இரு முனைகளன்றி
பொருள் வடிவம் கொள்ளாது.
கண்ணிகளாக பிணைந்தவாறேயுள்ளன..
எண்ண மொட்டுக்கள்..
,
எல்லோருமே எனக்கு
நிரந்தரமற்ற தொழில் முறை
உறவுகள் தான்..
சதா முகத்தில் கவிழும்
வண்ண கைக்குட்டைகளை
விலக்கி விட்டவாறே
நிஜத்தை ஊடுருவுகிறேன்..
,
இருமை
உன் முகத்தின் படிமம் களைந்து
உன்னுடன் உரையாட விரும்புகிறேன்..
நீயும் அவ்வாறே எனில்
என்னுடைய முகப் படிமத்தைக் களைந்து
உரையாடலை தொடரலாம்..
உன் கண்களின் வழியே
உன் இருள் பிரபஞ்சத்துள் நுழைகிறேன்.
நீ யும் அவ்வாறே எனில்
எனக்குள் நீ பயணிப்பதில்
எந்த தடையுமில்லை..
பரஸ்பரம் மொழி உதிர்ந்த போதும்
உருவமற்ற ஒரு மாய ப் பரப்பில்
நம்முடைய மிச்சங்களை
சேர்ந்தே தொலைப்போம்..
,
அ– பிரக்ஞை வழி
இரவின் மடலுக்குள்
முயங்கும் ஏகாந்தம்..
நித்திரை கலைந்து
சுயம் விழிக்கும் தருணம்
அகம் கவ்வி சிலிர்க்கும்..
விடை தேடா கனவொன்றின் நீட்சி..
,
நண்பகல் காட்சி ஒன்று..
துரித உணவு கடையொன்றின்
விளம்பர பலகை மீதமர்ந்த
காகம்
உதைத்து வான் நோக்கி
பறந்தது..
நொடியில்
எல்லையற்றதுக்குமான அதன்
தொடர்புடன்..
000

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

