சூடான வறுகடலையின்
தொலி உதிர்வது போல
பறிபோகின்றன
மனிதர்களின் உயிர்கள்
அற்ப காரணங்களாலும்
காரணங்களே இல்லாமலும்
–
பச்சிளம் குழந்தைகள்
கழிவுநீர்ப் பாதைகளில்
குப்பைத் தொட்டிகளில்
எறியப்படுகிறார்கள்
–
மருத்துவமனைகளில்
பிறந்த குழந்தைகள்
திருடப்படுகின்றன
–
பெண் குழந்தைகளை
விற்பனை செய்கிறார்கள்
–
சிறுமிகளை
சீரழிக்கிறார்கள்
–
பெண்களை
சூறையாடுகிறார்கள்
–
எளியோரை
காலி செய்கிறார்கள்
–
இன்னும் நிறைய
விதவிதமாக
கொடுமைகளைச் செய்கிறார்கள்
அன்றாட வாழ்வின் அங்கம் போல
உயிரினங்களில்
உயர்ந்தது
மனித இனம் என்று
இப்போதும் சொல்வீர்களா?
–
முன்தோன்றிய
குடிப் பெருமை
பிறகு பேசலாம்.
—
புன்னகைத்தால்
அழகாகத்தான் இருக்கிறார்கள்
எல்லோரும்
யோசிக்கிறார்கள்
–
சிரித்தால்
இன்னும் அழகாக இருக்கிறார்கள்
நிறைய யோசிக்கிறார்கள்
–
அழுதால்
பார்க்க முடியவில்லை
அழுகிறார்கள்
அல்லது
அழுவதான பாவனையில்
பெரும்பொழுது கழிக்கிறார்கள்
–
நாடுவது நடக்கும்.
—–
ஒரு நெடுந்தொலைவு
தலைச் சுமையாள்
சற்றே இளைப்பாறும்
நிழலை
எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?
நிற்பதையெல்லாம் வெட்டிவிட்டு
மரம்போல் நிற்கிறீர்களே…
வெட்கமாக இல்லையா?
—-
நையப் புடைத்த
தானியம்
யார் கண்ணிலும் படாமல்
பத்திரமாக உள்ளே வை
நல்லதுக்கு
காலமில்லை.
—-
ரகசியங்களை
வேகமாகத் தொலைத்துவிட்டு
படபடப்புடன்
உண்மையைத் தேடுவதாக
பாவனை செய்கிறார்கள்
நடக்கட்டும்
முடிவற்ற நாடகமே
உலகம்.
—-
அவர் எழுத்தில்
அறம் நின்று பேசும்
செயலில்
கழன்று ஆடும்
அது முரண் இல்லை
திறன் என்றே ஏற்க வேண்டும்
இல்லையெனில்
அறியாமையின்
விளிம்பிலிருப்பதாக
அறியப்படுவீர்கள்
நீங்கள்
விளிம்புநிலை மனிதரா?
முடிவு உங்கள் கையில்.
சுகதேவ்.
மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் வெளியான கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. 2019-ல் வெளியான கவிதைத் தொகுப்பு “ஒவ்வொரு கணமும்”