(1)

ஆய்வறிக்கை சமர்ப்பித்தலின்றி

நேற்றைய கனவின் நினைவை

சாம்பலென சுண்டி விடுகிறேன் …

தகிக்கும் நிஜங்களுடன்

வரன்முறையற்ற கூடல் கொண்டு

தொலைந்து போக எத்தனிககிறேன்…

தொடக்கம் முடிவென

வரிசைகட்டி நிற்பவர்களிடமிருந்து

விலகி நடக்கிறேன் …

(2)

 நீரின் ஆழத்தில்

அமிழ்த்தப்பட்ட நிலையிலிருந்தவாறே ஆர்டின் குமிழிகளை உமிழ்கிறேன்..

வதனம் எங்கும் ஆனந்த சுரப்பிகளின்

உற்சவ ஆட்டம்.

தொடர் ஓட்டத்தில் சோர்வுற்று தேங்கிய முகங்களை கடக்குந்தோறும்

வெண் சாம்பல் உதிர்வதை காண்கிறேன்.

நிர்மூல வானத்தில் கதகதக்கும்

பளிங்கு நிலவை நிர்கதியாய் விட்டுவிட்டு

வீடடைகிறேன்.

(3)

தவறி விழுந்து

உடைந்து நொறுங்கியது

கண்ணாடி குடுவை..

அதில் நிரம்பியிருந்த

காற்று என்னவாயிற்று?

(4)

எந்த மொழியும் அமுதமில்லை

மொழியற்ற நிலையே அமுதம்.

(5)

முன் பின் ஏதுமின்றி

விளிம்பில் பயணம்,…

பனிச்சறுக்களாய்…

புதை மணல் நடையாய்…

கால நாய் கவ்விச் செல்லும் திசையெங்கும்

ஓயாத குருதி ஆட்டம்,

(6)

அனைத்துமான களைதலுக்கு அப்பால்

எவற்றினின்றும் நிறுவ முடியாத நிர்வாணம்

ஓர் ஒளிரும் சுடர்.

(7)

 சிலந்தி வலைப்பின்னலில்

மாட்டிக்கொண்ட கரப்பான் ஒன்று…

சில கண நேர தவிப்புக்குப்பின்

தூசு இலை நாரில் கழுத்திறுகி

இறந்தது…

தற்கொலையாக கூட இருக்கலாம்..

(8)

 ஒரு இராவண எழுச்சி போல்

ஒரு கணம்

இப்போது காட்சிப்படும் அகிலம் முழுவதையும்

என் ஆயிரம் கரங்களில் பெயர்த்தெடுத்து

சிவானந்த நடனத்தின் ஒற்றை சுழற்சியாக சுழன்று

விடுதலையின் பேராற்றல் கொண்டவனாகிறேன்.

`(9)

குற்றத்தின் வாசல்

திறந்தே கிடக்கிறது..

தண்டனையின் பார்வையோ எனில்

இமைச்சிப்பிககுள் ஒளிந்திருக்கிறது..

காலம் ஆற்றும் புறப்புண்

காலாதீதம் அகப்புண்ணை.

(10)

உனக்கான சுதந்திரம்

உன்னுள்ளிருந்து நான்

விலகுவதில் தான் உள்ளதென்றால்

என்னுள்ளிருந்தும் நான்

உன்னை விலக்கவும்

சித்தமாகயுள்ளேன்.

ஆனால்

வானுயர்ந்த பறவை

கீழ் நோக்கி சரிகையில்

இப்பூமிப்பந்து முழுவதும்

என் அன்பின் வலை

விரிந்தேயிருக்கும்.

(11)

மூடப்பட்ட கழிவறை இருளில்

பழுப்பு நிற செராமிக் தரையில்

கூடிக்கிடக்கின்றன

இரண்டு கம்பளிப்பூச்சிகள்.

(12)

காலச்சரம்.

முடிவற்று பெருகும்

காலத் துணுக்குகள்—-

மன நூல் கோர்த்து

கட்டித் தொடரும் வாழ்வுத் தாரை—-

விளிம்பில்லா எதிர் முனைகள்

இணைந்து

தன் கழுத்தில் மாலையென விழும் வரை.

(13)

நாள்..

எதற்கு இன்னொரு நாள்?..

என்று கேட்டேன்..

எதற்க்கும் இருக்கட்டும் என்று

சொல்லி  மறைந்து விட்டார

தாராளப்பிரபு.

முடை நாற்றம் வீசும்

என்னுடைய கிடங்கில்

இன்னொரு நாளின் மூட்டையும்

சேர்ந்து கொண்டது

(14)

விடியலின் இருள் முகம்

பச்சையத்தின் இடைவெளிகளில்

அசையும் வெளிச்சத்துண்டுகள்.

மேகத்திரை மறைக்கும்

ஓர் வெப்ப சிற்பம்.

உயிர்த்தெழுதலின் சாபம் கலைய

உருகி ஓடும் ஆறுகள்.

நெஞ்சுதைத்து கிளம்பிய பறவையை

வான வீதியெங்கும் தேடி அலைகிறேன்.

இருப்பிடத்தினுள் நுழைந்த சூறைக்காற்றை

உள் மாடங்களில் பத்திரப்படுத்தி

அகல் விளக்கை ஏநதிக்கொள்கிறேன்.

(15)

எல்லோரும் இறந்து விடுவார்கள்

நான் இறக்க மாட்டேன்..

000

சுரேசுகுமாரன்

இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *