அவள் குண்டூரில்தான் இருந்திருக்கிறாள். அவள் வீடு தேடிப் போய் பார்ப்பதெல்லாம் பிரச்சினைகளை இன்னும் பெரிதாக்கும் எனப்பட்டது. நான் வருவேன் என்று பிரவுசிங் சென்டர் பக்கம் வருகிறாளா என்று சாயங்கால வேளைகளில் குறிப்பிட்ட கடைத்தெருவிலேயேச் சுற்றிக்கொண்டிருப்பேன். அவளைக் காண முடியாத துக்கம் வாய்வரை வந்து அடைக்கும், சக்தி இழந்தவன் போல் உணர்வேன். கண்ணீர்த் துளிர்த்து, வெடித்து அழும் தருவாயில் கூட அந்த துக்கம் என்னை வதைத்திருக்கிறது. திருவிழாவில் வாங்கிக் கொடுத்த பொம்மையை அங்கேயே தொலைத்துவிட்ட குழந்தையின் மனநிலையில் மொழியிழந்து நிற்பேன்! அச்சமயங்களில் காந்திப் பூங்கா எனக்கு அடைக்கலம் கொடுத்தது. அப்படியொரு நாள் அலைந்துக்கொண்டிருக்கும்போது அவளுடைய அண்ணன்காரன் எதிர்பட்டான்.

என்னைக் கண்டதும் சிரித்தான். அருகில் வந்து, அப்போதும் என்னுடைய பாக்கெட்டில் கைவிட்டு காசு இருக்கிறதா எனப் பார்த்தான். அங்கே ஒன்றுமில்லாததால், பின்புறம் பர்ஸ் பக்கம் அவன் கை போக, தட்டிவிட்டு அடிப்பது போல கைகளை ஓங்கினேன். பல்லைக் கடித்துக் கொண்டு ஆவேசமாக என் சட்டைக்காலரைப் பிடிக்க ‘ஊ..!’ என எகிறி பாய்ந்தான். நான் தடுமாறி அப்படியே பின் புறம் விழுந்துவிட்டேன். கூட்டம் கூடிவிட்டது!

எல்லோரும் எங்கள் இருவரையும் விளக்கிவிட்டு எங்களுக்குள் என்ன நடந்ததென விசாரித்தார்கள்.

‘வாடு.. அறவாடு! அத்தனு நா ச்செல்லல் னி ப்ரேமிஸ்தாடு!’ அவன் தமிழ்நாட்டுகாரன் என்னோட தங்கச்சியை காதலிக்கிறான் என்று ஆவேசமாகிச் சுற்றி பார்க்க, பலர் மௌனமாகிப் போனார்கள்.

ஒன்றிரெண்டு தடிமாடுகள் என்னை நோக்கிப் பாய வந்தன. நான் நிலை குழைந்துப் போனேன். சட்டை, பேன்ட்டென எல்லாவற்றிலும் நிலம் கன்னத்தோடு கன்னம் வைத்தது போல் தனது அன்பை ஆங்காங்கே வெளிப்படுத்தியிருந்தது. வரள் பாறையில் வழியும் வெந்நீர் ஓடை போல் வியர்வை வடிந்துக் கொண்டிருந்தது. உடலில் வலிமைக் கூடியது போல் உணர்ந்தேன். துணிவுடன் நின்றேன். அதை பாதுகாக்கும் வண்ணம் ஆப்த மித்ராவைப் போல ஜலபதி சமயத்திற்கு அங்கு வந்து சேர்ந்தான். அவனே நல்ல திடகாத்திரமாத்தான் இருப்பான் சொல்லவா வேண்டும்?

ஆனாலும் கோதாவில் ஏதும் இறங்கவில்லை. கீதாவுடைய அண்ணனை சத்தம் போட்டுவிட்டு, கூட்டத்தை விளக்கினான். அண்ணனும் நண்பனும் ஒருங்கேக் கலந்த உயிர்ப்பை அவன் கண்களில் கண்டேன். என் தோளைத் தட்டியபடி, சைகையால் பைக்கை எடுத்துக்கொண்டு ஃபேக்டரிக்கு போகச் சொன்னான். சட்டையின் பின்புறம் ரொம்பவே அழுக்காகி கறைப்பட்டிருந்தது. வியர்வையில் தொப்பலான உடுப்புகளோடு, ஒரு குப்பை மூட்டைப் போல வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

ஜலபதி என்னை பின்தொடர்ந்தபடி வந்தான். அவள் காதல் தந்த வலியும், சுகத்திலும் கண்ணீர் பெருகியது.

என் முகமெல்லாம் தூசிப் படிந்திருப்பது போன்ற அருவருப்பு! அவனை இருவருக்கும் வார்த்தைகளில் திட்டிக்கொண்டே வண்டியை ஓட்டினேன். ஜலபதி சற்று வேகமாய் கடந்து வந்து, பை பாஸிலுள்ள பார் பக்கம் நிறுத்து என்றான். நான் ஒன்றும் சொல்லவில்லை. 

இடம் வந்ததும், அவனே பின்னாலிருந்து மீண்டும் ஹார்ன் அடித்து நிறுத்தச் சொன்னான். நிறுத்தினேன். அங்கிருந்தவர்கள் என்னை என்னவோ போல் பார்த்தனர். பாருக்குள் ஒரு பிரத்யேக அறைக்குள் அழைத்துச் சென்று சட்டையை கழட்டி தருமாறு சொன்னான். கொடுத்தேன். யாரையோ கூப்பிட்டு அதை நன்றாக அலசி பத்து நிமிடத்தில் ரெடி பண்ணி தருமாறு ஏவினான். அவனும் “அலாகே அண்ணய்யா” என்று ஆமோத்தித்து பவ்யமாய் வாங்கிச் சென்றான். டேபிள், சேர் இருந்ததால் அங்கேயே பனியனோடு அமர்ந்தேன். அவனே எல்லாம் ஆர்டர் செய்தான்.

கேவி கேவி அழ ஆரம்பித்தேன். தனது இருக்கையிலமர்ந்தபடியே ஜலபதி என்னை சரி சரி என்று தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினான். எனக்கு புகைப் பழக்கம் அப்போது இருந்ததில்லை. இருந்தாலும் அன்று பிடிக்க வேண்டுமெனத் தோன்றியது. ஜலபதி தனது பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கொடுத்து, பற்றியும் விட்டான்.

பிடிக்க முயன்றும் இருமலும் தும்மலும்தான் வந்தது. ஆத்திரம் கொண்டவனாக சிகரெட்டால் சுட்டுக்கொள்ள நான் எத்தனித்த போதுதான், ஜலபதி பளாரென ஒரு அரைவிட்டு, “உனக்கு என்னாயிற்று, ஏன் பைத்தியம் போல் நடந்து கொள்கிறாய்?” என்று கண்கள் சிவந்து என்னை வெலவெலக்க வைத்தான்!

கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தோம்.

“நான் கூட லவ் பண்ணிருக்கேன்” என்று தனது இரண்டாவது திருமண கதையைப் பற்றி அவன் ஆரம்பித்தாலும், கேட்கும் மனநிலையில் நான் இல்லை. எழுந்துச் செல்லலாம் என்றால் சட்டை வேறு இல்லை! வேர்க்க விறுவிறுக்க அப்படியே அவன் கதைகளை கேட்டும் கேட்காமலும் அமர்ந்திருந்தேன். மனசெல்லாம் பாரம் என்றாலும் அந்த வலி எனக்குப் பிடித்திருந்தது. சிகரெட்டால் சுட்டிக் கொண்டிருந்தாலும் கூட எனக்கு சுகமாகத்தான் இருந்திருக்கும்.

அவன் வற்புறுத்தியும் நான் எதையும் அருந்தவில்லை. சிறிது நேரத்தில் சட்டை துவைக்கப்பட்டு, இஸ்திரி போடப்பட்டும் வந்தது. அந்த பையனுக்கு அவனே ஐம்பது ரூபாயை கொடுத்தான். அந்த ஒல்லி இளைஞன் நன்றி சொல்லியபடி சென்றுவிட்டான்.

என்னைப் பார்த்து ஜலபதி, கீதாவை மறந்து விடு என்ற வசனத்தைத்தான் தொடர்ந்து உபதேசித்துக் கொண்டிருந்தான். நான் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அன்று உணவு எதுவும் இறங்கவில்லை. ஜலபதி நடந்த எல்லாவற்றையும் பிரசாத்திடம் சொல்லியிருக்க கூடும். அவரும் ஒரு மணி நேரம் வரை அறிவுரைகளை வாரி இறைத்தார். நியாயமாக பார்த்தால் என்னிடம் அவர் கோபம்தான்பட்டிருக்க வேண்டும். நான் சரி சரி என்று எல்லாவற்றிற்கும் தலையாட்டினேன். அவளை மறப்பதா? என்னை நானேக் கேட்டுக் கொண்டதில் சிரிப்புதான் வந்தது. ஆனால் முயற்சிக்க தொடங்கினேன். இரவு முழுக்க உறக்கமே வரவில்லை.

அடுத்த நாள் வந்த சீதம்மா என்னிடம் எதுவும் பேசவில்லை. உணர்ச்சியற்றுக் காணப்பட்டார். நானும் அவரைப் பார்ப்பதை, இருக்கும் நேரங்களில் அங்கே செல்வதைத் தவிர்க்கத் தொடங்கினேன். அப்படியே நாட்கள் சென்றது அவரையும் பாதித்திருக்க வேண்டும். ‘பாபு..!’ என்று ஒருநாள் அழைத்தார். என்னளவில் அந்த சூழலுக்கு தொடர்பேயில்லாமல் தனது அண்ணன் தனக்கு செய்து வந்த சகாயங்கள் அனைத்தையும் ஒரு மூச்சில் சொல்லி முடித்தார். ஏன் கீதாவை படிப்பை விட்டு நிறுத்தினீர்கள் என்றேன். சில நாள் மட்டும் அனுப்பவில்லை, இனி செல்வாள் என்றார். இனி அவள் பக்கம் திரும்ப வேண்டாம் என கவலையோடு கேட்டுக் கொண்டார். நான் சரி என்று வந்துவிட்டேன்.

கீதாவின் நினைவுகளை தவிர்க்க முடியாமலேயே என் வேலைகளில் பழையபடி கவனம் செலுத்த முயன்றேன். படிப்படியாக தேறி வருவது போல் பாவனைகள் காட்டினேன். ஒரு மாதத்தில் பிரசாத் மறுபடியும் சென்னை சென்றுவிட்டார். ஜலபதி முன்பிருந்ததை விட நெருக்கமானான். என்னுடைய நண்பன் ரமேஷைதான் மிகவும் தவறவிட்டுக்கொண்டிருந்தேன். அந்த சீசன் முடிவதற்குள் அவனைப் பார்த்து விட வேண்டும் என நினைத்தும் கொண்டிருந்தேன்.

முயற்சியாலும், காலத்தாலும் மாற்ற முடியாதது எது? எனது வழமைகள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. கணேஷ் நடந்தவற்றை ஒரு விசயமே இல்லை என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், கோவிந்தம் சார் என்னை அப்படியொரு கோணத்தில் ஊகித்தேப்  பார்த்திருக்கவில்லை போலும், கடைசி வரை ஒரு அமைதியைக் கடைபிடித்தார். நானும் அதற்கு ஏற்றார் போல என்னையும் மாற்றிக்கொண்டேன். சிறிது சிறிதாய் அவருடன் உரையாடி வந்ததையும் குறைத்துக் கொண்டேன்.

ஆனால் சீதம்மாவை எதிர்கொள்ளும் வேளைகளில் கீதாவுடனான நினைவலைகளை அசைபோடாமல் இருக்க முடியவில்லை. அவள் திருமணம் செய்துகொள்ள போகிறவன் நல்லவனாக இருந்தால் சரி என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். அது எனது மானசீகமானப் பிரார்த்தனையும் கூட. ஆனால் கீதாவிற்கு கொடுக்க வேண்டி சுற்றப்பட்டிருந்த அந்த பரிசுப்பெட்டி மட்டும் பேக்கை திறக்கும் தருணங்களில் என்னை சோதித்துக் கொண்டிருந்தது.

அந்த சீசனும் முடியும் தருவாயில், சீதம்மாவுடன் தனித்துப் பேசுவதற்கு ஒரு நாள் நான் அவரை அழைத்தேன். எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா என்றேன். அவர் குழம்பிப் போய் பார்த்தார். கீதாவிற்காக இந்த பரிசுப்பொருளை கொண்டு வந்திருந்தேன். இதை திரும்ப எடுத்துச் செல்லவும் எனக்கு மனமில்லை, வேறு யாருக்கும் கொடுக்கவும் விரும்பவில்லை. உங்களுக்கு ஆட்சியேபனை இருக்கும் பட்சத்தில், இதை நான் தந்தாக கூட அவளிடம் கூற வேண்டாம். வேறு ஏதாவது காரணம் சொல்லி நீங்களே கொடுப்பது போல் அவளிடம் சேர்த்து விடுகிறீர்களா? என கேட்கவும். சிறிதும் யோசிக்காமல் சரி என்றார். ஒரு பெரிய சுமை இறங்கியது போல உணர்ந்தேன்.

முந்தைய இரவு வழக்கமான பிரிவு உபச்சாரமெல்லாம் முடிந்து, அடுத்த நாள் மாலை நான் சென்னைக்குக் கிளம்ப வேண்டியதாக இருந்தது. அடுத்த வருடம் அங்கு செல்வதில்லை என்ற முடிவும் எடுத்திருந்தேன். அதை அனைவரிடமும் தெரிவித்துமிருந்தேன். அதனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாய் கிட்டத்தட்ட அந்த இரண்டு வருடங்கள் நடந்த யாவற்றையும் ஒவ்வொரு நொடியும் அசைப்போட்டவாறே புறப்பட தயாராகிக் கொண்டிருந்தேன். என் உடலிலிருந்து வண்ணங்கள் பிரிந்து வான மேகக் கூட்டத்தினிடையே என்னைப் பிடித்தபடி மிதப்பது போல் காட்சிகள் கண்டேன். அந்த துய்ப்பும் இதமாகவே இருந்தது. கனவுகள் சுகமானவைதான்; கைவிடும்போது?

சன்னலில் மஞ்சள் நிற பட்டாம்பூச்சியொன்று அமர்ந்திருப்பதை சட்டென கவனிக்க, கீதாவை நிரந்தரமாகப் பிரிவது அந்நாள் வரை ஒட்டிக்கொண்டிருந்த ரெக்கைகளைப் பிய்த்துப் போட்டது போன்றிருந்தது.

அப்போதுதான் கோட்டேஸ்வரம்மா தன்னோட குழுவினரோடு வந்து, ஒரு நினைவிற்காக அந்த ஃபோட்டோவைக் கொடுத்தார். விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து, பூ வைத்து, திலகமிட்டுக் கொண்ட மங்களகரமும் நெகிழ்ச்சியும் அவர் முகத்தில்! அந்த ஒளிச்சாயம் என் முகத்திலும் அப்பிக் கொண்டது போல் பிரகாசித்தேன். உண்மையாகவே! அத்தனை நாட்கள் கழித்து இன்முகத்தோடு  அருள்பாலிக்க வந்தவள்  போல, அந்த புகைப்படத்தில் கீதாவும் எனக்காக அவதரித்திருந்தாள்!

புகைப்படத்தில் அவள் இணைவையும் கண்டு, என் முகம் சிறு கல்லொன்று  முத்தமிட்ட கிணற்றில் ஒளிபட்ட வெள்ளி வளையமாய் மின்னி விரிந்ததை அங்கே யாரும் கவனிக்காமலில்லை. எப்படி அவளையும் அழைத்து வந்து எடுத்தார்கள் என்று ஆச்சர்யப்பட்டு மனம் மகிழ்ச்சியால் பொங்கி எழுந்திருந்தாலும், வாய்விட்டு எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. போகும் நேரத்தில் அந்த மகிழ்ச்சி வேண்டிதான் கோட்டேஸ்வரம்மா திட்டமிட்டு இதனை செய்திருக்கிறார் என பிறகு ஜலபதி சொல்ல அறிந்துக்கொண்டேன்.

சென்னை வந்த சில நாட்களிலேயே வேலையை ராஜினாமா செய்தேன். அப்போதுதான் ரமேஷ் தானும் ராஜ மந்திரியிலிருந்து தன்னுடைய அண்ணன் திருமணத்திற்காக தான் சென்னை கிளம்பி வரவிருப்பதாக தெரியப்படுத்தினான். சட்டென இரசாயன மாற்றங்களுக்கு ஆட்பட்டு, எனது மூளை வேறு விதமாக வேலை செய்யத் தொடங்கிற்று.

“அப்போ ராஜ மந்திரியில் உன் பிளாட் ஃப்ரீயா?” என்றேன்

“ஆமாம், ஏன் கேக்குற?”

“டேய் நான் கொஞ்ச நாள்ல ஃபாரீன் போயிருவேண்டா, கடைசி தடவையா கீதாவ பார்க்கணும் போல இருக்கு.. வெளில எங்கேயும் மீட் பண்ணினா பிரச்சினை ஏதும் வரலாம். அதனால…”

அவன் அதிர்ந்து, “என்னடா சொல்ற? அவளுக்கு எங்கேஜ்மென்ட் எல்லாம் முடிச்சிச்சுன்னு சொன்ன.. டேய் வேணாண்டா.. நீ பாக்கணும்னு சொன்னாலும் அந்த பொண்ணு எப்படி வரும்? ஏதும் பிரச்சினை ஆயிட போவுது. நீ முதல்ல ஃபாரீன் போற வேலைய பாரு! நான் ரெண்டு நாள்ல அங்க வந்துடுவேன்!”

“அப்ப நாளைக்கே அங்கே நான் வந்திர்றேன்!”

“டேய் பிரச்சனை ஆகும்டா.. நான் சாவில்லாம் தர முடியாது! லூசு மாதிரி பேசாம அங்கேயே இரு! ரொம்ப நல்லவன் மாதிரி சீனு காட்டிட்டு போன.. இப்ப என்ன ஆச்சு உனக்கு?”

ரமேஷ் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், எனக்கு இன்னொரு திடீர் யோசனையும் தோன்றியது . அவனுக்கு தெரியாமல் சென்று, அவளை நேரடியாக காலேஜ்லேயே போய் சந்தித்துவிட்டு திரும்பி வரும்போது, அவனோடு சேர்ந்து வருவது போல் ஒரு திட்டம் போட்டேன்…

***

“என்னங்க.. என்னங்க!” மனைவியின் குரல் கேட்டுதான் ஆழ்ந்த நினைவலைகளிலிருந்து மீண்டு வந்தேன். ஏதோ நீண்ட கனவு ஒன்று கண்டது போலிருந்தது. பவித்ராவைப் பார்த்ததும் என்னையுமறியாமல் சந்தோசமும், வெளிக்காட்டமுடியாத சிறு குற்றவுணர்வும் ஒருசேரப் பூத்துக் கொண்டன. என் புன்முறுவலை கவனித்தவளாய், “என்ன… சாரு நல்ல மூடுல இருக்கிற மாதிரி இருக்கு..?” என்று சிரித்தவளை இதமாய் அப்படியே வளைத்து அணைத்தேன். அது அவளை மேலும் ஆச்சர்யப்படுத்திருக்க வேண்டும். இவனுக்கு என்னாச்சு என்பது போல் வெட்கத்தோடுப் பார்த்தாள். மணி மாலை ஐந்தாயிருந்தது!

“டீ கொண்டு வரவா?”

“ம்ம்” என்று பலமாய் கொண்டு வா என்றேன். விடுமுறை முடிந்து மீண்டும் துபாய் செல்ல மீதம் ஒரு வாரமேயிருந்தது. என்ன செய்யலாம் என்று உடம்பை நெளித்துக் கொண்டிருந்தேன்.

“பவி.. பவி..!” கிச்சன் பக்கம் ஓடினேன். 

“இருங்க கொண்டு வர்றேன்!”

“அதுல்ல பவி.. நம்ம ரமேஷ் இருக்கான்ல.. அதான் ரொம்ப நாளா நான் பாக்கணும் பாக்கணும்னு சொல்லிட்டு இருந்தேனே..!”

“ஆமா.. உங்க கூட குண்டூருலலாம் இருந்தார்னு சொல்லியிருந்தீங்களே..!”

“ஆமா ஆமா அவனேதான்.. அந்த ஃபைல்ல இருந்த போட்டோவைக் கண்டத்திலிருந்து ஏனோ அவனை நேர்ல போயி பார்த்திட்டு வரணும் போல இருக்கு! அந்த ஏரியாவுக்கு போயும் ரொம்ப வருசமாச்சி.. போயிட்டு வரட்டா? இன்னைக்கு நைட்டு போயிட்டு, நாளை மறுநாள் காலைல இங்கிருப்பேன்! ப்ளீஸ் பவி.!” குழந்தை போல கெஞ்சினேன்.

“எங்களையெல்லாம் கூட்டி போக மனசு வராதே..!” என்று பொய்யாய் கோபிப்பவள்  போல் முகத்தை வைத்துக் கொண்டாள். ஆனால் அதெல்லாம் நொடி பொழுதுதான்!

“சரி சரி சந்தோசமா போயிட்டு வாங்க!” அதுதான் பவித்ரா! அவள் எதிர்பாராத முத்தம் ஒன்றை அவள் கன்னத்தில் பச்சக் என்று வைத்துவிட்டுப் புறப்படலானேன்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்போது ரமேஷைப் பார்க்க போகவில்லை. குண்டூரை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வர வேண்டும் போலிருந்தது. முடிந்தால் கீதாவையும் ஒரு முறை…?!

அன்றிரவு மனைவி, பிள்ளைகளுக்கு பயணம் சொல்லிவிட்டு, பேருந்தில் ஏறியதும் வேறு உலகிற்கு வந்துவிட்டவன் போல கீதா பற்றிய நினைவுகளில் மீண்டும் மூழ்கலானேன்.

அன்று ரமேஷ் வேண்டாம் என்று சொல்லியும் நான் அவளை சந்திக்க விஜயவாடாவிற்குப் புறப்பட்டேன். என்ன நடக்கும் என்ற பயமெல்லாம் துளியும் இல்லை! எந்த மறு சிந்தனையும் என்னைத் தடுக்கவில்லை. நேரிடையாகவே கல்லூரிக்குள் சென்றேன். வளாகத்தினுள் அஞ்சி பாபுவும் நின்றுக் கொண்டிருந்தான், அதுவும் போலீஸ் யூனிஃபார்மில்! இவன் எப்போது டூயூட்டியில் சேர்ந்தான் என்ற அதிர்ச்சியை விட இங்கே இவன் நம்மை கண்டுவிடாமல் இருக்கணுமே என்றே பதற்றம் தொற்றிக் கொண்டது!

அதே நேரம் அவனுக்கு சற்று தூரத்திலிருந்தபடி ஆச்சர்யக் கிளி கீதாவும் என்னை கவனித்துவிட்டாள். நான் அவன் இருப்பதாக கண்ணைக் காட்டினேன். என்னைத் தேடி வந்துவிட்டாயா? இப்போது பார்! உனக்காக எதுவும் செய்வேன் என்ற தவிப்பும் மகிழ்ச்சியும் அவளிடம் நூறு மடங்கு மிளிர்ந்தது. வேறொரு வழியைக் காட்டி அந்த பக்கம் வரச் சொன்னாள். மறுபடியும் எனக்குள் அவளை முதலிலிருந்து பார்ப்பது போல், மீண்டும் காதலிக்க தொடங்குவது போல் ஒரு பரவசம், சந்தோசம், துள்ளிக் குதிக்கும் ஆனந்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது!

அவளை சந்தித்த போது கண்கள் கலங்கிவிட்டன. அவளுக்கும்தான்! இரு குளங்களை குடித்த மீன்கள் போல் அவள் கண்கள் உப்பி பெருகியது! எங்கு ஒதுங்குவது எனத் தெரியவில்லை. வெளியில் எங்கும் போகலாமா என்றேன். அதற்காகவே காத்திருந்தவள் போல் கண்களைத் துடைத்துக் கொண்டு தலையாட்டினாள். அஞ்சி பாபு எங்களைப் பார்த்து விடாதபடி மெயின் கேட் வழியே செல்லாமல், லைப்ரரி வழியே வேறொரு பாதையை பயன்படுத்தினோம். நடக்க நடக்க எனது கரங்களை இறுக்கமாகப் பற்றத் தொடங்கினாள். எனக்கும் அவளை இறுக அணைத்திட இதயம் அடித்துக்கொண்டுக் கிடந்தது.

அஞ்சி பாபு தற்போது பணியிலிருப்பதால் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்கலாம் என எண்ணி ஏதாவது சாப்பிடலாம் என்றுதான் ஒரு ஹோட்டலுக்குள் சென்றோம்.. மேலே ரூம்லாம் இருக்கு சார்! என்று கல்லாவில் இருந்தவன் சொல்ல, மனம் சட்டென வேறு பக்கம் தாவ ஆரம்பித்தது. ஒரு வித பயத்தோடு சரி என்பது போல மேலே சென்றோம். ரூம் சர்வீஸ் எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு சென்றான்.

அறைக்குள் நுழைந்த உடனே அடக்கி வைத்திருந்த அத்தனை தவிப்பையும், காதலையும் ஒன்றுக்கூட்டி மலைக்கரங்களால் அவளைத் தழுவ ஆரம்பித்தேன். பூவே பூவை சுவைப்பது போல் ஈரவழிசலோடு முத்தமிட்டுக் கொண்டோம். அப்போதுதான் கதவு அதிர்ந்தது. நாங்களும்! நொடிக்கு நொடி சத்தம் கூடிக்கொண்டேச் செல்லவே வேறு வழியில்லாமல் திறந்தேன். அஞ்சி பாபுவைப் பார்த்தவுடன், நான் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன். அதுவரை தரையில் விழுந்து நொறுங்கி, பெயர்ந்துவிடுவோம் என்றறிந்திராத சுவர்ப்படம் போல் அவள் சரிந்து அழ ஆரம்பித்துவிட்டாள்! 

ஒரு டாக்சியைப் பிடித்து எங்களை குண்டூருக்கே அழைத்துச் சென்றான் அந்த படுபாவி. கீதாவைப் பற்றி மிக தாழ்வாகப் பேசிக்கொண்டே வந்தான். கோபம் எரிமலையாய் கொதித்தும் அவனது போலீஸ் சீருடையால் அங்கே நான் ஒன்றும் திமிரமுடியாமல் ஆகிவிட்டது.

குண்டூரில் வண்டி நின்ற இடம் சாம்பசிவ ராவ் மர குடோன்! அங்கே கீதாவுடைய மாமா, அண்ணன் என எல்லோரும் காட்டு வெறியில் நின்றுக்கொண்டிருந்தனர். கூடவே நரேஷும்! அவன் உதவுவான் என எதிர்பார்த்தேன். குறைந்த பட்சம் பிரசாத்துக்கு அவன் நான் வந்திருப்பதையும், நானும் கீதாவுமாய் பிடிப்பட்டிருப்பதையும் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. இடையில் நான் பண்ணியிருந்த ஒரே ஒரு நல்ல காரியம் ஜலபதிக்கு ஃபோன் செய்திருந்தது. அதே நேரம் நாங்கள் சாம்பசிவராவ் குடோனிற்கு கொண்டுவரப்பட்டிருக்கும் செய்தியும் காற்று வேகத்தில் அவனை எட்டியிருந்ததும் கூட!

ஆனால் அவன் வருமுன்னரே என்னை ஒரு வழி பண்ணியிருந்தார்கள். கீதாவுடைய அண்ணனும் மாமனும்  அதுவரை இருந்த எல்லா கோபத்தையும் வெறுப்பையும் என் மீது காட்டி, உடைகள் கிழிந்து ஆங்காங்கே ரத்தம் சொட்ட வைத்திருந்தார்கள். நரேஷ் அப்படியே நின்றுக்கொண்டிருந்தான். கீதா இன்னொரு புறம் நான் கதறுவதைப் பார்த்து துடித்துக் கொண்டிருந்தாள்..!

ஜலபதி சுமந்த்தோடு முடிந்த வரை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்தான். அன்றுதான் சுமந்த்தின் செல்வாக்கையும் மேன்மையான குணத்தையும் கண்முன் கண்டேன். அதுவரை ஏதோ சினிமா பார்ப்பது போல் அமைதியாக அமர்ந்து கொண்டு நடப்பதெல்லாம் எந்த வித அசைவுமின்றி கண்டுகழித்துக் கொண்டிருந்த சாம்பசிவ ராவ், சுமந்த்தைக் கண்டதும் எழுந்து நின்றார்!

சுமந்த் எங்களுக்காக ஏதேனும் பரிந்துப் பேசியிருக்க வேண்டும்! அதிவேக மாற்றத்தில் மற்றவர்களை கண்டித்தது மட்டுமல்லாமல், என்னையும் கீதாவையும் கூட அக்கறையோடுத் திட்டினார். இதில் சுமந்த் எப்படி அங்கு வந்தார் என்றால், சுமந்த் மூலமாகவே சாம்பசிவ ராவை பிரசாத்திற்கு தெரியும். சுமந்த் சாம்பசிவ ராவின் பல ரகசியங்களை அறிந்த ஆள், பினாமி போல செயல்படுபவன், ஜலபதியின் நெருங்கிய நண்பனும் கூட. இருதரப்பிலும் தவறுகள் உள்ளன என்பது போல் அனைவரையும் சமாதானப்படுத்தி, கீதாவை உரியவர்களோடு அனுப்பி வைத்தார். அன்றுதான் அவளை கடைசியாய் கண்டது! வலிகள் பொதிந்த மௌனச் சிற்பம் போல் தலைக் கழிந்தபடி என்னைக் கடந்து சென்றாள்..! இன்னொரு சிலை போல கூடுதல் காயங்களோடு நானும் அங்கே வெறித்து நின்றேன்!

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்துச் செல்கிறேன்.. குண்டூரு மார்க்கெட் பக்கமிருக்கும் காந்தி பார்க் அருகிலேயே அறை எடுத்து, அந்த காலை வேளையில் தயாரானேன். சூரியக் கீற்றுகள் கண்களைக் கூச வைத்தன. எங்கள் ஊரை காண எத்தனை வருடமா என கடைத்தெருவில் ஆட்டோ விரைந்த காற்று கேட்டபடித் தழுவிச் சென்றது. ஜலபதி காக்கி நாடாவிற்கு புலம் பெயர்ந்துவிட்டிருந்தான். அவனையும் பல வருடங்கள் கழித்து, வரும்போதுதான் தொடர்பு கொண்டேன். தாத்தா ஆகிவிட்டானாம்! கீதா தற்போது எங்கிருக்கிறாள் என்ற விபரங்களை எப்படியோ எனக்காக குறுகிய நேரத்தில் விசாரித்து, சேகரித்து கொடுத்தான். அங்கிரெட்டி பாலெத்தில்தான் இருக்கிறாளாம். ஆனால் அந்த பெரிய மனிதர்களின் சின்ன வீட்டுப் பகுதியில்!

சென்றேன். தாஜ் மஹால் பகுதியைப் போல பளிச்சென இருந்தது. இப்போதுதான் செல்போன் இருக்கிறதே..! ஜலபதி நான் வரும் விபரங்களை அவளுக்குத் தெரியப்படுத்தியிருந்தான். நான் அந்த வில்லாவிற்குள் நுழையும்போதே ஒரு வீட்டு கதவு மட்டும் திறந்திருந்தது. பொதுவாக குறிப்பிட்ட பெரிய மனிதர்கள் வரும் நாட்களில் மட்டும்தான் வாசல்கள் திறக்கப்பட்டு அந்த இடமே யாரும் வசிப்பது போல தோற்றமளிக்கும். மற்றபடி நாளெங்கும் அங்கே மயான அமைதியே நிலவும்!

அந்த வீட்டை நெருங்கிக் கொண்டிருந்த போதே, அவள் என்னை இனங்கண்டுவிட்டு கையசைத்து மெல்லிய குரலில் “சந்து.. சந்து..!” எனக் கூப்பிட்டாள். பல நாட்கள், பல வருடங்கள் கழித்து என் பெயர் அப்படி உச்சரிக்கப்படுவதை கேட்டு மகிழ்கிறேன். நம்ம ஊரில் என்றால் சந்திர சேகர், சந்திரா, சேகர், நண்பர்கள் என்றால் சந்துரு என்று கூப்பிடுவார்கள். ஏன் ஃபேக்டரியில் கூட சந்துரு சார் என்றுதான் என்னை அழைப்பார்கள். இவள் மட்டும்தான் ரொம்பவும் செல்லமாய் ‘சந்து சந்து’ என்று இன்னும் சுருங்க அழைத்தது. ஒரு முறை ‘பாவா’, அதாவது மாமா என்று கூட அழைத்திருக்கிறாள்! அப்போது இருவருமே வெட்கப்பட்டிருக்கிறோம்! 

வயது முப்பத்தி மூன்று ஆகியிருந்தாலும் இன்னும் இருபதுகளிலேயே நிலைத்திருப்பவள் போல் தோற்றமளித்தாள். அல்லது எனக்குதான் அப்படி தென்பட்டாளா என தெரியவில்லை. இருந்தாலும் சிலைகளை என்றுதான் மூப்பு தொட்டிருக்கிறது!

என்னை மீண்டும் கண்டதில் சந்தோஷப்பட்டாலும், ஒரு கலவையான மனநிலையிலேயே இருந்தாள். அவள் கொடுத்த காப்பியை சாப்பிட்டுவிட்டு, நேருக்கு நேராக அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தாள் அதில் துளி கூட காதல் இல்லை. அல்லது தனக்குள்ளேயே அடக்கிக் கொல்கிறாளா? அகத்தின் அழகு முகத்தில் காணலாம் என்பார்களே..? கொஞ்சம் பக்குவப்பட்ட இரண்டு சிநேகிதர்கள் நெடுநாள் கழித்து சந்தித்துக் கொள்வது போலிருந்தது. ரொம்பவும் அளவானப் பேச்சு!

“எப்படி இருக்கிறாய்?”

ஒரு மென் சிரிப்புடன், இருக்கிறேன் என்றாள். அந்த பதில் இன்னும் தேவதை போலவே இருக்கிறேனா என்பது மாதிரியிருந்தது.

மனைவி, பிள்ளைகளைப் பற்றி விசாரித்தாள், பார்க்க கேட்டாள். அலைப்பேசியில் சேமித்திருந்தப் படங்களை காட்டினேன். ஒரு ஆழமானப் பார்வையைக் குவித்தாள். நல்லாருக்காங்க என்றாள். முறுவலித்தேன். உன்னுடைய கணவன், மற்றும் பிள்ளைகளின் முகங்களைக் காட்டேன் என்றேன்.. அப்போதுதான் எனக்கு யோசனை வந்தது, “ஆமாம் இது உன்னோட மாமா பையன் வீடா?”

“இல்லை”

“பிறகு?”

“அன்னைக்கு அப்படி நடந்த பிறகு பாவா என்னை வேணாம் என்று சொல்லிவிட்டான். அதனால் கல்யாணம் நின்றுவிட்டது!” பெருமூச்சு விட்டாள்!

“அப்புறம்..” குற்ற உணர்வில் என் குரல் உடைந்தது…

“அப்புறம் ரொம்ப நாளா கல்யாணம் ஆகல.. காலேஜ்கும் அப்புறம் போகல.. மாமாவும் (செத்துப்) போன பின்ன அம்மாவாலேயும் சமாளிக்க முடியல! அப்பாவும் அண்ணனும் இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க..” எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டாத வெறுமை! நான் தரையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றிற்கும் நானும்தானே காரணம் என்று சிந்தனைகள் நீண்டு, பின்னர் நான்தான் காரணம் என்ற உண்மை என்னை நா வரள வைத்தது. அவள் சந்தோசமாக இருப்பாள்… நேராக சந்திக்க வேண்டாம் தூரத்தில் வைத்து ஒரு முறை பார்த்துவிட்டு செல்லலாமெனத்தானே திடீர் பித்துபிடித்து வந்தேன்… ஆனால் இங்கே…?

மௌனமாகி, கொஞ்ச நேரத்திற்கு பின்னர் புன்னகைத்தாள்.

 “ஆனா சந்தோசமாதான் இருக்கேன்!” இப்பவும் புன்னகைத்தாள்.

“கணவர் எப்படி? பிள்ளைகள்..”

“அவர் சித்தூர் பக்கம் பிசினஸ் பண்றார்.. குடும்பமும் அங்கதான்…”

“உனக்கு பிள்ளைகள்..?” நான் சந்தோசப்படும்படி ஏதாவது சொல்லேனென என் ஊமை மனக்குமுறல்கள் அவளிடம் நல்வார்த்தை பிச்சையெடுத்தன.

“கேட்டுட்டே இருக்கேன்..! அவருக்கு அந்த பிள்ளைகளே போதுமாம்.. ஆனா ஒரு நாள் சம்மதிச்சிருவாருன்னு நம்பிக்கை இருக்கு! நல்லவர்தான்.. பாப்போம்!” மீண்டும் புன்னகைத்தாள். எனக்காகத்தான் வலிந்து வலிந்து புன்னகைக்கிறாளோ என்று தோன்றியது.

“சரி, உன் கதையெல்லாம் என்னாச்சு? சினிமா எதுவும் எடுத்தியா என்ன?” பழைய காதலியாய் கேட்டாள்.

அப்போதுதான் எனக்கு கொஞ்சம் மூச்சு வந்தது போல் இருந்தது.

சிரித்துக் கொண்டே இல்லை என்றேன்.

“ஏன்?”

“அன்னைக்கு நடந்ததுல ஆறு மாசம் வரை ரெஸ்ட் எடுக்க வேண்டியதா போச்சி.. அதிலேயே பயந்து போய் வீட்டில இருந்தவங்க எல்லாம் குணமானதும் வெளிநாடு அனுப்பி வச்சிட்டாங்க. உன்ன அன்னைக்கு பார்க்க வர்றதுக்கு முன்னாடியும் நானும் அந்த முடிவிலதான் இருந்தேன், இனி இந்தியாவிலேயே இருக்க கூடாதுன்னு”

“ம்ம்”

மீண்டும் மௌனம்…

அந்த அமைதி என்னவோ செய்தது.. கிளம்பலாம் போல என்னை உந்தியது. அங்கிருந்து நீண்ட நேரம் அவளிடம் பேசுவது அவளுக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தலாம் என நினைத்துக் கொண்டு ‘சரி கீதா வருகிறேன்!’ என எழுந்தேன்.

“அவ்வளவுதானா?”

“நீ சந்தோசமா இருக்கேன்னு சொல்ற, அது உண்மையோ இல்லையோ என எனக்கு தெரியாது. ஆனா அதை நான் கலைக்க விரும்பல கீதா! நான் வர்றேன்!”

“சரி அந்த கதையோட முடிவு எப்படி முடிக்கலாம்னு யோசிச்சு வச்சிருந்த?”

“நம்ம யோசிச்சு வைக்கிறது அப்படியே எல்லாம் நடக்குறதில்ல கீதா. கடைசியா ஒரு முறை உன்னை சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். பார்த்திட்டேன். வர்றேன்!”

நான் அந்த தெருவை கடக்கும் வரை திரும்ப திரும்ப திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தேன். அடைத்த கதவு திறக்கவேயில்லை!           

***

முற்றும்.

இத்ரீஸ் யாக்கூப்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *