இப்பொழுது எழுதுவதும்
படிப்பதும்
பேசுவதும்
நானாகவே இருந்தாலும்
எனக்கென்னமோ
அது என் அப்பவின்
உழைப்பாகவே இருக்க கூடுமோ
என்ற நினைவு எனக்கு,
*
ஏண்டா
மொவனே
இன்னைக்கி
ஞாயித்து கிழமடா
உனக்கு
ஆட்டுக்கறி எடுக்கவா
இல்ல
கோழிக் கறி எடுக்கவாடா
யென மழுங்கும்
என் அப்பனின் சொல்லுக்கு
ஏம்மா இன்னைக்கி
ஒரு நாளாச்சியும்
மாட்டுக்கறி
வாங்கிட்டு வாயேம்பா
யென நீளும் தன் மகனுடைய சொற்களுக்குள்
தான் புதைந்திருக்கின்றது
உப்பு மிளகாய்
இஞ்சி கறிவேப்பிலை காரமென
நாக்கு துலாவும்
தூரத்தில் பக்கத்து
ஊட்டுல வேவும் மாட்டுக்கறியின் வாசம் ,
*
நேற்றை இரவில்
பொழிந்த மழையில் நனையாமல்
இருக்கிறது
குழந்தையின் கனவுகள் ,
,
கூரையின்
எரவானத்தின் கீழே
மண் சுவரில்
மழையை வரைந்து
கொண்டிருக்கும்
சிறுவனின் கையில்
முளைக்க ஆரம்பிக்கிறது மரத்தின் துளிர்,
,
வீடெங்கும்
நிரம்பி வழியும்
குழந்தையின்
சிரிப்பொலியில் மறைந்து கொள்கிறது நேற்று இரவு பெய்த
அடர்மழையின் சத்தம்,
,
தெருவெங்கும்
நாய்கள் குரைக்கும்
சத்தம் வின்னை கிழிக்கிறது
கனவின் வாசலில்
வந்து நிற்கிறார் அப்பா,
,
முந்தானை அவிழ்த்து
இரண்டு ரூபாய் நாணயத்தை
எடுத்து மகனின்
கைகளில் கொடுக்கும்
பொழுதெல்லாம்
அம்மாவின் கைகளில்
பூக்க ஆரம்பிக்கிறது
அன்பின் வேரில் பூக்கும் பாசபூ….!!!!!
*
மென்று தின்ற
பின்பும் செரிக்காத
திண்பண்டமாய் நெஞ்சு குழிக்குள்ளிலிருந்து
பிசைய ஆரம்பிக்கிறது
அம்மாவின் நினைவு
நினைவை தவிர
வேறொன்றுமில்லை
இப்பொழுதுக்கான என் கைவசம்
இரவு தோறும் யெழும்
தீரா கனவுகளை தலையனைக்கு
அடியில் மறைத்து வைத்திருக்கிறேன்
ஆராரோ ஆரிரரோ யென்று தாலாட்டு பாடலொன்றை பாடி
தூங்க வைத்துக் கொண்டிருக்கிறது
கனவுகளில் வாழும்
அம்மாவின் தாய்மடி ,
*
ஆடு செத்தாலும் அழுவோம்
நாய் செத்தாலும் அழுவோம்
பூனை செத்தாலும் அழுவோம்
ஏன் எங்கே ஏதோ
ஒரு காட்டில் யானை
செத்தாலும் அழுவோம்
நாளை நீயே செத்தாலும் அழுவோம்
அழுது அழுது
வற்றிய குளமாகிவிட்ட
எம் சேரி ஜனங்களின் கண்கள்
நாளை எங்களுக்காக
யார் அழ போகிறார்கள்
உன் ஊருக்கு
அருகாமையில்
தான் இன்னும் இருக்கிறது
என் சேரி சுடுகாடு தனியாய் ,
00

புன்னகை இதழ், கொலுசு இதழ், வாசகசாலை இணைய இதழ், ஆதிரை இதழ், புக் டே இணைய இதழ் என பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது ,