1
குறுக்குவழியில்
முன்னேற முடியாது
என்றார் தலைவர்
அப்படியெனில்
உங்கள் வழி?
கேட்டான் தொண்டன்
வரலாற்றின் வழி
ஒரே நேர்க்கோட்டில்
இருக்கச் சாத்தியமில்லை
என்றார்
வியந்தான் தொண்டன்
குறுக்கு வழியில்
வேகமாக நடந்தான்
நம்பிக்கை பொங்க.
2
சொல்லக் கொதிக்குது
நெஞ்சம்
சொல்லாதே…
உள்ளேயே இருந்தால்
வெடிக்கும்
வெடிக்கட்டும்….
நீ சிதறிப் போவாய்
நான் மட்டுமா….
சொல்லவில்லை
மூடு.
3
முன்பெல்லாம்
அரங்கேற்றத்துக்கு முன்பு
ஒத்திகை பார்த்தார்கள்
இப்போது
அரங்கிலேயே
ஒத்திகை நடக்கிறது
பார்க்க முடியவில்லை
ஆர்வம் பொங்கப் பார்ப்பது போல
பார்வையாளர்களும்
ஒத்திகை பார்க்கிறார்கள்
உலகமே நாடக மேடை என்பது
மீண்டும் மீண்டும்
ஊர்ஜிதம் செய்யப்படுகிறது.
4
இன்னும்
பேசத் தொடங்காத
தூக்கிவைத்திருக்கும் குழந்தை
கடந்து செல்லும்
நாயை கை காட்டியது
“நாய்… கருப்பு நாய்…
கடித்துவிடும்…”
தந்தையின் குரல்
அச்சுறுத்தும் தொனியில் ஒலித்தது
குழந்தையின் உடல்மொழி
சொல்லவந்தது வேறு…
தந்தையின் வாய்மொழி
அதற்கு நேர் எதிராக…
இப்படித்தான் இங்கே
பலவும் உணரப்படுகின்றன அல்லது
உணர்த்தப்படுகின்றன
வளரும் குழந்தைகளின்
எதிர்காலத்தை நினைத்தால்
கவலையாக இருக்கிறது.
5
புத்தகங்கள் இல்லாத வீடு
வீடே அல்ல என்கிறார்
பிரபல எழுத்தாளர்
மனிதர்கள் இல்லாத வீடு
என்னவாம் என்று கேட்கிறார்
வளரும் எழுத்தாளர்
வீடே இல்லாத மனிதர்களுக்கு
புத்தகங்கள் என்ன செய்யுமாம்
என்றொரு கேள்வி எழுப்புகிறார்
புதியதலைமுறை எழுத்தாளர்
புத்தகங்களுடன் மட்டும்
நடமாடும் மனிதர்களின்
சமூக மதிப்பு என்ன?
எங்கிருந்தோ
ஒரு கேள்வி ஒலிக்கிறது
அச்சடிக்கப்பட்டு அட்டை போடப்பட்ட
காகிதக் கழிவுகளை வைத்திருப்பவன்
எத்தகைய மனிதன்
என்றொரு கேள்வியும் ஒலிக்கிறது
அது கழிவா இல்லையா என்பதை
யார் தீர்மானிப்பது…
சர்ச்சை தொடங்கிவிட்டது
இலக்கியம்
உயிர்ப்புடன் இருக்கிறது.
6
ரீல்ஸ் போடுவதற்காக
எடுத்தது
போடுவதற்குள்
பார்த்துவிட்டாள்
முறிந்தது உறவு
ரீல்ஸ் கான்செப்ட்டை
மாற்ற வேண்டும்
ஒரு வேலையை
மீண்டும் செய்வது போல
சலிப்பு எதுவும் இல்லை.
7
காது குடைந்துகொண்டே
இன்னொருவனிடம்
பேசும் மனிதனிடம்
வாழ்வின் பிரச்சினைகள் பற்றி
ஏதாவது பேசினால்
காதில் ஏறுமா?
நண்பர் கேட்டார்.
அது குடைவதைப் பொறுத்து
என்று சொன்னேன்.
என்ன நினைக்கிறீர்கள்?
சரி… சரி… நீங்களும்
குடைந்து கொண்டிருக்கிறீர்களா…!
8
இவங்க பெரிய தாத்தாதான்
இவ்ளோ பெரிய வீட்ட கட்டுனாரு
இவங்க தாத்தாதான்
இந்த ஊர்ல முத முதல்ல
கார் வாங்குனாரு
இவங்க அப்பாவ பாத்தாலே
எல்லாரும் நடுங்குவாங்க
இவர பாத்தா
எல்லாரும் கும்பிடுவாங்க
அதெல்லாம் சரி
கீழத் தெரு மாடசாமிய
இவரு நிக்க வச்சு பேசுவாரா
உக்கார வச்சு பேசுவாரா…?
பேசுவாரு
தூரத்துல நிக்க வச்சு…
எல்லாம் காலி.
*****

சுகதேவ் –
மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).