கிளில் ஏறினான். அவன் சொல்லுக்குக் காத்திராமல் ஏறிக் கொண்டாள். சைக்கிள் கிளம்பியது. அவன் முதுகில் அவள் சேலையின் மெல்லிய சரசரப்பை உணர்ந்தான். மனதில் ஜிவ்வென்று ஒரு பறவை சடசடத்து விண்ணில் ஏறியது. காவேரி ஆற்றின் பரந்த வெண்மணல் பரப்பும், அடர்ந்த கோரைப் புதர்களும் பறவையின் பார்வைக்கு வந்தது. ‘ஆத்துக்குப் போக ரயில்வே கேட்டைத் தாண்டி போகணுமே. அங்கே நல்லய்யா தான் இன்னைக்கு நைட்டு டூட்டி, அவன் கண்ணுல இவ பட்டுறக் கூடாது.’ என மனதுக்குள் சிந்தனை ஓடிய போது, கால்களில் அதிக சக்தி பாயத் தொடங்கியது. சைக்கிளை வேகமாக மிதித்தான். சுடுகாடு நகர்ந்து, இடுகாடு நெருங்கும் போது ரோட்டின் ஓரம் இரண்டு நாய்கள் எதையோ கிளறிக் கொண்டிருந்தன. ரயில்வே கேட் நெருங்கி வருவது, இரும்பு கேட்டின் மூலையில் பொருத்தியிருந்த கூம்பு விளக்கில் எரியும் மஞ்சள் வெளிச்சத்தில் தெரிந்தது. தடிமனான கண்ணாடி அதில் வளையம் வளையமாய் கண்ணாடி புடைப்பு வேலைப்பாடுகள் இருக்கும். அதனுள்ளே சுடர் அசைந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் வண்டி கிடையாது எனவே நல்லய்யா உறங்கிக் கொண்டிருக்க வேண்டும். வெளியே ஆள் இல்லை.

“நிறுத்துங்க நான் இறங்கிக்கிறேன்,” என்றாள் அவள்.

 “ஏன், ஏன்?” என்றபடியே நிறுத்தாமல் மிதித்துக் கொண்டே தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். அவள் தரையை நோக்கியவாறு குனிந்த வாக்கில் பேசினாள்.

“இல்ல, நான் போகணும். தேடுவாங்க.” அழுத்தமான குரலில் கூறினாள். குரல் மாற்றத்தை உணர்ந்து பிரேக்கை வேகமாய் அழுத்தினான். வண்டி வேகம் குறைந்து நிறுத்துவதற்கு கால்களை தேய்த்து ஊன்றிக் கொள்ள முயற்சிக்கும் முன், அவள் தரையில் குதித்தாள். வண்டி சமநிலை தவறி சிறிது ஆட்டம் கண்டது. இரண்டு கால்களையும் நன்றாக ஊன்றிக் கொண்டு சரிப்படுத்தி நேராக நின்றான். ரயில் தண்டவாளத்தின் முன் தயங்கி நின்று கொண்டிருந்தது சைக்கிள்.

“ஏன் வரலையா? இறங்கிக்கிட்ட!”

“ம்”

“எப்டி திரும்பப் போவ. இந்த சாமத்துல, நான் விட்டுட்டு வரட்டுமா?” என்றான்.

“இல்ல, நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன், தெரிஞ்ச பாதை தான்” என்றபடியே, தோளில் சரிந்து கிடந்த மல்லிகை சரத்தை, நளினமாய் பின்னால் வீசினாள்.

“இரு நானும் வர்றேன்” என்றவனை நோக்கி வினோதமானப் பார்வை ஒன்றை தெளித்துவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

“ஏன் வேணாமா?” என்ற குரல் தேய்ந்து மெல்லியதாய் ஒலித்தது ரெங்கனிடம். அவள் திரும்பவில்லை. வார்த்தைகள் ஏதுமின்றி அவள் நடந்து போவதைக் கவனித்தான். நடப்பது போல தெரியவில்லை. தேர்ந்த நர்த்தகியின் நடன அசைவுகள் அவள் பின்னால் தெரிந்தது. ரயில்வே கேட்டில் மஞ்சள் விளக்கு ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பு நிறத்திற்கு மாறிக்கொண்டிருந்தது.

பேய்கள் மனிதர்களோடு ஒன்றாகவே வாழ்ந்தன. இந்த உலகம் அவைகளுக்கும் உரியதாய் இருந்து வந்தது. அவர்களோடு உண்டு உறங்கி இருளில், இணை மனிதர்களாக வாழ்வின் மீது நம்பிக்கையோடு இவ்வுலகில் உயிர்த்துக் கிடந்தன. மனிதன் பௌதீக விதிகளைக் கண்டறிந்து அதன் படி வாழத் தொடங்கினான். பேய்களுக்கு இவ்விதிகள் புரியவில்லை. பின்பற்ற முடியாமல் தடுமாறின. மின்சாரத்தை உருவாக்கி மின் விளக்குகள் இரவுகளில் பளிச்சிடத் தொடங்கியபோது பேய்கள் பயந்து அதிர்ச்சியடைந்தன. மின் கம்பிகளில் சிக்கிக் கொண்டு உயிரை விட்டன.  இத்தனை நாள் நம்மோடு ஒன்றாய் உறவாய் இருந்த மனிதன் எதனால் இப்படி ஆகிப் போனான் என்று மனிதர்கள் மீது, இருத்தலின் மீது நம்பிக்கை இழந்தன. சுடுகாடுகளில் கூட கண்ணைக் கூசும் ஒளியில் குருடாய் கிடக்கின்றன. பேச்சுத் துணைக்குக் கூட ஒரு மனிதன் இல்லாமல், இன்றும் நள்ளிரவுகளில் தம் சுதந்திரம் பறிபோனதை எண்ணி எண்ணி அழும் பேய்களின் ஒப்பாரிகள் கேட்டுக் கொண்டிருக்கிறது.

பின் குறிப்பு: இந்தக் கதையை சொன்னவரிடம், ஒரு சந்தேகம் கேட்டேன். “ரயில்வே தண்டவாளம்னா தான் பேய்க்கு பயமா? சைக்கிள்ல இருக்கறதும் இரும்பு தானே…?” என்று. “அது வெள்ளைக்காரன் போட்ட இரும்புடா. பேய்க்கெல்லாம் அத பார்த்தாதான் பயம். சைக்கிள் இரும்புலாம் அதுக்கு ஒன்னுஞ்செய்யாது.” என்றபடி மென்மையாய் என் தலையை வருடிவிட்டு ஆகாயத்தில் கிளம்பிச் சென்றார்.

000

ஜெய்சங்கர்.

சொந்த ஊர் திருச்சி. பயணங்கள் செய்வதிலும், இலக்கியங்கள் வாசிப்பிலும் அதிக ஆர்வம். முதல் சிறுகதை மயானக் கொள்ளை நடுகல் அச்சிதழில் வெளியானது. இணைய இதழ்களில் பயணக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *