1) தீ
————
தீராத நீரும் சோறும்
ஊரெங்கும் சாலோடுகிறது
என்னிடம் இருப்பதோ
குழம்புச் சட்டியிலும்
மிகச்சிறுத்த பொடிவயிறு
என் நிறைவின் பசியை
குடலோடு பிடுங்கி
குன்றின் மேல் எறிகிறேன்
ஊர் தீப்பிடிக்கிறது.
2) வினையாலணையும்
———————————————-
நீங்கள்
நம்பவில்லை என்றாலும்
பரவாயில்லை
என் எதிர்வினைகள்
எல்லாவற்றுக்கும் பின்னால்
இருதயப்பிளவில் முன்னம்
இடியென இறங்கிய
ஒரு பழவினை இருந்தது.
3) மயக்கம்
—————————-
என் அறியாமையின்
துளை வழியே
சாதுர்யமாக நுழைந்த
உன் ஆபாசத்தைப்
பொறுக்க முடியாமல் தான்
சௌகரியத்தின் நாற்காலியில்
என் உடலைப் பரப்பினேன்
மற்றபடி இவ்வாழ்வெனக்கு
வெறுமனே நடந்து கடக்கும்
தூரமும் பொழுதும் தான்.
4) அழைப்பு
————————
நீ விட்டுச்சென்ற
பாதச்சுவட்டையே சாட்சியாய்
பார்த்துக்கொண்டு நிற்கிறேன்
சூழும் இருள்
என்னை அச்சமூட்டுகிறது
உன்னிடம் கையளிக்கக்
காத்திருக்கும் என் கனவுகளை
கடல் மீன்கள் கொறிப்பதற்குள்
விடியலுக்கு முன்
விரைந்து வந்தெனைச் சேர்.
5) ஞானத்தின் ஆபாசம்
————————————————-
“என்னிடத்தில்
எதையும் ஒளிக்க முடியாது
எனக்கு எல்லாம் தெரியும் “
‘
சீடர்களின் முன்
பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்
குரு
‘
முதுகிற்குப் பின்
அவருக்கு விருப்பமில்லாத
நான்குகால் பிராணியொன்று
வீட்டுக்குள் ஓடி மறைந்தது
‘
தன்னகங்காரத்தால்
ஒளி துலங்கும்
குருவின் ஞானத்தில்
தற்போது கொஞ்சம்
பிரகாசம் கூடியிருந்தது.
000

சு. ராம்தாஸ்காந்தி
பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும்
அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன