1. இறுதிச்சிலுவை
முடிவாய் கை குலுக்கி
புன்னைகையின்
இரத்தத் துளிகளை
சிலுவையில் படரச் செய்தாய்
,
இறந்த காலத்தை
இருக்கச் செய்யும்
அக்குருதியின் துர்வாசம்
இரு பரிமாணங்களையும்
உட்கிரகித்து
முளைத்த அண்டத்தில் தவழ்கிறேன்
மறுநாளில்
அது என்னை சுவாசிக்கிறது
மூன்றாம் நாளில்
நான் அண்டமானேன்
சாகா ஈசல் நினைவுகள் பளிச்சிடும்
மின்னொளிகளில்
பிரிகின்றன
சிறு சிறு பேரண்டங்களாய்
அவை ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நாளுக்காய்
விழுங்கவே நிச்சயிக்கப்பட்டன
ஆனாலும்
மன்னிப்பின் கருவளையலில் மூழ்கி
மீளவுமாய் பிரயத்தனப்படுகிறேன்இ
கடையாய் அங்கும்
வந்து நின்றாய் ஒரு மொழியோடு
இருந்தாலும் மீண்டும்
என்னை இவ்வளவு நம்பியிருக்க வேண்டாம்.
2. சுர்க்க்
போகும் போக்கில்
கிள்ளிவிட்டுப் போனான் ஒருவன்
அது அவனையேப் பார்க்கிறது
கண்ணை சிமிட்டி சிமிட்டி இ
கொஞ்சிட வந்தவள்
பழுத்த உதடுகளை வருடி
ஓங்கி அறைகிறாள் கன்னத்தில்
அது சிரித்து சிரித்து
குப்புற கவிழ்கிறது தரையில்இ
இப்போது
ஏதும் அறியாது தூக்கிவைத்து
சுர்ர்க் என்று
குத்திவிட்டான் இன்னொருவன்
அது சுர்ர்க் சுர்ர்க் என்பதாக
உடைந்து கொண்டிருக்கிறது
இப்போதைக்கு மட்டும்
சட்டென
சொல்லித்தான் தொலைங்களேன்
சும்மாவேணும் சுர்க்கென்று.
00

இயற்பெயர் கார்த்திக். திருச்சியைச் சேர்ந்தவர், ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்.முதல் கவிதைகள் கதவு இதழில் வெளிவந்தது.

