1. நின்ற–தில்லையவன்
என்னுள்
ஆடிக்கொண்டிருக்கும்
பரமன்
படைத்துக்கொண்டே இருக்கிறான்
எல்லாவற்றையும்
பேசாமல்
சிவனேன்னு இருடா என்றால்
சும்மா இருப்பானா
என் சிவன்
எல்லாவற்றுக்கும்.
2. ஆட்டம் – Atom
காத்திருக்கிறேன் மலை முகட்டில்
ஒற்றைக் கல்லில்
ஒற்றை ஆளாய்
பற்றுதலின்றி எங்கும் தொங்கும்
பரந்த காற்றில்
ஒரு காற்றை தள்ளி
இன்னொரு காற்று
நுழைகிறது காத்திருந்து
,
ஊசி துளையுள் நுழையும்
இமைகளின்
கண்ணுள் குறுகிக் கிடக்கும்
கருபிரபஞ்சத்தில்
மொய்க்கும்
சிறு வெண்மை திட்டுகள்
எல்லாம் என் அவையங்கள்
எல்லாம் என் மெய்
எல்லாம் எல்லாம் அலைந்து அமரும்
என் உள்ளங்கையில்.
3. தற்சார்பு
தன்னையே சேமித்துக் கொள்ளும்
நினைவுகளை
இக்கணத்திலிருந்து
அழித்துவிட்டு
அசைவற்ற உடல்
ஆடுகிறது கயிற்றில்
மணிக்கூண்டின் முள்ளென
ஒரு கணம் இயக்கமற்று போகும்
கண்திறந்த அருகாமைகள்
இனிவரும் ஓலங்கள்
எழுப்ப முயற்சிக்கும்
சரிந்த நினைவுகளை
இயங்கும் நினைவுகளின்
கைப்பிடியிலிருந்து.

இயற்பெயர் கார்த்திக். திருச்சியைச் சேர்ந்தவர், ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்.முதல் கவிதைகள் கதவு இதழில் வெளிவந்தது.

