1
இவர் தீவிர இடதுசாரி
அவர் தீவிர வலதுசாரி
நட்டநடுவில்
சென்றவர்
கசங்கிப்போனார்
இரண்டு சாரிகளின் பங்களிப்பு
நடு என்பது
ஓரத்தில்கூட இல்லை
பக்கம்தான் மையம்
ஆனாலும் அழிக்கமுடியாதது
நடு
அது எந்த ரூபத்திலும் வரும்
இடது வலது உள்பட
உண்மையில்
நட்டநடு மட்டுமே
வைத்துச் செய்கிறது
இரண்டையும்.
2
பை பை பை என்று
இருதரப்பினரும்
சொல்லிக் கொணடேயிருந்தார்கள்
நகர்வதாகத் தெரியவில்லை
சொல்வது ஒன்று
செய்வது இன்னொன்று
பை.
3
எது உண்மை
எது பொய்
தெரியவில்லை
இரண்டுக்கும் மயிரிழைகூட
வித்தியாசமில்லாமல்
செய்துவிட்டது
சமகால வாழ்வின்
ஆகப்பெரும் சாதனை
தொடரும் காலங்கள்
பொய் மூட்டையாக இருக்கும்
ஏதென்றே தெரியாமல்
சுமக்கப்போகும் மனிதர்களை
நினைத்தாலே நடுங்குகிறது
மனம்
இது உண்மை
சந்தேகமிருந்தால்
உங்களுக்கு அதிகம் தெரிந்த
பொய்யிடம் கேட்டுப்பாருங்கள்.
4
இறுதிவரை
பிரியாமலிருப்போம் என்ற
உறுதியுடன்தான்
கரம் பற்றினார்கள்
ஆறு மாதம் தாங்கவில்லை
ஏற்கெனவே
நான்கு மாதம்
ஈருடல் ஓருயிர்.
5
காற்றே வீசாத பொழுதில்
அசைந்ததாகச் சொல்வது
பொய்யில் வருமா?
புரட்டில் வருமா?
கடலே இல்லாத ஊரில்
சுனாமி வந்ததாகச் சொல்வது
பொய்யில் வருமா?
புரட்டில் வருமா?
இல்லாத கட்சிக்கு
தலைவர் என்பது மட்டும்
கூடாதா, என்ன?
கூடும். கூடும்.
எத்தனையோ பார்த்த
தமிழ் மண்
இப்போதும் பார்க்கிறது
எத்தனை எத்தனை.
6
போதை மயக்கத்தில்
உளறுவதாகச் சொல்கிறார்கள்
சாதாரணமாகவே
உளறுகிறவர்கள்
எந்த மயக்கத்தில் இருக்கிறார்கள்?
போதையே இல்லாத
மயக்கமெனில்
அது புலனாய்வுக்குரியது
அல்லவா?
7
கடைசியாகப் பார்த்தபோது
அவன்
தலை வீங்கியது போலிருந்தது
சற்றுக் கழித்து பார்த்தபோது
தலையே வெடித்துக் கிடந்தது
அதற்குப் பிறகு
எதையும் பார்க்க
நானை இல்லையென்று
அவன் சொல்லியதாக
இன்னொருவன்
சொல்லிக் கொண்டிருந்தான்
அதுதான் கடைசியாக
நான் காதில் கேட்டது
அதற்குப் பிறகு
நடந்தது எல்லாம்
நன்றாக நினைவிலிருக்கிறது
நல்ல வேளை
கடைசிவரை
யாருக்கும் தெரியவில்லை
என்னதான்
நடந்தது என்று.
***

சுகதேவ் – மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).