1

தந்திரங்களை

ஆண்கள்

கையாள்வார்கள்

பெண்கள்

ரகசியமாக

கையாள்வார்கள்

சூது

பால்பேதம்

அறியாது.

2

இப்போது யாரும்

காதலுக்கு கடிதம்

எழுதுவதாகத் தெரியவில்லை

முன்பொரு காலத்தில்

கடிதங்களுக்கு

படபடப்பான

ஒரு பாத்திரம் இருந்தது

பெரும்பாலும்

காதல் கடிதங்களை

கிழித்துப் போட்டது

பெண்கள்தான்

பால் பாக்கெட் போடுவது போல

ஆண்கள்

பலருக்கும் கடிதம் கொடுத்த

அடாவடியும் நடந்தது

என்றாலும்

கடிதங்களைக்

கிழித்தெறிந்த பெண்கள் எல்லாம்

காதலை

நிராகரித்ததாகக் கொள்தல் கூடாது

கடிதங்கள் அல்லாத

முற்போக்கான வழிகளை

அவர்கள் எதிர்பார்த்தார்கள்

அப்போது இல்லை.

3

ஊடகங்களும்

தொடர்புச் சாதனங்களின்

நுட்பமும்

பெருகப் பெருக

மனிதர்களின் சுயஅறிவு

சுருங்கி வருகிறது

அனுபவத் திரட்சியே இன்றி

வெட்டவெளியாய் நிற்கிறார்கள்

வளரும் மனிதர்கள்

தங்களைக் கையாள்வதற்கே

தடுமாறுகிறவர்கள்

உலகை

எப்படி எதிர்கொள்வார்கள்

லேசான அதிர்விலிருந்து

மீண்டு வருவதற்குக்கூட

“வைப்” தேவைப்படுகிறது

ஒன்றுமே நடக்காவிட்டாலும்

பொதுவெளியில்

ஒவ்வொருவரும்

ஒவ்வொருவருக்காக

கைதட்டுகிறார்கள்

அல்லது

கைதட்டுவதாக

நடிக்கிறார்கள்

இல்லாததை

இருப்பது போலக் காட்டுவதே

இன்றைய வாழ்க்கை

முடிந்தால் காட்டுங்கள்

இல்லாவிடில்…

இல்லாமல் போய்விடுவீர்கள்.

4

ஒரு வீட்டு ஜன்னலிலிருந்து

கவ்விச் சென்ற மீன் துண்டை

அந்தக் காகம்

இன்னொரு வீட்டு

மொட்டை மாடியில்

போட்டுவிடுகிறது

பொது இடத்தில்

புலாலா?

சைவ அசைவ

குடும்பங்களுக்கு இடையே

மடிந்துகிடந்த உரசல்

விரிசலாகிறது

இன்னொரு காக்கை வந்து

அந்த மீன் துண்டை

எடுத்துச் செல்லும் வரை

பதற்றம் தணியாது.

5

கந்தல் ஆடைகளை

யாரும்

இப்போது அணிவதில்லை

கந்தல் அல்லாத

ஆடைகளை

கசக்கிக் கட்டுவதுமில்லை.

6

நள்ளிரவில்

நெடுஞ்சாலை விபத்துகளில்

சிதறிப் போய்

உயிருக்குப் போராடும்

மனிதர்கள்

உதவிக் கரம்

நெருங்கும் வரை

துடிதுடிப்பது போல

பெருங்கொடுமை

வேறேதும் இல்லை.

ஏ.ஐ. யுகமாவது

ஏதாவது செய்யட்டும்.


சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *