நீ யாருடன்
இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தாய் யென
நீளும் அம்மாவின் சொற்களுக்கு எதிராக நம் அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்
யென மழுகியவாறு கூறிய
மகனின் சொற்களுக்குள்
புதைந்து கிடக்கிறது
வீட்டின் குறுக்கு சுவரில்
ஆணியால் அறையப்பட்டிருக்கும் அப்பாவின் பழைய
புகைப்படத்தில் மிளிரும் கடைசி புன்னகைக்கான
ஓர் ஈர வாசம்.
*
வானத்தில்
பறந்து கொண்டிருப்பது
பறவையா யென
கேட்ட தன் மகளிடம்
ஆமாம் ஈரக்காற்றில்
பறந்து கொண்டிருப்பது
பறவை தான் யென கூற
பறந்து பறந்து வானம்
முழுவதிலுமாக
நகர ஆரம்பிக்கிறது
மரத்தின் நிழலை இழந்த
ஓர் பறவையின் இறகு ,
*
தெருவோரத்தில்
நாய்க்குட்டிகளோடு
விளையாடிக் கொண்டிருக்கிறது குழந்தை
நான் தூரத்திலிருந்தவாறு நோட்டமிட
அக்குழந்தையை
துரத்தி துழாவி நாவால்
நக்கி முத்தமிட்டவாறு மீண்டும்
விளையாட தொடங்கும்
சிறு குழந்தையாகிய
அந்த நாய்க்குட்டியினுடைய
அகமனதில் மினு மினுக்கிறது
ஒரு துளி அன்பின் நீர் வீழ்ச்சி ,
*
பள்ளிக்கூட
வாசலின் நிழலில்
சிறு கடை
வைத்து வியாபாரம் செய்யும்
அந்த பாட்டியின்
கண்களுக்குள்
நீங்காத நினைவுகளாக
அவ்வப்போது நிழலாடிக்கொண்டிருக்கிறது
தன்னுடைய சிறு வயதில்
அம்மா கொடுத்த
இரண்டு ரூபாயை வைத்துக்கொண்டு
அவ்வப்போது பள்ளி
இடைவேளையின்
நேரத்தில் மிட்டாய் கேட்டு வாங்கித்திண்று
மீந்த மிட்டாயை சட்டைப்பையில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு போய்
அப்பாவிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்கிய
பழைய கசந்த
நினைவின் நிமித்தங்கள் ,
*
ஆசையாக இருக்குடி
ஒரு முத்தம்
குடுக்கிறாயாடி யென்றேன்
அவளும் ஒரு முத்தத்தை
கொடுத்து மீசையை
பிடித்து இழுத்தவாறு
சீ கருமம் புடிச்சவனே
இன்னைக்கு என்னத்தையா
இப்படி குடிச்சிட்டு
வந்திருக்கிற யென்று
நீளும் அவளுடைய
வசை சொற்களுக்கு
நடுவில் உலர்ந்து பூத்திருக்கிறது
அவளுக்கும் எனக்குமான
இடையிலான ஓர் காதல் பூ
00
ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம், பண்ருட்டி,
புன்னகை இதழ் கொலுசு இதழ் வாசகசாலை இணைய இதழ்
ஆதிரை இதழ் புக் டே இணைய இதழ் என பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது ,