ஒரு குடியானவனுக்கு சைமன், தாரஸ், ஜவான் என்ற மூன்று பிள்ளைகளும் மார்த்தா என்ற ஓர் ஊமைப் பெண்ணும் இருந்தனர். சைமன் பட்டாளத்தில் சேர்ந்தான். தாரஸ் பட்டணத்தில் வியாபாரம் துவக்கினான், ஐவானும், தங்கையும் நிலத்தில் உழைத்துப் பெற்றோருக்கு உதவியாக இருந்தனர்.

சைமன் ராணுவத்தில் பெரிய பதவிக்கு உயர்ந்தான்; ஒரு பிரபுவின் மகளை மணந்தான். கைநிறையச் சம்பாதித்தான், இருந்தாலும் அவனுக்குக் கடன் அதிகமாகியது. ஏனென்றால் அவனுடைய மனைவி வரவுக்கும் அதிகமாகச் செலவு செய்தாள். சைமனுக்கு அரசர் நிலங்களை மான்யமாக அளித்திருந்தார். அவற்றில் பயிர்த்தொழில் செய்ய அவனுக்கு முன் பணம் தேவைப்பட்டது.

சைமன் அப்பாவிடம் போய், ”அப்பா! உழவுக்கு ஏற்பாடு செய்ய அவசரமாக எனக்குப் பணம் தேவைப்படுகிறது. எனக்குச் சேர வேண்டிய பங்கைச் சொத்திலிருந்து பிரித்துக் கொடுங்கள்” என்று கேட்டான்.

”சைமன்! நீ சம்பாதித்த பிறகு வீட்டுக்கு ஒன்றுமே கொண்டு வரவில்லை. உனக்கு எதற்குப் பங்கு? ஜவானும் மார்த்தாவுமே உழைக்கின்றனர். நீ அவர்களுக்கு அநீதி இழைக்கலாமா? எதற்கும் அவனை ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன் என்று சொல்லி அவர் ஜவானை அணுகினார். “அப்பா! சைமனுக்கு என்ன வேண்டுமோ அவன் எடுத்துக் கொள்ளட்டுமே!” என்றான் ஜவான் தாராளமாக. தேவையான கருவிகளை எடுத்துக் கொண்டு சைமன் தன் நிலத்தில் உழவுக்கு ஏற்பாடு செய்தான்.

தாரசுக்கு வியாபாரத்தில் பெருத்த லாபம் கிடைத்தது. அவன் ஒரு வியாபாரியின் மகளைக் கல்யாணம் செய்து கொண்டான். வியாபாரத்தை வளர்க்க அவனுக்குப் பணம்’ தேவைப்பட்டது. அப்பாவிடம் போய்த் தன் பங்கைக் கேட்டான். அப்பா ஜவானிடம் கேட்டார். ஜவான் தாராளமாக ஒப்புக் கொண்டான். கிடங்கில் இருந்த தானியங்களையும், ஒரு நல்ல குதிரையையும் தாரஸ் எடுத்துக் கொண்டான். நிலமும் ஒரு கிழட்டுக் குதிரையும் மட்டுமே மிஞ்சின. ஜவானும், மார்த்தாவும் அவற்றை வைத்துக் கொண்டு உழவைக் கவனித்தனர். பெற்றோரையும் காப்பாற்றினர். ‘பிழைக்கத் தெரியாதவன்’, ‘அசடு’, ‘முட்டாள்’- போன்ற பட்டங்களையும் ஜவான் சம்பாதித்துக் கொண்டான்.

அந்த மூன்று பிள்ளைகளும் பாகப் பிரிவினையின் போது சண்டை போடுவார்கள் என ஒரு கிழட்டுப் பேய் எதிர்பார்த்தது. அதற்கு மாறாக அவர்கள் சந்தோஷமாகப் பிரிந்து போனதால், அது ஏமாற்றமடைந்தது. அவர்கள் மீது வஞ்சம்’ தீர்த்துக் கொள்ள எண்ணியது.

கிழட்டுப்பேய் தன் குழந்தைகளான மூன்று குட்டிப் பிசாசுகளையும் கூப்பிட்டு, “குழந்தைகளே! உங்களுக்கு ஒரு வேலை தருகிறேன். சைமன், தாரஸ், ஜவான் ஆகிய மூவரும் சகோதரர்கள். பாகப்பிரிவினை காரணமாக அவர்களுக்குள் சண்டை வந்திருக்க வேண்டும். ஆனால் ‘ஜவான் என்னும் முட்டாள் நல்ல மனத்தோடு விட்டுக்கொடுத்து என் திட்டங்களைக் கெடுத்து விட்டான். ஆகவே நீங்கள் உடனே அவர்களிடம் செல்லுங்கள். அவர்களுடைய அன்பையும், சந்தோசத்தையும் குலைத்து, விரோதத்தையும், துன்பத்தையும் வளர்க்க, வேண்டும். புறப்படுங்கள்!” என்று சொல்லி அனுப்பியது.

