1
பின்னால் வருபவன்
என் செருப்பை
மிதித்துக் கொண்டே நடக்கிறான்
திரும்பிப் பார்த்து கைகாட்டியும்
பலனில்லை
என் செருப்பு அறுந்துவிடாமல்
பத்திரப்படுத்த
நான் எப்படி நடக்க வேண்டும்?
என்ன நடக்கிறது என்றே
புரியவில்லை.
2
புத்தகத்தின்
அடுத்த பக்கத்தை
எச்சிலைத் தொட்டு வைத்து
திருப்பினார் எழுத்தாளர்
அப்படியும்
அடுத்த பக்கமாக இல்லாமல்
அதற்கடுத்த பக்கமாகத்தான்
வந்தது
ஆனாலும் அவர்
ருசிகரமாக வாசிக்கிறார்
அவருக்கு
அத்தனை நம்பிக்கை
அவர் எச்சில் மீது.
3
கோடு போட்ட நோட்டில்கூட
அவனால்
நேராக எழுத முடியவில்லை
நீயும் நானும்
ஒரே நேர்க் கோட்டில்
என்றான் இன்னொருவன்
ஓரணியில் நாம்
என்பது போலத்தான்.
4
ஒரு பொழுதின் அசைவை
இன்னொரு பொழுதின் வழியாக
துப்பறிகிறார்கள் மனிதர்கள்
ஒருபொழுதும் அறியார்.
5
கடைசிப் பேருந்தும்
நிற்காமல் போய்விட்டது
ஒளிவெள்ளத்தில் மிளிரும்
வெறிச்சோடிய சாலையில்
அவன் மட்டும்
பயம் மெல்லச் சூழ்கிறது
சமூகத்தின் இருள்.
6
இணைந்துவாழ
முடிவு செய்தவர்கள்
தொடங்கிய நாளே
உரம் போடுகிறார்கள்
பிரிவதற்கு
,
பிரிவதற்கு
தீர்மானித்தவர்கள்
அடுத்த நாளே
கடந்த காலத்தின்
இனிமையான பொழுதுகளை
அசைபோடுகிறார்கள்
,
அந்த விபத்திலிருந்து
அவன் பிழைப்பான் என்று
யாரும் எதிர்பார்க்கவில்லை
மீண்டு வருகிறான்
,
ஆப்பம் சாப்பிட்ட பின்
வழக்கம்போல்
கைபேசியில் பேசிவிட்டு
படுத்தவன்
விடை பெற்றுக்கொள்கிறான்
,
கொலை செய்ய
தயாரானவனுக்கு
மறுசிந்தனை வருகிறது
,
எதுவுமே யோசிக்காதவன்
திடீரென்று
கொலை செய்துவிடுகிறான்
,
கனவிலும் நினைக்கவில்லை
அவனுக்கு அடித்தது
ராஜ யோகம்
,
கவனமாக
திட்டமிட்டு முன்னேறியவன்
ஒரு நாள்
கரைந்து போனான்
,
தொட்டுவிடும் தூரம்தான்
கடைசிவரை
அந்தப் பதவி
அவனுக்கு கிடைக்கவில்லை
,
யானை மாலை போட்டது போல
போகிறபோக்கில்
அவன் அமரும் போது
செல்வாக்கான நாற்காலி
ஏந்திக்கொண்டது
,
முயற்சி திருவினையாக்கும்
உழைப்பே உயர்வு தரும்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
எண்ணம் போல் வாழ்க்கை
எல்லாம் சரி
,
அது சரி.
*****

சுகதேவ் – மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).