நூலிழையும் தான்..
நூறு மைலும் தான்..
நிகழ்வுகளின்
இடைப்பட்ட தூரத்தின் கணித அளவுகள் மறைந்து
வேறு பரிமாணம் கொள்கிறது காலம்.
,
கசாப்புக்கடை சமூகத்தில்
பாலகனின் நெஞ்சம் கீறி
விதைக்கப்படும்
நல் ஒழுக்க
கட்டுப்பாட்டு விதைகள்.
,
பாதங்களில் நெருப்பு
பற்றிக்கொள்ள
மொத்த உடலும் மேலெழும்பிச்
செல்ல ஆயத்தமாகிறது.
,
இந்த புதிர் பயணத்தில்
முடிவைத் தேடுவதே அபத்தம்..
,
தடாகத்தில் மிதக்கும் உதடுகள்
பூ மொட்டுக்களை உமிழ்ந்தவாறு
நித்தம் கமழும் மணத்துடன்..
தேங்கிய குட்டை நீரில்
வெளி தள்ளிய நாவின் பிம்பம்
தீரா தாகத்துடன்
பிறிதொன்றின் வடிவம்..
,
எல்லா உணவும்
மலமாகத்தான் மாறும்..
எல்லா உடலும்
பிணமாகத்தான் மாறும்..
,
வாழ்த்துக்களில் மிதக்கும்
உள்ளீடற்ற மனங்கள்.
காலை எழுந்தவுடன் கவிதை
பின்பு தான் எல்லாம்…
,
எனக்கு நான் தான் பிரம்மாண்டம்.
எண்ணற்ற துகள்களின் சுழற்சி
எல்லையற்ற உள் வெளியில்..
மூடிய இமைகளுக்குள்
விரியும் அக உலகம்..
,
கவிதையாகவே சிந்திப்பதாக
சொன்ன கவிஞன்
உணர்வின் கூர்மையில்
தன்னையே கிழித்துக் கொண்டு
மாண்டு போனான்.
000

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

