1
வந்திறங்கிய
நீண்ட பட்டியல் கொண்ட
மளிகை சாமான்களில்
பிரிக்கப்படும்
கடைசிப் பொட்டலத்தைப் போல
எங்கும் எதிலும்
அவனுக்குத் தாமதமாகிறது
இத்தனைக்கும் அவன்
மாவு அல்ல
பருப்புதான்
இருந்தாலும்
நீ என்ன பெரிய பருப்பா
என்ற கேள்வியே
பதிலாக வருகிறது
எப்போதும்.
2
அவனும்
எத்தனையோ
காதலைப் பார்த்துவிட்டான்
இந்தக் காதலில்
தண்ணி குடிக்கிறான்
இருவரும் சேர்ந்து
ஒரு காபி அருந்த.
கடைசியாக வந்த
காதலுக்கு
முதலில் வந்து
முறிந்துபோன காதலே
மேல் என்கிறான்
முதலுக்கு
எப்போதும்
முன்அனுபவம் இல்லை.
அவன் பார்க்காத
காதல் இல்லை
அடுத்தடுத்து தோல்வி
என்றாலும் மகிழ்ச்சிதான்
கடைசியில்தானே புரியும்
தலை தப்பியது
தம்பிரான் புண்ணியம் என்று.
3
எந்தக் கதவு திறந்தாலும்
முண்டியத்துக்கொண்டு
முதலில்
நுழைய விரும்புகிறார்கள்
மூடப்பட்ட கதவுகளுக்கு முன்னால்
பவ்யத்துடன்
காத்திருக்கிறார்கள்
கதவைத் திறந்து போடாதே
என்று பெரியவர்கள்
சும்மாவா சொன்னார்கள்.
4
நெரிசலில்
வாழப் பழகியவன்
கில்லாடி
குறிப்பாக
கூட்டநெரிசலில்
வாழத் தெரிந்தவன்
பலே கில்லாடி
வாழும் கலை
வகுப்பெல்லாம் கிடையாது
திறந்தவெளிப் பயிலரங்கம்.
5
பணம்
புகழ்
பதவி
மூன்றும்
எந்த மனிதனையும்
தேடி வந்ததாக
வரலாறு கிடையாது
ஓடி ஓடி விரட்டி விரட்டி
ஒன்றை அடைந்து
அதிலிருந்து இன்னொன்று
இன்னொன்றிலிருந்து
இன்னொன்று
கலகலத்துவிடும்
மர்ம உறுப்பு.
6
ஏறுவரிசை
புரிந்தவனெல்லாம்
ஏறிவிட முடியாது
நன்கு தெரிய வேண்டும்
இறங்குவரிசையில்
யாரையெல்லாம்
தள்ளிவிட வேண்டுமென்று
ஏறி இறங்கி
பார்த்தவர்களைக் கேளுங்கள்
நிறையச் சொல்வார்கள்.
தள்ளிவிடாதீர்கள்
நானே
இறங்கிப் போகிறேன்.
7
சிரித்தால்
அவருக்கு குழிவிழும்
இப்போது கன்னமே
ஒடுங்கிவிட்டது
ஏதும் விழுவதில்லை
விழும்போது
யாரும் சிரிப்பதில்லை
8
உரக்கப் பேசியே
கழிந்துவிட்டன நாள்கள்
இப்போது அவர்
சுண்டக் காய்ச்சிய
பால்
மருந்துக்கு
பயன்படலாம்.
9
அவர் எழுதிய
68-வது புத்தகம்
கொல்லை முதல் எல்லை வரை
69-வது புத்தகம்
எல்லைகளுக்கு அப்பால்
70-வது புத்தகம்
எல்லை என்று ஏதுமில்லை
கடைசிப் புத்தகம்
கவனம் பெற்றது.
10
அவன் பார்த்த போதெல்லாம்
சேலையை இழுத்துவிட்டு
சரிப்படுத்தினாள் அவள்
வசீகரமான முகத்தைப் பார்த்ததற்கு
இப்படியொரு உளவியல் தாக்குதலா?
அதிர்ந்துபோய்
பார்ப்பதை நிறுத்தினான்
இப்போது அவள் கண்கள்
அவன் பக்கம் அலையோடியதை
உணர முடிந்தது
அடிவயிற்குக்கு கீழே
சுருங்கியிருந்த சட்டையை
மீண்டும் மீண்டும்
இழுத்துவிட்டுக் கொண்டான்
அவள் குறுகிப் போனாள்.

சுகதேவ் –
மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