குட்டிப் பிசாசுகள் மூன்றும் கூடிப் பேசின. ஒவ்வொரு பிசாசும் ஒரு சகோதரனின் வாழ்வைக் குலைப்பது என்றும், முதலில் வேலையை முடிக்கும் பிசாசு மற்ற இரண்டுக்கும் உதவ வேண்டும் என்றும் தீர்மானித்தன.

குறிப்பிட்ட நாளில் மூன்று குட்டிப்பிசாசுகளும் கூடின. தங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டன. சைமனிடம். போன பிசாசு முதலில் தன் கதையைக் கூறியது “நான். சைமனைத் தைரியசாலி ஆக்கி அரசனிடம் போகச் செய்தேன். அரசருக்காக அவன் இந்த உலகத்தையே ஜெயிப்பதாக வீரம் பேசினான். அரசர் அவனை ஒரு பெரிய படைக்குத் தளபதி ஆக்கி இந்தியாவைப் பிடிக்குமாறு அனுப்பினார். போருக்கு முதல் நாள் மழையை வரவழைத்தேன். சைமனின் வெடிமருந்துகள் நனைந்தன. மேலும், இந்தியப் படையில் நான் ஆட்களை அதிகரித்தேன். இரு படைகளும் மோதின. சைமனின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இயங்கவில்லை. சைமனின் வீரர்கள் பயந்து ஓடினர். இந்தியப் படை அவர்களைச் சின்னாபின்னமாக்கியது. அரசர் கோபமடைந்து சைமனைச் சிறையில் அடைத்திருக்கிறார். விரைவில் நான் அவனை வெளியேற்றி அவனுடைய அப்பாவிடம் அனுப்பப் போகிறேன். என் வேலை அதோடு முடிகிறது.. உங்களுக்கும் விரைவில் உதவுவேன்.”

இரண்டாவது குட்டிப் பிசாசு பேசியது “நான் தாரசைத் தொடர்கிறேன். அவனுடைய மனத்தில் பேராசையை எழுப்பியிருக்கிறேன். எதைப் பார்த்தாலும் வாங்குகிறான். கையிலிருந்த ரொக்கத்தை எல்லாம் செலவழித்து விட்டான். ‘பணம், பணம்’ என்று அலைகிறான். நாலா பக்கங்களிலிருந்தும் அவனை அழுத்துகிறது. கடன் என்னும் பள்ளத்தில் கீழே கீழே போய்க் கொண்டே இருக்கிறான். அவன் கடன்களை அடைக்கத் துவங்குவதற்குள் நான் அவனுடைய சரக்குகளை அழித்து விடுவேன். இன்னும் ஒரே வாரத்தில் தாரஸ் வியாபாரத்தை விட்டுவிட்டு ஓடி விடுவான்.”

கடைசியில் மூன்றாவது குட்டிப் பிசாசு தன் கதையை மொழிந்தது- நான் அறிவில்லாத ஜவானிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன். முதலில் அவனுக்கு நான் வயிற்று வலியை உண்டாக்கினேன். அந்த முட்டாள் வலியை லட்சியம் செய்யாமல் வழக்கம்போல வழக்கம் போல் வேலைக்கு வந்து விட்டான். கலப்பையைப் பிடித்துக் கொண்டு உழுதான். நான் வயலின் மண்ணைக் கெட்டிப்படுத்தினேன். கலப்பையை ஒடித்தேன். பலவித தொல்லைகளை கொடுத்தேன். அவன் எதற்கும் மசியவில்லை. அவன் புதிய கலப்பையைக் கொண்டு வந்து, வெறி பிடித்தவன் போல உழுதான். ஜவான் மாடு போல உழைக்கிறான். அவனை முறியடிப்பது கடினமாக இருக்கிறது. நீங்களும் வந்து உதவினால்தான் முடியும்.”

கூட்டம் முடிந்ததும் குட்டிப்பிசாசுகள் தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றன.

ஜவான் உழுவதற்கு இன்னும் ஒரு சின்னத் துண்டு நிலமே பாக்கி இருந்தது. அதில் ஏர் நகர மறுத்தது. ஏரின் அடிப்பாகத்தை யாரோ பிடித்து நிறுத்துவது போல இருந்தது. ஜவான் மண்ணுக்கு அடியில் கையை விட்டு ஏதோ ஒன்றைப் பிடித்து வெளியே இழுத்தான். சிறிய அளவில் கன்னங் கரேலென்று நீண்ட வாலுடன் குட்டிப்பிசாசு ஒன்று காட்சி அளித்தது.

தனக்குத் தொல்லை அளித்த பிசாசை ஜவான் கொல்லப் போனான். ”கொல்லாதே! என்னை விட்டுவிடு. செய் நீ கேட்கும் உதவியைச் செய்கிறேன்”, என்று பிசாசு கெஞ்சியது. ”என் வயிற்று வலி தீர வேண்டும்”, கேட்டான். என்று ஜவான்.

உடனே பிசாசு பூமிக்குள் சென்று மூன்று வேர்களை எடுத்து ஜவானிடம் கொடுத்தது. ‘”இதில் ஒன்றைச் சாப்பிட்டால் எல்லா வலிகளும் தீரும்” என்றது. ஐவான் ஒரு வேரைச் சாப்பிட்டான். வலி நீங்கியது. மற்ற இரண்டு வேர்களைப் பத்திரமாக வைத்துக்கொண்டான். குட்டி பிசாசு பூமிக்குள் பாய்ந்து மறைந்தது.

மாலையில் ஜவான் வயலிலிருந்து திரும்பினான். சிறையிலிருந்து தப்பித்த சைமன் தன் வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். சைமன் ஜவானிடம், ‘எனக்கு வேலை போய் விட்டது. மறுபடியும் வேலை கிடைக்கும் வரை நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்!” என்று கேட்டான். ஜவான் ஒப்புக் கொண்டான்.

சைமனின் குட்டிப் பிசாசு தன் வேலையை முடித்துக் கொண்டு ஜவானின் குட்டிப் பிசாசுக்கு உதவி செய்ய வந்தது. ஆனால், அதைக் காணவில்லை. ஏதோ ஆபத்து வந்து அது மறைந்திருக்க வேண்டும் என்று ஊகித்தது. ஜவானைத் துன்புறுத்தும் பணியை அது மேற்கொண்டது.

ஜவானுடைய வேறொரு நிலத்தில் பயிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்தன. ஜவானும், தங்கையும் கதிர்களை அறுக்க ஆரம்பித்தனர். பயிரின் மறைவில் ஒளிந்து கொண்டு குட்டிப் பிசாசு அரிவாளை ஒழுங்காக நகர விடாமல் தொந்தரவு செய்தது. ஜவான் புதிய அரிவாளை எடுத்து ஒரே மூச்சில் அறுவடையை முடித்தான். வண்டியில் ஏற்றுவதற்காகக் கதிர்களைச் சிறுசிறு கட்டுகளாகச் செய்து அடுக்கினான்.

பிசாசு கட்டுகளின் இடையே புகுந்து கொண்டு அவற்றை அழுகச் செய்தது. ஜவான் ஒரு முள் கரண்டியால் அதைக் குத்தி வெளியே எடுத்தான். *மறுபடியும் வந்து விட்டாயா?” என்று கோபத்தோடு கேட்டுக் கொண்டே அதைக் கொல்லப் போனான். தன்னை விட்டுவிடும்படி பிசாசு கெஞ்சியது. பதில் உதவியாக அது வைக்கோல் கட்டுகளைப் போர் வீரர்களாகவும், வீரர்களைப் பழையபடி வைக்கோல் கட்டுகளாகவும் மாற்றச் செய்யும் இரு அரிய பாடல்களை ஜவானுக்குக் கற்பித்தது. பிறகு பூமிக்குள் ஓடி மறைந்தது. வீரர்கள் சேர்ந்து வழங்கும் வேடிக்கை யான இசையைக் கொண்டு தன் ஊர் மக்களை மகிழ்விக்கலாம் என்று ஜவான் எண்ணினான்.

களத்து மேட்டிலிருந்து ஜவான் வீடு திரும்பினான். கடன்களை அடைக்க முடியாத தாரஸ் தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தான். ஜவான் இன்முகத்தோடு அவர்களை வரவேற்றுத் தன்னோடு தங்கும்படி கேட்டுக் கொண்டான்.

தாரசின் குட்டிப் பிசாசு தன் பணியை முடித்துக்கொண்டு ஜவானின் குட்டிப் பிசாசுகளைத் தேடியது. காணவில்லை. ஏதோ ஆபத்து வந்து மற்ற இரண்டு பிசாசுகளும் மறைந்திருக்க வேண்டும் என்று அது ஊகித்தது. ஆகவே ஜவானின் நலன்களைக் கெடுக்கும் பணியை அது மேற்கொண்டது.

சகோதரர்களுக்கு ஜவானின் வீட்டில் இடம் போதவில்லை. பட்டணத்து நாகரிகத்தில் முழுகியிருந்த அண்ணிகள் இருவருக்கும் பட்டிக் காட்டு ஐவானின் தோற்றமும், செய்கைகளும் அறவே பிடிக்கவில்லை. ஒரு புதிய இல்லம் கட்டும்படி அவர்கள் ஆலோசனை கூறினர். இல்லத்திற்கு மரம் கொண்டுவர ஜவான் காட்டிற்குப் போனான். உயரமான மரங்களின் கிளைகளை வெட்டினான். வெட்டப்பட்ட கிளைகள் கீழே விழவில்லை. மேலேயே சிக்கிக் கொண்டன. மரத்தின் உச்சியில் அந்தக் குட்டிப் பிசாசு அமர்ந்து கொண்டு பல விதங்களிலும் அவனுக்கு இடைஞ்சல் விளைவித்தது. களைப்பு மேலிட ஜவான் மரத்தடியில் உட்கார்ந்தான். அன்றைக்கு அவனுடைய வேலையைத் தடுத்து நிறுத்தி விட்டதாகக் குட்டிப் பிசாசு எண்ணிக் குதூகலித்தது.

ஜவான் திடீரென எழுந்தான். ஒரே மூச்சில் அநேக மரங்களை வரிசையாக வெட்டிக் கீழே சாய்த்தான். கீழே விழுந்த மரத்தின் அடியில் குட்டிப் பிசாசு சிக்கிக் கொண்டது. அதனால் எழுந்திருக்க முடியவில்லை. ஜவானின் பார்வை தற்செயலாக அதன் மீது விழுந்தது. பழைய குட்டிப் பிசாசு என்று நினைத்து அதைக் கொல்வதற்காகக் கோடரியை ஓங்கினான். ”என்னைக் கொல்லாதே! உனக்கு ஒரு உதவி செய்கிறேன்”, என்று சொல்லி, ஓக் மரத்தின் இலைகளைத் தேய்த்துப் பவுன் காசுகள் வரவழைக்கும் வித்தையை அது அவனுக்குக் கற்பித்தது. குழந்தைகள் உருட்டி விளையாடப் பொற்காசுகள் உதவும் என்று ஜவான் கருதினான். மூன்றாவது குட்டிப் பிசாசும் பூமிக்குள் பாய்ந்து மறைந்தது.

ஐவானும்,சகோதரர்களும் தனித் தனியே வீடு கட்டிக் கொண்டு வசித்தனர். அறுவடை முடிந்ததும் ஜவான் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான். தொழிலாளர்களின் விருந்து தங்களுக்குப் பிடிக்காது என்று சொல்லி மூத்த சகோதரர்கள் இருவரும் ஒதுங்கினர். ஊரார் அனைவரும் உற்சாகமாக அதில் கலந்து கொண்டனர். விருந்தில் உணவிற்குப் பிறகு பாட்டு, ஆட்டம் எல்லாம் நிறைய இருந்தன.

“என்னைப் பற்றி பாடுங்கள்; பரிசு தருகிறேன்”, என்று ஜவான் பெண்களிடம் கூறினான். அவர்கள் பாடினர். ஜவான் காட்டுக்குள் ஓடி ஒரு கூடை நிறைய பொற் காசுகளைக் கொண்டு வந்து இறைத்தான். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றனர்.

இன்னொரு அதிசயத்தையும் ஜவான் அவர்களுக்குச் செய்து காட்டினான். வைக்கோல் கட்டிலிருந்து வீரர்களை வரவழைத்தான். அவர்கள் இனிமை யாகப் பாடி இசைக் கருவிகளை வாசித்தனர். விருந்தினர் கேட்டு மனம் மகிழ்ந்தனர்.

அடுத்தநாள் ஜவானைத் தேடிக் கொண்டு சைமன் வந்தான்; ”உன்னிடம் நிறைய வீரர்கள் இருக்கிறார்களாமே? எனக்கு ஒரு படையைக் கொடுத்தால் நான் ஒரு நாட்டை வெல்லுவேன்” என்றான். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஜவான் உடனே வைக்கோல் கட்டுகளை வீரர்களாக மாற்றிக் கொடுத்தான். சைமன் அவர்களுக்குத் தலைமை ஏற்று நடத்திச் சென்றான்.

சிறிது நேரங்கழித்து ஜவானைத் தேடித் தாரஸ் வந்தான்; “உன்னிடம் நிறையப் பொற்காசுகள் இருக்கிறதாமே? எனக்குக் கொஞ்சம் கொடுத்தால் நான் இந்த உலகத்தையே விலைக்கு வாங்குவேன்” அதைக் கேட்டு வியப்புற்ற ஜவான் ஒக் மரத்தின் இலைகளைக் காசுகளாக மாற்றிக் கொடுத்தான். தாரஸ் அவற்றைப் பெற்றுக்கொண்டு பட்டணத்தில் மறுபடியும் வியாபாரம் தொடங்கினான்.

சைமன் ஒரு நாட்டை வென்று அரசன் ஆனான். ஆனால் வீரர்களைக் காப்பாற்ற அவனிடம் போதிய பவுன் காசுகள் இருக்கவில்லை. வியாபாரம் செய்த தாரஸ் பொற்காசுகளைக் குவித்தான். ஆனால் அவற்றைப் பாதுகாக்க அவனிடம் போதிய வீரர்கள் இருக்கவில்லை. சைமனும் தாரசும் மேலும் பணத்தையும் படைகளையும், வாங்கி வர ஜவானிடம் போயினர். ”எனக்கு இன்னும் கொஞ்சம் வீரர்கள் வேண்டும்” – ஜவானிடம் சைமன் கேட்டான்.

“இனிமேல் உனக்கு வீரர்களைத் தர முடியாது”, என்று உறுதியாக ஜவான் மறுத்துவிட்டான்.

“எவ்வளவு பேர் வேண்டுமானாலும் தருகிறேன் என்று முன்பு சொன்னாய். இப்போது முட்டாள் தனமாக முடியாது என்று சொல்கிறாயே! என்ன காரணம், தம்பி!”என்று சைமன் கேட்டான்.

இந்த ஊர்ப் பெண்ணின் கணவனை உன் வீரர்கள் யுத்தத்தில் கொன்று விட்டனர். அவள் துக்கம் தாங்காது அழுது கொண்டிருக்கிறாள். வீரர்கள் என்றால் இனிய இசை வழங்கி மக்களை மகிழ்விப்பார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் இரக்கம் இல்லாமல் கொலை செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது. வீரர்கள் வேண்டும் என்று மறுபடியும் கேட்காதே!” என்று தீர்மானமாகச் சொன்னான் ஜவான்.

அடுத்து தனக்குப் பொற்காசுகள் வேண்டும் என்று தாரஸ் கேட்டான். அதற்கும் ஜவான் மறுத்து விட்டான். தாரஸ் காரணம் கேட்கவே,

“மைக்கேலின் பெண்ணிடம் ஒரு பசு இருந்தது. குழந்தைகள் அந்தப்பாலைப் பருகி வந்தனர். ஒருநாள் உன் கணக்குப் பிள்ளை சில பொற்காசுகளைக் கொடுத்து அந்தப் பசுவை ஓட்டிச் சென்று விட்டான். குழந்தைகள் பால் இல்லாமல் பசியால் தவிக்கின்றனர். பொற்காசுகளை வைத்துக் கொண்டு பிள்ளைகளுடன் விளையாடுவாய் என்று நினைத்தேன். ஆனால் அவர்களுடைய பசுவைப் பறித்துக்கொண்டு அவர்களைப் பட்டினி போட்டு விட்டாயே! இனிமேல் என்னிடம் காசு கேட்காதே!” என்று கோபத்தோடு கூறினான் ஜவான்.

சைமனும், தாரசும் தங்கள் உடைமைகளில் ஒரு பாதியை மற்றவருக்கு வழங்கி, இருவரும் அரசர் ஆயினர். இன்பமாக வாழ்ந்தனர். ஜவானும், அவன் ஊமைத் தங்கையும் வழக்கம் போல் வயலில் உழைத்துத் தங்கள் பெற்றோரை அன்போடு காத்தனர்.

ஒருசமயம் ஜவானின் நாய்க்கு நோய் கண்டது. அவனிடமிருந்த வேர்களில் ஒன்றைத் தற்செயலாக அது விழுங்கியது. உடனே அதற்கு நோய் தீர்ந்தது. அதேசமயம் அந்நாட்டு அரசகுமாரி நோயுற்றாள். மருந்துகள் பலிக்கவில்லை. திருமணம் ஆகாத ஆண்மகன் யாராவது அவளுடைய நோயைத் தீர்த்தால், அவனுக்கு அரசகுமாரியை மணம் செய்வதாக மன்னர் அறிவித்தார்.

பெற்றோர்கள் தூண்டவே, அபூர்வ வேரை எடுத்துக் கொண்டு அரசகுமாரியைக் குணப்படுத்த ஜவான் புறப்பட்டான். வழியில் நோயாளியான ஒரு பிச்சைக்காரியைக் கண்டான். அவள் மீது இரக்கப்பட்டுத் தன்னிடமிருந்த ஒரே வேரை அவளுக்குக் கொடுத்தான். பிச்சைக்காரி நோய் நீங்கி அவனை வாழ்த்திச் சென்றாள்.

அரசகுமாரிக்காகவும் ஜவான் இரங்கினான். தன்னிடம் வேர் இல்லாவிட்டாலும் அவளைக் காண்பதற்காக அரண்மனைக்குப் போனான். ஜவான் அவளுடைய அறையில் நுழைந்ததும் அவள் குணமடைந்தாள்! மன்னர் ஜவானைப் பாராட்டி, அரசகுமாரியை அவனுக்கு மணம் முடித்தார். சில தினங்களில் மன்னர் இறக்கவே. ஜவான் அந்த நாட்டு அரசன் ஆனான்.

மூன்று குட்டிப் பிசாசுகளிடமிருந்தும் செய்தி வராமல் போகவே, கிழட்டுப் பேய் அவற்றைத் தேடிப் போயிற்று. எங்கும் காணவில்லை. அவை மாயமாக மறைந்திருந்தன. சைமனும், மற்ற இரு சகோதரர்களும் அரசர்களாகி அன்போடு வாழ்ந்தனர். அதைக் காணச் சகிக்காத கிழட்டுப் பேய் தானே முன் நின்று சகோதரர்களுக்கிடையே விரோதத்தை உண்டாக்கி அவர்களை அழிக்கத் தீர்மானித்தது.

கிழட்டுப் பேய் ஒரு பெரிய ராணுவ அதிகாரியாக வேடமணிந்து கொண்டது. அந்த அதிகாரி சைமனிடம் வேலைக்கு அமர்ந்தார். அவருடைய ஆலோசனையைக்’ கேட்ட சைமன் இளைஞர்களுக்குக் கட்டாய ராணுவ சேவையைக் கொண்டு வந்தான். பயங்கரச் சேதத்தை விளைவிக்கும் குண்டுகளைத் தயாரித்தான். அண்டை நாடுகளைப் பிடிக்க ஆசைப்பட்டான்.

இந்திய அரசனைத் தாக்கும்படி சைமன் தளபதிக்குக் கட்டளையிட்டான். இந்திய அரசன் பெண்களையும் சேர்த்துப் பெரும் படை திரட்டியிருந்தான். அவனிடம் பறக்கும் குண்டுகள் இருந்தன. போரில் இந்திய அரசன் வென்றான். சைமன் தோல்வியுற்று நாட்டை விட்டு ஓடினான். கிழட்டுப் பேய் ஒரு வியாபாரியாக வேடத்தை மாற்றிக் கொண்டது. அந்த வியாபாரி தாரசின் நாட்டுக்குச் சென்று தொழிலைத் துவக்கினார். அவர் அகப்பட்ட பொருள்களை எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்கினார். அவற்றைப் பதுக்கி வைத்தார். நாட்டில் பணம் பெருகுகிறது. பொருள்கள் அரிதாயின. நாளடைவில் தாரஸ் அரசனின் தேவைக்குக் கூட எதுவும் கிடைக்கவில்லை. வரிகள் மட்டும்தான் கிடைத்தன. தாரஸ் கோபமடைந்து புதிய வியாபாரியை நாடு கடத்தினான். அவர் எல்லைக்கு வெளியே சென்று கடையைத்திறந்தார். வியாபாரத்தைத் தொடர்ந்தார். அவர் தந்த அதிக விலைக்கு ஆசைப்பட்ட மக்கள் உற்பத்தியை எல்லாம் வழக்கம் போல அவருக்கே விற்றனர். தன்னிடம் இருக்கும் அளவற்ற செல்வத்தால் அவர் தாரஸ் அரசனைக்கூட விலைக்கு வாங்க முடியும் என்று மக்கள் பேசினர்.

தாரஸ் அரசனுக்கு உண்ண உணவு கிடைக்கவில்லை. அவன் பசியால் தவித்தான். சைமன் அந்தச் சமயத்தில் தாரசிடம் ஓடிவந்து உதவி கேட்டான். தாரஸ் கையை விரித்தான்.

சைமனையும், தாரசையும் சீரழித்த கிழட்டுப் பேய் மறுபடியும் ஒரு ராணுவத் தளபதியாகத் தோற்றம் எடுத்தது. அந்தத் தளபதி ஜவானிடம் சென்று, ”அரசே! ராணுவமே இல்லாமல் இந்தப் பெரிய நாட்டை ஆளுகின்றீர்களே! அனுமதி கொடுத்தால் ஒரு பெரிய படையைத் திரட்டிப் பயிற்சி அளிக்கிறேன்” என்றான்.

“அப்படியே செய்.. ஆனால், போர் வீரர்கள் நன்றாகப் பாடவேண்டும்” என்று கட்டளையிட்டான் ஜவான்.

புதிய தளபதி ஊர் ஊராகச் சென்று கூட்டம் போட்டான்; பிரச்சாரம் செய்தான்; முதலில் நயமாகவும், பிறகு பயமாகவும் பேசி மக்களைப் படையில் சேரத் தூண்டினான். அவர்கள் உழைப்பில் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்வாக இருந்தது. அவர்கள் படையில் சேர மறுத்து விட்டனர். முயற்சிகளில் தோல்வியுற்ற தளபதி மக்களைப் பழிவாங்க விரும்பி அண்டை. நாட்டு மன்னனிடம் போனான்; ‘ஐவான் நாட்டில் படைகளோ, பாதுகாப்போ இல்லை. ஆடு மாடுகளும், தானியங்களும் ஏராளமாக இருக்கின்றன. நாம் படையெடுத்து, அவற்றை எளிதில் கைப்பற்றுவோம்” என்று கூறினான். மன்னன் இசைந்தான். போர் முரசு முழங்கியது. ஐவான் நாட்டில் அந்நியர் புகுந்தனர். கால்நடைகளையும், தானியங்களையும் அவர்கள் கவர்ந்து சென்றனர்.

எதிரிப் படைகள் கிராமம் கிராமமாகப் புகுந்தன. அவர்களை வேடிக்கை பார்க்க மக்கள் திரளாக வந்தனர். ஆனால் ஒருவராவது எதிர்க்கவில்லை. மாறாக இரக்கம் காட்டினர். “நீங்கள் மிகுந்த கஷ்ட நிலையில் இருப்பது போலத் தோன்றுகிறது. எங்கள் நாடு. வளமான நாடு. எங்களுடனேயே தங்கி விடுங்களேன்” என்று சொல்லி அன்பைப் பொழிந்தனர். எதிர்ப்பு இல்லாத ஊரில் வீரர்கள் போர் செய்ய விரும்பவில்லை. ‘முட்டாள்கள் ‘ என்று மக்களைத் திட்டிக் கொண்டே வீரர்கள் திரும்பிச் சென்றனர்.

படை பலத்தால், கிழட்டுப்பேய் ஐவானையும், அவனுடைய மக்களையும் அசைக்க முடியவில்லை. அடுத்து பண பலத்தால் அவர்களைச் சோதிக்க முயன்றது. அதற்காக அது ஒரு பணக்காரப் பிரபுவாக உருவெடுத்தது. ஐவானிடம் சென்று நவீன வியாபார முறைகளை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க அனுமதி பெற்றது.

அந்தப் பிரபுவிடம் ஏராளமான பொற்காசுகள் இருந்தன. அந்தக் காசுகளைத் தாராளமாகச் செலவழித்து அவர் ஒரு மாளிகை கட்டத் தொடங்கினார். அப்படியே ஜவானையும், அவனுடைய மக்களையும் தன் காசுக்கு அடிமையாக்கத் திட்டமிட்டார்.

ஜவானுடைய நாட்டில் பண்ட மாற்று முறைதான் இருந்தது. பணப்புழக்கம் இருக்கவில்லை. பிரபுவின் பொற்காசுகளை அவர்கள் அதிசயத்தோடு நோக்கினர். பிரபுவின் மாளிகைக்கு வேண்டிய பொருள்களையும், உழைப்பையும் கொடுத்துப் பதிலுக்கு அவருடைய பொற்காசுகளை முதலில் பெற்றனர். அவற்றை ஒரு நூலில் கோத்துப் பெண்கள் மாலையாக அணிந்தனர். அதைச் சக்கரமாகப் பாவித்துச் சிறுவர்கள் அதைத் தெருவில் உருட்டி விளையாடினர். அவர்களுக்குப் பொற்காசு அலுத்து விட்டது. பிரபுவிடமிருந்து அதை ஏற்க மறுத்தனர். பொற்காசுகளைத் தவிர, தங்களுக்குத் தேவையான வேறு ஏதாவது பொருளையோ அல்லது உழைப்பையோ அவர்கள் எதிர்பார்த்தனர்.

கையில் காசை வைத்துக்கொண்டு பிரபு வீடு வீடாகச் சென்று உணவு கேட்டார். அந்த நாட்டில் கடனும் இல்லை. வரியும் இல்லை. மக்கள் காசை லட்சியம் செய்யவில்லை. தங்கள் வழக்கப்படி பண்டமாற்று முறை அல்லது உழைப்புக்கு மட்டுமே உணவு கொடுக்கச் சம்மதித்தனர். பாவம், பிரபு பசியால் வாடினார்.

பிரபுவின் நிலைக்கு இரங்கிய மக்கள் ஜவான் அரசனிடம் சென்று அறிவுரை கேட்டனர். ”ஒவ்வொரு நாளும் பிரபு ஒரு வீட்டிற்குச் சென்று ஏதாவது ஒரு சிறிய வேலையைச் கழிந்தன. செய்ய வேண்டும். அந்த வீட்டார் உணவு அளிக்க வேண்டும்” என்று ஜவான் உத்தரவிட்டான். வேறு வழியில்லாமல் பிரபு வீடு வீடாகச் சென்றார். சிறு வேலைகளைச் செய்தார். அதே மாதிரி ஒருநாள் ஜவானின் மாளிகைக்கும் சென்றார். மாளிகையின் சாப்பாட்டு அறையை ஜவானின் ஊமைத் தங்கை நிர்வகித்து வந்தாள். அவள் உண்ண வருவோரை எல்லாம் முதலில் கைகளை நீட்டச் சொன்னாள். உழைத்து உரமேறிய கரங்களுக்கே முதலில் உணவிட்டாள். அவர்கள் உண்ட மிச்சம், மீதியை மற்றவர்களுக்குக் கொடுத்தாள். உழைப்பு விஷயத்தில் அவள் மிகவும் கண்டிப்பாக இருந்தாள்.

ஒருநாள் சாப்பிட வந்தவர்களின் கைகளை வழக்கம் போல் அவள் பார்வையிட்டாள். பிரபுவின் கைகள் மென்மையாகவும், சுத்தமாகவும் இருந்தன. உடனே, “உங்களுக்கு இந்தப் பந்தியில் உணவு கிடையாது. கடைசியில்தான்” என்று சைகை மூலம் அவள் தெரிவித்தாள், பிரபுவுக்குப் பசி ஒருபக்கம், கோபம் ஒரு பக்கம். “இதென்ன முட்டாள்தனமான சட்டமாக இருக்கிறதே! கைகளால்தான் ஒரு மனிதன் வேலை செய்ய முடியுமா என்ன? தலையினாலும் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியாதா? சொல்லப் போனால் தலையால் வேலை செய்வதுதான் ரொம்பக் கஷ்டம். சில சமயம் தலையே வெடித்து விடும்” என்று பிரபு ஆத்திரத்தோடு கூச்சலிட்டார்.

’’தலையால் வேலையைச் செய்யும் கலையை என் மக்களுக்குச் சொல்லிக் கொடுங்களேன். அது உபயோகமாக இருக்கும்”, என்று பணிவோடு ஜவான் வேண்டினான். பிரபு ஓர் உயர்ந்த கோபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதில் ‘அநேக படிக்கட்டுகள் இருந்தன. பிரபு அவற்றில் ஏறி உச்சியை அடைந்தார். அவர் செய்யப் போகும் புதுமையைக் காண மக்கள் கீழே திரளாகக் கூடினர்.

“உழைக்காமலே வாழ்வது எப்படி?” என்று பிரபு உரை ஆற்றினார். உழைப்பு ஒன்றையே உன்னதமாகக் கருதிய அந்த மக்களுக்கு அவருடைய வாய்ச் சொற்கள் புரியவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்தனர். அப்படி மக்கள் கூடுவதும், கலைவதுமாகச் சிலநாட்கள் கழிந்தன.  ஒருவராவது பிரபுவுக்கு உணவு அளிக்கவில்லை. தலையால் உழைக்கும் மனிதன் உணவையும் அப்படியே தயாரிக்க முடியும் என்று நம்பினர்.

பிரபுவுக்குப் பசி அதிகரித்தது. கண்கள் இருண்டன. தலைசுற்றியது. அவர் கீழே சரிந்தார். உச்சியிலிருந்து தரையை நோக்கி உருளத் தொடங்கினார். ஒவ்வொரு படியிலும் அவருடைய தலை ‘டங், டங்’ என்று இடித்துக் கொண்டு வந்தது.

அதைக் கண்ட மக்கள் ஜவானுக்குச் செய்தி அனுப்பினர். ஜவான் விரைந்தான். ஒவ்வொரு படிக்கட்டிலும் தலையை முட்டிக் கொண்டு உருண்டு வந்த பிரபு, கடைசியில் பூமியிலும் முட்டிக் கொண்டார். பூமி திடீரெனப் பிளந்தது. பிரபுவின் உருவில் இருந்த கிழட்டுப் பேய் அதற்குள் பாய்ந்து மறைந்தது. பெரிய ஒரு ஓட்டை மட்டும் காட்சி அளித்தது!

(Leo Tolstoy ரஷ்ய மொழியில் எழுதிய ‘The Story of Ivan The Fool)

சைகை என்ற கதையின் சுருக்கமே இது.)

000

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *