கோழிகளோடு
குஞ்சு குறுவான்களையும்
விரட்டி விரட்டிக் கொத்தும்
சண்டைச் சேவலை
விழுங்கிச் சென்றது
மலைச் சாரை
,
புயலுக்கும் சூறாவளிக்கும்
தப்பி வயதேறிய
மூதாய் மரத்தில்
சேவலைச் செரிக்க
சுற்றிய சாரை
ஒரு சேர ஒடித்தது
,
எவரும் வெல்ல முடியாதென எண்ணிய
சேவலின் ஆணவத்தையும்
மூதாய் மரத்தின் கிளைகளையும்
000
எத்தனை முறை கழுவியும்
போகவில்லை
புழுக்கை வாசம்
,
ஐப்பசி அடைமழையோடு
புதைத்து வந்தேன்
,
காம்பைச் சுற்றியிருந்த ரோமங்கள் இன்னும் கூட
விரலில் ஒட்டியிருக்கின்றன
,
ஆடு உரசுவதாக எண்ணி
அனிச்சையாய் சிலமுறை இரவில் தொடை தடவுகிறேன்
,
சமயத்தில்
என் விரல்களே
கொம்பாகின்றன
,
என்னையறியாது
விசும்பும் ஒலிக்கு
சொற்கள் சேர்த்தால்
அஞ்சலிப் பாடலாகி விடும்
,
புதைத்த இடத்தில்
மலர் வைத்தேன்
,
பசியாறிக் கொண்டிருக்கிறது ஒரு குட்டி
000
பணி முடிந்து
தாமதமாக
வீடு திரும்புவது
வழக்கமாகி விட்டது
,
வழியில் துரத்தும் ஞமலிகளின் வாயைப் பூட்டும்
வழியைக் கற்கவில்லை
மனிதம் கற்றவன்
,
மாதத் தொடக்கத்தில்
ரொட்டித் துண்டுகளை போட்டு
தன் வசமாக்கிக் கொண்ட பின்னர்
,
எதுவும் செய்யாதென்ற நம்பிக்கையில் அவனும்
ரொட்டித் துண்டு கிடைக்குமென்ற ஆசையில் ஞமலிகளும்
,
எழுதப்படாத ஒப்பந்தத்தை
ஒருசேர நம்புகிறார்கள்
000
முதல் குழந்தை பிறந்தவுடன்
முக்கெடா வெட்டுவதாய் வேண்டுதல்
,
வேண்டுதல் பலித்தவுடன் வேலைகள் துரிதமாகின
,
உறவுகளோடு
சென்று சேர்ந்தோம்
குலதெய்வக் கோவிலுக்கு
,
ஆட்டு உறுப்புகளின்
பங்குக்கு
டோக்கன் போடுகிறது
பங்காளிக் கூட்டம்
,
குடியும் அடியுமாய்
நிறைவடைந்தது
வழிபாடு
,
கூட்டத்தைச் சேர்த்து
குடும்பத்தை பிரித்ததாய் ஆவலாதி
,
மனக் கலக்கத்தோடு
சுட்ட சுவரொட்டியோடு
ஓடை மணலில்
அமர்ந்தேன்
,
அம்மனின் துருத்திய
நாக்காகத் தெரிந்தது
சுவரொட்டி
000
ச.முகிலன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மார்க்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
“கரையேறும் கவிதைகள்” “நீயே ஒளி” என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு இதழ்களில் கவிதைகளையும் நூல் விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.