தாமரையைப் பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்வேன். இப்பொழுது எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. சுத்தமாக தொடர்பே இல்லாமல் மறைந்து விட்டாள். சமயத்தில் ஏதேனும் தவறான முடிவெடுத்திருப்பாளோ என்ற எண்ணம் வருகையில் தன்னையறியாமல் என் உடல் குலுங்குவதை உணர முடிந்தது. பாவம் தாமரை. ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் அடிமை வாழ்க்கை தான் வாழ்ந்தாள். எத்தனையோ முறை நானே சொல்லியிருக்கிறேன் அவள் அம்மா கூறியதைப் போலவே, “விட்டுத்தொலையேன்” என்று. ஒன்றும் சொல்லாமல் புன்னகையை மட்டும் பதிலாய் தருவாள். ஆரம்பத்தில் சமாளித்துப் போ என்று தான் நானும் கூறினேன். ஆனால் உடலில் சிகரெட்டால் சுட்ட காயத்தோடு வீட்டிற்கு வந்தவள் ‘சாப்பிட எதாவது இருக்கா?’ என்று கேட்டபோது பொறுக்கவே முடியாமல் தான் ‘விவாகரத்து செய்’ என்றேன். “விவாகரத்து பண்ணிட்டு அப்புறம்” என்றாள். என்ன சொல்வதென்று எனக்கும் புரியவில்லை. அமைதியாக அவளுக்கு உணவு பரிமாறிவிட்டு காயத்திற்கு மருந்திடத்தான் முடிந்தது.
ஆறு வருடம் இருக்கும் அவள் என் வாழ்வில் இருந்து மறைந்து. ஒருமுறை அவள் கணவன் என் கணவரிடம் தாமரையின் நடத்தைக் குறித்து தவறாக பேசியதாக கூறியபோது வேறு வழியில்லாமல் இனி வீட்டுக்கு வரவேண்டாமென்றேன். தாமரையின் கணவர் அடுத்து என்ன பழியைச் சொல்வார் என்பதை உணர்ந்ததால் அவளையும் பாதுகாப்பதாக எண்ணியே அப்படி கூறினேன். ஆனால் அதற்காக மிகவும் வருந்தவும் செய்தேன். அப்போ உனக்கு சந்தேகமா என்பது போல அவள் ஒரு பார்வையை வீசியபோது நெருப்பில் நிற்பது போல உணர்ந்தேன்.
“தாமரை புரிஞ்சிக்கோ… தேவையில்லாம உன்ன வேறு எதாவது தப்பா சொல்லுவார் உன் வீட்டுக்காரர், அதனால தான் அப்படி சொன்னேன்”
“ம்ம்ம்… புரியுது நித்யா தேவையில்லாம உன் புருஷன் பேரு கெட்டுப்போகும், நான் ஒதுங்கிக்கறேன். உங்கிட்ட பேசினா ஒரு ஆறுதலா இருக்கும். அதனால தான் உங்கிட்ட ஓடி வந்தேன். கடவுளுக்கு அதுவும் பொறுக்கல போல” என விரக்தியாக கூறினாள்.
“இல்ல தாமரை உன்ன தான் அதிகமா நோகடிப்பாரு. முன்னாடியாவது பேச்சா தான் இருந்தது, ஆனா இப்போ கை நீட்டறார் இல்லையா அதான் எனக்கு பயமா இருக்கு”
“உன் இடத்துல யார் இருந்தாலும் அப்படித்தான் யோசிப்பாங்க. பரவாயில்லை நித்யா.”
“நீ ஏன் ஒரு புகார் கொடுக்கக் கூடாது தாமரை? இது ஆஸ்திரேலியா. உடனே புடிச்சு உள்ள போட்ருவாங்க. சட்டம் ரொம்பவே கறார் இங்க. நீ படிச்ச பொண்ணு. நீ இப்படி எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. குழந்தைக்காகன்னு சொல்லாதே. இப்படி மோசமான சூழ்நிலைல உன் மகன் வளர்றது நல்லதா சொல்லு?”
“நித்யா அந்தாள புடிச்சி உள்ள போட்டுட்டு என்ன எங்க போகச் சொல்றே? இந்தியாக்கா? அவங்க அப்பா அம்மா பத்தி சொல்லிருக்கேன் தானே. என்ன உண்டு இல்லனு ஆக்கிடுவாங்க. ஆள் வைச்சு என்ன, எங்க அப்பா அம்மாவ கொல்ல கூட தயங்க மாட்டாங்க. சும்மாவே விட்டுட்டு வா வேற கட்டி வைக்கிறோம்னு தான் சொல்றாங்க. ஆனா நான் விட்டுட்டு போனா அவங்க கிரீடம் இறங்கிடும் இல்ல. என்னமோ இங்க வேலை கிடைச்சி வந்ததால இத்தோட போச்சு. ஊர்ல இருந்தா அவங்க எல்லார் சொல்றதையும் நான் கேட்கனும்.எல்லாருக்கும் அடிமையா தான் இருந்து இருப்பேன்”
“அதுக்காக வாழ்க்கை முழுக்க இப்படி ஒரு சந்தேகப்பிராணி கூட வாழ்வியா? அடி வாங்கியே சாகப்போறியா? எனக்கு ரொம்ப அலுத்துப் போச்சி அவர் உன்ன படுத்தற பாடப் பார்த்து. நானே போலீஸ்ல சொல்லிடலாமான்னு கூட யோசிச்சேன்”
“அய்யோ நித்யா அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதே ப்ளீஸ்… எல்லாம் சரியாகிடும். கொஞ்சம் கொஞ்சமா மாறுவார்”
இப்படித்தான் ஒவ்வொரு சண்டையிலும் தாமரை ஏதோ ஒரு சமதானம் சொன்னாள். வீட்டுக்கு வருவதை நிறுத்தி ஒரு மாதமிருக்கும். இருந்தாலும் லைப்ரரி, பூங்கா, கடைகள் என வெளியிடங்களில் சந்தித்தவண்ணமிருந்தோம். திடீரென அவளை பார்க்கவே முடியவில்லை. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. என்ன ஆயிற்று என்று ஒன்றும் புரியவில்லை. பையனின் பள்ளிக்குச் சென்று விசாரித்த போது அவனுக்கு சுரமென்று மருத்துவச்சீட்டோடு விடுப்பு கொடுக்கப்பட்டது புரிந்தது. ஏதோ சரியில்லை ஒரு வாரமாக எப்படி வாட்சப், போன் ஒன்றும் இல்லாமல் இருப்பாள் என்ற ஐயத்தில் வீட்டிற்கு சென்ற போது யாருமே கதவைத் திறக்காமல் போக நானே போலீஸை அழைத்தேன். அன்று அதை செய்திருக்கக் கூடாது தான். ஏதோ ஒரு பதட்டம், தாமரைக்கு என்னாச்சோ என்ற பரிதவிப்பு, அவளைக் காப்பாற்றி விடும் அவசரம் எல்லாமுமாக 000 என்ற எண்களை அழுத்தி, ‘தாமரையை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவசரம் உடனே வாருங்கள்’ என்றேன்.
அவள் வீட்டு முன்பாகத்தான் காத்திருந்தேன். எந்த நேரமும் அவள் கணவன் வந்து தாக்கக்கூடிய அபாயம் இருக்குமென சுற்றுமுற்றும் ஆட்கள் நடமட்டம் இருக்கிறதா என்று நோட்டம் விட்டபடியே நின்றேன். சட்டென வானிலை மாற சடசடவென மழை கொட்ட ஆரம்பித்தது. ஏப்ரல் மாதம் குளிர் துவங்கிவிட்டாலும் இப்படி மழை பெய்யவும் தவறுவதில்லை. ஓடிச்சென்று காரில் அமர்ந்து அவர்கள் வீட்டையே கண்காணித்த வண்ணம் அமர்ந்திருந்தேன். உள்ளுக்குள் ஆள் நடமாடுவது தெரிந்த போது நூறு சதவீதம் ஏதோ தவறாக இருக்கிறது என்று தோன்ற பதட்டம் அதிகமாகியது. போனில் அழைத்த கணவர், ‘என்ன வேலை இது, ஏதாவது கிறுக்குத்தனமா பண்ணி வைக்காதே’ என்று கோபத்தோடு இரைந்து ‘உடனே வருகிறேன்’ என்று கூறியது கொஞ்சம் ஆறுதல் அளித்தது. இன்று எப்படியாவது அவனை உள்ளே தள்ளி தாமரையைக் காப்பாற்ற வேண்டும் என்று சபதமெடுத்துக்கொண்டேன்.
போலீஸ்கார்ரகள் வந்துவிட்டார்கள். காவல் வண்டியின் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தவர்கள் இரு காவலர்கள் துப்பாக்கி சகிதம் இறங்குவதை கண்டு உள்ளிருந்தே வேடிக்கைப் பார்த்தனர். நான் அமைதியாக கணவர் வரும் வரை அவர் கூறியபடிக்கு காரில் இருக்கத்தான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு அவசரம். இறங்கி வந்து அவர்களிடம் வீட்டைக் காண்பித்து ‘உள்ளே ஆள் இருக்கிறார்கள், பலமுறை தட்டியும் திறக்கவில்லை’ என்றேன்.
“நீங்கள் இங்கேயே இருங்கள்” என்று விட்டு முன்னோக்கி சென்றவர்கள் கதவைத் தட்டினார்கள். யாரும் திறக்கவில்லை, ஆர்வத்துடன் காத்திருக்க கணவரும் வந்து சேர்ந்தார். மற்றவர்களுக்கு புரியாத வகையில் திட்ட ஆரம்பித்திருந்தார்.
“உயிர் போனா வருமா?” என்றேன். தலையிலடித்துக் கொண்டு “இது தேவையில்லாத பிரச்சனை” என்றார்.
மீண்டும் மீண்டும் கதவை தட்டியவர்கள் “போலீஸ்… கதவை திறங்கள்” என்று உரக்கச் சொன்னார்கள். ஜன்னல் வழியே பார்த்த தாமரை கதவைத் திறந்தாள். நான் உடனடியாக ஓடினேன். கணவர் கூறியதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நான் அருகே சென்ற போது அவள் கோபமாக என்னிடம் கேட்டாள்,
“உனக்கு என்ன பிரச்சனை நித்யா? என்ன பைத்தியக்காரத்தனமிது”
“தாமரை உனக்கு ஒன்னுமில்லையே ஏன் இவ்வளவு சோர்வா இருக்கே? கால்ல என்ன கட்டு? உன்ன அடிச்சு தள்ளிட்டாரா? குழந்தை எங்கே” என்று பதட்டமாகக் கேட்டேன்.
அமைதியாக என் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவள், பொறுமையாக விளக்கத் துவங்கினாள்.
“நித்யா… தம்பிக்கு உடம்பு முடில, எனக்கும் உடம்பு சரியில்ல மயங்கி படில இருந்து விழுந்ததுல கால்ல சின்ன அடி. ரொம்ப நெகட்டிவிட்டினு சோசியல் மீடியா எதுலயும் ஆக்டிவா இல்ல. பார்க்க தெம்பும் இல்ல. இதுக்கு போய் இப்படி எல்லாமா பண்ணுவே. சே யோசிக்க மாட்டியா?” என்று அவள் கேட்க எனக்கு தலை சுற்றியது. நான்கு வயது குழந்தையை தோளில் ஏந்தியவண்ணம் வந்த அவள் கணவர், மனைவியை, மகனைப் பார்த்துக்கொள்ள விடுப்பில் இருப்பதாக சொல்ல எனக்கு தரை காலை விட்டு நழுவிப் போவது போலப்பட்டது. காவலர்கள் விசாரிக்க உள்ளே செல்ல நான் வெளியே நடந்தேன். அன்று பர்த்தது தான் தாமரையை. அதன் பின்னர் எங்கேயுமே சந்திக்கவில்லை. வருடங்கள் ஓடிவிட்டது. அவளை காப்பாற்ற மெனக்கிட்ட என்னை ஏன் அவள் புரிந்துக் கொள்ளவில்லை? நம்பரை ப்ளாக் செய்தவள் அதன் பின் பேசவேயில்லை. எங்கேயும் சந்திக்கவும் வாய்க்கவில்லை. ஆனால் நான் என்ன தவறு செய்தேன் என்று மருகாத நாளில்லை. அவளுக்கு நல்லது நினைத்தது ஒரு குற்றமா? இப்படி கணவனைக் காப்பாற்ற என்னை பொய்யளாக்கி விட்டாளே என்று புலம்பிய நாட்கள் எல்லாம் ஞாபகத்தில் மோதியது இன்று. என்னை அறியாமல் அவளுக்கு பெருந்துன்பத்தை அளித்து விட்டேன் என்று வேதனையடைந்தது தான் மிச்சம்.
“என்ன யோசனை பலமா இருக்கு” என்று காரை சாலையின் வேக அளவிற்கு ஏற்றாற்போல வேகத்தை அமைத்துக்கொண்டே கேட்ட கணவரிடம்,
“அந்த பெட்ரோல் பங்க்ல பக்கத்து கார் பெண்மணியிடம் அவ புருஷன் எப்படி பேசினான் பார்த்தீங்களா? அவ முகத்த கவனிச்சீங்களா. அவ பிரச்சனைல இருக்கா போல”
“வேண்டாம் நித்யா… உனக்கு யாரப்பாத்தாலும் சந்தேகப்படற வியாதி வந்துட்டுனு நினைக்கிறேன். இது ரொம்ப தப்பு” என்றார்.
“அப்போ நீங்க பார்க்கல. ஆனா நான் பார்த்தேன். நிறைய பொண்ணுங்க இப்படித்தான் தாமரை மாதிரி அட்சஸ்ட் பண்ணி வாழறாங்க”
“அவங்க அவங்க வாழ்க்கை அவங்களுக்கு புடிச்சாப்ல வாழ்ந்துட்டு போறாங்க விடு”
“புடிச்சாப்ல வாழல, வேறவழியில்லாம அப்படி வாழறாங்க”
“சரி சரி… பசங்க தூங்கிட்டாங்க போல எதுனா வாங்கனுமா” என அவர் கேட்க, பின்னிருக்கையில் இருந்து சின்னவன் கேட்டான்,
“அப்பா சிட்னிக்கு இன்னும் எவ்ளோ தூரமிருக்கு?”
“இன்னும் நேரமாகும் கண்ணா நீ தூங்கு” என்றேன்.
“சரி நல்ல பாட்ட போடுங்க. எனக்கு மனசே சரியில்ல” என்றேன். முறைத்துக்கொண்டே “மூட் ஸ்பாய்லெர்” என்றார். இவரும் கொடுமைக்காரக் கணவனாய் இருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்தேன். நிச்சயமாய் தாமரையைப் போலக் கோழையாக இருக்க மாட்டேன் என்று எனக்கு நானே சமாதானம் செய்துக் கொண்டேன்.
சிட்னி மிக மிக அழகாக மிளிர்ந்தது. பள்ளியின் முதல் விடுமுறைக் காலத்தை சிட்னியில் கழிக்கலாம் என்று காரிலேயே கிளம்பி வந்திருந்தோம். இங்கே குளிர் அதிகமென்று அதற்கேற்ற உடைகளையே கொண்டு வந்தது வசதியாகப் போனது. அறையில் ஹீட்டர் போட வேண்டியிருந்தது. முக்கியமான இடங்களை சுற்றிப் பார்க்கும் முன்னர், அன்று என் கல்லூரித்தோழி சந்தியா வீட்டிற்கு செல்லும் எண்ணத்தில் அவளுக்கு ஏதேனும் வாங்கலாம் என்று ஷாப்பிங்க் மாலிற்கு வந்தோம். அவள் வீட்டில் தான் அன்று இரவு உணவு. ஆகையால் சின்னவன் சினுங்கியதை காதில் வாங்காமல் மெக் டோனால்ட் கடையை கவனியாதது போல நடந்தேன்.
“சரி பிள்ளைங்களுக்காக தானே வந்தோம், ஒரு பர்கர் சாப்பிடட்டுமே” என்றவரை முறைத்தவண்ணம் வரிசையில் சென்று நின்றேன். சட்டென கண்ணீரைத் துடைத்துவிட்டு “லவ் யூ அம்மா” என்றான்.
இன்னும் எத்தனை பேர் என்று பார்க்க ஆறு பேர் நின்றார்கள். வாங்கி விட்டு திரும்பி நடந்த யாரோ ஒரு இந்தியப்பெண், வரிசையில் ஸ்வெட்டர் அணிந்து நிற்பவளைக் கண்டு “ஹாய் செந்தா” என்றாள். தமிழ் போல என்று மனதில் நினைத்துக்கொண்டே, ‘நம்மாளுக தான் பாத்தாக்கூடச் சிரிக்க மாட்டாங்க. வெள்ளக்காரன் தேவலை’ என்று நினைத்துக்கொண்டேன். இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். முடியை எல்லாம் சாயம் அடித்து பெரிய பூட்ஸ் அணிந்து இந்த ஊர்க்காரியாகவே மாறியிருந்தாள் வரிசையில் நின்ற பெண். அவள் முறை வந்ததும் “பை டியர்” என்று திரும்பியவளின் முகத்தை கண்டு அதிர்ந்தே போனேன். யாரைப் பற்றி இந்த வழிப்பயணத்தில் நினைத்துக்கொண்டே வந்தேனோ அவளே தான் நிற்கிறாள் எனக்கு கொஞ்சம் முன்னே.
எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. படபடப்புடன் என் கணவரைத் தேடினேன், குழந்தைகளும் அவரும் தள்ளி ஒரு நாற்காலியில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார்கள். அய்யோ அவள் தானா? யாரிடம் கேட்பேன். இதோ திரும்பி வருகிறாள். தொலைபேசியில் பேசிக்கொண்டே என்னைக் கடக்கிறாள். ஆம் இது தாமரை தான். அவசரமாக அழைத்தேன்,
“தாமரை…” திரும்பியவள் “வாவ் நித்யா…” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள். எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. நல்லவேளை தாமரை என்னிடம் கோபமாய் இல்லை. பெரும் நிம்மதி. அவள் முன்னை விட அழகாக, சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, தன்னம்பிக்கையோடு இருக்கிறாள். ஆக நன்றாக இருக்கிறாள். கணவன் அவளைக் கொல்லவில்லை. அவள் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை.
அவசரமாய் நினைத்ததை எல்லாம் கொட்டினேன். என் பயத்தைக் கேட்டு கலகலவென சிரித்தாள் தாமரை. நான் ஏன் சாகப்போறேன் நித்யா? நிரந்தரக் குடியுரிமை கிடைக்கத் தான் பல்லக் கடிச்சிட்டு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். இப்போ பிரிஞ்சிட்டேன். பையனோடு இங்க வந்துட்டேன். சந்தோசமா இருக்கேன் நித்யா. வீட்டுக்கு வா. நம்ம வீட்லயே தங்கிக்கலாம் என்று அவள் நீட்டிய அலுவலக விலாச அட்டையில் செந்தாமரை என்னும் பெயர் தங்க நிறத்தில் ஒளிர்ந்தது. “கால் பண்ணு அவசரமா போகனும்” என்று விட்டு ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து மறைந்தாள். அவள் போவதை பார்த்துக் கொண்டே நின்றேன். சூரியன் மெதுவாக மேலெழும்பி பிரகாசிக்க ஆரம்பித்திருந்தான். என் மனதில் முழுவதுமாக மலர்ந்து சிரித்தாள் செந்தாமரை.

ராணி கணேஷ் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து பின் பப்புவா நியுகினியாவில் பதினாறு வருடங்கள் இருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். தன்னார்வ பணிகளில் விருப்பம் மிகுந்த இவர் பப்புவா நியுகினி இந்திய சங்கத்தில் பல ஆண்டுகள் பெரும்பங்காற்றியுள்ளார். தமிழ்வெளி இலக்கிய இதழின் துணை ஆசிரியரும் ஆவார்.
தமிழ் இலக்கியத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும் உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், திரை மற்றும் நூல் விமர்சனங்கள் என தொடர்ந்து இலக்கிய இதழ்களில் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் கிராமத்து மண்ணின் வாழ்வியலையும், தொலைந்துவிட்ட பால்யத்தின் நினைவுகளையும் மீட்டுருவாக்கம் செய்பவை.

