காலையில் எழுந்ததிலிருந்து இரவில் கண்ட காட்சிகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தன. சம்பவ நேரம் கோவிந்தம் சாரையும் கூட கவனித்தேன். அவரும் அதிர்வுகளை உணர்ந்த சமயம் கொஞ்சம் அசைந்துப் படுத்த மாதிரிதான் தெரிந்தது. ஆனால் எழுந்து என்ன ஏது என்றெல்லாம் பார்க்கவில்லை. அப்படியே தன்னுடைய உறக்கத்தைத் தொடர்ந்தார். நானோ தூக்கத்தை தொலைத்துவிட்டிருந்தேன். பிறகு எப்போது கண்ணயர்ந்தேன் என்று எனக்கும் தெரியவில்லை.

இரவு ஏதும் நடக்காதது போல திருட்டுப் பூனை கணேஷ், காலையில் தனது பூஜை புனஸ்காரங்களை நிறைவேற்றிக்கொண்டிருந்தான். அவனைக்காண எனக்குதான் வியப்பாகவும், கோபமாகவும் சிரிப்பாகவும் வந்தது. அவனிடம் நேரிடையாக கேட்கவும் தயக்கமாக இருந்தது. பெரியவர் கோவிந்தத்திடம் தயங்கி தயங்கி, இரவு ஏதும் கவனித்தீர்களா? என்றேன். அவர் கொஞ்சம் கனைத்துக் கொண்டு ‘என்ன?’ என்பது போல் பார்த்தார் அப்பாவிப் பிள்ளை போல. அவருக்கு எல்லாம் தெரியும் என்பதை என்னாலும் ஊகிக்க முடிந்தது. இருந்த போதிலும் நானும் எதுவும் அறியாதவன் போல விஷயத்தை சொன்னேன். பதிலளிக்க கொஞ்சமும் தாமதிக்காமல், ’அதையெல்லாம் கண்டுக்க வேணாம்’ என்று மட்டும் சொன்னார். மேற்கொண்டு பேசவும் விருப்பப்படாதது போல் தோன்றியது. கேட்டாலும் சொல்லவாப் போகிறார்?

அடுத்து ஜலபதியிடமும் பஞ்சாயத்து இருந்தது.

“ஏண்டா உனக்குதான் ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டி இருக்கிறார்களே.. ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய்?” என்று முந்தைய தினம் நடந்ததைப் பற்றி உரிமையெடுத்து விசாரித்தேன். பதில் ஏதும் சொல்லாமல் வெறுமனேச் சிரித்தான். எப்படி இரண்டு திருமணங்கள் வரைச் செய்தாய்? முதல் மனைவி உன்னைக் கண்டிக்க மாட்டாளா? எனக் கேட்க அதற்கும் சிரித்தான். சரி இரண்டாவது கல்யாணம் எப்படி பண்ணின? என்று கேட்கும்போதுதான் ஆர்வமாய் வாயைத் திறந்தான். இதற்கு முன் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தானாம். அவளும் தொடர்ந்து இவனது ஆட்டோவிலேயே போக, வர இருக்க, பிடித்துப் போய் கல்யாணம் செய்து கொண்டார்களாம். சரி, முதல் மனைவியை எப்படி எதிர்கொள்கிறாய் என்றதற்கு “அதான் குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுத்து விடுகிறேனே! இங்கு வந்து வேலை செய்யும் பெண்களை போலில்லை என் மனைவி. நான் இதுவரை அவளை எந்த வேலைக்கும் அனுப்பியதில்லை. உதவிக்காக யாரிடமும் போய் நின்றதில்லை. பிள்ளைகளையும் நல்லபடியாக படிக்க வைக்கிறேன். வேறென்ன வேண்டும்?” என்றான் சிறிதும் குற்றவுணர்வு ஏதுமில்லாமல்!

“சரி, இருவரையும் ஒரே மாதிரி நடத்துகிறாயா?” என்றேன்.

“அது எப்படி எனக்கு முதல் மனைவியும், அவளுடைய பிள்ளைகளும்தான் முதலில் வருவார்கள்!”

திரும்பவும் அவன் மீது கோபப்பட வேண்டியதாகயிருந்தது.

“இருவரையும் சமமாகத்தானே நடத்த வேண்டும்!”

“நானா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அவளாகவேதான் வற்புறுத்தி, என்னைப் பிடித்துப் போய் கல்யாணம் பண்ணிக்கொள் என்றாள்!” ஏதோ தான்தான் அவளுக்கு பெரிய மனது பண்ணி வாழ்க்கை கொடுத்தது போலப் பேசினான்.

“பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள்?”

அதற்கு அவனிடம் பதிலில்லை. ஆனால் அவனுடைய இரண்டாவது மனைவி வேலைக்கு போவது மட்டும் விளங்கியது.

“சரி, மல்லேஸ்வரி இன்னொருவனின் மனைவியல்லவா? ஏன் அப்படி செய்தாய்?” அப்படி கேட்டது அவனுக்கு வருத்தமாக இருந்தாலும் சிரித்தான். அன்றைக்கு திரும்பவும் அவள் வேலைக்கும் வந்திருந்தாள். முந்தைய தினம் அப்படி ஒன்று நடக்காதது போலவே மற்றவர்களும் இயல்பாக தத்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இரவு நடந்ததைப் பற்றியும் ஜலபதியிடம் விசாரிக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த கணேஷ் வந்துவிட்டதால் எதுவும் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. சஃபாரி சூட்டில் கறுப்பு கண்ணாடியெலாம் அணிந்தபடி மைனர் போலத்தான் கணேஷ் ஃபேக்டரியை வலம் வந்தான். அவன் நல்லவனாக இருப்பது பூஜை நேரங்களில் மட்டுமே என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

இருந்தாலும் எனக்கு கேட்க வேண்டும் போலிருந்தது, பிரசாத் ஒரு மாதிரி நல்லவர் என்றால், இவன் இன்னொரு தினுசில் கலகலப்பான ஆளாகத் தெரிந்தான். எதையும் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டான் என நம்பினேன். அதனால் அவன் பேர் சொல்லாமல், முந்தைய நாள் இரவு யாரோ ஒரு பெண்ணோடு உங்கள் அறைக்குள் நுழைவதுப் போலிருந்தது, நீங்கள் எங்கு தங்கினீர்கள்? என்று விசாரணையைத் தொடங்கினேன்.

நடிகர் கரணை போல ஒரு வில்லச் சிரிப்பை வெடித்துவிட்டு, “அது நான்தான்!” என்று பெருமைபடச் சொன்னான். கேட்டதும், எல்லாம் ஊர்ஜிதமாகி ‘அடப்பாவி!’ என்று அவனை வாய்பிழந்துப் பார்த்தேன். ’பார்க்க நல்ல பக்தி பழமாட்டம் இருக்கீங்க, இதெல்லாம் செய்யலாமா?’ என்றேன்.

“சாரி.. மனசையும் உடம்பையும் போட்டு குழப்பிக்காதீங்க!” என்று புது தத்துவம் வேறு சொல்ல ஆரம்பித்தான்.

“சரி, ஒரு பெரியவர் இங்கே தூங்கிட்டு இருக்காரே, ஒரு பயம் மரியாதையெல்லாம் இல்லையா?”

“யாரு.. கோவிந்தம் சாரா? ஹா ஹா அவர் கதையெல்லாம் எடுத்துவிட்டா இன்னும் ஷாக்காயிடுவீங்க பிரதர்!”

போங்கடா நீங்களும் உங்க கூட்டும் என்பது போல் எனக்கு விட்டா போதும் என்றிருந்தது. இனி அந்தாளையும் எப்படி பார்க்கப் போகிறேனோ என்று கீழே சென்றுவிட்டேன்.

என்னைக் கண்டால் கோட்டேஸ்வரம்மாவின் முதல் கேள்விகள் அனைத்தும் எப்படி இருக்கிறேன், என்ன சாப்பிட்டேன் என்பதாகவே இருக்கும். அவர் தயவிலேயே கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு அறிந்துக்கொள்ளலானேன். பாரதி, ஈஸ்வரி போன்றோர் என்னை சைட் அடிப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். என்னிடமிருந்து எந்த வகையிலும் தவறானப் பார்வையோ, எண்ணமோ அவர்களிடத்தில் பதியாமல் பார்த்துக் கொண்டேன். காதல் கோட்டையில் அஜித், ஹீராவிடம் பேசுவது போலவே சற்று தள்ளி நின்றேப் பேசுவேன். தவறாக நினைக்க அவர்களும் அப்படிப்பட்ட பெண்களில்லை, ஒரு ஈர்ப்பு அவ்வளவே! மல்லிப்பூ வங்கச் சென்றால், பார்வை ஒரு எட்டு கட்டியிருக்கும் கனகாம்பரம் பக்கமும் சுழன்று திரும்புமே அதுபோல என் பக்கமிருந்தும் எதுவும் நடந்துவிடக் கூடாதல்லவா?

காலையில் வரும் சீதம்மா சமைத்து வைத்துவிட்டு பெரும்பாலும் பன்னிரெண்டு, ஒரு மணிக்கு வீட்டிற்குச் சென்றுவிடுவார், பிறகு ஐந்து ஆறு மணிக்கு வந்து ஏழு, ஏழரைக்கெல்லாம் அந்த நாளுக்குரிய பணிகளை முடித்துக் கொண்டு விடைப்பெற்றுக்கொள்வார். இடையில் டீ, காபி எதுவும் வேண்டுமென்றால் இவர்கள் இருவரையும்தான் அழைக்க வேண்டும். அதாவது ஈஸ்வரியையும் பாரதியையும்தான் அழைக்க வேண்டும். அதுவே கோட்டேஸ்வரம்மாவின் அன்புக்கட்டளையாகவும் இருந்தது.

இன்னும் ஒரு வாரத்தில் தான் குண்டூருக்கு வரப்போவதாக ரமேஷ் தகவல் அனுப்பியிருந்தான். அவனுக்கு வேறு தங்க வீடு பார்க்க வேண்டும்! ஜலபதியிடம் ஏதும் ரூம் அல்லது வீடு இருக்கிறதா என்று விசாரிக்கச் சொன்னேன். நீயும் வாயேன் என்று வண்டியில் ஏற்றிக் கொண்டான். கலகலப்பாக பேசும் போது தம்முடு, அதாவது தம்பி, நீ, வா, போ என்று அழைப்பான். என்மீது கோபம், வருத்தம் ஏதும் வந்துவிட்டால் வார்த்தைக்கு வார்த்தை சாரும் சேர்ந்து வந்துவிடும்.

சில வீடுகளுக்கு கூட்டிப் போனான். அதிலொன்றில் எங்கேயோ பார்த்த மாதிரி ஒருவன் இருந்தான். நான் விசாரிக்கவும், அவ்வப்போது நமது ஃபேக்டரிக்கு நரேஷுடன் வருபவன்தான், அதனால் பார்த்திருக்கலாம் என அவனை, “அஞ்சி பாபு” என்று அறிமுகப்படுத்தி வைத்தான். தான் ஒரு போலீஸ் என்று அவன் சொல்லிக்கொண்டது எனக்கு ஆச்சரியமளித்தது, கூடவே கொஞ்சம் பயமும். ஏனென்றால் வரப்போகும் ரமேஷ், தன் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று நிர்பந்திக்க நேர்ந்தால்?

அங்கிருந்து கிளம்பி வரும் வழியில் ஜலபதியிடம், அவனைப்பற்றி இன்னும் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவன் தற்சமயம் சஸ்பெண்டில் இருந்த விசயம். ஏதோ கடத்தல் கேஸில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டான் என்றான். ஏண்டா இங்கே எல்லாரும் இப்படித்தானா என்று சிரித்துக் கொண்டே கேட்டபோது, ஏன் நான் நல்லவன் இல்லையா? என்றான். ஆமாமா நீ நல்லவன்தான், ‘ரொம்ப’ நல்லவன் என்றேன் கிண்டலோடு நிறையவே அழுத்தம் கொடுத்து.

அப்போதுதான் கவனித்தேன்… சீதம்மா, கீதாவோடு சாம்பசிவ ராவ் இடத்திற்கு போய்க்கொண்டிருந்ததை. கூட நடுத்தர வயதில் ஒரு ஆளும் சென்றுக்கொண்டிருந்தார். என்னவா இருக்கும் என்ற யோசனையோடு, ஜலபதியிடம் அவர்கள் போவதைக் காட்டினேன்.

“ம்ம் அதுவா.. ஏதாவது உதவி தேவைப்பட்டிருக்கும். சீதம்மா புருசன் சரியில்ல, மகனும் குடிகாரன்..” இடைமறித்து, கூட சென்றுக்கொண்டிருப்பது யார் என்றேன்.

“அது சீதம்மாவோட அண்ணய்யா! அந்தாளுதான் அதுக்கு ஒரே சப்போர்ட்டுனு சொல்லலாம்”

“என்ன உதவிக்காக போவாங்க?” என்னை ஏற இறங்கப் பார்த்தான். நிச்சயமா பணத்தேவையா தான் இருக்கும்! அந்தாளு உதவியும் செய்வாரும் வட்டிக்கும் காசு கொடுப்பாரு!”

“அவ்ளோ கஷ்டமா?”

“ஆமா..! இதுனாலயே போன வருசம் அவங்க பொண்ணு காலேஜ் சேர முடியல, இந்த வருசமாவது சேர்த்து விடணும் ட்ரை பண்றாங்க போல, அதான் கீதாவையும் கூட்டிப் போறாங்கனு நினைக்கிறேன்”

“ஏன் பிரசாத் கேட்டா செய்ய மாட்டாரா?”

“வாய்ப்பில்ல! ஏன்னா ஒரு முறை உங்க ஊர், கம்பெனி ஒன்றிலிருந்து பெரியவர் ஒருத்தர் வந்திருந்தார், அப்படி வர்றப்ப பொதுவா சாப்பாடு நம்ம ஃபேக்டரிலதான் அரேஞ் பண்ணுவோம், அவங்களுக்கும் சீதம்மாதான் சமைக்கும், அந்த மாதிரி சமயங்கள்ல கீதாவும் உதவிக்கு வருவது வழக்கம். அப்படி வந்தப்ப, அந்த பெரியவருக்கு கீதாவை பிடிச்சுப் போச்சி, பிரசாத் எவ்வளவு சொல்லியும் கேட்கல! எப்படியாவது அந்த பொண்ணு, அன்னைக்கு நைட்டு தனக்கு வேணும் என்று அடம் பிடிச்சார். அது ஏதோ உங்க ஊரிலேயே பெரிய கம்பெனியாம், இவங்க சப்ளை பண்ண ஆர்டர் கான்ஃபார்ம் ஆயிட்டா இவங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வேற! அதனால பிரசாத் தயங்கி தயங்கி சீதமாக்கிட்ட கேட்க, அன்னைக்கு பெரிய பிரச்சினையாயிடுச்சி! அப்புறம் வேற ஒண்ண ஏற்பாடு பண்ணி கொடுத்தோம்!”

“இப்படியெல்லாம் கூட இங்க நடக்குமா?” அதிர்ந்து போய் கேட்டேன்.

“இங்கே எல்லோரும் அப்படியில்ல, கஷ்டத்துக்காக சிலர் பண்ண போயி, அது ஒரு பழக்கமாவே ஆயிட்டு வருது!”

“ம்ம், ஆமா இத்தனை நடந்தும் அப்புறம் ஏன் சீதம்மா இங்கே வேலைக்கு வர்றாங்க?”

“அடுத்த நாளே பிரசாத் காரு, சமாதானப்படுத்தி எப்போதும் போல வேலைக்கு வரும்படி கேட்டுக்கிட்டார், இங்கே கிடைக்கிறது ஓரளவு நல்ல சம்பளமும் கூட. அவங்க நிலைமைக்கு வேற இடத்துக்கு வேலைக்கு போனாலும் கட்டுப்படி ஆகாதுன்னு இங்கேயே இருக்கிறாங்க. ஒரு வேளை உதவின்னு கேட்க போய் வேறெதுவும் பதிலுக்கு செய்ய கட்டாயம் வந்து விடுமோன்னு, அவங்க பொதுவா யார்கிட்டேயும் அங்க உதவி கேக்குறது இல்ல, பிரசாத் காரு பரவாயில்லதான்.. ஆனா அந்த கணேஷ் காடு கொஞ்சம் மோசம்!” உன்னை விடவா என்று சிரித்துக் கொண்டே அவனை மீண்டும் கிண்டல் செய்யத் தொடங்கினேன்.

அவர்கள் திரும்பி வரும் வரை சற்றுக் காத்திருக்கலாம் என்று நினைத்தேன். அதுவும் அன்று நீலமும் மஞ்சளும் கலந்த ஒரு சுடிதாரில், பின்னால் அவள் நீண்ட கூந்தலைக் கண்டபோது, அசல் மயில் போலவே நடந்துச் சென்றாள். வீட்டில் சிரமம் இருந்தும் இப்படி அழகழகான ஆடைகள், இவளுக்கு எங்கிருந்துக் கிடைக்கின்றன என்ற தேவையில்லாத சிந்தனைகள் அச்சமயத்திற்கு வந்து போனாலும், அவள் மீதான அந்த மயக்கம் மட்டும் மாறுவது போல தெரியவில்லை.

ஜலபதி வண்டியை எடுத்தான், கொஞ்சம் பொறு என்றேன். என்னாச்சு என்றான். ஒன்றுமில்லை என்றேன். பின்னே என்ன என்பது போல் முறைப்புடன் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தனக்கு லேட்டாவதாகப் புறப்பட்டுவிட்டான். வீதி வீதியாக அலைந்தும் கடைசியில் ரமேஷிற்கு வீடு ஏதும் அன்றைய தினம் அமையவும் இல்லை.

பிரசாத்திடம் சீக்கிரமே எனக்கு ஒரு பைக் ஏற்பாடு செய்து தர கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மண்டைக்குள் யார் அந்த பெரியவர், தமிழ் நாட்டில் அது எந்த கம்பெனி? இப்படியுமா வந்த இடத்தில் நடந்துகொள்வார்கள்? அதுவும் வயது வித்தியாசமில்லாமல்! அதுவும் கீதாவை ஒருத்தன் அப்படி எண்ணியழைக்க நேர்ந்திருந்தது எனக்கு கடும்கோபத்தைத் தூண்டியது. தீச் சுவாலைகள் தீண்டுவது போல நெஞ்சில் வெப்பம் அதிகரித்தது. தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதுபற்றி நிச்சயம் கணேஷிற்கும் தெரிந்திருக்குமென வந்தவுடன் அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

நம்மூரில் அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த சில மசாலா கம்பெனிகளைக் குறிப்பிட்டு, அவங்களுக்கும் நாயுடு ஸ்பைசஸ்தான் சப்ளை பண்ணுகிறார்களா? என்றேன். எல்லோருக்கும் இல்லை என்று இரண்டு நிறுவனங்களின் பெயரைச் சொன்னான். அதில் யாரும் இங்கே வந்திருக்கிறார்களா என்றேன். எதற்கு இவன் இதையெல்லாம் கேட்கிறான் யோசித்தாலும், கேட்ட கேள்விக்கு பட்டென அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லிவிட்டான்.

அதோடு விட்டிருக்கலாம், சம்பந்தப்பட்ட நிகழ்வைப் பற்றி நான் விசாரிக்க, அவன் வேறொரு கோணத்தில் ஆர்வமானவன் போல எல்லாவற்றையும் விவரிக்க ஆரம்பித்தான். ச்சீ என்று தோன்றியது. எல்லோரும் அப்படி இருக்க வாய்ப்பில்லையென்றாலும், சிலர் இதற்குதான் பிசினஸ் ட்ரிப் என்று சொல்லிக் கொண்டு அவ்வப்போது வெளியூர் சென்று வருகிறார்களா என்று நினைத்துக் கொண்டேன்.

தொடரும்..

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *