ஜமா : விமர்சனப் பார்வையல்ல  வித்தியாசமான பார்வை

றிமுக இயக்குநர் பாரி இளவழகன் ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துத் வடதமிழகத்தின் தெருக்கூத்துக் கலைஞன் ஒருவன் தன் அப்பா இழந்த ஜமாவைக் கைப்பற்ற நினைக்கும் கதையை மிக அழகாகச் சொல்லியிருக்கும் படம். கத்தியும் ரத்தமும், சாதியும் மதமும் பிடித்து ஆடும் தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில் அடவு கட்டி தெருக்கூத்து ஆடியிருக்கிறார், அசத்தியிருக்கிறார்.

இந்தப் படம் குறித்தான விமர்சனப் பதிவு அல்ல இது. இந்தப் படத்தின் சில கதாபாத்திரங்களைக் குறித்த பார்வை இது. படத்தை மேலோட்டமாகப் பார்க்காமல் கொஞ்சம் ஆழ்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உற்று நோக்கினால் நம்மால் கண்டிப்பாக அவர்களின் உளவியலைக் கண்டு கொள்ள முடியும். அப்படித்தான் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சிவரை நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவரவர் சுயநலம் சார்ந்தே பல கதாபாத்திரங்கள் படத்தில் உலவுகின்றன.

இன்றைய சினிமாக்கள் குறியீடுகளால் நிறைந்து இருக்கின்றன. குறியீடு இல்லாத படம் எதைப் பேசப் போகிறது…? குறியீடு புரியாமல் படத்தை எதற்குப் பார்க்கிறாய்..? என்ற கேள்விகளே இன்று முன்னணியில் இருக்கின்றன. இவற்றைத் தவிர்த்துப் பார்த்தோமேயானால் பல நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன என்றாலும் நம் அவற்றிற்கான மரியாதையைக் கொடுப்பதில்லை என்பதே நிஜம். ஜமா கூட குறியீடுகள் எல்லாம் இல்லாமல் தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை, அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள், பணத்தேவைக்காக அடிமை வேலைக்கு செல்லும் நிலை, காதல், கோபம், ஆத்திரம், போராட்டம், ஆசை என எல்லாவற்றையும் சமவிகிதத்தில் கலந்து  கொடுத்திருக்கிறது என்றாலும் இந்தக் களம் பேசியிருப்பது ஜமாவுக்கான போராட்டத்தை மட்டுமல்ல தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலையும்தான்.

இன்றைய நிலையில் தமிழகத்தின் கிராமியக் கலைகளில் பாதிக்கு மேல் தொலைத்து விட்டோம். ஆடல் பாடல் என்ற கண்றாவி ஊருக்கு ஊர் மேடையேறிய போது அதனுடன் போட்டி போட  ஆபாசக் கூத்து நிகழ்த்திய கரகாட்டமெல்லாம் பல இடங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்போது கொங்கு கும்மி என்ற ஒன்று கொங்கு வட்டாரங்களில் பிரசித்தி பெற்றிருக்கிறது. ஒயிலாட்டம் என்ற ஒன்றில் ஒரு இரவில் இராமாயணக் கதை முழுவதையும் நடத்தும் கலைஞர்கள் இருந்தார்கள். அதுவும் கிட்டத்தட்ட கொங்கு கும்மி போல்தான் முப்பது நாப்பது பேர் ஒரு போல் உடையணிந்து கையில் ஒரு சிறு துண்டை வைத்துக் கொண்டு, வாத்தியார் ஒருவர் கையில் விசிலுடன் பாட்டுச் சொல்ல இவர்கள் ஆடுவார்கள். அதெல்லாம் போன இடம் தெரியவில்லை.

தென் தமிழகங்களில் நிகழ்த்தப்படும் கூத்தும் – நாடகம் – வட தமிழகத்தில் ஆடப்படும் தெருக்கூத்தும் கிட்டத்தட்ட ஒன்றுதான். கூத்தில் ஆண் பெண் இருவரும் நடிப்பார்கள். தெருக்கூத்தில் ஆண்களே பெண் வேடமும் இட வேண்டும். இவர்களுக்கு ஒரு மரத்தடியோ வீதியோ போதும். வெட்டவெளியில் அமர்ந்து தங்களது கதாபாத்திரத்துக்கான ஒப்பனைகளைச் செய்து கொள்வார்கள். ஒரு சிறிய இடத்தில் தெருக்கூத்தை நிகழ்த்திக் காட்டிவிடுவார்கள்.  கூத்து நிகழ்த்த ஒரு நாடக மேடை வேண்டும், மேடையில் பின்னே ஒப்பனை செய்வதற்கு மறைவான இடம் வேண்டும்.  இப்போதெல்லாம் நாடகமேடை கட்டிடமாக உருவெடுத்திருப்பதால் ஒப்பனை செய்பவர்கள் தப்பித்தார்கள் இல்லையேல் இந்த மறைவான இடம் என்பது கீற்றுகளால் அடைக்கப்பட்ட இடமாகத்தான் இருக்கும், அதைப் பிரித்துக் கொண்டு பார்க்கும் மனித மனம். தென் தமிழகக் கூத்துக்களில் இதிகாசங்கள் இலக்கியங்கள் ஆன்மீகப் பேச்சுக்கள் என எல்லாமே இருந்தாலும் ஆபாச பேச்சுக்களுக்கு அதிக இடம் கொடுப்பதால் மக்கள் மத்தில் கூத்து என்பது சற்றே தள்ளித்தான் நிற்கிறது. குறிப்பாக கூத்தே வேண்டாமென ஒதுக்கிய நிலையில் தற்போது நிறைவான விவாதங்கள், தர்க்கங்கள் எனக் கூத்துக்கு உயிரூட்டும் கலைஞர்கள் நிறைய இருப்பதால் மீண்டும் துளிர்க்கிறது. வட தமிழகத் தெருக்கூத்தோ கதைப் பாடலாய் இதிகாசங்களையும் வரலாறுகளையும் சொல்வதால் எல்லாருக்கும் பிடித்ததாகவே இருக்கிறது. ஆபாசமும் இல்லாமல் இருப்பது சிறப்பு.

இந்தப் படத்தில் பல இடங்கள் ரசிக்க வைத்தன என்றாலும் என்னை வெகுவாகக் கவர்ந்தது கூத்து வாத்தியார் தாண்டவத்தின் – சேத்தன்- இறப்புக்குப் பின் எரியூட்டும் இடம். நாடகத்தில் கர்ணனாக நடித்த நிலையில், அதே உடையில் இறந்து போக, எப்படி இறந்தாலும், அது விபத்தினால் ஏற்பட்ட இறப்பாக இல்லாத பட்சத்தில் உடலை வீட்டுக்குக் கொண்டு போய் செய்ய வேண்டிய முறைகள் எல்லாம் செய்துதான் அடக்கம் அல்லது எரியூட்டுதல் நிகழும். இங்கே எரியூட்டும் போது நாடத்தில் எந்தெந்தக் கதாபாத்திரங்களில் நடித்தார்களோ அதே கதாபாத்திரங்களாகவே வந்து நிற்பார்கள். ஏனென்றால் இறந்தவன் கர்ணன்… அவனின் இறப்புக்கு யார் வரவேண்டும்…? அன்னை குந்தி, மாமன் கிருஷ்ணன், நண்பன் துரியோதனன், சகோதரன் அர்ஜுனன்தானே. அப்படித்தான் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். என்ன ஒரு சிறப்பான காட்சி.

தாண்டவனைப் பற்றி நிறையவே பேசலாம். அவனை வில்லன் எனப் பார்த்தால் வில்லன்தான். பார்வையை சற்றே மாற்றிப் பார்த்தால் அவனும் சராசரி மனிதனே. தனக்கு நிகழ்ந்ததைத் திருப்பிக் கொடுக்க நினைக்கிறான். அதை அதிகாரம் மூலம் பெற்று விட முடியாது என்பதில் தீவிரமாக இருப்பதால் அவ்வப்போது அடக்குமுறையையும் தேவைப்பட்டால் அன்பையும் காட்டுகிறான். அந்த அடக்குமுறை கூட நாயகன் கல்யாணத்திடம் மட்டும்தான். மனைவி, மகளிடம் கோபப்பட்டால் கூட அதீதமாய் எதையும் காட்டி விடுவதில்லை.

கூத்தின் மீதான ஆர்வத்தில் அதைக் கற்றுக் கொண்டு  ஜமா – கூத்துக்குழு – ஒன்றை ஆரம்பிக்க நினைக்கும் இளவரசன் கூட்டுச் சேர்வது தாண்டவத்துடன். அதற்காகத் தாண்டவம் தன்னிடம் பணமில்லாத நிலையில் தன் வயதுக்கு வந்த மகளைப் பண்ணையத்துக்கு அனுப்பிப் பணம் கொடுக்கிறார். இளவரசனோ தான் ஆண் வேடம் கட்டிக் கொண்டு தாண்டவத்துக்குப் பெண் வேடங்களையே கொடுக்கிறார். இதனால் தாண்டவத்துக்குள் ஒரு வலி. இருவரும் சேர்ந்து ஆரம்பித்தோம் அதென்ன அவன் மட்டும் எப்போதும் ஆண் வேடம் கட்டுவது…? என்ற கேள்வி எழுகிறது… எல்லாருக்கும் வரும்தானே. அந்த வலியின் உச்சம்தான் தனது ஜமாவில் நடிக்கும் கல்யாணத்துக்குப் பெண் வேடம் மட்டுமே கொடுக்க வைக்கிறது.

எங்கப்பனை ஏமாற்றிட்டே எனக் கல்யாணம் கத்துமிடத்தில் யார்டா ஏமாத்துனா…? எங்கிட்ட பணம் வாங்கி ஏமாத்துனவன் உன் அப்பன்தானே… எனக் கேட்கும் தாண்டவத்தின் குரலில் ஒரு உண்மை இருக்கும். மகளைப் பண்ணையத்துக்கு அனுப்பிப் பணம் கொடுத்தவனாயிற்றே. அந்தப் பணத்தை இளவரசன் திருப்பியே கொடுக்கலையே, ஒட்டு உறவு இல்லை என அறுத்துக் கொண்டபின் மானஸ்தன் எனில் அந்தப் பணத்தைக் கொடுத்திருக்கணும்தானே… இங்க யார் ஏமாற்றியது…? இதற்கு நாயகனிடம் பதிலேதும் இருக்காது.

தாண்டவன் கொடுமைக்கார வில்லனெல்லாம் கிடையாது. தன் நண்பனை எதிர்த்துத் ஜமாவைப் பிடுங்கிக் கொண்டு விட்டோமோ, அவன் இறந்து விட்டானே என்ற குற்ற உணர்வில்தான் அவன் குடிக்கவே ஆரம்பிக்கிறான். அந்தக் குடியால் உடல் நலம் கெட்டுப் போனால் கூட அதை விடாமல் தொடர்கிறான் என்றாலும் மொடக்குடி எல்லாம் இல்லை. ஒரு கலைஞன் குடித்துவிட்டு மேடையேறுவது அந்தக் கலைக்கு அவன் செய்யும் துரோகம் என்றாலும் அவனால் குடிக்காமல் மேடை ஏற முடிவதில்லை, ஒருவேளை தனக்கு நண்பனின் ஞாபகம் வந்து எங்கே ஒழுங்காக நடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் கூட குடிக்கலாம் இல்லையா…

தாண்டவத்திடம் குடியும் கோபமும் இருந்தாலும் அவனுக்கு உடல்நிலை சரியில்லாத போது மனைவி, அவன் திட்டத் திட்ட சாப்பாடு ஊட்டுவதெல்லாம் அன்பின் உச்சம்தானே. தமிழ்ப்பட வில்லன்களின் மனைவிமார்கள் பெரும்பாலும் பயந்த சுபாபமாக இருப்பார்கள் இல்லையேல் நமக்கெதுக்கு வம்பு என ஒதுங்கி வாழ்வார்கள். இங்கே தாண்டவன் தன் மகள் எதிர்த்துப் பேசி ஊரை விட்டுப் போகும் போது கூட இழுத்துப் போட்டு அடைத்து வைக்கவோ, அடியாட்களை விட்டுப் பிடித்து வரவோ செய்யவில்லை. அவன் ஒரு சாதாரண மனிதன் என்பதைவிட இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை… அவ்வளவே. ரவுடியிசம் செய்தெல்லாம் எதையும் சாதித்து விடப்போவதில்லை என்பதை அவன் உணர்ந்தே இருக்கிறான். அவனைப் பொறுத்தவரை கூத்துதான் உயிர்… உயிர் பிரிவது கூட குந்தியாய் ஒப்பாரி வைத்து அழுது தவிக்கும் கல்யாணத்தின் நடிப்பைப் பார்த்து கலங்கிய கண்களுடன் அவன் முன்னே விழுந்துதானே…

தாண்டவத்தின் செய்கைகள் அவனை வில்லனாகக் காட்டினாலும் கூட அவனது பக்க நியாயங்களின்படி தன் வலியைத் திருப்பித் தருகிறான். அவன் வலியைத் திருப்பித் தருமிடம் நண்பனின் மகனாகவும், கலைக்காக தன்னையே மாற்றிக் கொண்டு வாழும் ஒரு இளைஞனாகவும் இருப்பதால் ஜமாவையும் பறித்துக் கொண்டு இவனையும் பாடாப்படுத்துறான் பாரு என்ற எண்ணத்தை நம்முள் சுலபமாக நுழைத்து விடுகிறான். தாண்டவன் இல்லையேல் ஜமா இல்லை என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கும் நடிப்பு.

இளவரசனை – ஸ்ரீ கிருஷ்ண தயாள் – எடுத்துக் கொண்டால் ஜமா ஆரம்பிக்க நண்பனிடம் காசு வாங்குபவன், அவனையும் தன்னுடன் இணைத்துக் கொள்பவன் அவனுக்குக் கொடுப்பதென்னவோ பெண் வேடம்தான். தெருக்கூத்தில் ஆண் வேடத்துக்குத்தான் மரியாதை என்பதாய்க் காட்டப்படும் போது ரெண்டு பேரும் பணம் போட்டுத்தானே இதை ஆரம்பித்தோம். ஒரு நாடகத்தில் அவனுக்கும் ஆண் வேடம் கொடுப்போமே என்று நினைக்காதவனாய் இருப்பதுடன் எல்லாவற்றிற்கும் கோபப்படுபவனாக, எல்லார் முன்னிலையும் தாண்டவத்தைத் திட்டுபவனாகவே இருக்கிறான்.

ஜமாவை இழந்தபின் குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் போது என்னோட கோபம்தான் என்னைய இப்படி ஆக்கிருச்சு என்று புலம்புகிறான். சரிப்பா நீ அர்ஜூனன் கட்டு, இப்ப என்னாகிப் போச்சு… நான் திரௌபதி கட்டிக்கிறேன்னு சொல்லியிருந்தான்னா குடியும் இல்லை… இழப்பும் இல்லை. சொல்ல விடாமல் தடுத்தது அவனின் ஈகோ.

‘அவனுக்கு எது பிடிச்சிருக்கோ அதைப் பண்ணட்டும் தடுக்காதே’, ‘என்னோட கோபத்தை அவனுக்கு கொடுத்துடாதே’ என மகன் தாண்டவத்திடம் பெண் வேடமிட்டுத் திரும்பும் போது தன் மனைவியிடம் சொல்லும் இளவரசன் கோபத்தால்தான் அழிகிறான். ஆம் கோபமும் ஈகோவும்தான் அவனைக் கொல்கிறது, கூடவே இருக்கும் ஜால்ராக்களும்தான்.

தனி ஜமா ஆரம்பிக்கணும், எங்கப்பாவை ஏமாற்றிப் பறித்த ஜமாவை நான் திரும்பப் பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருந்தாலும் பெண் வேடங்கள் மட்டுமே ஏற்பதால் கிட்டத்தட்ட பெண் சாயலிலேயே உலாவரும் கல்யாணம் – பாரி இளவழகன் – ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தையும் அத்தனை அழகாக நடித்து, குந்தியாக நடிக்கும் போது பார்க்கும் நம்மை மட்டுமல்ல எதிரே கர்ணனாக அமர்ந்திருக்கும் தாண்டவனின் கண்களையும் குளமாக்கி விடுகிறார்.

கல்யாணத்துக்கு காதல், கல்யாணம் இவற்றையெல்லாம் விட கூத்து மீதான நேசமே அதிகம். அப்பா பிரச்சினைக்குப் பின் ஊரை விட்டுப் போய்விடலாம் என முடிவு செய்யும் போது ஆற்றாமையில் அழுவான். அதன்பின் தாண்டவத்திடம் போய் பெண் வேடம் கொடுங்க மாமா என்று நிற்பான். மாமா இல்லை அண்ணன்னுதான் கூப்பிடணும் என்றதும் அப்படியே ஒத்துக்கொள்கிறான். அவனுக்குத் தேவை கூத்தாட வேண்டும். கல்யாணம் கூத்தைக் காதலிக்கப் பிறந்தவன் என்பதைப் படம் நெடுகிலும் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

படத்துக்கு இளையராஜாவின் இசை மிகப்பெரும் பலம். சமீபமாய் பாத்திரங்களை உருட்டி, நாரசமாய் கொடும் இசைமழை பொழிந்து கொண்டிருக்கும் போது தென்றலாய் வருடும் இசை ஜமாவைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. பல இடங்களில் மௌனமே இசையாகிறது. குந்தி தேவியாக கல்யாணம் ஒப்பாரி வைக்கும் இடத்தில் இழையோடும் வயலின் மனதை ஏதோ செய்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை இசை நம்முள் இனம்புரியாத ஒரு காதலை விதைத்துக் கொண்டே இருக்கிறது.

இறுதிக் காட்சியில் அர்ஜூனனாக மாறி, மின்சாரம் இல்லாத நிலையில் ஏற்றி வைக்கப்பட்ட தீவட்டிகளுக்கு நடுவே கல்யாணம் ஆடும் போது ஆரம்பத்திலிருந்து அவன் கேட்ட, அவன் அம்மா பார்க்க ஆசைப்பட்ட ஒரு வேடத்தை நம் கண் முன்னே நிறுத்தும் போது அதைப் பார்க்க ஊர்ச்சனம் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். கூத்துக் கலைஞர்கள் மட்டுமே அந்த இடத்தில் இருப்பார்கள். மின்சாரம் வந்து, ஊர் மக்களெல்லாம் வந்து அவனைப் பாராட்டி இருந்திருக்கலாமோ எனப் பார்ப்பவர்களுக்குத் தோன்றும் என்றாலும் மற்ற படங்களைப் போல் அப்படியொரு முடிவை வைக்காததே ஜமாவுக்குச் சிறப்பு. இதுதான் எதார்த்தம்.

‘நீ திறமைசாலின்னு மத்தவன் சொல்லக் கூடாது… நீதான் சொல்லணும்’ என்ற வசனம் உண்மைதான். முதல் படத்தில் பாரி அதை நிரூபித்திருக்கிறார்.

ஜமா ஒவ்வொன்றையும் பார்த்தே செய்திருக்கிறார்கள்.

++

நான் பரிவை சே,குமார்,

நித்யா குமார் என்ற பெயரில் முகநூலில் இருக்கிறேன்.

கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் விருப்பம். இதுவரை எதிர்சேவை, வேரும்

விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு

என்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும்

எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன்

பொற்கிழி விருது பெற்றிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *