(1)
ஆய்வறிக்கை சமர்ப்பித்தலின்றி
நேற்றைய கனவின் நினைவை
சாம்பலென சுண்டி விடுகிறேன் …
தகிக்கும் நிஜங்களுடன
வரன்முறையற்ற கூடல் கொண்டு
தொலைந்து போக எத்தனிக்கிறேன்…
தொடக்கம் முடிவென
வரிசைகட்டி நிற்பவர்களிடமிருந்து
விலகி நடக்கிறேன்…
(2)
நீரின் ஆழத்தில்
அமிழ்த்தப்பட்ட நிலையிலிருந்தவாறே
ஆர்டின் குமிழிகளை உமிழ்கிறேன்..
வதனம் எங்கும் ஆனந்த சுரப்பிகளின்
உற்சவ ஆட்டம்.
தொடர் ஓட்டத்தில் சோர்வுற்று
தேங்கிய முகங்களை கடக்குந்தோறும்
வெண் சாம்பல் உதிர்வதை காண்கிறேன்.
நிர்மூல வானத்தில் கதகதக்கும்
பளிங்கு நிலவை நிர்கதியாய் விட்டுவிட்டு
வீடடைகிறேன்.
—
இயற்பெயர் – சுரேஷ்குமார்
தொழில் – கட்டுமானத்துறை பொறியாளர், டிஜிட்டல் லேண்ட் சர்வேயர்
இருப்பிடம் – உடுமலைபேட்டை
விஷ ஊற்று கவிதைத்தொகுதி 2016ம் ஆண்டு வெளிவந்துள்ளது.