கடிவாள நார்கள் இற்று வீழும் …

தொலைதூர குழம்படி ஓசை

இடிமுழக்கமென கேட்கும்..

புவி மூடிய இருள் படுகை

மீதொரு ஒளிகீற்று..

0

சிலர் புதைக்கப்பட்டனர்

சிலர் எரிக்கப்பட்டனர்

சிலர் மாயமாகிப்போயினர்

எஞ்சிய சிலரோ

காத்திருக்கின்றனர்..

0

ஒரு துளி விஷம் போதும்தான்..

பலவீனமான மனித உடலுக்கு..

எத்தனை வகை உணவுகள்..

எத்தனை மனிதர்களின் கைவண்ணம்..

ஒன்றில் கூட மறதியின் அலட்சியம் இல்லை..

இதுவே சமூகம்..

இதுவே அறம்..

0

மரணம் ஒரு விளையாட்டு

அவ்வளவுதான்..

நீண்ட ஆயுளும் அற்ப ஆயுளும்

புதிர் கணக்கின் விகிதாச்சார

வேறுபாடுகள் தாம்..

0

புதைக்கப்பட்டவர்களின் நிழல்

இன்னும் அலைந்தவாறுதான் இருக்கின்றன..

எரிக்கப்பட்டவர்களின் சாம்பல்

காற்றில் மிதந்தவாறுதான் உள்ளன..

மாயமானவர்களின் அமைதி

பின்புலத்தில் நிரந்தர ஓசையென

எப்போதும் ஒலித்த வண்ணம்..

0

முறிபடும் சடவுகளிலிருந்து

எழுச்சியுறுகிறது உடல்.

இள வெய்யில் நாவு தடவ

மஞ்சள் துகள்கள் மின்னும்..

வானம் திறக்கப்பட்டு

வெளியில் இன்னுமொரு

மூடப்பட்ட வானம்..

0

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *