கொஞ்ச நாள் சினிமாப் பற்றியெல்லாம் யோசிக்காமல்தான் இருந்து வந்தேன். அன்று கீதாவிடம் ஏதோ ஒரு தன்னெழுச்சியில் சொல்லப் போய், மீண்டும் பழைய ஆசைகள் துளிர்க்க தொடங்கின. அவள் கேட்டவுடன் நானும் எதார்த்தமாக ‘சீதம்ம கூதுரு’ என்று ஒரு தலைப்பு வைத்து நடந்த, கொண்டிருந்த சம்பவங்களை அவளிடம் மாற்றியும், சேர்த்தும், கோர்த்தும் சொல்லிக் கொண்டிருந்தது எனக்கே என்னுடைய வாழ்க்கையை இஷ்டம் போல திருத்தி எழுதுவது போலிருந்தது. அதுவும் பிடித்திருந்தது.

முன்பு போல் வெறும் மனக்கோட்டையளவில் நின்றுவிடாமல் அதற்காக தினமும் சில நிமிடங்கள் முழு முனைப்போடு செலவு செய்யவும் ஆரம்பித்தேன். ஏதேதோ எழுதி அரக்கும் புழுதியுமாக படித்துக் கிடந்த தெருச்சாலைச் சுவற்றில் புதிய வண்ணமடித்து அவளுக்கான கவிதைகளை ஒரு ஓவியனைப் போல் வடித்து, வடித்து எழுதிக் கொண்டிருந்தேன் அன்று கண்ட கனவில். அவைகளை ரசித்து வாசித்தபடி, புத்தங்களை என் உடல் போல் மார்பினில் அணைத்தபடி அவரைப்பூ கலரில் சுடிதார் அணிந்து கல்லூரிக்குச் சென்றுக் கொண்டிருந்தாள்.

ஆம், அவளுக்கும் கல்லூரியில் சேரும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது அதனால்தான் என்னவோ அதுபோன்றதொரு கனவு! விரைவில் தான் விஜயவாடாவிற்கு செல்லவிருந்ததை என்னிடம் தெரிவிக்க, கொஞ்சம் கவலையாய் இருந்தாலும் அதைவிட அவளுடைய படிப்பு முக்கியமெனப்பட்டது. பள்ளிக்கு பிள்ளையை அனுப்பும் ஒரு தாயைப் போல அந்த பொறுப்பான சந்தோசத்தை  உள்ளூற அனுபவித்தேன். அதே நேரம் ஒரு காதலனாய் அவளை இறுக அணைத்து, முத்தமிட்டு, அப்படியே அந்த நிமிடங்களை காலை நேர தூக்கம் போல புரண்டு, புரண்டு நீட்டி அனுபவிக்க வேண்டுமெனத் தோன்றியது. பாவி நழுவிவிட்டாள்.

டோக்யோவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆறு ஷிப்மெண்ட்களும் நல்லபடியாக போய்ச் சேர்ந்த வகையில் அந்தா இந்தா என்று ஒத்தி வைக்கப்பட்டுக் கொண்டிருந்த மிஸ்டர் டைக்கியின் பயணம் ஒரு வழியாக இரண்டு மூன்று மாதங்கள் கழித்து ஒரு முடிவுக்கு வந்தது. ஆம், குண்டூருக்கு விஜயம் செய்தார். சென்னை அலுவலகத்திலிருந்தும் வெற்றிவேல் ஐயா, கிரண் சார் என்று அனைவரும் பிரசத்தோடு வருகைத் தந்திருந்தனர். அதையொட்டி நெடு நாளைக்கு பிறகு அன்று கீதாவும் அங்கே வந்திருந்தாள். டைக்கியோடு நாங்கள் அனைவரும் மும்முரமாக கலந்தாலோசித்துக் கொண்டிருந்ததினால் அவள் பக்கம் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. பிரசாத், கணேஷ், ஜலபதி என்று யாராவது ஒருவர் என்னுடன் அருகில் இருந்துக் கொண்டேயிருந்தார்கள்.

கூப்பிடும் தூரத்திலிருந்தும் அவளை சரியாகக் கூட பார்த்துப் பேச முடியாதிருந்த சூழல் என்னை ரொம்ப நேரம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. காலேஜ் செல்லும் பொருட்டு, அப்போது பிரவுசிங் சென்டரிலிருந்தும் வேறு நின்றுவிட்டிருந்தாள். கடந்த சில தினங்களாகப் பார்த்துக் கொள்ள கூட இல்லை. எப்போது அவளுடன் பேசப் போகிறோம் என்று வந்தவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் கவனத்தைக் குவித்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக காலை ஒன்பது மணியளவில் ஆரம்பித்த மீட்டிங் மாலை மூன்று முப்பத்திற்குதான் முடிந்தது. டைக்கியை வழியனுப்ப நாங்கள் எல்லோரும் அவருடன் சேர்ந்து சென்றுக்கொண்டிருக்க, முதன் முதலில் பார்த்த அதே குடோன் பக்கம், என் வருகைக்காக காத்திருந்தவள் போல அழகுச் சிலையாய் நின்றிருந்தாள்.

அவளைக் கண்டதும் வழிசலாய் சிரித்தேன். அன்று நான் வழக்கத்திற்கு மீறிய தேஜஸோடு இருந்ததாக, நான் எடுக்கப் போகும் படத்தில் என்னையே கதாநாயகனாக  நடித்துவிடும்படி கேட்டுக்கொண்டாள். அவள் கிண்டல் செய்கிறாளா அல்லது உண்மையாகவே விருப்பப்படுகிறாளா என்ற ஆச்சர்யப்பட்ட வண்ணம், ‘அப்படியா? அப்படியென்றால் கதாநாயகியாக நீ நடிக்கிறாயா?’ என்றேன். மிட்டாய் நீட்ட பற்றிக்கொள்ளும் சிறுபிள்ளையாய், கொஞ்சமும் தயங்காமல் ‘ஓ..! நடிக்கிறேனே..!’ என்றபடி வெட்கமும் ஆசையுமாக கண்ணீர் முட்ட ஹஹ்ஹஹாவெனச் சிரித்தாள்.

‘அந்த விஷப் பரீட்சையெல்லாம் வேண்டாம். நான் டைரக்டர். நீ என்னை டைரக்ட் பண்ணப் போகிற டைரக்டர் மனைவி. அதுவே போதும், சிறப்பாக இருக்கும்!’ எனக் கூறினேன்.  ‘

‘ஓ! நான் கதாநாயகியாகிவிட்டால் என்னை அனைவரும் ரசிக்க கூடும் என்று அஞ்சுகிறாயா?’ என்றாள். அப்படியென்றால் என்னைப் போல எல்லோரும் உன்னை ரசிக்க வேண்டுமா? என்றேன். மறுபடியும் கலகலவெனச் சிரித்தாள். அழகியத் தொற்றில் சிக்குண்டவன் போல நானும் சிரித்தேன். முன் சென்றுக்கொண்டிருந்த ஜலபதி எங்களை நோட்டம் விட்டபடி தனது பார்வையை அவ்வப்போது பின்னால் திருப்பினான். சீதம்மாவிற்கும் கூட அன்று ஏதோ புலப்பட்டுவிட்டதென்றேத் தோன்றியது.

ஜூலை ஆரம்பத்தில், சொன்னதுபோல் விஜயவாடாவிற்குச் சென்றுவிட்டாள். நான் அவளைக் கொண்டு கட்டும் கதையிலும் கற்பனைகளிலும் போதையில் உழல்பவன் போல் திளைத்துக் கொண்டிருந்தேன். அவளைக் காண நாட்கடிகாரத்தின் முட்கள் கள்ளிச் செடிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது. வெளியில் தகிப்பும் உள்ளே அவளின் நினைவின் குளுமையையும் அடக்கிக் கொண்டு நானும் கூட நடமாடும் சப்பாத்துக் கள்ளியை போலத்தான் திரிந்துக் கொண்டிருந்தேன். அவள் நினைவுகள் என்னை மகிழ்விக்கையில் என்னிதழ்களில் செம்பூக்கள் பூக்கும். இப்படியே நினைவுகளிலேயே மட்டும் மிதந்து வாழ்வதா? எத்தனை நாட்கள்தான் அது மட்டுமே சுகப்படுத்தும்?

செல்போன்கள் உபயோகிக்காத காலக்கட்டம்  வேறு. ஓரிரு வார்த்தைகளாவது பேச பூத்திலிருந்து தொடர்பு கொள்ள நினைத்தாலும், ஹாஸ்டலில் இருப்பதால் பயந்தாள்; விருந்தாளியாய் வேறொரு வீட்டிற்குச் சென்றவள் போலவெட்கினாள். ஏனென்றால் அவள் கையிலும் அலைப்பேசியென்று ஏதுமில்லை. லேண்ட்லைன் மட்டுமே!

ஒரு முறை அடித்துப் பேச, அண்ணா என்று என்னை அறிமுகம் செய்துக்கொள்ள வேண்டியிருந்தது ஒரு சங்கடமென்றால், என்னுடைய மழலைத் தெலுங்கு வார்டனுக்கு சந்தேகத்தைக் கிளறியிருக்க வேண்டும். விபரங்கள் கேட்கிறேன் என்ற பேரில் அந்த லேடி வார்டன் விசாரணைகளை வக்கீல் போல நீட்டிக் கொண்டேச் செல்ல, நான் பயந்து போனை வைத்துவிட்டேன்!

ஆகஸ்ட் நெருங்கும் நேரத்தில் மழை ஆரம்பமாகி விட்டது. அப்போதுதான் எங்கள் அனைவருக்கும் தெரிய வந்தது, இனி வேலையைத் தொடர்ந்தால், முதலுக்கு மோசமென்று. மழைப்பட்டு காயப்போட்டிருந்த மஞ்சள் யாவும் அதன் இயல்பிற்கேற்ப சிவப்பு நிறத்திற்கு மாறிக்கொண்டு வந்தது. டெஸ்ட் செய்துப் பார்த்ததில் பாக்டீரியா எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கவே, இனி அனுப்ப வேண்டாம் என டைக்கியிடமிருந்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

ஆகவே ஆகஸ்ட் முதல் வாரமே முதல் சீசனை முடித்துக் கொண்டு, சென்னை சென்றுவிடுவதென முடிவானது. நிறைவை வெளிப்படுத்தும் விதமாக அன்று இரவு பிரசாத் பேக்டரியிலேயே பார்ட்டிக் கொடுத்தார். தான் ரொம்ப யோக்கியன் என்ற ரீதியில் சாமியார் கணேஷ், வேடிக்கை மட்டும் பார்த்தான். ஏனென்றால் துணைக்காலுள்ள மதுதான் பிடிக்குமாம். அதாவது மாதுவை மட்டும்தான் தொடுவாராம், அந்த பிராட் வே பிரேமானந்தா. அவனைக் காண காண எனக்கு சிரிப்புதான் வந்தது.

அது என்ன காம்பினேஷனோ, பிரசாத் ஒயினோடு பியரையும் சேர்த்து குடிக்கச் சொல்ல சில நிமிடங்களில் குமட்ட ஆரம்பித்தது. அறிவு ஜீவி ஜலபதி காரு மோரை மொண்டு வர, எடுத்த வாந்தி கோதாவரியை போல பெருக்கெடுத்து ஓடியது. அந்த நிலையிலும் எங்கள் தானேத் தலைவன் பிரசாத் ஒரு நடிகைகையைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருந்தார்.

அந்த நடிகை தொண்ணூறுகளில் அறிமுகமாகி, கதாநாயகியாக நடித்ததை விட துணை நாயகியாக நடித்தப் படங்களே அதிகம். ஒரு ராகத்தின் பெயர் கொண்ட அந்த நடிகையை கடைசியாக ஒரு தெலுங்கு நடிகர் காதலித்து கரம் பிடித்துக்கொண்டார். அப்படியிருக்க அடுத்தவன் இப்படி மனைவியை வர்ணிப்பது குற்றமில்லையா என்றேன்.

“ஜலபதி! வீடிக்கி இன்கா கொஞ்சம் மஜ்ஜுக்கா தீஸ்க்குரா!” இவனுக்கு இன்னும் கொஞ்சம் மோர் கொண்டு வா என சத்தம் போட்டார். சிரிப்பலையில் மொட்டை அதிர்ந்தது.

சென்னையில் எனக்கு பிரத்யேகமாக எல்லா வசதிகளும் அடங்கியிருந்த கிட்டத்தட்ட ஒரு ஸ்டூடியோ ஃபிளாட் போலவேக் காட்சியளித்த ஒரு பெரிய அறையை ஒதுக்கிக் கொடுத்தார்கள். பெரியவர் வெற்றிவேலுக்கு தெரிந்த முக்கியஸ்தர்கள் யாரேனும் வந்தால் அங்கேதான் தாங்குவார்களாம். கேள்விப்பட எனக்கும் கொஞ்சம் மரியாதையாக இருந்தது. அது செக்யூரிட்டி அறைக்கு மேலே, கம்பெனி வளாகத்தினுள்ளேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையெல்லாம் விட சென்னைக் காற்றை சுவாசிப்பதுதான் எத்தனை சுகம்! எங்குப் பார்த்தாலும் சினிமா போஸ்டர்களும், ஆங்காங்கே சிறிய, பெரிய உணவகங்களும், வாகன இரைச்சல்களும், திருவிழாக்கடை குரல்கள் போல் எ ஃப் எம் சத்தங்களும், எத்தனை எத்தனை இருக்கின்றன எம் சென்னை மாநகரத்தில்!

சினிமாவில் முயற்சிப்போமா வேண்டாமா என்றிருந்தவனுக்கு, சுதாகர் எனும் மற்றொரு கதாப்பாத்திரம் அங்கே அறிமுகமாகியது. சுதாகருக்கு அப்போது பதினெட்டு, பத்தம்போது வயது இருக்கலாம். கதாநாயகன் ஆக வேண்டுமென்பது அவனது கனவு. என்னதான் அப்போது தனுசு மாதிரி ஆட்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படத் தொடங்கியிருந்தாலும், சுதாகருடைய அந்த ஒடிசலான தேகம், அரும்பியும் அரும்பாமல் வருவது போல் காத்திருந்த மீசை, அவனுடைய மாநிறமெல்லாம் அவனுடைய கனவுகளை உடனேப் பூர்த்தி செய்து வைக்காது என அறிந்து, அனுபவப்பட்டு அச்சமயம் ஜுனியர் ஆர்டிஸ்ட் அளவிற்காவது வாய்ப்பு கிடைக்குமா என்று கோடம்பாக்கத்தின் இங்கு இடுக்குகளில்லாம் நுழைந்துத் திரிந்தபடி, வாய்ப்புக்காக விடுமுறைகளில் மட்டுமின்றி வார நாட்களிலும்  ஓயாது அலைமோதிக்கொண்டிருந்தான்.

அவன் மில் தொழிலாளி என்றாலும், ஈரோட்டுக்காரன், எஜமானார் வெற்றிவேல் ஊருக்காரன், அதுவும் நிர்வாகம் அனைத்தும் அவர்களையேச் சார்ந்து இயங்கி வந்ததால், அடிக்கடி லீவுப் போட்டுவிட்டு சினிமா சினிமா என்று வாய்ப்பிற்கு அலைந்தாலும் சீட்டை கிழிக்காமல் வைத்துக்கொண்டிருந்தார்கள் கீழ்நிலை நிர்வாகிகள்.

அவனைப் பார்த்த போது, அவனது தன்னம்பிக்கைதான் என்னை முதலில் கவர்ந்தது. எனக்கு சினிமா ஆசை இருந்தாலும், அதற்குள் எப்படி நுழைவது என அதுவரை யோசித்ததும் இல்லை. எப்படி வாய்ப்புகள் தேடுகிறாய்? என்று விசாரித்தபோது.

 “இதற்கென்றே ஏஜெண்டுகள் இருப்பாங்க சார். அதில் நம்மள ஏமாற்றுபவர்களும் உண்டு. அப்படி பணமும் நிறைய நான் இழந்திருக்கேன். ஏன் சார் இதெல்லாம் கேக்குறீங்க? நீங்களும் ஏதும் ட்ரை பண்றீங்களா? இல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் அங்க இருக்கங்களா?” அவனது துடிப்பும் ஆர்வமும் எனக்குள்ளும் ஒரு எழுச்சியைத் தூண்டியது. குறிக்கோளை நோக்கி ஓடுவதென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! நானும் கிடக்கிறேனே..? சும்மா மனதிலேயேக் கோட்டைக் கட்டிக்கொண்டு! அவன் முனைப்பை வியந்துப் பாராட்டினேன். அது அவனுடைய லட்சியத்தை மேலும் திரியூட்டிருக்கும்!

அடுத்த நாள் சில ஃபோட்டோகளுடன் வந்து, எப்படி இருக்கு சார் என்று என் முன் எல்லாவற்றையும் பரப்பி வைத்தான். இது போல் முயற்சிப்பவரைக் கண்டு முதலில் எல்லோரும் சிரிப்போம்தான், நானும் சிரிப்பை அடக்கியபடி புன்னகைத்தேன். அவனுக்கு முதல் வாய்ப்பு வரும்போது சிலர் சந்தோசப்படுவார்கள் என்றால் பலர் விமர்சிப்பார்கள். அவனுடைய முதல் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் ஏற்க மறுப்பார்கள். அடுத்தடுத்து முன்னேறி அனைவராலும் அறியப்படும்போதுதான் அவர்களும் அங்கீகரிக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். இதை யோசித்துக் கொண்டிருக்கும்போதே காந்தியின் பொன்மொழியொன்று நினைவுக்கு வந்தது.

“முதலில் உன்னை அலட்சியம் செய்வார்கள், பின்னர் உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள், பின்னர் உன்னை எதிர்த்து வருவார்கள், பின்னர் நீ வெற்றிபெறுவாய்!”

நான் உருவாக்கிக்கொண்டிருந்த கதைப்படி கதாநாயகனும், நாயகியும் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு அதிகமாகி குண்டூரிலிருந்து ரயில் வழி வடநாட்டிற்கு தப்பித்துச் செல்கிறார்கள். ஊர் தெரியவில்லை, பாஷைத் தெரியவில்லை. ரவுடிகள் அவர்களை துரத்திக் கொண்டு வர அங்கே டீக்கடையில் வேலைப் பார்க்கும் ஒரு தமிழ் இளைஞன் அவர்களுக்கு அடைக்கலம் தர முன் வருகிறான்.

அந்த கதாப்பாத்திரத்தை கொஞ்சம் வேறு மாதிரி உருவ அளவில் கற்பனை செய்து வைத்திருந்தாலும், ஏன் அதில் இவனைப் பொருத்திப் பார்க்க கூடாது என அவனுடைய போட்டோக்கள் ஒவ்வொன்றையும் திரும்ப திரும்ப கூர்ந்துப் பார்த்தேன். அப்போதுதான் கவனித்தேன் பின்னால் ‘சுதாகர், ஆர்ட்டிஸ்ட், போன் நம்பர்…’ என்று அவனுடைய விபரங்கள் சுருக்கமாக எழுதப்பட்டிருந்தன.       

அவனோடு நானும் கீதாவும் பயணிக்கப் போவதே பெரும் உற்சாகமாக இருந்தது.        

***

தொடரும்…

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *