“என் ராசாத்தி, என் கண்ணுல்லா, எங்கம்மைலா இந்தா தேங்காபன்னு சாப்பிடுளா…” என்றாள் சுப்பம்மா.

“எனக்கு வேற என்ன வாங்கிட்டு வந்தே ஆச்சி” என வாயில் பன்னை அதக்கிக்கொண்டே கேட்டாள் கண்மணி.

“சுப்மான்னே கூப்பிடு தங்கம்”

“ஏன் ஆச்சி… அப்டி சொல்லிட்டே?”

“நீ முறை சொல்லி கூப்பிட்டா அம்மாச்சி கோய்ச்சுக்க போறாக கண்ணு. சும்மா எல்லார் மாதிரியும் பேர் சொல்லியே கூப்பிடு.”

“நீ மட்டும் பெரியாச்சிய பெரிம்மா சொல்றே?”

“ஏ யப்பா என்னா வாயி”, என சிரித்துக்கொண்டே “சேரி போயி அம்மைட்ட காபி வாங்கியாறியா?” என்றாள்.

“நீ உள்ள வாயேன் நான் உனக்கு ஒன்னு காமிக்கனுமே!”

“வேண்டாங்கண்ணு. நான் இங்கனயே மரத்தடில இருக்கேன். இங்க தான் காத்தோட்டமா நல்லா இருக்கு”.

“எப்பா பாத்தாலும் இங்கதான் உட்கார்றே. உன் பேச்சி கா. நான் போறேன்”  என மூஞ்சைத் திருப்பியவள் மறுபடியும் சுப்பும்மாவை நோக்கி,

“நீ அம்மாச்சிக்கு பயந்து தான வரமாட்டேன் சொல்ற, எனக்குத் தெரியும்” என்றாள். குழந்தையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் சுப்பம்மா.

“தங்கம் நான் உனக்கு ஒன்னு கொண்டு வந்திருக்கேனே! என்ன சொல்லு பார்ப்போம்” என பேச்சை திசை திருப்ப முயன்றாள்.

“நீ முதல்ல சொல்லு ஏன் வரமாட்டிக்கே?”

“அதுவா கண்ணு… வயல்ல வேலை முடிச்சிட்டு வாரேனா, ஒரே வேர்வை… மேல எதாவது பூச்சிபட்ட எல்லாம் ஒட்டிக்கிட்டு இருக்கும், அதே அழுக்கோட எப்படி வர.” என்றாள்.

“அப்போ நீ வந்தவுடனே எனக்கு முத்தம் மட்டும் கொடுத்தே.?”

குழந்தையின் அடுத்த அஸ்திரத்தில் தூக்கிவாரி போட்டது சுப்பம்மாவிற்கு.

“அட என் சாமி அப்பிடி இல்லப்பு..” என்றவள் “இந்தா பாரு என்ன கொண்டு வந்திருக்கேன்னு” என்று தங்க நிறத்தில் மின்னும் பட்டை வளையலை முன்னுடை சேலையில் இருந்து வெளியே எடுத்தாள்.

“அய்ய்…வளையல். எனக்கா ஆச்சி? நல்லாருக்கே…”

“உனக்கே தான் கண்ணு. போட்டுக்க” என கையில் மாட்டி விட்டாள். இரு அம்மாட்ட காமிச்சுட்டு வாரேன்” என உள்ளே ஓடினாள் கண்மணி.

“அம்மா பாரேன் சுப்புமாச்சி எனக்கு வளையல் கொடுத்தாளே…”

“அட நல்லாருக்கே. ஆனா உனக்கு கைக்கு சேராதுமா. நீ விளையாட வைச்சிக்கோ சரியா? “

“இல்ல இல்ல கைல சேர்ந்துட்டு. எனக்கு புடிச்சிருக்கு” என்று விட்டு தன் ஓவிய புத்தகத்தை எடுக்க ஓடினாள் கண்மணி.

ஒரு லோட்டா நிறைத்து காபியோடு வந்தாள் கார்த்திகா.

“ஏன் சுப்புமா காச வீணாக்கற? முன்னாடி எனக்கு இப்படி குட்டி குட்டி யா ஏதாவது வாங்கி கொடுப்பே. இப்போ கண்மணிக்கா?..” என சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“என்ன காத்தி கண்ணு. நம்ம பாப்பாக்கு வாங்கிட்டு வாரது எல்லாம் பெரிய செலவா?” எனக் காப்பியைக் கையில் வாங்கிக் கொண்டாள் சுப்பம்மா.

”உளுந்த எடுத்து உள்ள வை கண்ணு. ஆச்சி தான் தேங்கா பன்னும் கொடுத்து விட்டாக”.

சுப்பம்மாவையே பார்த்துக் கொண்டு நின்ற கார்த்திகாவிற்கு உள்ளே அவள் அம்மா கூறியது நினைவில் ஆடியது. ‘அவளுக்கு ஒரே நேரத்துல எல்லாத்தையும் கட்டிக் கொடுக்காதே, அருமை தெரியாது’.

‘எல்லாம் இருப்பவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள் இல்லை. இருப்பதை கொடுக்க நினைப்பவர்களே பெரியவர்கள்’ என்று தோன்ற சுப்பம்மா அவள் கண்களுக்கு அம்மனைப் போல காட்சியளித்தாள்.

“இந்தா நீயும் சாப்பிடு” என ஒரு பன்னைக் கையில் கொடுத்தாள் கார்த்திகா.

ஓவியப்புத்தகம், சிறு பொம்மைகள் சகிதம் அங்கே வந்த கண்மணி கடைவிரித்து சுப்பம்மாவிற்கு விளக்கி சொல்லத் தொடங்கினாள்.

“ஏ அப்பாடி…யப்பா… என்னா வாய் மா நம்ம கண்மணி. உங்க ஆச்சிக்கு மேலா பண்ணையம் பண்ணுவா பாருங்க“, என திருஷ்டி கழித்தாள். சுப்பம்மாவின் வாஞ்சையை சிறுபுன்னகையோடு ஆமோதித்து உள்ளே சென்றாள் கார்த்திகா.

“மவராசி நல்ல மனுசி” என்றாள் சுப்பம்மா.

“அம்மா ஒன்னும் ரொம்ப நல்லவ இல்ல. ஆச்சி மாதிரி கொஞ்சம் தான் நல்லவா.”

“சீ அப்படி சொல்லக்கூடாது கண்ணு, உங்க ஆச்சி எம்புட்டு நல்லவுக தெரியுமா? ஒரு உதவின்னு போயி நின்னா காணும் அப்படித்தான் செய்வாவோ”.

“அப்போ ஏன் வீட்டு உள்ள கூப்பிடல.“

“அது எங்கயும் உள்ள வழக்கம் தானே தங்கம். எங்கள அப்படியே பழக்கிட்டாக. ஆனா என் மவன் அப்படி இல்ல. வம்படியா முன்வாசலுக்கு வருவான். சின்னப்பயன்னு அய்யாவும் ஒன்னும் சொல்ல மாட்டாக, இப்பல்லாம் வயக்காட்டு சோலிக்கே வரமாட்டான். அவனுக்கு படிக்க நெறைய இருக்கு“ என்று விட்டு மகனை நினைத்த பூரிப்பில் முகம் மலர வாய்விட்டு சிரித்தாள் சுப்பம்மா. பின் “எல்லாம் ஒரு நா மாறும் கண்ணு” என்றாள் பெருமூச்சுடன்.

“போ நான் வீடு கட்டி உனக்கு உள்ள கூப்டுதேன்” என்றாள் ஐந்து வயதே ஆன கண்மணி. குழந்தையின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போன சுப்பம்மா வாரி அணைத்து உச்சி முகர்ந்தாள்.

“சரிடா கண்ணு..நான் கிளம்புதென் எங்க வூட்டு அய்யா அங்க வயக்காட்ல காத்து கிடப்பாவோ” என்றாவாறு, “காத்திமா போய்ட்டாறேன்” என்று துண்டை தோளில் போட்டு கொண்டு டாடா காட்டிச் சென்றாள் சுப்பம்மா.

2.

ஒருமுறை  மூன்றாம் வகுப்பு விடுமுறையில் ஆச்சி வீட்டுக்கு கண்மணி போயிருந்தாள். ஒரு அதிகாலை பொழுதில் சுப்பம்மாவும் அவள் கணவனும் முடுக்கு வாசலில் காத்துக்கிடந்தார்கள். 

“இங்க வா லே” என்ற பெரிய தாத்தாவின் ஓங்கிய குரல் கேட்டு முன்கட்டிற்கு ஓடி வந்தாள் கண்மணி.

சுப்பம்மா கீழ் நடையில் அமர்ந்திருந்தாள். ஓடிச்சென்று அவளருகில் அமர்ந்து கைகளை பிடித்துக்கொண்டாள் கண்மணி.

“உன் மவன சொந்தமா வய வாங்கி உழச்சொல்லு. இனிமே இங்கிட்டு எந்த உதவிக்கும் வராண்டாம். எங்க அம்மைட்ட வந்து நிக்காதே” என இரைந்தார் பெரியதாத்தா.

அங்கு வந்த சின்னாச்சி “ஆய் காலங்காத்தால இப்படியா போய் சருவுவாவோ. எப்படி தான் வளத்து வச்சிருக்கா உங்க அம்மை… வா இங்கிட்டு” என சுப்பம்மாவின் முகம் வாட கண்மணியை உள்ளே இழுத்து சென்றாள். கண்மணிக்கு சின்னாச்சியை கீழே தள்ளி விட்டு விட்டு ஓட வேண்டும் போல இருந்தது. அவளை எப்பொழுதும் பிரியமாய் கொஞ்சும் சின்னாச்சி, கதைகளில் வரும் சூனியக்காரக் கிழவியை நினைவூட்டினாள் அந்தநொடியில். மனதிற்குள் திட்டியபடியே உள்ளே சென்றாள் கண்மணி.

பின் நைசாக நழுவி கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள். பெரிய தாத்தா பேசி முடிக்கவும் ஓடிப் போய் சுப்பம்மாவை கட்டிக்கொள்ள மனம் பரபரத்தது.

அங்கு வந்த இளங்கோ சின்ன தாத்தாவின் புத்திரன் கேட்டான், “ஏன் கண்மணி இங்க நிக்கறே”?

“பெரிய தாத்தா சத்தம் போட்டாங்க அதான் பாக்கேன்” என்றாள்.

“அவ்வோ நம்ம வயல்ல வேலைப் பார்க்க கூலியும் வாங்கி நிறைய நெல்லும் கேட்காவோ தெரியுமா? அதான் பெரியப்பா ஏசுறாங்க”.

“யார் கேட்டா? சுப்புமா ஆச்சியா? நான் வேனும்னா சொல்லட்டுமா அவாட்ட? நாஞ்சொன்னா கேட்பா” என்றாள் கண்மணி.

பெரிதாக சிரித்தான், அவள் வயதை ஒத்த இளங்கோ. இருவருக்கும் எட்டு வயதே ஆனாலும் இருவரும் வளர்ந்த விதத்தில் வேறுபாடு இருந்தது. 

“அட கிறுக்கு. சுப்புமா கேட்க மாட்டா. அவன் மவன் தான் கட்டாயத்துக்கு வேனுமின்னு சொல்லிருக்கான், இவ என்ன செய்வா?”.

“நீ ஏன் சுப்மானு கூப்டறே? ஆச்சினு கூப்பிடலாம்ல”.

“அவங்கள எல்லாம் பேர் சொல்லித்தான் கூப்பிடனும். சொந்தக்காரங்கள தான் முறை சொல்லி கூப்பிடனும்” என்று விளக்கம் கொடுத்தான் இளங்கோ.

சந்தையில் இருந்து அப்போது தான் நார்பெட்டி நிறைத்துக் காய்கறிகளோடு வந்தாள் பெரியாச்சி. சூழ்நிலையை உணர்ந்தவள்,

“என்னல காலங்காத்தால குரல ஒசத்திக்கிட்டு. அங்க வர கேட்கு”, என தன் மூத்த மகனை அடக்கினாள்.

பெட்டியை வாங்கி நடையில் வைத்த சுப்பம்மாவிடம் காப்பி குடிச்சியா நீ என்று விசாரித்தாள். அம்மையை முறைத்த மகனிடம், “நீ போ இதெல்லாம் நான் பாத்துகிடுதேன்” என்று அனுப்பினாள்.

“எப்படியோ போம்மா நாளைக்கு பிரச்சனைனு எங்கிட்ட கொண்டு வராதே. இவ்வோ கூட மாரடிக்கதுக்கு விதைக்காம போட்றலாம் பாத்துக்கோ”.

“வாய மூடுல. விதைக்காம கடைல வாங்கி பொங்கனுமோ? இல்லனா நீயும் உன் பொண்டாட்டியும் வாங்களேன் அறுவடைக்கு” என்றாள் பெரியாச்சி.

அம்மையிடம் பதில் சொல்ல முடியாமல் முணுமுணுத்தவாறே உள்ளே சென்றார் பெரிய தாத்தா.

தன் மருமகளிடம் காப்பி கொண்டு வரச் சொன்ன பெரியாச்சி சுப்பும்மாவிடம் கொஞ்சம் கோபமாகவும் கொஞ்சம் சமாதனமாகவும் பேசினாள். மெதுவாக எட்டிப்பார்த்த கண்மணியிடம் பெட்டியைக் காண்பித்து பலாப்பழம் இருக்கு பொறவாட்டி சாப்பிடு என்றாள்.

“ஆச்சி”

“என்னலா வேணும்?”

“நான் சுப்பும்மாவ ஆச்சி சொல்லட்டா?”

“ஏன் சொல்லப்டாது தாராளமா சொல்லேன். அவளும் உனக்கு ஆச்சி தானே” என்றாள் பெரியாச்சி.

“இல்ல இளங்கோ சொன்னான் சொந்தக்காரங்கள தான் அப்படி கூப்பிடனும், மத்தவங்கள எல்லாம் பேர் சொல்லி கூப்பிடனும்னு…”

“அவன் என்னத்த கண்டான். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. பிரியமா இருக்கவுக எல்லாருமே உறவுக்காரங்க தான் ளா”

“அப்ப சரி… பாத்தியா சுப்புமாச்சி ஆச்சியே சொல்லிட்டா”

சுப்பம்மாவிற்கு ஆனந்தமாய் இருந்தது. “சின்னக்குட்டி அப்படியே உங்கள மாதியே பெரிம்மா” என்றாள்.

ஆச்சிக்கு சந்தோஷமாய் இருந்திருக்க வேண்டும் ஒரு சீப்பு வாழைப்பழத்தை சுப்பும்மாவிடம் கொடுத்தவள் ’வயக்காட்டுக்கு போ நான் நீத்தண்ணி குடிச்சிட்டு வாரேன்’ என்றாள்.

கண்மணிக்கு சந்தோஷமாய் இருந்தது. உடனே இளங்கோவிடம் சென்று அவன் கூறியது தவறு என பறைசாற்ற மனம் தவிக்க உள்ளே ஓடினாள். கண்ணை மூடிக்கொண்டு அவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அங்கே வந்த பெரியாச்சி, இளங்கோவிடம்,

“கிட்டு தாத்தா இருக்கான் இல்ல அவன் யாருன்னு தெரியுமா” எனக் கேட்டாள்.

“அது உன் தம்பி எங்களுக்கு தாத்தா, அதான் தெரியுமே” என்றான் இளங்கோ.

“என் தம்பி தான் ஆனா உடப்பொறந்தானில்ல. திருச்செந்தூர் கோவில்ல தனியா அழுதுகிட்டு இருந்தான். எங்க அம்மை வா ராசான்னு கூட்டியாந்துட்டா. புள்ள போல வளத்து ஆளாக்குனா. அவனும் அக்கா அக்கானு எங்கிட்ட பிரியமா இருப்பான். அவன் நம்ம வீட்ல ஒருத்தன் தானே” என ஆச்சி கேள்வியாய் இளங்கோவைப் பார்க்க, இளங்கோ சொல்வதறியாமல், கண்மணியிடம்,

“நீ எப்படி வேணா கூப்பிடு” என்றுவிட்டு உள்ளே ஓடினான்.

3.

கண்மணி அவசரமாய் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அம்மா மதிய உணவு சம்படத்தைக் கையில் கொடுத்தவாறு கூறினாள். “இன்னைக்கும் நேரமில்லன்னு அப்படியே கொண்டு வராதே. அரிசி என்ன நம்ம வயல்லயா விளையுது. தினம் கழனில கொட்ட முடியாது” என்றாள்.

நிதானித்த கண்மணி, “ ஏன்மா ஆச்சி வீட்ல இருந்து அரிசி கொடுக்கறதில்ல?’ எனக் கேட்டாள்.

”வயல்ல யார் உழுதா… வேலைக்காரங்கள மேய்க்க பெரியாச்சி மாதிரி யாருக்கும் ஏழல”.

“ஏன் சுப்மா ஆச்சி வர மாட்டிக்கறா. ரொம்ப வருஷம் ஆச்சில்ல பார்த்து”.

“ஆமா அவ காலம் எல்லாம் போச்சு அவ மவன் வேலைக்கு போய்ட்டானாம். அவன் அப்போ இருந்தே ஒரே தகராறு தான் பண்ணுவான். விளங்காத பய” என்றாள் அம்மா.

“அப்போ வயல் சும்மா கெடக்காம்மா?”

“ஆமா தருசா போட்டுட்டாவோ. அதான் உரம் கூட எடுக்கல இங்க இருந்து”.

“அதுக்கு அவங்க கேட்டத கொடுத்து விதைச்சிருக்கலாம்ல”.

“அவன் வயக்காட்ட எழுதிக்கேட்கானாம் கொடுக்க சொல்வோமா?” என்றாள் அம்மா கோபமாக.

‘நிஜமாவே அப்படி கேட்டு இருப்பானா? சுப்பும்மா ஆச்சியின் மகன். அவள் எத்தனை நல்லவள். ஏன் அவள் மகன் அப்படி கேட்டான்’ என்று யோசித்து குழம்பினாள். ‘சரி அவன்தான் வேலைக்கு போய்விட்டான் என்றால் சுப்புமா ஆச்சியும், அவள் கணவனும் வேலைக்கு வருவார்கள் தானே. என்னாயிற்று அவர்களுக்கு. நம்மை பார்க்கக் கூட வரவில்லையே’ என பலவாறு யோசனையாக இருந்தது அன்று முழுவதும். ஆச்சியோ, அம்மாவோ ஏதேனும் பேசுவார்கள் என்று எண்ணி வராமல் இருக்கக்கூடும் எனத் தன்னை தானே சமதானம் செய்துக் கொண்டாள் கண்மணி.

அதன்பின் வெகுநாட்கள் கழித்து சுப்பும்மாவை தாத்தா மகன் திருமணத்தில் தான் பார்த்தாள் கண்மணி. ஓடிச்சென்று கையைப் பிடித்தவள் “சுப்புமாச்சி என்ன மறந்துட்டே இல்ல “என்றாள்.

“என் கட்டரசி எப்படி இருக்கே கண்ணு” என்று அதே வாஞ்சையோடு தொட்டு முத்தமிட்டாள் சுப்பம்மா.

“அய்யோ உனக்கு நான் ஒன்னுமே வாங்கி வரலையே. இரு பக்கத்துல போயி முட்டாய் வாங்கியாரேன்” என போக எத்தனித்தாள். கொஞ்சம் தளர்ந்திருந்தாலும் கல் வைத்த மூக்குத்தி, கம்மல் எல்லாம் போட்டு ஆள் ஜம்மென்று இருந்தாள்.

சிரித்தவாறு அவள் கைகளை பற்றி நிறுத்திய கண்மணி,

“என்ன ஆச்சி நீயி. நான் என்ன கொழந்தையா சாக்லேட் வாங்க போறே?” எனச் சிரித்தாள்.

“எனக்கு நீ எம்புட்டு வளந்தாலும் கொழந்த தானே கண்ணு” என்றாள் சுப்பம்மா.

“ஏன் சுப்புமாச்சி பெரியாச்சிக்கிட்ட சண்ட போட்டு போயிட்டியா, யாருமே வரல.” எனக்கேட்டாள்.

“ராசுக்கு பிடிக்கல கண்ணு. அவம் படிச்சவன் பாத்தியா. நானும் எங்கூட்டு அய்யாவும் வயல் வேலப் பாத்தே அவன படிக்கவைச்சிட்டோம். அவனுக்கு வெயில்ல கெடந்து நாங்க காய்தது இஷ்டப்படல. கூலி கூடக்கேட்டான் இல்லனு சொல்லல, இருந்தாலும் அவனுக்கு கம்பெனில வேல கெடைச்சிட்டு எல்லாம் அந்த பேராச்சி புண்ணியம். அவனும் சும்மா சொல்லக்கூடாது அப்புடி படிச்சான். எங்கவூட்டு அய்யா சொல்லுவாவோ படிச்சாதான் சாமி முன்னேற முடியும்னு. அத மட்டுந்தான் மனசுல வைச்சிக்கிட்டு படிச்சான் எம்புள்ள” என பூரித்துக் கூறினாள்.

“கேட்க சந்தோஷமா இருக்கு ஆச்சி. இப்பதான் நீயும் ஆள் நல்லா இருக்கே” என்றாள் கண்மணி.

“அவன் நல்லா சம்பாதிக்கான். எங்களையும் ஒரு கொற இல்லாம வைச்சிருக்கான். நாங்க எங்க பாட்ட பாத்துகிடுதோம் நீ உன் குடும்பத்த பாருப்பான்னு சொன்னோம். கேட்கலையே அவன். வெயில்ல கெடந்து எனக்காக தானே பாடுபட்டிய. இப்பயாது நிழல்ல இருந்து கஞ்சி குடிங்க எந்த வேலைக்கும் போப்டாதுனு ஸ்டிக்மானமா சொல்லிப்போட்டான்.”

“எனக்கும் அய்யாக்கும் வயசும் ஆயிட்டுல்லா முன்ன மாதி முடியலப்பு. அதான் வயக்காட்டுச் சோலிக்கு வாரதில்ல. பெரிம்மாவும் வயசாயி தளர்ந்திட்டாகளா வெதைக்காம போட்டுட்டாவோ போல. நம்ம வயல பாக்கையிலே சங்கடமாத்தான் இருக்கு” என்றாள்.

“உங்க மகன் மருமகா பேரப்புள்ளைக எல்லாம் வந்திருக்காங்களா ஆச்சி?, நான் பார்த்ததே இல்ல அவங்கள எல்லாம்.”

“அவன் வரலம்மா. இங்க மதிக்க மாட்டாவோன்னு வரலனு சொல்லிட்டான். எங்களயும் போவண்டான்னு தான் சொன்னான். மனசுக்கு கேட்கல. நம்ம தூக்கி வளத்த புள்ள கல்யாணம் மனசார பாத்து வாழ்த்தனும்லா” என்றாள்.

“சுப்பம்மாவை பார்க்க பார்க்க இனம் புரியாத ஒரு பாசம் பொங்கியது. நீ வா உள்ள எனக் கைபற்றி மண்டபத்துக்குள் அழைத்துச் சென்றாள் கண்மணி. 

“நான் வீடு கட்டினதும் என் வீட்டுக்கு வரனும் வருவே தானே சுப்புமாச்சி” எனச் சிறுபிள்ளை போல சிரித்துக் கொண்டே கேட்டாள் சுப்பம்மாவிடம்.

“அது சுப்பும்மா தானே” என்று சின்னாச்சி கண்ணைச் சுருக்கி பார்த்தவாறே கேட்டாள். அருகிலிருந்த மற்ற உறவுக்கார பெண், “நம்ம ராசு சார் அம்மால்லா வாராவோ” என்றாள்.

“ஆருட்டி அது… அவ மவனத்தானே சொல்லுத கவர்மெண்ட் வேலைக்கு போனவன் அவனத்தானே…“ என்ற ஆச்சியிடம் ,

“கலெக்டர் ஆபிஸ்ல வேலைப்பாக்காரு ஆச்சி, நாளைமற எதும் உதவின்னா அவுக கிட்ட தான் போவனும், சுப்பும்மாக்காவ வான்னு கேளுங்கோ” என்றாள்.

கண்மணியின் மனதுக்குள், சுப்பம்மா கணவர் தன் மகனிடம் கூறிய வார்த்தைகள் அசரீரி போல கேட்டது ‘படிச்சா மட்டும் தான் முன்னேற முடியும்’. ‘எல்லாம் ஒருநா மாறும் கண்ணு’ என்று முன்னொரு நாள் கூறிய  சுப்புமாச்சி நாற்காலியில் அமர்ந்து கல்யாண ஜோடிகளை வாழ்த்தக் காத்திருந்தாள்.

00

ராணி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பப்புவா நியுகினியாவில் தற்போது வசிப்பவர். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

தமிழ் இலக்கியம் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும்  உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள்,

நாவல் என்று பலவகை முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *