1

சாப்பிட்டுவிட்டு

தூக்கியெறியப்பட்ட

எச்சில் இலைகளின் நடுவே

ஒரு மனிதனும் கிடந்தான்

பயன் முடிந்த பிறகு

எறிவதிலும் எறியப்படுவதிலும்

உணவென்ன

உயிரென்ன

உடலென்ன

நொன்ன.

2

நிழல் போல அசைந்தேன்

நீர் போல கொட்டினேன்

காற்றாய் சுவாசித்தேன்

கடல் போல பொங்கினேன்

உனக்காக நானிருந்தது போல

நீயும் இருக்க வேண்டும் என்று

எதிர்பார்ப்பது

முதிர்ந்த மூடநம்பிக்கை

இடையிடையே

என் திசை நோக்கி

நீ எறிந்த வாள்களைக்கூட

பத்திரமாக வைத்திருக்கிறேன்

திருப்பி எறிவதற்காக அல்ல

உன்னால்

எனக்குள் சேர்ந்த

காயங்களின்

வரிசையை அறிவதற்காக.

உன் வாள் ஒவ்வொன்றும்

என் அன்பின் கூர்மையில்

முனை மழுங்கிச் சிதறிக் கிடப்பதை

ஒரு கண்காட்சியாகவே வைக்கலாம்

அத்துணை செய்திகள்

ஒவ்வொன்றிலும்.

3

நீ வந்த பிறகு

வடை சுடலாம் என்றிருந்தேன்

வரும் போதே

சுட்டுக் கொண்டு வந்துவிட்டாய்

வடையைப் பொருத்தமட்டில்

யார் முதலில் சுடுகிறார்கள் என்பதே

எப்போதும் மேல் கணக்கு.

4

கண்மூடி யோசித்தால்

மனிதர்கள்

ஒருவர் முன்னால் ஒருவர்

தடுக்கி தடுமாறி விழுவதை

உணரமுடிகிறது

ஆளாளுக்கு

தந்திர வலைகளுடன் திரிகிறார்கள்

ஒருவருக்கொருவர்

நலம் விசாரிக்கும்போது மட்டும்

ஃபைன் என்கிறார்கள்

வாணவேடிக்கையைவிட

பெரும் வேடிக்கை அது.

5

இளநீரை

உறிந்து குடித்து

வெட்டிப் பிளந்து

வழுக்கை வரை

சுரண்டித் தின்ன பிறகு

மிச்சமென்ன….

தூக்கியெறி

மனிதர்களையும் இவ்வாறே

பயன்படுத்துவாயெனில்

நீ

சுடச்சுட வாழும்

சமகால ஜீவராசி

கிட்டத்தட்ட

ஏ.ஐ. மனிதன் போல…

நடமாடும் கணக்கன்.

6

அந்தப்பக்கம் இந்தப்பக்கம்

அசைய முடியவில்லை என்கிறார்கள்

வேலைச் சுமை தாளாமல்

வாழ்வின்

எந்தப் பக்கமும் அசையமுடியாமல்

எண்ணற்ற மனிதர்கள்

அசைவற்ற நீளம்

எங்கே முடியும்?

யாருக்கும் தெரியாது.

7

அடி இல்லா

உச்சங்கள்

இடிந்து விழும்போது

எழுந்த பேரொலியில்

அறமென்ன முறமென்ன

எல்லாமும் பறந்தன

புடைத்துவிட்டது

காலம்

இனி எழுத

என்ன இருக்கிறது?

000

சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *