போத நிலை
ஒளி உமிழ் வெளிக்குள்
இருள் முகம் தரிக்கிறேன்..
உடல் கூட்டிற்குள்
துடிதுடிக்கும் உயிர் பறவை..
மூச்சுகாற்றின் வழி
வெளியேற துடிக்கும்..
பறவைக்கு கூண்டு
மனிதனுக்கு வானம்..
எல்லையற்றது ஏதுமில்லை.
காலம் சுருண்டு
கண்களில் தேங்கி நிற்கிறது..
உள் வெளி பேதமற்ற
போத நிலை..
பசி
எவ்வளவு அழகானது..
அர்த்தச் செறிவு மிக்கது..
வாழ்வின் தேடலின் நிமித்தம்.
நம் கட்டமைப்புகளின் மூலம்
காலத்தை சிருஷ்டிக்கிறது.
தேடல்
எல்லோருடைய கண்களுக்குள்ளும்
மீன்கள் நீந்தியவாறுதான் உள்ளன..
கடலுக்குள் ஆகாயத்தை தேடியபடி..
காலாதீதம்
வெட்டப்பட்ட மரத்தின்
பச்சை வாசம் வீடுமுழுவதும்
வியாபித்திருந்தது.
இடத் தேவைகளின் நிமித்தம்
அது காவு கொடுக்கபட்டது
அதன் அழுகுரலோ
மூச்சுத்திணறலோ நம்மால் உணர முடியாவிட்டாலும்
கடைசிமூச்சின் நறுமணத்தை நமக்கு
அளித்துவிட்டுத்தான் விடை பெற்றது.
பிணத்தின் முடை நாற்றமல்ல அது
காலாதீதத்தின் கொடை.

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

