வெளியே குளிரக் குளிர மழை கொட்டிக்கொண்டிருந்தது. நேரே தலையில் இறங்கியது போல இடிச்சத்தம். மழையும் இடியும் காற்றும் ஆனந்தக் கூத்தாடி நடம் புரிந்து கொண்டிருந்தன. திடீரென சற்று முன்னரே பெரும்பெரும் துளியாக விழ ஆரம்பித்து ‘’சோ;;வென ஓர் அருவி போல வானத்திலிருந்து வழிய ஆரம்பித்திருந்தது மழைநீர். பூமியும் ஆசை ஆசையாக அள்ளிக் குடிக்க ஆரம்பித்தது.

சாரல் படாதவரை வெளியில் நின்று மழையை ரசித்துக்கொண்டிருந்தான் மோகன். எதிர் ஃபிளாட்டில் நின்றிருந்த மூன்று பெண்களும் கைகளை மார்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டு ஏதேதோ சொல்லி சிரித்துக் கொண்டும், உடலை முறுக்கிக் கண்களை மூடி சிலிர்த்துக்கொண்டும் இருந்தார்கள். அது அவனுக்கு கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. செல்வியை ஊருக்கு அனுப்பி இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அவளிருக்கும்போது தோன்றாத எழுச்சி இப்போது எங்கிருந்து வருகிறது. ஒருவேளை மழை பொழிவதால் கிளம்பும் உணர்வுகளா..புரியவில்லை..இப்போது பக்கத்தில் அவளிருந்தால் இதமாகத்தான் இருக்கும்.’’போய்த் தொலையட்டும்’’ என்றுதானே அனுப்பி வைத்தான். இப்போது இப்படிதோன்றுகிறதே .

‘பட்பட்’ டென்று ஜன்னலைச் சாத்திவிட்டு உள்ளே போய்விட்டார்கள் அந்தப் பெண்கள். வெளியில் ஒரு காக்கைக் குருவியைக் கூடப் பார்க்க முடியவில்லை.. அவனும் வீட்டிற்குள் தன்னை இழுத்துக் கொண்டான். டி.வி.யில் கேபிள் போயிருந்தது. தண்ணீர் ஜக்கில் நீர் சரித்துக் குடித்தான்.

காலையில் சுருட்டாமல் விட்டிருந்த படுக்கையில் விழுந்தான். பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து கதையொன்றை வாசிக்க ஆரம்பித்தான். கதை புரியவேயில்லை. தூக்கம் சுழன்றடித்தது. வாசித்த வரிகளையே மீண்டும் மீண்டும் வாசித்தான். ஒரு வழியாக கதை முடிந்தது. புத்தகத்தைக் கீழே போட்டுவிட்டு கண்களை மூடிக் கொண்டான். சிறிது நேரத்த்தில் தூங்க்கிவிடலாம் என்று நினைத்தவனுக்குப் பலத்த ஏமாற்றம். வானத்தில் உருளும் இடிகள் செல்வியின் நினைவை மீட்டெடுத்துத் தந்தன. இடியும் மழையுமான இந்த நாளில் அவளும் குழந்தையும் என்ன செய்து கொண்டிருப்பார்கள். அவனைப் போலவே அவளும் பிரிவின் துயரில் வாடிக் கொண்டிருப்பாளா. சொல்ல முடியாது. அவனைப் பிரிந்து இருப்பதில் அவளுக்கும் ஒரு நிம்மதி கிடைத்திருக்கக் கூடும். தூக்கம் தொலைந்து ஒரு வழியாகப் படுக்கையை உதறிவிட்டு எழுந்தான்.

செல்வி அரைத்து வைத்துவிட்டுப்போன மாவு ஃப்ரிட்ஜில் இருந்தது. காலையில் அதில் தோசை வார்த்துக் கொண்டான். மீதமிருந்தது மதிய உணவாக முடிந்தது. தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது  அவனுக்கு. குழாயைத் திறந்தால் ஜிலீரென வழிகிறது தண்ணீர். டேங்கிற்குள் மழை இறங்கியிருக்கும்போல. தொண்டைக்குள் குளிர்வாக இறங்கியது நீர். முட்டைகள் இரண்டு மீதமிருந்தன. கட்டாயம் அவித்துச் சாப்பிட வேண்டுமென போகும்போது அவள் அவனிடம் குசுகுசுத்துவிட்டுப் போனாள். பச்சைக் கேரட் ஒன்றை எடுத்து நறுக் நறுக் எனக் கடித்துக் கொண்டே ஜன்னலைத் திறந்தான்.

பார்வை எதிர் ஃபிளாட்டில் பதிந்தது. அந்தப் பெண்களில் யாரையும் அங்கே காணோம். தத்தம் கணவனருகில் கதக்தப்பாய் படுத்துக் கிடக்கக்கூடும் என்று கற்பனை செய்து கொண்டான். செல்வியும் கூட அவனின் நெருக்கத்தை எப்போதும் விரும்பினாள். அதுதான் அவனுக்குத் தாங்க முடியாத இம்சையாக மாறியது. கல்யாணமாண புதிதில் நாளெல்லாம் கட்டிக்கொண்டுக் கிடந்தவன்தான். பூவுக்குள் மூழ்கிய வண்டைப்போல அது அவனுக்குப் பெரும் சுகத்தையும் தரத்தான் செய்தது. இப்போது அதே நெருக்கம் கசக்கிறது. அவளது வியர்வை படிந்த முகமும் கசங்கிய உடலும் அலுப்பூட்டுகிறது. வயதான அம்மா, ஒரு வயது நெருங்கும் குழந்தை இவர்களுக்குப் பணிவிடை செய்வதில் கிடைக்கும் இன்பம் அவளைத் தழுவுவதில் அவனுக்குக் கிடைப்பதில்லை. அவளிடம் இதையெல்லாம் சொல்ல முடியவில்லை அவனுக்கு.

அவனுக்கு அலுத்துவிட்டது என்று அவள் நினைக்க ஆரம்ப்பித்துவிட்டாள். இல்லையென்றால் அப்படியொரு கேள்வியை அவனிடம் கேட்டிருப்பாளா. சமீப நாட்களாகவே அவன் விருப்பத்துடன் அணுகுவதேயில்லை என்று குறை கூறினாள் அவள். அவன் பதிலேதும் பேசாமல் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தான். அவள் கேட்கும் பெரும்பாலான கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்ல முடிவதில்லை. என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் போதே அடுத்தக் கேள்வியை எழுப்பிவிடுவாள். ‘’ஆமாம்’’, ‘’இல்லை’’ எனும்படியாக பதில் சொல்வது அவனுக்குச் சுலபமாக இருக்கிறது. ஆனால் அது அவளுக்குப் பிடிப்பதில்லை. அவள் விரும்பியவண்ணம் அவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அதனால் பெரும்பாலானக் கேள்விகளுக்கு அவன்  மௌனமாகவே இருந்துவிடுவான்.

அவனுடைய உடல் களைப்பு, நேரமின்மை பற்றியெல்லாம் அவள் யோசிப்பதேயில்லை. அவள் விரும்பும்போது அவனும் விரும்ப வேண்டும். ஒரு புத்தகம் படிப்பது, காலார நடந்துபோய் மரம், பறவைகள் பார்த்து வருவது. இதிலெல்லாம் அவளுக்குச் சிறிதும் நாட்டமில்லை. வீட்டின் நாங்கு சுவர்களுக்குள் சதா சர்வ காலமும் அவள் எதிரில் உட்கார்ந்துகொண்டு அவளோடு மல்லுக்கட்டிப் போராடுவதில் அவன் தளர்ந்து போய்விட்டான். அதனால் தாடியெல்லாம் வைக்க ஆரம்பித்தான். உடல் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போனது. சதா ஒரு பயப்பூச்சி அவன் மனதை அரித்தபடியே இருந்தது. அப்பாவுக்கு வந்திருந்த சர்க்கரை வியாதி தனக்கும் வந்துவிட்டதோ என்று கலவரமடையவும் செய்தான்.

வாஷ்பேஷனில் முகம் கழுவிக்கொண்டு சுவரில் பொருத்தியிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். அவனுக்கே அடையாளம் தெரியவில்லை. கன்னம் ஒட்டிப்போய் கண்கள் உலர்ந்து கிடக்கிறது. மாதக்கணக்கில் தூங்காதவன் போலவும் சோற்றுக்கு வழியில்லாமல் அல்லாடுகிறவன் போலவும் தோற்றம் இருந்தது. ஒரு எயிட்ஸ் நோயாளியைப் போல தன்னுடல் ஆகிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் அவனைப் பிடித்து உலுக்கியது.

முயங்கிவிட்டு மடங்கிச் சரியும் ஒவ்வொரு முறையும் அவனிடம் அவள் கிசுகிசுப்பாய் கேட்பதெல்லாம் ‘’அரைமணி நேரம் கழிச்சி இன்னொருமுறை வச்சுக்கலாமா..’ என்பதுதான். அதைக் கேட்கும்போது அவனுக்குச் செத்துவிடலாமா எனத் தோன்றும். ‘’ம்’’ என்று கண்களை மூடிக் கொள்வான். வெட்கமாக இருக்கும்.

‘’காப்பர்டீ’’ பொருத்திக்கொள்ள வேண்டுமென்று கூறி டாக்டரிடம் அழைத்துப் போகச் சொன்னாள் செல்வி. போய் வந்துவிட்டு வயிறு வலிக்கிறது என்று விழுந்து புரண்டு அழுதாள். தினம் ஒருவலி அவளுக்கு வந்துவிடும். இடுப்புவலி,கால்வலி,அடிவயிற்றில் வலி, தலை உள்ளே வலி.. இப்படி ஏதாவது ஒன்று அவளுக்கு வந்துவிடும். அவளோடு கலந்து எழுந்த பிறகு கூடும்போதிருந்த சந்தோஷம் முற்றிலும் தொலைந்து போய்விடும். தூங்கிக்கொண்டே இருப்பாள். எழுப்பினால் அவனோடு சண்டை போடுவாள். இன்னொருமுறை கேட்டாளே..கொடுக்காததால்தான் கடுப்படிக்கிறாளோ எனத் தோன்றும் அவனுக்கு. அவனும் அசந்து தூங்கிப் போய்விடுவான். ஒருவிதமான மன உளைச்சலோடு அமைதியற்று இருக்கும்போது சந்தோஷிக்க முடியுமா.. அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை எதையும். அவனும் விளக்கிப் பார்த்து வெறுத்துவிட்டான்.

‘’அடிக்கடி வைத்துக்கொள்வதைவிட வாரத்துக்கு ஒருமுறை வைத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே..’’என அவன் ஒருமுறை அபிப்ராயம் சொன்னபோது அவள் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள். எல்லோரும் தன்னை மெலிந்துவிட்டதாகச் சொல்வதால் உடலை நலமாகவும் பலமாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் ஆசைப்பட்டே அவன் அப்படிச் சொன்னான், அதற்கு அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது அவனுக்கு எரிச்சலூட்டியது. ‘’அப்போ நான் என்ன மோசமானவளா.. உங்களை வற்புறுத்திக் கேட்கிறேனா..’’ என்றெல்லாம் ஒப்பரி வைக்க ஆரம்பித்துவிட்டாள்.

மழை இன்னும் தூறிக்கொண்டே இருந்தது. சட்டையை மாட்டிக்கொண்டு அவன் கிளம்பினான். வானம் சாம்பல் நிறத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது.

அன்று நைட் ஷிப்ட் முடிந்து அயர்ச்சியோடு தூங்கிக்கொண்டிருந்தான் அவன். குழந்தை தூங்கியப் பிறகுதான் அவனால் தூங்க முடியும். அப்போதுதான் கண் மூடியிருப்பான். அவள் வந்து பக்கத்தில் படுத்துக் கொண்டாள். அவன்மேல் காலைத்தூக்கிப் போடுவதும் அவனைக் கட்டிப் பிடிப்பதும், முத்தம் தருவதுமாக இருந்தாள். அவன் இறுகிய பாறைபோலக் கிடந்தான். கடைசியில் வெறுப்பாக விழித்து அவளை வெறித்துப் பார்த்தான். ‘’கண்ணா ..நீ ரொம்ப சமர்த்துடா..’ என்றபடி அறைக்கதவை சாத்திவிட்டுப் போய்விட்டாள் அவள்.

அவமானமாக இருந்தது அவனுக்கு. அதையொட்டி எழுந்த உரையாடல்களில் அவள் அவனை நிறையக் காயப்படுத்திவிட்டாள். அவள் அருகிலிருந்தால் தான் விரைவில் செத்துப்போய்விடலாம் என்று அவன் பயந்திருந்தான். அந்நேரம்பார்த்து வந்திருந்த அவளுடைய அப்பா அவளை அனுப்பி வைக்கும்பபடிக் கேட்க மகிழ்ச்சியோடு அனுப்பிவிட்டான்.

ஒரு சிகரெட் பிடித்தால் தேவலாம் போலிருந்தது. அவளைக் கல்யாணம் செய்துகொள்ளுமுன் புகைத்திருந்தான். இரண்டு வருடங்களாக ஏதும் இல்லை. இன்று மீண்டும் ஒரே ஒரு சிகரெட் புகைத்துவிட ஆசை எழுந்தது அவனுக்கு. பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக்கொண்டு மீண்டும் நடந்தான்.

போகும்போது அவள் சொல்லிவிட்டுப் போனது நினைவில் வந்தது. ‘’எவ்வளவு சண்டை போட்டாலும் நீங்கதான் என் உயிர்..’’ சொல்லிவிட்டுக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். அந்த முத்தத்தின் ஈரச்சுவடு இன்னும் அழியாமல் இருப்பதாக அவனுக்குப் பட்டது. மழையில் நடந்துகொண்டே அதை நினைத்துப் பார்க்க ஆனந்தமாகவும் இருந்தது.

00

சுப்பு அருணாச்சலம்.

நான், சுப்பு அருணாச்சலம் என்ற பெயரில் 1998 முதல் சிறுகதைகளும் கோகிலாராஜ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறேன். நெய்வேலி சொந்த ஊர்.

ரேகை பதிந்த வீடு எனது முதல் தொகுப்பு 2002 -ல் வந்தது. சுந்தரசுகன் எனது யுத்தம் என்ற முதல் கதையை வெளியிட்டது. பிறகு ஆனந்த விகடன், கணையாழி,செம்மலர், சதங்கை,தினமணி கதிர் முதலிய இதழ்களில் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *