1) வாழ்வு
———————
வாழ்த்த வராமல்
சபிக்க வந்த வாயில்
அன்பின் எல்லையைத்
தெரிந்து கொண்டேன்
அரிசி பொறுக்கிய கோழி
அறுக்கப்படுவதில்
புகார் ஒன்றுமில்லையே?
வழி கூட்டிச் செல்லும் கரங்கள்
ஆதுரமாய் வந்து என்
விரல் பற்றும் என்று
நம்பித்தானே
விதியின் காலடியில்
என் கண்களை
விட்டுவிட்டு வந்தேன்?
பிழை பொறுக்காத
காலத்தை என் தலை சுற்றி
முச்சந்தியில் வைத்துத்
தாண்டுகிறேன்
முன்வாசல் வழியாக வரும்
என் வாழ்வின் முகத்தில்
மாடத்தின் சுடர் பிரகாசிக்கிறது.
2) மென்மை
—————————
பயத்தில் பாதுகாப்பிற்கு
வைத்துக் கொண்ட கம்பு
மனிதர்களை அண்ட விடாமற்
செய்த மாயம்
வினைப்பயனன்றி வேறென்ன?
பற்றிக் கொள்ள ஆதுரமாய்
படர்ந்து விரியும்
விரல்களின் தவிப்பை
தூரமே நின்று செய்யும்
தீர்மானத்தின் ஆணவம் அறியுமா?
பிஞ்சுக் கரங்கள் பறிக்க வந்தால்
ஆழத்திலிருந்து மேலெழும்பி
இலகுவாக அறுந்து விடும்
அல்லிக்கொடியின் மென்மை
என் இருதயத்திற்கு உண்டு
வேண்டுமானால்
துளி அன்பில்
தோய்ந்த விரல்களை
என் முன்னே நீட்டிப் பாருங்களேன்.
3) காலம்
——————-
குழைந்த சாம்பல் தடவிய
வெள்ளரி விதையென
என் காலத்தைக்
கூரை மேல் எறிந்திருக்கிறேன்
பக்கத்து நீரூற்று தூர்ந்து போகும்
ஒரு கடுங்கோடைப் பகலில்
என் தொண்டையின் இடறலில்
ஈரம் வார்க்கும் பிஞ்சுகளை
அது என்றேனும் ஈனித் தரும்.
4) வேண்டாம்
—————————-
கொழுந்து ஒடித்துவிட்டால்
தழைத்து மேலெழும்பும்
கொய்யாச்செடியே ஆனாலும்
அரும்பும் நிலையைக் கிள்ளிவிடாதீர்கள்
வேரோடு கொண்டிருக்கும்
கனவின் உரு சிதைந்து
மலர்ந்து குலுங்கும் வசந்தம்
திகைப்படைந்து போகலாம்.
5) விளக்கம்
————————–
போக்கிடம் இல்லாமல்
நான் உன்னை நாடவில்லை
பெற்றதின் விசுவாசம்
சராசரியைக் காட்டிலும்
என்னிடத்தில் கூடுதலாகவே உண்டு
ஏற்றுக்கொள்ளவும் தக்கவைக்கவும்
மனிதர்களுக்குக் குறைந்தபட்ச
நியாயம் தேவைப்படுகிறது
அவ்வளவு தான்
வித்தை போடாத குரங்கு
வெளியேற்றப்படுவது இயல்பு தானே
இடையில் நிகழ்ந்து முடிந்து
நினைவாக எஞ்சியவற்றை
காலத்தின் மோசடி என்று
குறிப்பிடலாமா?
00

சு. ராம்தாஸ்காந்தி
பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும்
அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன