வானம் இருள் பரப்பி ஆகாசமாக கிடந்தது. திரும்பு திசையெங்கும் வெள்ளி முளைத்துக் கிடந்தது மொசுமொசுக்கைச் கொடியின் சிறு வெண்பூ வானமெங்கும் பூத்துக் கிடந்தது போல வானம் நிறைந்திருந்தது. உச்சிக்கு கீழே மேற்குத் தெசையில நிலா அப்பதா இருளைக் கிழித்துக்கொண்டு வெளிவந்தது. தேய்பிறை நாள். தூரத்தில் இருந்த பனை மரத்தில் கூகை அமர்ந்து அலறிக் கொண்டிருந்தது. 

ஒன்னு…ரெண்டு…மூனு…நாலு… இன்னும் நாலஞ்சு நாள்ல அம்மாசி வந்திரும் மனக்கணக்குப் போட்டுக்கொண்டாள் செவகாளி. உச்சியைத் தாண்டுனதும் நல்ல வாடைக் காத்தா செவகாளி மொகத்துல வந்து அடித்தது. லேசா தூக்கம் வந்து ஆளை நெட்டித் தள்ளவும் சுதாரிச்சவ, வெத்தலைக் கடுதாசியை பிரிச்சு வெத்தலை பாக்கை வாயில் போட்டு மென்று கொண்டே…

“ஏலே முத்துச்சாமி… நீ வாட்டுக்கு அசந்து தூங்கிறாத… ஆடுக வெள்ளாமையில எறங்கிட்டா தெண்டங்கட்ட முடியாதுடா… தம்பிக பொழுதனைக்கும் ஆடு மேச்சு வந்தவங்கே” கையில இருந்த கல்லை எடுத்து வீசி கலைஞ்சு போற ஆட்டை மடக்கிகிட்டே சொன்னா செவகாளி.

“சரித்தோவ்… நா பாத்துக்கிறே…” முத்துச்சாமி ஆடுக அசந்து படுக்குற வரை வரப்புல நின்னான். வானம் நல்ல வெளிச்சமா, வெள்ளிக்கூட்டம் எடவிடாம பூத்துக்கெடந்துச்சு… காத்து அப்படியே எதமா அடிச்சிட்டு இருந்துச்சு. செத்த நேரத்துல மாட்டோட மணி ஓசையில தூக்கம் முத்துச்சாமிய  அசத்தியெடுத்திடுச்சு.

கெடை ஆட்டுல நின்ன மாடுக ஆட்டோட மேச்சப் பொழுதுல நடக்கையில “கடாங்…கடாங்கு”னு மொரட்டுச் சத்தமா கேக்கும். ஆனா ராப்பொழுதுல எரைய மொண்டு முழுங்கையிலையும், மறுபடியும் எரைய வயித்துக்கள்ள இருந்து எடுக்குறப்பையும் கழுத்துல கட்டிருக்கும் மணியத் தாண்டி இரை எறங்கையில ஒரு மெல்லிய மணியோசை எடைவிடாம கேட்டிட்டு இருக்கும். “கடாங் கடாங்க”னு கேக்குறப்ப புதுசா கேக்குறவுகளுக்கு காது வலி வந்துரும். ஆனா இராவுல மாடுக அசைப்போடுறத பாத்துக்கிட்டே இருந்தா எப்பேர்ப்பட்ட ஆளுக்கும், என்ன மன ஒளச்சலா இருந்தாலும் தூக்கம் தன்னால வந்து சொக்கிரும். நல்ல கும்மிருட்டுல மணிச்சத்தத்தை வச்சு மாடுக படுத்திருக்கா, அசைப்போடுதா, எழுந்து நடக்குதா, கொசுக்கடில கெடக்கானு செவகாளிக்கு நல்லாத் தெரியும். இன்னும் சொல்லப்போனால வார மணிச்சத்ததை வச்சே எந்த மாட்டோம் மணிச்சத்துமுனு கண்டுபுடிச்சிருவா

செவகாளி நல்ல ஒசரம்… ஆம்பளத் தோளு போல விரிஞ்சுபோன தோளு. வளத்தி நின்னுக்கிட்டே வாழத்தாரை வெட்டிப்புடலாங்கிறமாரி  இருக்கும் செவகாளி. காது ரெண்டு தோளைத் தொடும்.  மாரப்புக்கு மேல சரிஞ்சு கெடக்கும் தண்டட்டி. யாராவது கூப்புட்டுத் திரும்புனா, தண்டட்டி ரெண்டும் ராட்டினமாரி சுத்தி வந்து நிக்கும். ஒசரம் மட்டுமா ஒடம்பப் பாக்கனுமே கருகருனு, வயசாகிப் போனதால ஒடம்புல விழுந்த சுருக்கம் பனைவோலை கருக்ககுமாட்டக்க இருக்கும். ஆட்டை அதட்டிச் சத்தம் போட்டுச்சுனா, ஆம்பளைக்கு மேல ஒரு பங்கு இருக்கும் அதோட சத்தம் மட்டும். எந்நேரமும் வெத்தலை போடுற வாயிக்காக, இடுப்புல மடிநெறைய வெத்தலபாக்கை பொட்டலமா கெட்டி வச்சிருக்கும்

நல்லா ஆம்பளைச் சட்டை ஒன்னு எடுத்துப் போட்டுக்கிட்டு கம்ப ஊண்டி நின்னாக்க ஆம்பளை என்ன ஆம்பளை… ஆம்பளையலே தோத்துப்போவக… செவகாளி கெடை காக்குற தோரணை அப்படி இருக்கும். மீசை ஒன்னுதே கொறை. அதுவும் இருந்திட்டா செவகாளியை ஒரு பய கெழவினு சொல்ல முடியாது. வயசு அறுபதுக்கு மேல இருந்தாலும், ஒரு முடி நரைக்காமக் கொல்லாம, ஆளு கின்னுனு இருக்கும். யாரு வயச எடை போட்டா நாப்பது வயசு இருக்குமுனுதே சொல்லுவாக. எட்டு வச்சு நடந்தா அது நடைய யாரும் தொட முடியாது. ஊரு ஆளுக இந்த வயசுலையே கெளவி இந்த நடை நடக்குதே எளவட்டமா இருக்கையிலே எப்படி இருந்தோச்சுனு வசை பாடுவாங்கே.

முத்துச்சாமியும் தலைச்சம் பேரன். முத்துச்சாமியோட அப்பா கருப்பையாக்கோனாரு ஆட்டுக்கு கருவக்கா ஆயிறேனு, கருவ மரத்தை வெட்டி இழுக்கையில அலக்குக் கம்பு லாவுல இடிச்சு வயித்துக்குள்ள புண்ணாகி எலும்புல சாடி பொண்டாட்டி வள்ளியம்மையோடு சேத்து ஆறு புள்ளையல விட்டுட்டு செத்துப்போயிட்டாரு. வள்ளியம்மைக்கு கருப்பையக்கோனாரு சாகையில என்ன இருபத்தஞ்சு வயசுதே இருக்கும். கடைசிப் புள்ள முருகவேலு, தாப்பேன் செத்துக் கெடைக்கையில வெவரம் தெரியாம கொட்டு அடிக்கறவங்களோட சேந்து தட்டை எடுத்து கொட்டடிச்சிட்டு வெளையாண்ட்டுட்டு இருந்தான். மூத்தவே முத்துச்சாமியும், மயிலும், வசந்தாவந்தே செத்த வெவெரம் தெரிஞ்ச புள்ளைக, மத்த மூனு பயலுகளுக்கு ஒருத்தனுக்கு ஆறு ஒருத்தனுக்கு நாலு, ஒருத்தனுக்கு ரெண்டு. எல்லா அவலைப்புளையும் சவலைப்புள்ளையுமா பொறந்து வளந்ததுக. காந்தியப் பெத்த எட்டே மாசத்துல மறுபடியும் முழுகாம இருந்த வள்ளியம்மை, அவனுக்கு ஒன்றை வயசு இருக்குமா போதே மலையாண்டியப் பெத்துப்புட்டா. பாவம் பயே ஒழுங்காப் பாலு குடிக்காம சோகை தட்டிப்போயி அடி வயிறு பெருத்துப்போயி இருப்பான். அதே சோவையேனு பட்டப்பேரு வாச்சிருச்சுஇந்த ஒலகத்துல இல்லாத  ஊருச்சனமே கருப்பையாக்கோனாரு சாவலுதே நின்னுச்சு. ஆளுல அழகேன்… சாகையில வெறும் முப்பது வயசு.

முடிய விரிச்சுப்போட்டு நெஞ்சுல அடிச்சிக்கிட்டு வள்ளியம்மை அழுத அழுகை இருக்கே… யப்பா…  சொல்லி மாளாது. நம்மள்ல அறுத்துக்கெட்டறது ஒன்னும் புதுசில்லை. ஆனா ஆறு புள்ளையள வச்சு எவேன் பாப்பியான். ஏதோ ஒன்னு ரெண்டு புள்ளப்படையினா ஆம்பிளையினு பேருக்கு ஏதோ நொண்டி ஊனத்தைப் புடிச்சி கெட்டி வைக்கலாமுனு ஊரே பேசுச்சு.

கருப்பையாக் கோனாரு சாகையில ஒரு துண்டு ஆடும் நாலு மாடும் நின்னுச்சு. அவரு செத்த அந்த வருசம் ஊருல பஞ்சம் வந்து ஒரு ஈ காக்கா கூட இல்லை. ஏதோ வீட்டுல உள்ள பெருசுகே உப்பு சப்புக்கு வீட்டைக் காத்துதுட்டு கெடந்ததுக. பெரிசுக இல்லாத வீட்டு  ஆளுக எல்லா வீட்டை இழுத்துப் பூட்டிப்புட்டு வடக்க கெளம்பிடுச்சுக. சேது சீமையில இந்தவாக்குல பரமக்குடில ஆரம்பிச்சு கடலாடியென்ன சாயல்குடில கெழக்க உள்ள எந்த ஊரும் ரெண்டு வருசமா ஒரு காக்காணி நெலம் வெளையல. அத்தோட எல்லா ஆளுகளும், தஞ்சாவூருக்குக் கெட போடப் போன  ஆளுகளோட சேந்து நாத்துப் பறிக்கவும், நடவு நடவும், கருது அறுக்கவும் அங்கங்க பண்ணையல்ல தங்கி கூலி வேலைக்கு போக ஆரம்பிச்சாக. இன்ன ஆளுனு, இன்ன சாதினு கணக்கு இல்ல. எல்லா ஊருச் சனமும் அங்கதே இருந்துச்சு. ஒரத்தநாட்டுப் பக்கத்துல நெடுவாக்கோட்டையில சம்முகம்பிள்ளைப் பண்ணைதேபெரிசு. ஊருல கண்டது பாதி சம்முகம் பிள்ளை பண்ணேத. தெக்க இருந்து வந்த ஊரு ஆளுக அங்க இருந்தே காணி வேலை பாத்துச்சுக.

செவகாளியே பாதி பேரைக் கூட்டி வந்துருந்தா. கருப்பையாக்கோனாரு செத்ததோட மகளோட, ஆட்டையும் புள்ளையும் ஒப்புக்கொண்டதே. புருசனை எழந்து கலங்கி நின்னவளுக்கு, ஏண்டி கலங்கி நிக்கிற, பொண்டாட்டி செத்தா புருசனால ஒத்தப் புள்ளையை வளத்தெடுக்க முடியாது… ஆனா பொட்டச்சியால பத்து புள்ளை பெத்தாளும் தனியால வளத்தெடுக்கலாமுடினுச்சு செவகாளி. அன்னையிலேருந்து இன்னவரைக்கும் பத்து வருசமா வள்ளியம்மைக்கித் தொணையா இருக்கு செவகாளி.

இரவையில ஆம்பளச் சட்டைய மாட்டிக்கிட்டு, காதுல கெடக்குற தண்டட்டியை கழட்டி குட்டி அடைக்கிற  கூட்டுக்குள்ள துணில முடிஞ்சு தொங்கவிட்டுட்டு இரவை முழுசுக்கும் ஆம்பளை மாட்டக்க தலையில் தலைப்பா ஒன்னக் கட்டிக்கிட்டு ஆட்டைச் சுத்தி சுத்தி வந்து காவகாக்கும். விடிஞ்சு விடியாம கருதறுக்க ஓடிடடும். அதுல கெடைக்கிற கூலி நெல்லு சாப்பாட்டுக்கு வராட்டியும், கெடை போட வாங்குற நெல்லுல ஒரு பங்கை மீந்து போக வைக்கும். அந்த மிச்சத்தை வித்து காசாக்கும் கெழவி. பகல்ல ஆடு மேக்கும். அந்தில செத்த ஒரு மூனு மணிநேர தூங்குறது அம்புட்டுதே அதோட தூக்கம். இது என்ன பொம்பளையா ஆம்பளையானு பாக்குறவுக சந்தேகப்படாம இருந்ததே இல்லை.

ஒரு நாளு நல்ல உச்சிப்பகல் நேரம். ஆடுக ஆத்தங்கரையோரம் அடைஞ்சி கெடந்ததுக. கண்ணுக்கு எட்டுனு தொலைவு வர வெயிலு வெள்ளிக் கம்பியா மின்னுது. சோவையனும், மலையாண்டியும் ஆடாடோரமா ஆளுக்கொரு பக்கமா ஒக்காந்திருந்தாங்கே. அந்த வழில போற ரெண்டு பேரு ஆட்டை பாத்து வந்தாங்கே. “ஏலே கீதாரிப்பயலுகலா, என்னடா எங்கொல்லையில இருக்கிற உளுந்தங்கொடில ஆட்டை விட்டு மேச்சிட்டு போயித்தீகனு ஊருக்குள்ள பேசிக்குறவோ. அதுக்கு பதிலா ஒரு குட்டியைக் கொடுங்கடா”னு வந்து வம்பிழுத்தானுவ. யாருங்க நீங்கே… நாங்க எந்தக் கொல்லையிலையும் ஆட்டை வுட்டு மேக்கலையேனு சொன்னான் சோவையேன்.

கிட்ட வரையிலையே சாராய நெடி கொடலை புடுங்கிட்டு வந்திருச்சு சோவையனுக்கு. அதைவிடுயா தம்பி, என்ன நீங்க மட்டும் மேக்கிறீக, ஒங்கோய கொப்பன எங்கடானு பேச்சுக்கொடுத்தானுக. எங்கொல்லையில அஞ்சாறு கெடை கட்டனும். ஒங்கப்பாரு எங்கடானு கேட்டான். எங்கப்பாரு செத்துப் பத்து வருசமாச்சுண்ணே. எங்கண்ணே இருக்கு அதுக்கிட்ட கேக்கனும் இல்லையினா எங்காத்தா இருக்கு அதுக்கிட்டதே கேக்கனும். எங்க குடுசை போட்டிருக்கீககன்னா ஒருத்தே. நெடுவாக்கோட்டையில சம்முகம் பிள்ள பண்ணையோரமாத் தங்கியிருக்கோம்.

மலையாண்டி ஆட்டை விட்டுட்டு சோவையங்கிட்ட வந்தான். சோவையே எங்க கெடை கெடக்குனு சொல்றதுக்குள்ள மலையாண்டி, ஊருக்கு மேற்க கெடக்குன்னான்… டேய் ஏன்டா மாத்திச் சொல்ற, ஊருக்குத் தெக்கால மல்லிக்கொண்டாரு கெணறு ஓரமா கெடை அடையுதுனு பதில் சொன்னான் சோவையன் காந்தி…. மலையாண்டி திரும்பி சோவயைனை ஒரு மொறை மொறைச்சுட்டு, நீங்க எதாருந்தாலும் எங்கண்ணேட்டே பேசிக்கங்க… நீங்க எந்த ஊரு…? ஒங்களை நாங்க இந்த ஊருக்குள்ள பாத்ததே இல்லையேனு கேட்டியான். இல்லடா தம்பிவளா நாங்க பக்கத்தூரு, பத்து மா நெல இங்க வாங்கிருக்கோம்… அதே கெடை கெட்டலாம்னு விசாரிச்சுட்டுப் போவலாம்னு வந்தோமுனுட்டு ரெண்டு பேரும் நவந்து போனானுவ. ஏலேய் பயலுவ சொல்றதப் பாத்தா ஆம்பளை இல்லாத கெடையாத் தெரியது. ஒரு ஆட்டைப் போட்டாக்க, சாரய விக்கிற எடத்துல நல்ல காசு பாத்துறலாமுடா… இரு இன்னைக்கு ராவுல எறங்கிடுவோம்.

ஏலே…ஒனக்கு அறிவு இருக்காடா… ஆத்தா என்ன சொல்லிருக்கு, ஆடு மேக்கிற காட்டுல யாரு வந்து சேதி கேட்டாச் சொல்லக் கூடாதுன்னு சொல்லிருக்குலனு மலையாண்டி கேட்டதும், சோவையேன் பட்டுனு மலையாண்டி கன்னத்துல ஒரு அறை விட்டான், ரெண்டு பேரும் சண்டை போட்டு உருண்டானுக, முருகவேலும், செவகாளியும் மதியக்கஞ்சியை தூக்கிட்டு வந்தாக. மலையாண்டி மொகமெல்லாம் ஒரே நெகம் பட்டு ஒரே கீரலு… பிராண்டி எடுத்துட்டான் சோவையேன். செவகாளி வந்து என்னானு கேட்டு சோவையனையும் மலையாண்டியையும் அடி வெளுத்துப்புட்டா… ஆடு மேக்கிற காட்டுல மல்லுப்பாஞ்சு கெடந்தா ஆட்டை யாரா பாக்குறதுனு திட்டி எடுத்தா.

ஆடுக மேஞ்சிட்டு இருக்குறப்பவே ஆத்தோரம் கெடந்த கரு ஆதா இலையை முடுங்கி மடில வச்சுக்கிட்டா செவகாளி. கள்ளிச்செடில கொஞ்சத்தை ஒடிச்சு சோறு கொண்டு வந்த கலயத்துல வச்சிக்கிட்டா. ஆடுக மேச்சி கெடை வயலுக்கு வந்ததும், ஏலே மலையாண்டி அந்த நொண்டுற ஆட்டைப் புடிடானுட்டு, கள்ளில உள்ள சோத்தை எடுத்துட்டு, அதுக்குள்ள அந்த ஆதா இலையை உள்ள வச்சு நெருப்பு மூட்டி சுட்டு கொளும்புக்கு மேல வச்சு கெட்டுனா. கொளும்பு வீக்கமா இருந்துச்சு. மழைக்காலத்துல வந்த நொடம் இந்தாட்டுக்கு இன்னமும் போவலை. இனி பாரு ரெண்டு நாள்ல இந்தாடு எப்படி ஊண்டுதுனு.

அந்திக்கெடையில எப்பவும் முத்துச்சாமி ஆட்டை மடக்கி நிப்பிபான். செவகாளி மட்டும் பயலுகளைக் கூப்புட்டுவச்சு சாப்பாட்டக் கொடுத்திட்டு ஆளுக்கொரு துணில ஒரு பொட்டலத்தைக் கொடுக்கும். அதை வாங்கி தடுக்குக்கீழ வச்சிட்டு மூனு பேரும் ஒரு பக்கம் படுத்துக்குவாங்கே.

நோட்டவிட்ட பக்கத்து ஊருக்காரனுக, ஆடு களவாங்க வந்துட்டாங்கே. ரெண்டு நாளா பகல்ல ஆட்டை நோட்ட விட்டவங்கே… ஆம்பளை இல்லாத கெடையா இருக்கு, இந்தக்கெடையில எறங்குனா எப்படியும் நாலாட்டத் தூக்கிறலாம்னு கணக்குப் பண்ணி எறங்கிட்டாங்க. இரவையில உச்சி நேரத்துல வந்தவங்கே மூனாம்பொறை கெளம்பி நாலஞ்சு நாளாச்சு உச்சி நேரத்துல நெலா மறைஞ்சும் அப்பறமா எறங்குவோமுனு ரொம்ப நேரமா நெலா மறையட்டும்னு  காத்துக்கெடந்துவங்களுக்கு யாரோ ரெண்டு பெரிய ஆளு தலைப்பாகையோட நிக்கிறது மட்டும் அருதலா  தெரிய… ஏலே… என்னடா இது ஆம்பளைவோ இல்லாத கெடையா இருக்குனு வந்தா ரெண்டு ஆளு நிக்கிறோவ, ஒருத்தே அந்த பயே… இன்னொன்னு யாருடானு கொழம்பிப்போயி நின்னானுவோ. செவகாளி வரப்புல கம்பு குத்த வச்சு நிக்கிறதும், கெளைஞ்சு போற ஆட்டை ஓடிப் போயி மடக்குறதையும் பாக்கையில யாரோ ஆம்பளையிலாட நிக்கிறானாவோனுட்டு ஆட்டைக் களவாங்காமலே போயிட்டானுக.

இருக்கட்டுமுனுட்டு மறுநாளு ரொம்ப நெருக்கமா வலசைக்கிப் பக்கத்துல இருந்து நோட்டவிட்டவங்கே அப்படி யாரும் இல்லையேனு ரெண்டு ஆளுக்கும் பதிலா மூனு ஆளா வந்தாங்கே. பொழப்புக்கு களவாங்குறதா இருந்தா பரவாயில்லை. வேசையெடுத்து கறிதிங்க களவாங்குறோம்… தப்பித் தவறி இன்னாருனு தெரிஞ்சாக்க ஊருக்குள்ற தலை காட்ட முடியாதுடா. ஏலே ரெண்டு ஆளு நிக்கிறோவ, ஆளுக்கோரு ஆளாப் போயி புடுச்சுக்கங்க நா நல்ல எள ஆட்டாப் பாத்து ஒன்னத் தூக்கிட்டு ஓடேற… பின்னாலயே ஓடி வந்திடுங்க. முத்துச்சாமியும், செவகாளியும் காவகாக்க பயலுக நாலும் நல்ல ஒறக்கத்துல கெடந்தானுக.

இப்பவும் நெலா மறையிட்டும்னு காத்துக்கெடந்தவங்கே, நிலா மறைஞ்சதும் ஆட்டுக்குள்ள எறங்குனானுக, ஆடுக அசந்து படுத்து அசைப்போட்டுக்கிட்டுக் கெடந்துச்சுக. முத்துச்சாமி கெழக்காலையும், செவகாளி மேற்காலையும் ஒக்காந்திருச்சு. ஒருத்தரை ஓடியாந்து பட்டுனு பின்னாடி இருந்து செவகாளிய புடுச்சிட்டியான்… ஏலே பொம்பளைடா இவ… என்னா வேசம் போட்டு நிக்கிறானு பாருவேனு சொல்ல வாயேடுக்கிறதுக்குள்ள செவகாளி வளந்த கைய நீட்டி அப்படியே அவங் கழுத்துப் புடுச்சி இழுத்துக்கீழே போட்டதும் ஆடுக குபீர்னு கெளைஞ்சி திடுமுடுனு ஓடுனதோட, செம்மறி ஆடுக எல்லாம் மே..மே..மேனு ஆடு குட்டியும் ஒரே  கத்திக் கூப்பாடு போட ஆரம்பிச்சுடுச்சுக. வெள்ளாடு மட்டும் தும்புல கட்டியிருந்ததால கட்டுன எடுத்துலையே கட்டிக்கெடந்ததுக. அதுல ஒன்னு புடுச்சி தோள்ல தூக்கிப் போட்டு ஓடப்பாத்தா ஒருத்தேன். முத்துச்சாமிய ஓடி வந்து ஒரு மகுட்டுப்பிடியா புடிச்சுக்கிட்டான். எளவட்டப்பயலா இருந்தாலும் தாய்க்குதலை மயேங்கிறாதல நறுங்கிப் போயி இருப்பான் முத்துச்சாமி. பயலால முண்டக்கோட முடியலை. செவகாளி கம்பெடுத்து கீழ விழுந்தவனைக் லாக்கொடையிலே  ஒரு குத்தாக் குத்துனா. டபார்னு மடில முடிஞ்சு வச்சிருந்த மொளகாப்பொடியை தூவுனா… அத்தோட துண்டக்காணோம் காணோமுனு ஓடுனவந்தே எந்தப் பக்கம் போனானு தெரியலை.

படக்குனு தூக்கத்தை விட்டு எந்திரிச்ச மலையாண்டி சுத்தி முத்திப் பாத்துட்டு தலமாட்டுல இருந்த மொளகாப்பொடி பொட்டலத்தை எடுத்துக்கிட்டு முத்துச்சாமியை நோக்கி ஓடினான். இம்புட்டு சண்டை நடக்குது சோவையேன் முண்டக்கூட இல்லாம அப்படியே தூங்கிக் கெடந்தான். முருகவேலு யண்ணே…யண்ணேனு உசிப்பி உசிப்பிப்பாத்தான். எந்திரிக்காம இருக்கவும் ஒரு ஒதை உதஞ்சி எந்திரினுட்டு முத்துச்சாமியை நோக்கி ஓடினான்.

படக்குனு எந்திரிச்ச சோவையனுக்கு தலை காலு புரியாம ஆடுதா கெளைஞ்சி போவுதாக்குமுனு அதை ஓடி மடக்குனான். மலையாண்டியும் முருகவேலும் மொளகாப்பொடி அள்ளித் முத்துச்சாமியப் புடுச்சிருந்தவே கண்ணுல தூவுனாங்கே. ஒடனே அய்யோ அம்மான்னு திருடனோட சேந்து முத்துச்சாமியும் கத்தினான்.

முருகவேலு எந்திருச்சவே தலமாடாடுல இருந்த மொளகாப்புடி பைய எடுத்துட்டு  ஓடிப்போயி முத்துச்சாமியப் புடுச்சிருந்தவே கண்ணுல அள்ளித் தூவுனான். ஒடனே ரெண்டுபேரும் அய்யோ அம்மான்னு திருடனோட சேந்து முத்துச்சாமியும் கத்த ஆரம்பிச்சிட்டான்… அந்தத் களவாணிப்பயலும் எந்தப் பக்கம் ஓடுனானு தெரிலை. இதைப் பாத்தவேன் ஆட்டைத் தூக்கிட்டு ஓடையிலே செவகாளி எறிஞ்ச கம்பு முதுகுல மடேர்னு பட்டுத்தெரிச்சு விழுந்ததும், தூக்குன ஆட்டைப் போட்டுட்டு ஓடிட்டான்.

செவகாளி ஒரு நாழி துடிதுடிச்சுப் போனா… முத்துச்சாமி மட்டும் கண்ணெரிச்ச தாங்க முடியாம கத்திட்டுக் கெடந்தான். காண்டா வெளக்கைப் பத்தவச்சு அவங்கண்ணுல வெள்ளாட்டம் பாலைப் பீச்சி ஊத்துனா செவகாளி. எரிச்ச அடங்கவும் அப்படியே படுத்திட்டான். நல்ல வேளை நாஞ்சொல்லிக்கொடுத்த சங்கதி சோடை போகலையினு முருகவேளை அணைச்சிக்கிட்டா. தெனமும் அந்திக்கெடையில பயலுக நாலுபேத்தையும் கூட்டிவச்சிக்கிட்டு களவாணிப் பயலுக வந்தா என்ன செய்யனும்னுக்கிறதச் சொல்லிக் கொடுப்பா செவகாளி. 

சோவையேன் எல்லா நடந்து முடிஞ்சுதே எந்திருச்சான். அவேன் பொறந்தப்ப வசந்தாக்கு ரெண்டு வயசு. ஆனா சோவையே பொறந்து எட்டே மாசத்துல வள்ளியம்மை மாசமாகி ஒன்றை வயசுல மலையாண்டிய பெத்துப்போட்டா. ஒழுங்கா பாலு இல்லாம சோகை புடுச்சு ஆளு மந்தமா இருப்பான். அதே அவனை சோவையனு கூப்பிடுறது. செவகாளிக்கு எறிச்சா தாங்க முடியாம சட்டையக் கழட்டிப் பாத்தா களவாணிப் பயே மாரப்புடுச்சு கசக்குனதுல ஒத்தநெஞ்சு வீங்கிப்போச்சு. கருது அறுக்கப் போவாம கெடை வயல்லையே இருந்துட்டா செவகாளி. காலையில வள்ளியம்மை கெடை வயலுக்கு சோத்தத் தூக்கிட்டு வந்தா. செவகாளி நடந்தைதச் சொல்லி இந்த ஊருல கெடை அடைச்சு போதும் இன்னைக்கு இரவைக்கி ஆட்டை ஓட்டிக்கிட்டு பயணம் போகனும்னு சொன்னா. தப்பிச்சு போனவங்கே பொம்பளையினு மறுபடியும் வந்தாலும் வருவாங்கே. கெடை வயல்லேருந்து பத்து பதினைஞ்சு வயக்கடப்புல உள்ள கெணத்துல ரெண்டு ஆளுக செத்துக்கெடக்கிறாங்கனு தகவல் வந்துச்சு. ஊருச் சனமே கெணத்துக்கு ஓடுச்சு.

000

எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகில் உடைகுளம் எனும் சிற்றூர். நான் கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிகிறேன். இதுவரை மனிதச் சிறகுகள், கீதாரியின் உப்புக்கண்டம் என்று இரு கவிதைத் தொகுப்புகளையும், குளம்படி என்ற புதினத்தையும் எழுதியுள்ளேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *