நட்சத்திரங்கள்
பேசிக்கொள்ளும்
இன்றைய நாளுக்கான
கடைசி நேர இரவில்
நானொரு நிலவாகவே
நகர்ந்துக் கொண்டிருக்கிறேன்
யார் மீதேனும்
விழுந்து பிழைத்து கொள்ளட்டும்
என் வெளிச்சத்தின் நிழல் ,
*
மரங்கள் பற்றியதான
எல்லா விதமான கனவுகளிலும்
கொஞ்சம் மழையும் இருந்தது
நிறைய வெயிலும் இருந்தது
சில பறவைகளும்
வரத்தொடங்கியிருந்தது
பல பறவைகளும் அங்கிருந்து
பறக்க தொடங்க ஆயத்தமாயின
அம்மரத்தின் கிளை
நீட்டிய இடத்தில் கொஞ்சம்
நிழலும் இருந்தது
மழையில் நனைந்து
வெயிலில் வெம்பிய
என் உடலை தூக்கிக்கொண்டு
நிழலில் ஒதுங்க மரம் இல்லை
கனவு மட்டுமே நிற்கிறது
மரத்தின் நிழலாக ,
*
பக்கத்து
வீட்டு நாய்க்குட்டியொன்று
குளிர் காய்ச்சல் வந்து
செத்துப் போக
பக்கத்தில் படுத்துக்கொண்டு
குழைந்து குழைந்து
அழுகிற என் மகளை
ஆற்றுப்படுத்த வாங்கி வந்த
பிஸ்கெட் ஒன்றை நீண்ட
சற்றென்று கவ்விக்கொண்டு
என் மகள் ஓட
பின்னோக்கியே
துரத்தி துரத்தி துழாவி
நாவால் நக்கி
முத்தமொன்றை இடுகிறது
இறந்து போன
நாய்க்குட்டியின் தாய்
தன் மகளென்று எண்ணியவாறு ,
*
பழைய
நினைவொன்றை
மீட்டுகிறது
எங்கிருந்தோ
காற்றில் மிதந்து வரும்
பறையிசையின் சப்தம்
எனக்குள்ளிருந்து யெழுந்து
எனக்கு நானே தனியாய்
இந்தா இப்படி குத்து
இந்தா அப்படி குத்து யென்று
ஆடிக் கொண்டிருக்கிறேன்
கால்கள் ஆடாமல்
மனம் ஆடிக்கொண்டிருக்கிறது
இன்னும் நின்றபாடில்லை
அப்பறை இசையின் அதிர்வுகள்
என் மனசெவில்களிலிருந்து ,
*
டேய் பாத்து போடா
யென்று யாரோ
ஒரு அக்கா தன் தம்பியை
பார்த்து கூற
திரும்பி திரும்பி பார்த்தவாறு
சரி அக்கா பார்த்து
போயிட்டு வரேன் யென்று
எனக்கு நானே
பேசிக்கொண்டே வருகிறேன்
வழியெங்குமாய் நின்று
நிழலாடுகிறது
அந்த அக்காவின் நிழல்
என் அக்காவின் நிஜங்களாக ,
*
ச.சக்தி
புன்னகை இதழ், கொலுசு இதழ், வாசகசாலை இணைய இதழ், ஆதிரை இதழ், புக் டே இணைய இதழ் என பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது ,