அனைத்தின் பெயர்களையும்
களைந்து எறிகிறேன்.
இசைக்குறிப்புகளிலிருந்து சப்தங்களை மட்டும்
தனியாக பிரிக்கிறேன்.
ஆதவனின் மஞ்சள் கதிர்கள்
நிர்வாண உடல் முழுதும் படர்கிறது.
அலாதி காற்றில் துள்ளுவதின்
பெயரென்ன?
,
அச்சு மாறாமல் பூமி சுற்றும் வரை தான்
நம் ஆட்டம் எல்லாம்.
,
டேனிஷ் பேட்டையின்
பழைய பாலத்திற்கு அடியில்
குட்டிகளுடன் பழுப்பு நிற நாயொன்று
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது.
பயணத்தின் நொடிப்பொழுதில்
கடந்து சென்ற காட்சியென்றாலும்
கவிதைக்குள் வந்தமர்ந்து கொண்டது.
,
ஒரு சில கவிதைகள் ஜனிக்க
நூறு கிலோமீட்டர் தூரத்தையும்
தாண்டிய பயணம் தேவைப்படும்
,
ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை
ஒழுங்கின்மை மாறாமல் ஒதுக்கி வைத்தாலே போதும்.
,
காரணங்களின் மொழி அருவருப்பானது
இலக்கற்ற இலக்கு நோக்கி ஏற்கனவே
அம்பு ஏவப்பட்டுவிட்டது.
,
உருள் பந்து
சௌகரியங்களின் வழிகாட்டுதலில் நகர்கிறது..
புற மற்றும் அக சௌகரியங்களின்
வகைப்பாடுகளுக்கு இணங்க
,
இனி எத்தனை கால
நித்திரைகள் மிச்சமிருக்கின்றன.
,
வன்மத்துடன் துரத்தும் காற்று
மோதிச்சரிந்த மலையோவெனில்
உயர்ந்து நிற்கும் குப்பை மேடு.
00

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.