சுடர் பாப்பா ஒரு சின்ன ராசாவோட மகள்..

அந்த ராசாவுக்கு சுடரை ரொம்ப புடிக்கும்.. சுடருக்கும் அவளோட அப்பா ராசாவை ரொம்ப புடிக்கும்.. ராணி அம்மாவுக்கும் சுடரை ரொம்ப புடிக்கும்..

இளவரசி சுடருக்கு ஆறு வயசுதான். ஆனாலும் அவ ரொம்ப யோசிப்பா. புத்திசாலித்தனமா நடந்துக்குவா.. நிறைய கத்துக்குவா.. நாட்டுல எந்த குறையும் இல்ல. மழை ரொம்ப நல்லா பெய்ஞ்சது.. மக்கள் எல்லாரும் சந்தோஷமா நிம்மதியா வாழ்ந்தாங்க..

*****

அப்பதான் ஒரு நாள் ஒரு பெரிய சக்கரவர்த்தி ராசா சுடரோட நாட்டு மேல படையெடுத்து வந்தாரு..

சக்கரவர்த்தி ராசான்னா ரொம்ப பெரிய ராசா..

சுடர் அவங்களோட நாட்டுல மொத்தமே அஞ்சாயிரம் படை வீரர்கள்தான்.. குதிரைப்படையில இருநூறு பேருதான் இருந்தாங்க. யானைப் படையில வெறும் அம்பது பேருதான்.. ரொம்ப சின்ன பட்டாளமா இருந்தாங்க.

ஆனா அந்த சக்கரவர்த்தி ராசாவோட படையிலயோ..

படை வீரர்கள் மட்டும் அம்பதாயிரம் பேரு.. குதிரைப் படைன்னு பாத்தா ஆயிரம் குதிரைப்படை வீரர்கள்.. யானைப்படையிலயும் ஆயிரம் பேரு.. இது தவிர வில்லாளர்கள் இருபதாயிரம் பேரு இருந்தாங்க..

சுடரோட அப்பா ராசா இருக்காருல்ல.. அவருக்கு சின்ன கோட்டைதான் இருந்துச்சு.. அங்க என்னடான்னா அந்த சக்கரவர்த்தி ராசாவோட படை சண்டைக்கு வந்து நின்னுட்டு இருக்கு.. காலையில முற்றுகை பண்ணுவோம்.. நாளைக்கு மாலைக்குள்ள கோட்டைய கைப்பற்றுவோம்.. அதுக்குள்ள சரணடைஞ்சிடுங்கன்னு சுடரோட அப்பா ராசாவுக்கு சக்கரவர்த்தி ராசா தகவல் அனுப்பி இருந்தாரு.

அரமணையே இடிஞ்சு போச்சு.. சக்கரவர்த்தி ராசாவோட படைக்கு முன்னாடி நாம ரொம்ப சின்ன படை.. தாக்கு பிடிக்க முடியாது. அநேகமா நாளைக்கு நம்ம நாடே காணாம போயிடும்னு எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க..

இருந்தாலும் சுடரோட அப்பா ராசாவும், ராசாவோட படை வீரர்களும் போருக்கு தயாரானாங்க.. கத்தி, வாள் எல்லாத்தையும் நல்லா தீட்டி தயாரா வச்சிக்கிட்டாங்க. குதிரை வீரர்கள் அவங்கவங்க குதிரைக்கு நல்லா சாப்பாடு போட்டு ஓடப் பழக்கி தயார் பண்ணாங்க. யானைப் படைக்கு ஓட பயிற்சி குடுத்தாங்க.

ஆனா ஒருத்தர் முகத்துலயும் அருளே இல்லை.. நாட்டு மக்கள் அம்புட்டு பேரும் துக்கத்தோட அமைதியா இருந்தாங்க.

*******

அப்பதான் அன்னைக்கு சாயந்திரம் சுடரோட அப்பா ராசா சுடரை கூப்புட்டாரு..

சுடர், “என்னப்பா..?” ன்னு கேட்டுக்கிட்டு அப்பாகிட்ட போனா..

அப்பா ராசா சுடர்கிட்ட பேசினாரு. “கண்ணு சுடர்.. நாளைக்கு விடியகாலைல சண்டை நடக்கப் போகுது.. அதுல நாங்க யாரும் உசுரோட இருக்க மாட்டோம்.. ஒருத்தரும் மிஞ்ச மாட்டோம்..” அப்புடின்னு சொன்னாரு.

சுடர்  பாப்பாவுக்கு கண்ணு கலங்கிருச்சு. அழுதா.

“அப்ப என்னைய விட்டு போயிருவியாப்பா..?” ன்னு கேட்டா.

“ஆமாடா பாப்பா.. வேற வழி இல்ல.. அந்த சக்கரவர்த்தி ராசா எங்கள சரணடைய சொல்லி இருக்காரு. அவங்க நாட்டுக்காரங்க நம்ம நாடு மாதிரி இல்ல. சரணடைஞ்சா மரியாதையா நடத்த மாட்டாங்க. சரணடைஞ்சாலும் எங்க எல்லாரையும் கொன்னுடுவாங்க..” ன்னு சொன்னாரு.

சுடருக்கு நம்பவே முடியல. “சரணடைஞ்சவங்கள ஏன்ப்பா கொல்லணும்.? சிறையில போட்டா பத்தாதா.?” அப்புடின்னு கேட்டா.

அப்பா ராசா சொன்னாரு “அதுதாண்டா அவங்க நாட்டோட வழக்கம். சண்டை போட்டாலும் கொன்னுடுவாங்க.. சரண் அடைஞ்சாலும் கொன்னுடுவாங்க.. அதனால.. நாங்க எல்லாரும் சண்டை போட்டு செத்துடலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்“‘ ன்னு சொன்னாரு.

சுடர் பாப்பாவுக்கு அழுகை அழுகையா வந்துச்சு. “அப்ப நீயும் செத்துருவியாப்பா..?” ன்னு கேட்டா.

“நா மட்டும் இல்லடா பாப்பா. உங்கம்மா.. உன்னோட சித்தி, சித்தப்பா.. பெரியம்மா பெரியப்பா எல்லாருந்தான் சாகப் போறோம்..” ன்னு சொன்னாரு அப்பா ராசா..

“அப்ப நானும் சண்டைக்கு உங்க கூட வறேன்ப்பா. அந்த சக்கரவர்த்தி ராசா கூட சண்டை போட்டு நானும் செத்துப் போறேன்..” ன்னு சுடர் பாப்பா சொன்னா.

அப்பா ராசா சொன்னாரு.. ”இல்ல பாப்பா.. நம்ம நாடு தோத்துப் போகலாம். இப்ப அழியலாம். ஆனா இதை பின்னாடி மீட்டு எடுக்குறதுக்கு ஒருத்தர் வேணும். அதனால.. நீ மட்டும் தப்பிச்சு போயிடு. பெரியவளா வளந்ததும்.. நிறைய படை திரட்டிட்டு போயி அந்த சக்கரவர்த்தி ராசாவ நீதான் ஜெயிக்கணும். நீதான் இந்த நாட்டை மறுபடி உருவாக்கணும்.. ” அப்புடின்னு சொன்னாரு..

சுடர் பாப்பாவுக்கு ரொம்ப துக்கமா இருந்துச்சு..

அப்பா ராசா சொன்னாரு. “இன்னைக்கு ராத்திரி மூன்றாம் சாமத்துல உன்னைய நா அனுப்பி வைக்கப் போறேன். மெய்க்காவலாளிகள் உன்னை பாதுகாப்பான எடத்துக்கு கூட்டிட்டு போவாங்க. அப்பா சொன்னதை மறந்துடாத.. நீதான் இந்த நாட்டை மீட்டு எடுக்கணும்..” அப்புடின்னு சொல்லி அவளை கட்டிப் புடிச்சு முத்தம் குடுத்தாரு. சுடர் பாப்பா அழுதா.

*****

முதலாம் சாமம் மணி அடிச்சது. நாடே அமைதியா இருந்துச்சு.. சுடர் பாப்பாவால  சும்மா இருக்க முடியல. அவ ஒரு முடிவு பண்ணா.. அங்க இருந்த எண்ணை அகல் விளக்கை கையில எடுத்துக்கிட்டா. அந்த அர்த்த ராத்திரில அரண்மனைய விட்டு வெளில புறப்பட்டா..

*****

எப்புடியோ காவலுக்கு இருந்த வீரங்களை எல்லாம் ஏமாத்திட்டு சுடர் பாப்பா கோட்டைக்கு வெளில வந்தா.

அங்க தூரத்துல சக்கரவர்த்தி ராசா கூடாரம் போட்டு தங்கி இருக்குறது தெரிஞ்சிச்சு.. ஏத்தி வச்சிருந்த ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் மினு மினுத்துக்கிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு..

சுடர் பாப்பா எண்ணை விளக்கை கையில எடுத்துக்கிட்டு அந்த கூடாரங்களை நோக்கி போனா.

*****

பக்கத்துல போகப் போக சுடர் பாப்பாவுக்கு ஆச்சரியமா இருந்துச்சு.. அங்க கடல் மாதிரி கூடாரங்கள் இருந்துச்சு.. எங்க பாத்தாலும் படை வீரர்கள்., குதிரைங்க.. யானைங்க.. சாப்பாட்டு வாசனை.. எரிகிற பந்தங்கள்ல இருந்து வர்ற கொழுப்பு வாசனை.. அப்புடின்னு எல்லாமே பிரம்மாண்டமா இருந்துச்சு. அம்புட்டு பேரும் ஒரே நேரத்துல இவங்க நாட்டுக்குள்ள வந்தாங்கன்னா அவங்க நிக்க கூட இடம் பத்தாது. அம்புட்டு பேரு அங்க இருந்தாங்க.

சுடர் பாப்பா பயப்படாம நடந்து போனா.

அங்க இருந்த ஒரு வீரன் சுடர் பாப்பாவ பாத்ததும் வேகமா வந்தான். ஆனா சின்ன புள்ளையா இருந்ததால அவளை அவனால அடிக்க முடியல..

“ஏய் பாப்பா.. யாரு நீ..? இது எங்களோட  பாசறை. இங்க யாரும் உள்ள வரக் கூடாது..” அப்புடின்னு சொன்னான்.

சுடர் பாப்பாவோ “அண்ணே.. நா இந்த நாட்டோட இளவரசி.. சக்கரவர்த்தி ராசாவை பாத்து பேச வந்திருக்கேன்..” அப்புடின்னு தைரியமா சொன்னா.

அந்த வீரனுக்கு ரொம்ப குழப்பமா போச்சு. சின்ன பாப்பாவா இருக்காளே. இவள உள்ள அனுப்பினா எந்த ஆபத்தும் இல்லை. ஆனா சக்கரவத்தி இதை ஏத்துக்குவாரா..? அவனுக்கு புரியல..

அவன் சுடர் பாப்பாகிட்ட சொன்னான். “பாப்பா. நீ இங்கயே இரு.. நா சக்கரவர்த்திகிட்ட கேட்டுட்டு வறேன்.. “ அப்புடின்னு சொன்னான்.

“சரி அண்ணா. நா இங்கயே இருக்கேன்..” அப்புடின்னு சுடர் பாப்பா சொன்னா.. அந்த வீரன் சக்கரவர்த்தியோட கூடாரத்தை நோக்கி ஓடினான்.

*****

கொஞ்சம் நேரம் போச்சு..

போன வீரன் திரும்பி வந்தான்.

“பாப்பா.. உன்னை சக்கரவர்த்தி கூப்புடுறாரு..” அப்புடின்னு சொன்னான். சுடர் பாப்பா அவன் கூட நடந்தா.

*****

சக்கரவர்த்தியோட கூடாரம். அவ்வளவு பிரம்மாண்டமா இருந்தது.  சொல்லப் போனா சுடர் பாப்பாவோட  அரண்மனை அளவுக்கு இருந்துச்சு.. அவளுக்கு ஆச்சரியம் தாங்க முடியல. சக்கரவர்த்தி  ராசாவோட கூடாரத்துக்கு போற வழிலயே  ரெண்டு பக்கமும் தீவட்டி எரிஞ்சிக்கிட்டு இருந்துச்சு.. நடக்குற வழியில வெளிச்சத்துக்கு குறைச்சலே இல்ல. ஒவ்வொரு தீவட்டிக்கும் பக்கத்துல ஒரு ஆள் நின்னுக்கிட்டு தீவட்டிக்கு அப்பப்ப எண்ணை ஊத்திக்கிட்டு இருந்தாங்க..

கூடாரத்தை நெருங்குறப்ப அங்க இருந்த நிறைய வீரர்கள் கையில ஈட்டியோட ஓடி முன்னாடி வந்து ஒரு சுவர் மாதிரி வரிசையா நின்னு மறிச்சு நின்னாங்க.

சுடர கூட்டிட்டு போன வீரன் ஒரு காலை மண்டி போட்டு, “சக்கரவர்த்தியின் ஆணை.. இளவரசியை உள்ள கூட்டிட்டு போகணும்” அப்புடின்னு தலை குனிஞ்சு சொன்னான்.

அந்த நிறைய வீரர்கள்ள ஒருத்தன் உள்ள ஓடுனான்.

கொஞ்ச நேரத்துல அவன் வெளில வந்தான். ஒரு  மாதிரி அவன் கையை அசைச்சான். டக்குன்னு சுவர் மாதிரி நின்ன எல்லா வீரர்களும் ஒதுங்கி வழிய விட்டாங்க..

சுடர் பாப்பாவ கூட்டிட்டு வந்த ஈட்டி வீரன் தலைய குனிஞ்சுக்கிட்டு பணிவா முன்னாடி நடந்தான். சுடர் பாப்பா தலைய குனியல. தைரியமா தலைய நிமிந்துக்கிட்டு கையில எண்ணை விளக்கை ஏந்திக்கிட்டு அவன் கூட நடந்தா..

அந்த கூடாரத்தை நெருங்குனதும் அந்த கூடாரம் முழுக்க மாட்டுத் தோல்ல செஞ்சிருந்தாங்கன்னு அவளுக்கு புரிஞ்சது. கூடாரத்தை நெருங்குறப்பவே பதப்படுத்தின மாட்டு தோலோட வாசனை வர ஆரம்பிச்சது. கூடாரத்தை நெருங்க நெருங்க தோல் வாடை நெடியா மாறிச்சு.. இவள் எல்லாத்தையும் ஆச்சரியமா பாத்துக்கிட்டே அந்த ஈட்டி வீரன் கூட போனா. அவனோ தலைய நிமிரவே இல்ல. தலைய குனிஞ்சுக்கிட்டே ரொம்ப பணிவா இவ முன்னாடி போயிக்கிட்டு இருந்தான்.

இவங்க கூடாரத்துக்குள்ள நுழைஞ்சதும் உள்ள கதகதப்பா இருந்தது டக்குன்னு தெரிஞ்சது. கூடாரம் முழுக்க தீப்பந்தங்கள் ஏத்தி வச்சிருந்தாங்க. எல்லா தீப்பந்தம் பக்கத்துலயும் எண்ணை ஊத்த ஆளு நின்னுக்கிடடு இருந்தாங்க., அவங்களும் தலை நிமிராம குனிஞ்சே நின்னுக்கிட்டு இருந்தாங்க.. அந்த தீப்பந்தத்தோட வெப்பம்தான் கூடாரத்தோட கதகதப்புக்கு காரணம்னு சுடர் பாப்பாவுக்கு  புரிஞ்சது.

****** 

இவங்க போயிக்கிட்டு இருக்குறப்பவே ஒரு பட்டுத் திரை இவங்க முன்னாடி  நின்னது. ஈட்டி  வீரன் ஒத்தைக் கால்ல மண்டி போட்டு, “சக்கரவர்த்தி ஆணைக்கிணங்க எதிரிநாட்டு இளவரசியை அழைத்து வந்திருக்கிறேன்..” அப்புடின்னு சொன்னான்.

அதை யாரு கேட்டாங்க. யாரு காதுல விழுந்துச்சுன்னே தெரியல. திரை விலகிச்சு.. தலை குனிஞ்சு மண்டி போட்டிருந்த ஈட்டி வீரன் திரும்பி சுடர் பாப்பாவை பாத்து உள்ள போ, என்பது மாதிரி தலையாட்டினான்.

கையில்  எண்ணை  அகலோட சுடர் பாப்பா தைரியமா தலை நிமிந்து உள்ள போனா..

உள்ள போனா ஆச்சரியமா இருந்துச்சு.. ஒரு கூடாரத்துக்கு உள்ள இவ்வளவு பெரிய கூடமான்னு நினைக்கிற அளவுக்கு பெரிய கூடமா இருந்துச்சு.. ரெண்டு பக்கமும் நரைச்ச தாடி வச்ச நிறைய தாத்தாங்க நின்னுக்கிடடு இருந்தாங்க. தூரத்துல ஒரு தங்க நாற்காலியில தாடி வச்ச ஒருத்தர் உக்காந்துக்கிட்டு இருந்தாரு.. சுடர் பாப்பா கையில எண்ணை அகலோட உள்ள வந்து நின்னா.

அந்த தங்க நாற்காலியில உக்காந்திருந்தவரு இவளை பாத்து, “குழந்தாய். நீ என் அருகில் வா..” ன்னு கூப்புட்டாரு.

சுடர் பாப்பா எதைப் பத்தியும் கவலைப்படாம அவரு முன்னாடி போயி நின்னா..

“நேரில் வர தைரியம் இல்லாமல் உன்னுடைய தகப்பன் உன்னை அனுப்பி இருக்கிறானா குழந்தாய்..?” ன்னு அவரு கேட்டாரு. அப்பதான் சுடருக்கு தோணுச்சு.. நிச்சயம் இவருதான் சக்கரவர்த்தி ராஜாவா இருக்கணும்னு..

சுடர் பாப்பா கொஞ்சம் கூட யோசிக்காம. “இல்ல ராசா. எங்கப்பா என்னை அனுப்பல. நாந்தான் எங்கப்பாவுக்கு தெரியாம இங்க வந்திருக்கேன்..” அப்புடின்னு சொன்னா..

சக்கரவர்த்தி ராசா திடுக்குன்னு அங்க நின்ன நரைச்ச தாடி தாத்தாங்களை எல்லாம் பாத்தாரு.

“நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய் குழந்தாய்..?” அப்புடின்னு சக்கரவர்த்தி ராசா கேட்டாரு.

சுடர் பாப்பா கொஞ்சம் கூட யோசிக்காம பேசுனா, “ராசா.. நீங்கதானே சக்கரவர்த்தி ராசா.?”

“ஆமாம் குழந்தாய்..”

“ராசா.. இப்ப எதுக்காக எங்க நாட்டை பிடிக்க படையெடுத்து வந்திருக்கீங்க..?“

“எம் நாட்டின் எல்லையை விரிவு படுத்த.. எம் நாட்டோடு உம் நாட்டை சேர்க்க..” என்று மீசையை வருடியபடி அந்த சக்கரவர்த்தி ராசா சொன்னாரு.

“ராசா.. எங்க நாட்டுல  ஒருத்தன் எதுக்கு திருடுவான்னு தெரியுமா.? அவனுக்கு பசிச்சது. ஆனா சாப்புட எதுவும் இல்ல. அப்ப திருடி சாப்புடலாம்னு திருடுவான்..”

“எல்லா நாட்டிலும் அதுதானே இயல்பு..?”

“எங்க நாட்டுல ஒருத்தன் மத்தவனோட நிலத்தை எதுக்காக புடிப்பான்.? அவனுக்கு பொழைக்க நிலம் இல்ல. அதனால மத்தவன் நிலத்தை அபகரிக்க நினைப்பான்”

“இதுவும் அனைத்து நிலங்களிலும் நடப்பதே..”

“இப்ப உங்களுக்கு சாப்புட சோறு இல்லையா.. இல்ல ஆளுறதுக்கு நாடு இல்லையா.? எதுக்காக ஒரு திருடன் மாதிரி எங்க நாட்டை திருட வந்திருக்கீங்க..?” அப்புடின்னு பாப்பா கேட்டா.

சக்கரவ‘ர்த்தி ராசா பதில் சொல்ல முடியாம திடுக்கிட்டுப் பாத்தாரு..

“காசு இல்லாதவன் எனக்கு காசு வேணும்னு திருடுவான். சோறு இல்லாதவன்  எனக்கு சோறு இல்லன்னு திருடுவான். நிலம் இல்லாதவன்தானே எனக்கு நிலம் இலலன்னு திருடுவான்.. அப்ப உங்களுக்கு நிலம் இல்லையா.? அதுக்காகதான் எங்கப்பாவ கொன்னுட்டு எங்க நிலத்தை திருட வந்திருக்கீங்களா..?” அப்புடின்னு சுடர் பாப்பா கேட்டதும் சக்கரவர்த்தி ராஜா அப்படியே உறைந்து போயி பாப்பாவ பாத்தாரு.

பாப்பாவோ, “எங்க நாட்டை நீங்க ஒரு சொடக்கு போடுற நேரத்துல திருடிற முடியும்னு அப்பா சொன்னாரு.. சண்டை போட்டு எங்கப்பா செத்துருவாரு.. அம்மா, பெரியம்மா, சித்தி எல்லாரும் சண்டை போட்டு செத்துருவாங்க. ஆனா நா சாக மாட்டேன் சக்கரவர்த்தி ராசா. சண்டையும் போட மாட்டேன்.. ஒரு நா எங்க நாட்டு மக்கள் அம்புட்டு பேருக்கும் அமைதியான வாழ்க்கைய தருவேன். அம்புட்டுதான் ராசா. நா வாறேன்.” அப்புடின்னு திரும்புனா.

சக்கரவர்த்தி ராசாவால பேச முடியல.

அந்த நீளமான கூடார கூடத்தோட வாசலை நோக்கி சுடர் பாப்பா நடந்தா. சக்கரவர்த்தி திடீர்னு., “குழந்தாய். திரும்பி போறப்ப தனியா போக  வேணாம். என்னோட வீரன் யாரையாவது துணைக்கு அனுப்புறேன்..” அப்புடின்னு சொன்னாரு.

பாப்பா சொன்னா, ‘சக்கரவர்த்தி ராசா. இது உங்க நாடு இல்ல.. எங்க அப்பாவோட நாடு.. இங்க பெண்கள், குழந்தைகள், வயதானோர் எல்லாரும் பாதுகாப்பா நடமாட முடியும். அதனால எனக்கு துணை தேவையில்ல. நா போறேன்..” அப்புடின்னு நடந்தா.

சக்கரவர்த்தி ராசா அவசரமா கேட்டாரு, “குழந்தாய்.. உன்  பேரென்ன.?”

“மாறன் பொதியை வெற்பன் சீராளனின் மகள் சுடர் விழி சக்கரவர்த்தி ராசா..” அப்புடின்னு சொல்லிட்டு தன் கையில் இருந்த அகல்  விளக்கோட நடந்து போனா..

****** 

மூன்றாம் சாமம்  வந்துச்சு.. மெய்க்காப்பாளர்கள் வந்து பாப்பாவ தேடுனாங்க. ஆனா பாப்பாவ காணம். அரண்மனையே அல்லோலகல்லோலப் பட்டுச்சு. ஆளாளுக்கு சுடர் பாப்பாவ தேடுனாங்க.

****** 

அதுக்குள்ள விடிஞ்சிச்சு..

உறங்கி இருக்கும் வீரர்களை எழுப்ப தாரைகள் முழங்கின.

வீரர்கள் எல்லாரும் எழுந்து மூஞ்சி கழுவி கஞ்சியை குடிச்சுட்டு போருக்கு தயாரானாங்க.

அந்த சின்ன கோட்டையோட மதிள்ல போர்வீரர்கள் ஏறி நின்னாங்க..

பளபளன்னு விடிய ஆரம்பிச்சது.

எல்லாரும் நம்ப முடியாம பாத்தாங்க..

அங்க பாசறை போட்டிருந்த சக்கரவர்த்தியோட ஒரு படை வீரனை கூட காணம்.. கூடாரங்கள் இருந்த தடயமே தெரியலை. யானையும் குதிரையும் போட்டிருந்த கழிவுகள்தான் கிடந்துச்சு.

எல்லாரும் அதிர்ச்சியோட பாத்துக்கிட்டு இருக்குறப்பவே ஒரு குதிரை வீரன் குதிரையில வெள்ளை கொடி ஏந்தி இந்த கோட்டை நோக்கி வந்தான்.

கோட்டைக் கதவம் திறந்துச்சு..

இதுக்குள்ள ராசாவுக்கு தகவல் போக எப்புடி இது நடந்துச்சுன்னு தன்னோட மந்திரி பிரதானிகளோட ராசா பேசிக்கிட்டு இருந்தாரு.

குதிரை வீரன் ராசா முன்னாடி வந்தான். இறங்கி ஒரு காலால் மண்டியிட்டு “சக்கரவர்த்தி ராசாவோட சார்பா நா வந்திருக்கேன். இந்த நாட்டோட இளவரசிகிட்ட நா பேசணும்..” அப்புடின்னான்.

ஒளிஞ்சிருந்த சுடர் பாப்பா கம்பீரமா வெளில வந்தா..

“நாந்தான் இளவரசி.. என்னண்ணா வேணும்…?” அப்புடின்னு கேட்டா.

அந்த வீரன் தன்னிடம் இருந்த தங்க வாளை எடுத்து இரு கைகளால் நீட்டுனான்..

“இது எங்க சக்கரவர்த்தியோட தங்க வாள். இதை உங்க கையில குடுத்துடடு நீங்க நேத்து கொண்டு வந்தீங்களே.. அந்த அகல் விளக்கு. அதை எங்க சக்கரவர்த்தி வாங்கிட்டு வரச் சொன்னாரு..” ன்னு சொன்னான்.

சுடர் பாப்பா வேகமா போயி அந்த அகல் விளக்கை கொண்டு வந்து நீட்டினா. மண்டி இட்டிருந்த அந்த வீரன் தலை வணங்கி இரு கைகளால் அந்த வாளை அவளிடம் தந்துவிட்டு, அந்த அகல் விளக்கை இரு கைகளால் ஏந்தி வாங்கினான்.

எந்திரிச்சு நின்னவன் “இனிமே உயிர் உள்ள வரைக்கும் எங்க சக்கரவர்த்தி இந்த நாட்டு மேல படையெடுத்து வர மாட்டேன்னு சொல்லி இருக்காரு இளவரசி.. வெளிச்சம் கொடுத்ததற்கு நன்றின்னும் சொல்லி இருக்காரு. மிக்க நன்றி இளவரசி..” அப்புடின்னு சொல்லிட்டு அந்த அகல் விளக்கை இரு கைகளில் ஏந்திக்கிட்டு அங்கருந்து வெளியேறினான். அவனோட இடுப்புல இருந்த தோல் பைக்குள்ள அகல் விளக்கை வச்சுக்கிட்டு குதிரையில் ஏறி போனான் அந்த வீரன்.

ஒண்ணும் புரியாம சுடரோட அப்பா ராசாவும் ராணியும் சுடர பாத்தாங்க. சுடர் சிரிச்சா..

******

நந்தன் ஸ்ரீதரன்

தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தவர். ’பொம்மலாட்டம்’ ’பிரியமானவள்’ ’தெய்வமகள்’ ’நாயகி’ ஆகிய நெடுந்தொடர்களுக்கு வசனம் எழுதியவர். முன்பாக ‘தாழி’, ’படுகளக் காதை’, ’நந்தலாலா’ ’ஆயிரம் நீர்க் கால்கள்’ புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *