1. சகலம்
ஆற்றில் காய்ந்து கிடக்கும்
பழுத்த நெல்மணிகளை
ஆட்கொண்டிருக்கும் அணுக்களாய்
கூறு கூறாக
என்னை வெட்டி
ஒப்படைத்தேன்
ஒவ்வோர்
உயிரிடத்திலும்
பார்
பறக்கும் மின்மினியிலும்
இறந்த அணில் குஞ்சிலும்
வாழ்கிறேன்
சாகிறேன்
பாமரருள்
அழியாப் பாமரன் நானே.
2. காண்
சொற்களின் உலகில்
உள்நுழைகையில்
முளைக்கும் சிறகுகளால்
பயணப்படுகிறேன்
ஒரு சுதந்திர காற்றாய்
,
காணும்
கரு வெண்ணிற மேகங்களை
ஒரு சேரக் கட்டி
மேல் தவழ்ந்து
பரவச நிலையில்
அண்ணாந்துப் பார்ப்பேன்
இப்பெருவெளி
என் காலடியில்
,
இருத்தலை மறந்து
நானும்
நானும்
பேசுகிறோம்
அட
அவன் கிடக்குறான் மயிராண்டி
எனும் சமூக விலங்குகளே
அறிஞனைக் கேட்காதே
அனுபவசாலியைக் கேள்.
3. போதல்
அலுப்பைத் தொடர்ந்து
விளிம்பில்
கட்டமைக்கப்படுதலை
மீண்டும் கலைத்துவிடுதலால்
ஒழிந்துப் போ இ
சனியனே என்னும்
விம்மிய குரலின்பால்
இனி
என் மிருகம்
சுதந்திரமாய் உலவத் தொடங்கும்.
00

இயற்பெயர் கார்த்திக். திருச்சியைச் சேர்ந்தவர், ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்.முதல் கவிதைகள் கதவு இதழில் வெளிவந்தது.