1.

ரவியும், ரதியும் ஒரு வயது வித்தியாசத்தில் பிறந்த அண்ணன் தங்கை. ஒரு வருடம் தான் ஏன் தள்ளிப்பிறந்தோம், இவனுக்கு முன்னாலோ, கூடவோ பிறந்திருக்கக் கூடாதா என ரதி வருத்தப்படாத நாள் இல்லை. அதுவும் தனக்கு எல்லாம் தெரிந்தது போல ரதிக்கு ரவி அறிவுரை கூறும் போதும், ‘அண்ணன் சொல்றத கேளு’ என அம்மா திட்டும்போதும் எரிச்சல் பற்றிக்கொண்டு வரும். தனக்கு ஒன்பது வயசு, அவனுக்கு பத்து,  ஒரு வயசு தானே வித்தியாசம்  என யோசித்து ரவியை ‘அண்ணா’ என்றழைக்காமல் ‘ரவி’ என்றே அவனை அழைப்பாள் ரதி. அதில் ஒரு அல்ப சந்தோஷம், உன்னை நான் பெரியவனாய் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற குட்டித்திமிர்  ரதிக்கு.

தொட்டதற்கெல்லாம் சண்டை போட்டாலும் ரவியும், ரதியும் ஒருவரை ஒருவர் பிரிவதே இல்லை. ரவி எங்கு விளையாட சென்றாலும் கூடவே ரதியும் ஓடி விடுவாள். தங்கை மனம் நோக கூடாதென்றும், வீட்டில் சொல்லிக் கொடுத்து ஏச்சு விழக்கூடாதென்றும், பாவம் தன்னைவிட்டால் யாரோடு விளையாடுவாள் என்றும் பலவாறு யோசித்து தன் சேக்காளிகளிடம் கண்ணைக் காண்பித்து,

 “இருந்துட்டு போட்டும் டே உப்புக்கு சப்பாணி” என்பான்.

ரதி தானும் ஆட்டத்தில் உண்டு என்ற நம்பிக்கையில் அவர்களோடு கோலிக்கா, பம்பரம், குச்சி கம்பு, கள்ளன் போலீஸ் என சந்தோஷமாய் விளையாடுவாள். தன் பாயிண்ட்சை ஞாபகம்  வைத்து தான் தான் ஜெயித்ததாக் கூறி  ரவியிடம் சண்டை பிடிப்பாள். எத்தனைக்கு எத்தனை சண்டையிட்டார்களோ அத்தனைக்கு அத்தனைப் பிரியமாகவும் இருந்தார்கள். அவர்களுக்குள் சண்டை போடுவார்கள், ஆனால் அம்மா ரதியை ஏசினாள் என்றால்

“என்னம்மா நீ எப்ப பாத்தாலும் அவள ஏசி அழ வைக்கே” என முகம் காட்டுவான் ரவி.

அவர்களின் சண்டை இன்னதென்று இல்லாமல் எல்லா விஷயங்களிலும் நீளும். சில நேரம் ரவி சீக்கிரமே எழும்பிவிடுவான். அப்படியான நாட்களில், ரதியை தூங்க விடாமல் தொல்லை செய்துக் கொண்டே இருப்பான்.  போர்வையை இழுப்பதும், அவள் மேல் தண்ணீரை தெளிப்பதுமாய், அவள் கோபமாய் அடிக்கத் துரத்தும் வரை ஓயமாட்டான். சமயத்தில் இரண்டு தெரு தாண்டி ஒவ்வொரு முடுக்காய் ஓடுவான். அப்படி ஒரு நாள் ஓடுகையில் நாய் துரத்தி கீழே விழுந்து ரத்தக் காயத்தோடு வீடு திரும்பி அதற்காக இரண்டு அடியும் வாங்கினான் அம்மாவிடம். ரதி தான், தன்னால் விழுந்து விட்டானே என்று வருந்தி தேங்காய் எண்ணெய் தேய்த்துவிட்டாள் காயத்தில்.

2.

ஒரு அதிகாலை பொழுதில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ரதியின் மீது சொத்தென ஏதோ விழுந்தது. தன் போர்வையின் மீது என்னமோ விழுந்ததை உணர்ந்த ரதி அது ரவியின் வேலை என கண்டுக்கொள்ளாமல் உறக்கத்தை தொடர முயன்றாள். அங்கு வந்த ரவி

 “ஏய் எழுந்திரு உன் மேல என்ன இருக்கு பாரு”  என்று கத்தினான்.

 “போடா” என்றுவிட்டு மெதுவாய் போர்வையின் மீது கையை வைத்து வேவு பார்க்க முயற்சித்தாள் ரதி.

கைகளில் பட்டுப் போல ஏதோ பட, “ட்டுவீ” என்ற சத்தம் கேட்டு சடாரென கண்விழித்து எழுந்தாள். ஒரு சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி அவள் மேலே விழுந்து எழும்ப முடியாமல் கிடந்தது.

“ஏ குருவிடா! அய்யய்யோ அடிபட்டிருக்கு “

 என்று ரவியைப் பார்த்தாள் ரதி. குருவியை பார்த்துக்கொண்டே நின்ற ரவி

“ஜன்னல் வழியா வந்து ஃபேன் ல அடிப்பட்டு விழுந்திருக்கு” என்றான்.

“பாவமில்லடா… இப்போ என்ன செய்ய?” எனக் கேட்டாள் ரதி.

“வா அம்மாகிட்ட கேட்டு மருந்து போடலாம். அப்புறமா சரியானதும் பறக்க விட்டுடலாம்” என்று குருவியை கையில் எடுக்க வந்தான்.

“ஏன் பறக்கவுடனும் நாமே வச்சி வளர்ப்போமே”

என்ற ரதியிடம்  எப்போதும் போல அறிவுரைகளை வாரி வழங்க துவங்கினான் ரவி.

“அது வந்து நம்ம வீட்ல வளர்த்தா செத்துப் போயிடும். அதுங்க அம்மாட்ட தான் அது இருக்கும். குருவி எல்லாம் நம்ம சாப்பாட சாப்டாது. அதுக்கு சோறு ஊட்ட கஷ்டம். அதனால வா மருந்து போட்டு பறக்க விடுவோம்”  என்றுவிட்டு குருவியோடு அடுக்களை நோக்கி நடந்தான்.

” அய்யோ.. அய்யோ.. டேய் குருவிய கொடு. அதுக்கு பறக்க முடியாம தானே இவ்ளோ நேரம் படுத்து கிடந்தது”

“உனக்கு சொன்னா புரியவே புரியாது ரதி! நீ மக்கு மடச்சாம்பிராணி ஆகிட்டே” எனக் கூறவும் தோட்டத்தில் உலாவும் சாம்பிராணி ஏனோ மனதுக்குள் வந்து போனது ரதிக்கு.

“ச்சேய் , நான் ஒன்னும் சாம்பிராணி இல்ல” எனக்கூறியவாறே அவன் பின்னோடு ஓடினாள்.

அம்மா கூறியது போல மஞ்சளும், தேங்காய் எண்ணெயும் கலந்து குருவியின் இறக்கை பக்கமாய் போட்டு பத்திரமாய் கைகளுக்குள் பொதிந்து வைத்துக்கொண்டாள். பாதி பொழுது குருவியோடு கழிந்தது ரதிக்கு. குருவி ஒன்றும் பெரிதாக உண்ணவில்லை என்று வருத்தமாய் இருந்தது ரதிக்கு. அடுத்த நாளும் ஞாயிறு பொழுதைக் குருவியோடேக் கழித்தாள். தன் கூட விளையாட பின்னாடியே வராத நிம்மதியில் சந்தோஷமாய் ஓடி விட்டான் ரவி.

3.

மறுநாள் பள்ளியில் தன் தோழிகளிடம் குருவி என்ன உண்ணும் என விசாரித்தாள். குருவியின் நினைப்பாகவே வீட்டிற்கு வந்து குருவி இருந்த அட்டைப்பெட்டியை திறந்தாள்.. அதில் அவள் இட்டு வைத்த சிறிய கைக்குட்டையில் குருவி உறங்கிக் கொண்டிருந்தது.  பசியோடு வந்தவள் சாப்பிட்டு விட்டு விளையாடக் கிளம்புகையில் ரவியிடம் கூறினாள். “சிட்டுக்குருவி நல்லா தூங்குது தெரியுமா.. “

“வா பார்ப்போம்” என்று பெட்டியை நோக்கி நடந்தான் ரவி.

“அத தொந்திரவு பண்ணாதேடா” எனக் கத்தினாள் ரதி.

அட்டைப்பெட்டியை திறந்த ரவியின் முகம் மாறுவதைக் கண்டு ஓடினாள் ரதி.

“என்னாச்சி?”

“போ லூசு நான் சொன்னேன் கேட்டியா ! குருவி செத்துப் போச்சு பாரு”

“எப்படிடா சாகும்?  இப்போ தானே தூங்கிட்டு இருந்துச்சி? “என கண்களில் நீர் கோர்க்க கேட்டாள்.

“அது செத்துட்டு. நீதான் தூங்குதுனு நினைச்சிட்டே”

“அய்யோ பாவம் என் மேல விழுந்து தான் செத்து போச்சி “என அழத் தயாரானாள் ரதி.

“நீ என்ன செஞ்சே அது அதுவா செத்து போச்சி அது தானே வீட்டுக்குள்ள வந்து ஃபேன்ல அடிப்பட்டு விழுந்திச்சி. நீ காப்பாத்த தானே செஞ்சே “என தங்கை கண்கலங்குவதை தாளமாட்டாமல் சமாதானமாய்க் கூறினான் ரவி.

தங்கை மனசு ஆறுவதற்காக “சரி வா நாம போயி பொதைச்சிடலாம். அப்புறமாட்டி அது மறுஜென்மம் எடுத்து சிட்டு குருவியாவே பொறந்து நம்ம வீட்ட சுத்தி வரும் வா” என இழுத்தான். ரதிக்கு சட்டென பக்கத்து வீட்டில் பாம்பை அடித்து புதைத்த காட்சி ஞாபகத்தில் வந்தது.

“இருடா… செல்லராசு அண்ணன் அன்னைக்கு பாம்ப பொதைக்கையிலே அரிசி , பூ , பால், ஒரு ரூவா துட்டு எல்லாம் போட்டு மூடினாங்க இல்ல, நாமளும் அப்படியே செய்வோமா?!” எனக் கேட்டாள் ரதி. அவளுக்கு குருவியை சாகவிட்டுவிட்டோம் என்ற குற்றவுணர்வு அதிகமாய் இருந்தது. அதை சமண்படுத்த முயற்சித்தாள்.

“சரி நான் போய் பூ பிச்சிட்டு வாரேன், நீ போய் அரிசியும், பாலும் எடுத்தா! எங்கிட்ட துட்டு இருக்கு ஒருரூபா காயின்.. அத போட்றலாம் “என்றான்.

இந்தா வாரேன் என அடுப்பங்கரைக்குள் ஓடிய ரதி அரிசி பானைக்குள் கையை விட்டு தன் மேல்சட்டையை பிடித்துக்கொண்டு அரிசியை அள்ளிப் போட்டாள். அங்கே வந்த அம்மா

“எதுக்கு இம்புட்டு அரிசி எடுக்க” என்றாள்.

“குருவிய பொதைக்கம்மா, அப்படியே கொஞ்சம் பால் தாம்மா” எனக்கேட்டாள்.

“குருவிக்கு எதுக்குமா  அரிசி, பால் எல்லாம்? ” என தலையில் அடித்துக்கொண்டாள் அம்மா.

“செல்லராசு அண்ணன் அன்னைக்கு பாம்புக்கு போட்டாங்கம்மா..”

“அவன் பாம்படிச்ச தோஷம் போகப் போட்டுருப்பான். குருவிக்கு எல்லாம் ஒன்னும் தேவையில்ல பேசாம கொளத்துல கொண்டு வீசிட்டு வா” என்றாள்.

“ஏன்மா பாம்படிச்சா தோஷமா? அப்போ ஏன் அடிக்கனும்?”

“உனக்கு விளக்கம் சொல்லி முடியாதுமா. பாம்பு சாமி மாதிரின்னாலும் விஷஜந்து இல்லையா, கடிச்சிடுமோன்னு பயத்துல அடிச்சிடறாங்க, அதனால கொன்ன பாவத்துக்கு பிராயசித்தமா இப்படி பொதைச்சிடறாங்க. இல்லனா நாகராஜா கோவிலுக்குப் போய் பால் ஊத்துவாங்க, இல்லன்னா பாவம் புடிக்கும், பாம்பு பழிவாங்க்கும்னு ஒரு பயம்தான்”, என்றாள் அம்மா.

“அம்மா எல்லா உயிரும் சாமி தானே அப்போ எத அடிச்சாலும் பாவம் தானே” எனப் புதிய கேள்வியோடு பார்த்த ரதி அடுத்து என்ன கேட்பாள் எனப் புரிந்து கொண்ட அம்மா

“நீ சொன்னா சரிதான் ரதி, இந்த பேச்ச விடு எனக்கு வேலைக் கிடக்கு.  ஆனா இப்போ ஒன்னும் கிடையாது போ”

“அம்மா ப்ளீஸ் மா.. குருவி பாவம்மா… அது ஒன்னும் சாப்டாம செத்துப்போச்சி. குழில போட்டுட்டா அந்த அரிசிய அப்புறமா சாப்டுகிடும்.”

அங்கு வந்த ரவி அதைக் கேட்டு சிரிக்க துவங்கினான். கோபமாய் அவனைப் பார்த்த ரதி அம்மாவிடம் திரும்பி “பால் தர முடியுமா, முடியாதா” என்று கோபமும் அழுகையுமாக கேட்டாள்.  முறைத்த அம்மாவிடம்..

“நீ இப்போ குடுக்கலனா விளையாடிட்டு வந்து நான் பால் குடிக்கவே மாட்டேன், இனிமே எனக்கு பாலே வேணாம்மா” என்றாள்.

“தொலை இந்தா ” எனக்கொடுத்தாள் அம்மா.

இருவரும் குருவியை கர்ச்சீப்போடு எடுத்துக்கொண்டு நீர் இல்லாத குளத்தை நோக்கி நடந்தார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த மற்ற பிள்ளைகளும் சேர்ந்துக் கொண்டார்கள் குருவிக்கான இறுதிச் சடங்கு ஊர்வலத்தில்.

முதலில் ரவியும் குமாரும் குழி வெட்டினார்கள். கொஞ்சம் இருங்கடே! அதுக்கு மெத்த செய்ய எல பறிச்சிட்டு வரேன் என நிம்மி ஓடினாள். இலைகளால் மெத்தை போல செய்து அதன் மேல் கர்ச்சீப்போடு சிட்டுக்குருவியைக் கிடத்தினார்கள். மேலே ஒவ்வொருத்தராய் பூவை போட்டு கடைசியாக அரிசியும் போட்டு, பாலும் ஊற்றி, ரூபாகாயின் போட்டு மண் இட்டு மூடினார்கள். பின்னர் கண்மூடி சாமியிடம் வேண்டினார்கள். ரதியும் கண்மூடி வேண்டினாள்

“புள்ளையாரப்பா சீக்கிரமா இந்த சிட்டுக்குருவியை மறுபடியும் பொறக்க வை. எங்க வீட்டுக்கிட்டயே பறக்க வை “.

எல்லா பிள்ளைகளும் இதை ஒரு விளையாட்டாகத்தான் செய்தார்கள். ரதிக்கு மட்டும் துக்கமாய் இருந்தது. இரண்டு நாட்கள் சோகமாய் தென்னை மரத்தையும், லைன் கம்பிகளையும் பார்த்த வண்ணம் இருந்தாள். குருவிகளில் இறந்து போன குருவியை அடையாளம் காண முயற்சித்து தோற்றாள். அம்மாவிடம் சென்று ‘மறுஜென்மம் எல்லாம் உண்மையா? மீண்டும் பிறக்க எத்தனை காலமாகும்’ என்றெல்லாம் விசாரித்தாள்.

அதனை கவனித்த ரவி அவளிடம் வந்து “உடனே எல்லாம் பொறக்காது. அந்த ஆவி சாமிக்கிட்ட போயிட்டு பிறகு சாமி சொல்லும் போது எதாவது அம்மா குருவி வயித்துக்குள்ள போயி வளர்ந்து அப்புறமாத் தான் பொறக்கும்” என்றான்.

தன் அண்ணனை நிஜமாக புத்திசாலி என நம்பத் தொடங்கிய ரதி அவன் சொல்வது சரி என ஒத்துக்கொண்டாள். சில நேரங்களில் ஆவலாக குருவிகளை வேடிக்கைப் பார்ப்பாள், சில நாட்களில் குருவியை மறந்தும் போனாள்.

சில மாதங்களுக்கு பின் ஒரு  அதிகாலையில் குருவி சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் ரதி. ஜன்னலில் ஒரு சிறிய சிட்டுக்குருவி தன் வாலை ஆட்டி உடலை சிலிர்த்து “ட்டுவீ ட்டுவீ” என்றது.. சட்டென இறந்துபோன சிட்டுக்குருவி தான் பிறந்து வந்துவிட்டது என மகிழ்ந்த ரதி அது உள்ளே பறக்க எத்தனிப்பதைக் கண்டு கத்தினாள்

“டே ரவி  இஃப்பேன ஆப் பண்ணு.” என சத்தம் கொடுக்க  ஓடி வந்த ரவி ஃபேனை ஆப் பண்ண , அறைக்குள் நுழைந்த குருவி சத்தம் எழுப்பியவாறு ஒரு வட்டம் அடித்து மேசையில் அமர்ந்து இன்னும் ஒரு முறை அழைத்து விட்டு ஜன்னல் வழியே பறந்தோடியது.  ஆனந்தத்தில் திக்குமுக்காடிய ரதி இந்த சிட்டுக்குருவியை தான் காப்பாற்றி விட்ட சந்தோஷத்தில் அண்ணனைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தாள் ! அந்த நாளிற்கான மகிழ்ச்சியை அள்ளித் தெளித்து விட்டு வானில் சிறகடித்துச் சென்றது அந்த சிட்டுக்குருவி!.

ராணி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பப்புவா நியுகினியாவில் தற்போது வசிப்பவர். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

தமிழ் இலக்கியம் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும்  உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள்,

நாவல் என்று பலவகை முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *