கீதாவிடம் உரையாடிக் கொள்ள யாஹூ வசதியாக இருந்தது. தினமும் தொடர்பு கொள்ள முடியாது என்றாலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது சாட் செய்வோம். விடுமுறைக் கழிந்து கூடும் பள்ளிப் பிள்ளைகள் போல பகிர்ந்து கொள்ள அத்தனை கதைகள் சொல்லச் சொல்ல சிறகடிக்கும்!
புறப்பட்டு வந்த நேரத்தில் அவளுடைய புகைப்படமொன்றை நான்தான் அவசர அவசரமாய் கேட்டு வாங்கினேன். அது இன்டர் எக்ஸாம் எழுத, அதாவது ப்ளஸ் டூ தேர்விற்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோ. இரட்டை ஜடையிட்ட தந்தச் சிலையொன்றை நீலவானத்தில் நிற்கச் சொல்லி படம் பிடித்ததுப் போன்றிருந்தது. குறைவில்லை! எப்போதும் என் பர்ஸையும், எடுத்து நோக்கும் வேளைகளில் எனது மனதையும் நிறைத்துக் கொண்டேயிருந்தது.
பர்ஸ் என்றதும்தான் ஞாபகத்திற்கு வருகிறது. அப்போதெல்லாம் நான் பர்ஸ் உபயோகித்திருந்ததில்லை. எப்போதும் சட்டைப் பையிலோ, அல்லது பேன்ட்டிலோதான் எதையும் செலவுக்கென்று வைத்து கொள்வது வழக்கம். அதை ஒரு நாள் நான் ப்ரௌசிங் சென்றிருந்தபோது, எதார்த்தமாக அவள் கவனித்திருத்திருக்கிறாள். சிறு தூறல் பிடித்து, அடைமழையாய் தொற்றிக் கொண்டது போல நாங்கள் நன்றாக பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே எனது பிறந்த நாள் வந்தது.
அன்று அவள் பரிசளித்ததைதான் பர்ஸ் என முதன்முதலாக பாவிக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து பர்ஸில் பத்து ரூபாயாவது இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். ஏதுமில்லாமல் போனால் என் மனக்கண்ணில் அவள் சோகமாக காட்சியப்பது போன்று தோன்றும். உடனே கடன் வாங்கியாவது நிரப்பி விடுவேன்!
அவள் பிறந்த நாள் டிசம்பர் 19 ஆம் தேதி வரும். நட்சத்திரம் கூட மூலமென்று ஒரு முறைச் சொன்னாள். இன்னும் மூன்று நான்கு மாதங்கள் இருந்தாலும் என்னப் பரிசளிக்கலாம், அதை எப்படி இங்கிருந்து அனுப்பி வைப்பதென யோசனைகள் மனதில் எழுந்த வண்ணமிருந்தன. இருப்பினும் சென்னை வாழ்க்கை குண்டூரு போலல்லவே. வேலை ஒரு பக்கம், நண்பர்கள் மறு பக்கம். நாள் ஒவ்வொன்றும் நதி போல ஓடிக்கொண்டேயிருந்தது. அவளை எப்படியாவது இங்கு வரவழைத்துப் பார்த்துவிடலாமா என்றெல்லாம் தோன்றினாலும், அசட்டையான ஆசைகள் விபரீதத்தில் முடிந்துவிட்டால் என்னாவது என மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
ஒரு முறை எனது இயக்குனர் முயற்சிகளெல்லாம் என்னவாயிற்று எனக் கேட்டாள். அதற்கெல்லாம் யாருக்கிட்டயாவது அஸிஸிடெண்ட் டைரக்டராக வேலைப் பார்க்கணும். அதற்கு பார்க்கும் வேலையை விட்டுவிட்டுதான் போக வேண்டும், போகட்டுமா என்றேன். சிரித்தாள். ஆனால் மனதிற்குள் அந்த கதையை மென்மேலும் டெவலப் செய்துக் கொண்டே வந்தேன். சுதாகராவது வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டமடித்து விட்டது வாய்ப்புத் தேடி அங்குமிங்கும் சென்றுவிடுவான். நான் எப்படி போவது? ராஜினாமா செய்தால்தான் உண்டு.
வாழ்நாள் முழுக்க அசிஸ்டென்ட் டைரக்டர்களாகவே அல்லல்பட்டு மடிந்துப் போவோரின் கதைகளை பத்திரிகைகள் நேர்காணல்களிலும், செய்திகளாகவும் படித்திருக்கிறேன். அது வேறு ஞாபகங்கள் வந்து எனது சோம்பேறித்தனத்திற்கு சோறுப் போட்டுக் கொண்டிருக்கும்.
சேர்ந்தால் ஒரு நல்ல டைரக்டரிடம் வாய்ப்பு பெற வேண்டும். அதற்கென்று மெனக்கெட்டு யோசித்து செயல்படவும் அதற்கான வழிகளைக் காட்டவும் ஆள்தான் இல்லை. சுதாகர் சொல்லும் ஆட்களையெல்லாம் நம்பிச் சென்றால் நமது பர்ஸுக்குதான் வேட்டேத் தவிர, உருப்படியாக ஏதும் ஆவாததுப் போலிருந்தது.
ஆங், அவளுடைய பிறந்த நாள் பரிசை நானே நேரில் வந்து தருவதாக வேறுக் கூறியிருந்தேன்.
சினிமா என்பது எல்லோரையும் போல் என்னையும் சிறு வயதிலேயே கவரப்பட்டுவிட்டிருந்தாலும், முன்பு குறிப்பிருந்தபடி இயக்குனர் ஆசையெல்லாம் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கும்போதான் எழுந்தது. நான் எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்களில் இயக்குனர் சங்குசாமியின் மூத்த அண்ணன் வைத்திருந்த கடைக்குச் செல்வேன்.
அப்போது மகா உறவு என்கிற படத்தில் அவர் உதவியாளராகப் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். அவர்கள் கடையில் அந்த பட விளம்பரம் ஏந்திய காலெண்டர் கூட ஒன்றுத் தொங்கிக் கொண்டிருக்கும். அவரை நேரடியாகவே ஒரு சிறுவனாகக் கண்டிருக்கிறேன்.
பிறகு ‘சந்தோசம்’ படம் வந்த போது, படத்தின் கதையைப் பார்த்துவிட்டு அவருடைய அண்ணன் – தம்பி ஞாபகம்தான் வந்து போனது. அந்த படத்தில் ஒரு காட்சியில் கூட அவருடைய பெரிய அண்ணன் தோன்றியிருப்பார்! முரளி கதாப்பாத்திர அண்ணன் கூட, படத்தில் காட்டியபடியே அப்படியேதான் இருப்பார்! நல்ல உழைப்பாளி!
அவரிடம் முயற்சித்துப் பார்க்கலாமா என்ற ஆர்வம் தோன்றியது. அப்போதுதான் ‘சேவல் சண்டை’ படம் வந்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தது.
ஆனால் அவரை மட்டுமல்ல, சினிமாவில் வேறு யாரையும் கூட அணுக மனத்தடையே இரு நாட்டிற்கும் இடையேயான சிகரமாக இருந்து வந்தது. குழப்பத்திலேயே சென்றுவிட்டன ஆறு மாதங்கள்! திரும்பவும் குண்டூருக்கு அடுத்த பிப்ரவரியில் போய் சேர்ந்தேன். என் பங்காரம் (தங்கம்) கீதா விஜயவாடாவில்தான் இருந்தாள். என்ன ஒரு குறை என்றால்… நான் சென்னையிலிருந்தபோது கடைசி இரண்டு மாதங்கள்தான் அவளை சரியாகத் தொடர்பு கொள்ள இயலவில்லை! அந்த இரவுப்பயணம் சிவ ராத்திரி போலச் சென்றது. அவள் நினைவுகளில் என் இதழ்கள் என்றில்லை உடலே ஒளிவீசிக்கொண்டிருந்தது! என் காதலி மிகவும் பிரகாசமானவளல்லவா?

அந்த வருடம் கணிசமான சம்பள உயர்வோடு, நிறைய வசதிகளை எனக்கென செய்துக் கொடுத்திருந்தார்கள். சீதம்மாவைக் கண்டது மட்டற்ற மகிழ்ச்சி என்றாலும், பேச்சினூடே என்னை அவரின் மகன் போலவும், கீதாவை எனது தங்கை போலவும் குறிப்பிட்டதுதான் எனக்கு என்னவோப் போலிருந்தது.
அவர் தன்னுடைய பிரியத்தை சிரித்த முகத்தோடேயே என்னிடம் வெளிப்படுத்தியிருந்தாலும், இடைக்காலத்தில் என்னவோ நடந்திருக்கிறது என்பது மட்டும் எனக்கு நன்றாகவே விளங்கியது.
கடைசி இரு மாதங்கள் விடுமுறை நாட்களிலும், என்னைத் தொடர்பு எந்த வகையிலும் அவள் முயற்சிக்கவில்லை. நான் அனுப்பிய யாஹூ மெஸேஜ் எல்லாம் அவள் பார்த்திருந்தாலும், எதற்கும் பதிலளிக்கவில்லை. ஒரு முறை நேரிடையாக அவளது ஹாஸ்டல் நம்பருக்கு அழைத்தும் கூட பேச முன் வரவில்லை. எனக்கு குழப்பமாக இருந்தாலும் நானூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து என்னால் என்னதான் செய்திருக்க முடியும்? நண்பர்களுடனானச் சுற்றல்களில் நானும் கொஞ்சம் மறந்துதான் இருந்துவிட்டேனோ..! மன்னித்து விடு நெமலி (மயிலு) மானசீகமாக உள்ளுக்குள்ளேயே அவளோடு உரையாடிக் கொண்டிருந்தேன்.
புறச்சூழல்தான் என்னை மீட்டுக் கொண்டு வந்தது.
என்னவாயிற்று என்று ஒரே குழப்பம், காரணமற்றக் கோபம், வருத்தம் எல்லாம் ஆட்கொண்டபடி வேளையிலும் கவனம் சிதறத் தொடங்கியது. ஆசை ஆசையாக பிறந்த நாள் பரிசாக அவளுக்கு நான் வாங்கி வைத்திருந்த சுடிதார் மற்றும் ஒரு அழகிய மோதிரம் ஜரிகைத்தாள் பொட்டலமாக எனது பேக்கிலேயே அடைந்துக் கிடந்தது.
சீதம்மாவிற்கு எனது தேடல்களும், தவிப்புகளும் புரிந்திருந்தாலும் எதுவுமே தெரியாதவர் போல தன்னைக் காட்டிக்கொண்டார். எங்கள் காதலையொட்டி அந்த இரண்டு மாதத்தில் பிரச்சினை என்று ஏதோ ஒன்று அவள் வீட்டில் நடந்தேறியிருக்கிறது என்பது மட்டும் சீதம்மாவின் உடல்மொழிகளில் நன்றாகவே விளங்கிக் கொள்ள முடிந்தது. இருப்பினும் வலிந்து எதையும் நானாகவேக் கேட்க போய் அதனால் எங்கே அவள் படிப்பு ஏதும் தடைப்பட்டுப் போய்விடுமோ என்ற கவலைகள் எழ, கொஞ்சம் ஆறப்போடலாமென அச்சமயத்தில் தீர்மானித்தவனாய் மேற்கொண்டு அவரிடம் எதுவும் பேச்சுக் கொடுக்கவில்லை.
இன்னொருபுறம் என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை அந்த ஞாயிறு விஜயவாடா சென்று அவளை எப்படியாவது சந்தித்துவிடுவதென முடிவெடுத்தேன். அதற்குமுன் நான் இல்லாத சமயத்தில் அப்படி என்னதான் நடந்ததென என்று அங்கே இருப்பவர்கள் யாரிடமும் கேட்கலாம் என்று யோசித்தபோது, ஒரே யோசனையாக ஜலபதிதான் ஞாபகத்திற்கு வந்தான். கோட்டேஸ்வரமாவிடம் கேட்டால், எங்கள் விசயங்கள் வதந்தியாக கூட மாறி பரவக்கூடும்.
ஜலபதியிடம் நேரடியாகவேக் கேட்டேன். கீதாவிற்கும், சீதம்மா அண்ணன் மகனுக்கும் நிச்சயதார்த்தம் முந்தையமாதம், அதாவது சங்கராந்திக்கு அடுத்த நாள்தான் நடந்தது; நீ அவளை விரும்புவது எனக்கு, சீதம்மாவிற்கு, அவங்க வீட்டில எல்லோருக்குமே தெரியும், ஆனால் இனி அவளை பின்தொடராமல் வந்த வேலையை நீப் பார்த்துச் செல்வதுதான் உனக்கு நல்லது என்று அறிவுறுத்தினான். அந்த அறிவுறுத்தலையும் ஒரு எச்சரிக்கை போல வெளிப்படுத்தினான்.
ஒரு நொடியில் கனவெல்லாம் கலைந்து, ஈசல்கள் உதிர்ந்த காலையாய் ஒரு போர்க்கள அமைதி நிலவியது. எல்லாம் அவ்வளவுதானா என்று நினைக்கையில் வெறுமையை உணர்ந்தேன். பெரும்பாரம் மனதை அழுத்தியது. யாரிடமும் பேச பிடிக்காமல் ஓரிரு நாட்கள் சித்தம் பேதலித்தவன் போலச் சுற்றினேன்.
என் ஆடையில், கழுத்தில், கன்னங்களில், என் கைகளில் அவளது வாசம் அடிக்கிறதா என தேடித் தேடி நுகர்ந்தேன். நொடி தவறாமல் என் கவனங்கள் எல்லாம் பாழ்பட்டன. எப்போதும் நேர்த்தியை கடைபிடிக்கும் உடைகளில் கூட மிகுந்த அலட்சியத்தை உணர்ந்தேன். வாராத முடி, கசங்கியிருந்த சட்டை, சட்டென அடர்ந்துவிட்ட தாடியெல்லாம் பார்த்து எல்லோரும் என்னை கவனிக்க ஆரம்பித்தனர்.
விசயங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் கசியத் தொடங்கின. ஆனால் யாரும் காட்டிக்கொள்ளவில்லை. கோட்டேஸ்வரம்மாவிடம் பேசுவதைத் தவிர்த்தேன். அவர்முன் அழுத்துவிடுவேனோ என்கிற பயம்! ரமேஷ் கூட எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் பைத்தியம் போல் என் போக்கிற்குத் திரிந்தேன்.
பணிகள் என்னுடைய மேற்பார்வை ஏதுமின்றியே நன்றாகச் சென்றுக்கொண்டிருந்தது. பிரசாத்தும் கணேஷும் வேறு மாதிரி அட்வைஸ் செய்தார்கள். அதாவது இங்குள்ள நடைமுறைகள், கலாச்சாரமெல்லாம் உனக்கு ஒத்து வராது, முக்கியமா கீதா உனக்கு தகுந்த பெண்ணே இல்லை என்று.
கொஞ்ச நாளிலேயே ரமேஷை ராஜ மந்திரிக்கு மாற்றினார்கள். நான் அவனைப் பார்க்க போவதாகச் சொல்லி, கீதாவை எப்படியும் சந்தித்தே தீருவதென விஜயவாடாச் சென்றேன். ஆனால் அவள் அங்கில்லை!
(தொடரும்…)

இத்ரீஸ் யாக்கூப்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.