பொழுது புலர்கிறது
நான் விழிக்குமுன்பே அனைத்தும் விழித்திருந்தன.
மேலும் அவை அனைத்தும்
என்னை உற்று நோக்கியபடியே
என்னுடைய விழிப்புக்காக காத்திருந்தததுபோலவும் இருந்தன..
வளர்ப்பு நாயின் உறுமலில்
தொடங்கிற்று என்னுடைய உரையாடல்.
பாத்திரங்களில் குழாய் தண்ணீர் விழும் சப்தம்
கூண்டு பறவைகளின் கீச்சொலிகள்,
தொலைகாட்சி பெட்டியிலிருந்து செய்திகள் என
என்னைச் சுற்றி வழக்கமான ஒரு இயக்கம்
இயங்கத் தொடங்கியது.
இதோ நான் எழ முயல்கிரேன்..
காப்காவின் கிரிகர் சாம்சாவைப் போல
வேறு உருமாற்றம் ஒன்றும்
எனக்கு நிகழ்ந்திருக்கவில்லை.
எளிதாக போர்வையை விலக்கி
உள்ளங்கைகளை ஒன்றிணைத்து
முகத்தை துடைத்தவாறு
கண்களை அகல விரிக்கிறேன்.
வாழ்க்கை
அவ்வளவு ஒன்றும் கடினமானதில்லை
யாரும் உள்ளே நுழையாத வரை.
000
துண்டாகிப்போன
இதயத்திலிருந்து
துண்டு துண்டாகத்தானே
கவிதை வரும்.
,
இந்த பெட்டியில் என்னதான்
இருக்கிறது?
நாளும் கனம்
கூடிக்கொண்டே போவதின்
மர்மம் தான் என்ன?
,
. வெளியில் எதிலும்
மோதாமல்
உள்ளே பயணிக்க கற்றுக்
கொண்டாலே போதும்.
,
தகர்க்கப்படும் நுட்ப வினைகள்
உருவாக்கிய சித்திரங்கள்.
ஆவியாகும் காலத்தின்
சுடலை மணம்..

இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.