கட்டில் போன்ற முதுகு
வழக்கமாக ஏதாவதொரு
பொருளைத் தூக்கிக் கொண்டு நடப்பர்
இந்தமுறை உடலைத் தூக்கிக் கொண்டு நடந்தனர்
ஒரு அடிக்கும் இன்னொரு அடிக்கும் இடையில்
ஏகப்பட்ட சிறிய சிறிய கடல்கள்
வழியெங்கும் அரிசி உதிருகின்றது போல
உடல் உதிருகின்றதாவெனப் பார்த்தேன்
அவை சருகுகள்
தீ மரங்களை நகற்றி வைப்பது போல
ஒவ்வொரு அடிக்கும்
அவர்கள் காற்றை நகற்றி வைப்பது தெரிந்தது
ஒவ்வொரு காலையும் சரியாக எதிர் காலத்தைப்
பார்த்து வைத்தனர்
எனக்கென்னவோ இந்த மாலை நேரப் பூங்கா
கட்டிலை நிமிர்த்தி வைத்திருப்பது போன்ற
முதுகுடையவர்களது
ஒரு மருத்துவமனை போல தோற்றமளித்தது
எல்லாப் பக்கமும் இருக்கின்ற சூரியன்
என் அழுகையைப் பற்றிச் சொல்ல
என்ன இருக்கிறது
அதன் கால்கள் வலுவிழந்துவிட்டன
சூம்பிப் போனதை இன்னொரு சூம்பிப் போனதால்
மறைத்துள்ளது
எல்லாப் பக்கமும் தான் சூரியன் இருக்கிறது
ஆமென்று ஏற்றுக்கொண்டால் தானே
அழுகவில்லை என்ற சொல்லை வைத்து
கூடியவரை அடைத்துப் பார்த்தது
ஒரு துளியை இன்னொரு துளி பார்த்துவிட்டது
கண்களை பற்றியிருந்த எனது ஓராயிரம் கைகளை
ஓராயிரம் திசைக்கு இழுப்பது தான்
என்னிடம் இருக்கின்ற கடைசி வாய்ப்பு
சம்பந்தமில்லாத கடல்
உங்களைக் கடிந்து ஒரு சொல்லை சொல்லப் போகிறார்
அதற்காகத் தான் வாயைத் திறக்க முயல்கிறார்
அந்தச் சொல் கீழே விழுந்த கனத்தில்
ஒரு காகிதத்தைப் போல பறக்கப் பார்க்கின்றீர்
அந்த சொல் இன்னும் கீழே விழவில்லை
எனவே ஒரு காகிதத்தைப் பிடித்து
அங்கிருந்து கிளம்பி மிதக்கப் பார்க்கின்றீர்
அதுவும் முடியவில்லை
கடைசியாக அந்தச் சொல்
உங்கள் தலையில் விழட்டுமென
அதன் முன்னால் குனிந்து காட்டுகின்றீர்
அவர் வேறு ஏதோ உளறி வைக்கிறார்
உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு சொல்
அந்த சொல்லில் உங்கள் மேனி முழுவதும் நனைகிறது
சம்பந்தமில்லாத கடலில் சம்பந்தமில்லாத ஒரு குளியல்
செல்வசங்கரன்
விருதுநகரில் வசித்து வருகிறார். கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணி. 2009 லிருந்து சிற்ரிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். ஆதவன் (கே.எஸ் சுந்தரம்) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். அறியப்படாத மலர் (2013) பறவை பார்த்தல் (2017) கனிவின் சைஸ் (2018) சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி (2020) கண்ணாடி சத்தம் (2022) மத்தியான நதி (2022) ஆகிய ஆறு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.