1.
பிறப்பறுக்கும் இகமும்
அறுத்துப்பின் காலமெனும்
மாயநதியில் உறையாது
ஓடும் பரமும்
செரித்துண்ணும் கணத்தில்
இடுகாட்டில் இட்ட பிணங்களும்
சுடுகாட்டில் சுட்ட பிணங்களும்
எங்கு போகின்றன
யாது செய்கின்றன
யாமறியோம்
இறந்து போனவர்கள்
என்ன செய்வார்களாம்
“இறந்து போன அவர்களை நினைத்து
இறக்காத பிறர் துயரடைகிறார்களா என
வேவு பார்ப்பார்கள்”
என்ற பாட்டியின் சொல்லை எப்படி நம்புவது
இறப்பைப்பற்றியோ
இறந்தோரைப்பற்றியோ
அறிந்து கொள்ள நீங்கள்
ஒரு முறை இறந்து பார்க்கலாம்
இறப்புக்குப் பிறகு
என்னவென்று அறிந்து கொள்ளவும்
ஒருமுறையேனும் இறந்து பார்ப்பது நல்லது .
எப்படி இறப்பது?
முன்னர் பல முறை இறந்து போனவர்கள் இது குறித்து
கவலை கொள்ளத் தேவையில்லை
இப்போது புதிதாக இறக்க நினைக்கிறவர்களும்
எப்படி இறப்பதென்று குழப்பிக்கொள்ள வேண்டாம்.
இருக்கவே இருக்கிறார்கள்
உறவினர்,
நண்பர்,
உறவும் நட்பும் இல்லாத விருந்தினர்,
உறவாடிக் கெடுக்கும் சிறப்புறவினர்,
தூர இருந்தே குமுறிக்கொள்ளும் வைரியர்,
அருகிருந்தே சிரித்துக் களிக்கும்
துரோகியர்,
எல்லாவற்றுக்கும் மேலாக
எல்லா துர்குணங்களும்
எல்லா நிர்குணங்களும்
கொண்ட நும் காதலர்
இவர்களுள்
யாரேனுமொருவர்
உங்களை இறக்கச் செய்யலாம்
இறப்பதற்கானச் சரியான காரணத்தைத் தெரிவு செய்யவேண்டுமா
விரக்தி ,வேதனை
துன்பம் துயரம்
உடல் நோய்
மன நோய்
விரோதம் துரோகம்
ஏமாற்றம் ஏக்கம்
உறவு பிரிவு
காதல் தோல்வி
இத்யாதி காரணங்களைச்
சொல்ல வேண்டாமே
வாழ்வதற்கு இப்படியெல்லாம்
காரணம் கூறிக் கொண்டா வாழ்கிறோம்
வாழப் பழகி விட்டோம்
சாவதற்குப் பழகவேண்டும் .
2.
கொலைக்கள பாதையெங்கும்
பாவத்தின் செடிகள் பூத்துக்குலுங்குகின்றன
அடக்கம் செய்த
ஏழாவது நட்சத்திரம் மலரும் நாளில்
இறந்தோர் நினைவுச் சின்னங்கள்
கல்லறைகளாகப் பூக்கின்றன
ஞாயிற்றுக் கிழமைகளை
கல்லறைகளுக்குக் கொண்டுவரும்
பழக்கத்தை அந்தச் செல்ல நாய்களுக்குச்
சொல்லிக் கொடுத்தது யார்
தென்பெண்ணையின்
வடக்குப் பார்த்த சுடுகாடு
வாடைக்காற்று எப்போதும் மரண
வாடையைக் கொண்டு வருவது
இங்கு பிரசித்தம்தான்
இப்புனிதத்தலம் சூதாடிகளின்
கூடாரமாக மாறிப்போனபோது
சாபமிட்டுச் சென்றவளின்
குரல் மட்டும்
கூகைகள் குழறும் ராத்திரிகளில்
கேட்கிறது
இரவில் யாருமில்லாத போது
கல்லறைகளில் இருந்தவர்கள்
சூதாட்டத்தைத் தொடர்கின்றனர்
உள்ளே வெளியே
ஆட்டம்
வெளியே உள்ளே
என
மாறி
ஆடுபவர்களில் வெற்றி பெற்றவர்கள்
சீக்கிரம் உள்ளே செல்ல வேண்டும் என்பது விதி
விடிவதற்குள் முடிந்துவிடும்
ஆட்டத்தைக் காண போவோர் யாருமில்லை
வருவோர் மட்டுமே இங்கே.
3.
கதைகள் அரசாளும் தேசம் இது
நம்பிக்கைகளின் இரத்தம் தோய்ந்த
கூர்வாட்கள்,
நீதி மறுக்கப்பட்டவர்களின்
தலைகளைக் கொய்து பிணங்களை
எரிக்கவும் புதைக்கவும் கூடாது
மாம்சம்
உணவாக மறுக்கப்படும் தேசத்தில் நகர எல்லைகளுக்கு வெளியே
காடுகளில்
சிங்கங்களும் புலிகளும்
வேட்டையை இன்னும் நிறுத்தவில்லை.
4.
பின்பனிக்கால உதிரிலையாக
இம்மதியத்தின் வெயில்
உதிர்ந்துகொண்டிருக்கிறது
நகர பூங்காக்களின்
நடைபாதை நீள்வட்டத்தில்தான்
சாதலுக்கான வட்டப்பாதையைக்
கண்டடைகிறார் தினமும்
மாத்திரைகளை உணவாகக் கொள்ளும் அவர்
பூங்காவின் புதர் ஒன்றில்
மறைந்திருந்த மஞ்சள் பனி
மெல்ல அவரை நோக்கி
நகர்ந்து
கரைய தொடங்கும் வேளை
“போகலாமா? என்கிறார்.
5.
நிதர்சனத்தை
எப்போதும்
கைக்கொண்டிருப்பவனில்
மரணம்
ஒரு பூவாக
விரிந்து
மலர்கிறது .
00
தாமரை பாரதி
கவிஞர். கவிதை விமர்சகர். தபுதாராவின் புன்னகை (2019), உவர்மணல் சிறுநெருஞ்சி (2021), காசினிக் காடு (2023) ஆகிய மூன்று கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.