• வெடிச் சத்தத்தோடு
வெண் புகை
பரவும் வேளைகளில்
பதறியோடும் வெள்ளாடுகளை
வாரியணைத்து ஆற்றுப்படுத்துகிறான் இடையன்
,
வாங்கரிவாளோடு
வாகாய்த் திரிந்தும்
ஒடித்துப் போட
குலையில்லாத
கரிசலில்
வேலிக்காய்களே
விருந்தாகிறது ஆடுகளுக்கு
,
வெடித்து விப்போடிக் கிடக்கும்
மண்ணுக்கு களிம்பாகிறது
இடையனின் நினைவுகளில்
உலராத பச்சையம்
,
• குடித்த கரைகஞ்சி
வியர்வையும் மூத்திரமுமாய்
வெளியேறிட
சுருக்கம் விழுந்த வயிற்றோடு
சுமையான சம்மட்டி தூக்கி
அடித்தான் கருங்கல்லில்
,
பாறை மேடுகளை
சம்மட்டியால் சமம் செய்தவன்
வாழ்வில் மேடேறும்
வழி தேடித் தவித்தான்
,
அணைக்கும் அடித்தளத்திற்கும்
ஆதாரமானது
அவனுடைத்த கற்கள்
பிள்ளைகளுக்கும்
,
முதுமையால்
ஓய்வை ஏற்றவனின்
சிந்தனையிலும் பார்வையிலும்
அடைகாத்து கிடக்கின்றன
முனை மழுங்கிய உளிகள்
,
• அடி சுடும் அத்துவானக் காட்டில்
அனாதரவாய் பயணிப்பவன்
கண்ணுறுகிறான்
மஞ்சள் பூக்கள் சுமந்த
நெருஞ்சிச் செடிகளை
,
தாகித்தவனின்
வயிற்றைக் குளிர்வித்த
வெள்ளரி விளைந்த
காட்டில் தான்
பால் வற்றிய
எருக்கையும் பூத்திருந்தது
,
பருவத்தின் முதல் மழைக்கு
காத்திருக்கின்றது
உழவனோடு கொளஞ்சியும்
வாமடைக் கல்லில்
தவம் செய்யும் நத்தையும்
00

ச.முகிலன்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மார்க்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
“கரையேறும் கவிதைகள்”
“நீயே ஒளி” என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு இதழ்களில் கவிதைகளையும் நூல் விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.

