அக்கா … இன்னைக்கு நான் வேலைக்கு வரலக்கா
மறுமுனையில் வேலைக்கு வராததற்கு காரணம் கேட்கப்பட
என் மக பெரிய பொண்ணாகிட்டாக்கா…
இதே செய்தியை இதே காரணத்தை ஏறக்குறைய பத்து நபருக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கலைவாணிக்கு இருந்தது. காரணம் சில வீடுகளில் கலைவாணி வராமல் இரவு சாப்பிட்ட பாத்திரங்கள் துளக்கப்படாமல் கிடக்கலாம், இன்னும் சில வீடுகளில் பக்கெட் பக்கெட்டாக நாலு கைப்பிடி சர்ஃப் எக்ஸலில் ஊரவைக்கப்பட்ட துணிமணிகள் “எப்ப டி ஆத்தா என்னைய துவைத்து காயப்போடப்போகிற” என்று காத்துக் கொண்டிருக்கலாம்.
படுத்தபடுக்கையாக கிடக்கும் காமாட்சி பாட்டி இன்றைக்கு தலைக்கு ஊற்றி கொள்ளும் நாள் அழுக்கு சேர்ந்து எண்ணை பிசுக்கோடு இருக்கும் தலைமுடி ஷாம்பு குளியலுக்காக தேவுடு காக்க,
காமாட்சி பாட்டியின் மருமகள் காசு கொடுத்து வாங்கி வரச் சொன்ன செக்கு எண்ணெயும் வீடு போய் சேர தயாராக இருந்த நிலையில் தான் கலைவாணியின் மகள் பொழுது பொட்டென்று விடியும் போதே பெரியமனுஷியாகி எல்லாவற்றையும் குழப்பி விட்டாள்.
ஏழாப்பு படிக்கும் மகள் அதுவும் கெச்சலான தேகத்தை கொண்டவள் எப்படி இவ்வளவு சீக்கிரம் குத்த வைத்தாள்? என்ற யோசனையோடையே அலைந்த கலைவாணிக்கு திடீரென்ற ஞான உதயமாக அந்த வாட்ஸாப் செய்தி பளிச்சென்று நினைவுக்கு வருகிறது.
தான் தட்டுத் தடுமாறி வாசித்த வரையில் பெண் பிள்ளைகள் சீக்கிரமே வயசுக்கு வர பிராய்லர் கோழிகளே காரணம் என சொல்லும் அந்த செய்தியின் உண்மை வடிவமாக கலைவாணியின் மனது தன் மகளையே நினைத்து கொண்டது.
ஆக கேஸை பிராய்லர் கோழியின் பெயரில் எழுதிவிட்டு தன்னுடைய தாய் மற்றும் அக்கம் பக்கம் இருக்கும் பெண்களை அழைத்து தலைக்கு தண்ணீரை ஊற்றி வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஹரி பிரியாவுக்கு பெரிய மனுஷியானதில் உடல் ரீதியாக பல சங்கடங்கள் இருந்தாலும் காலாண்டு தேர்வுக்கு மட்டம் போட்ட வகையில் மனதுக்கு சந்தோஷமே. அதுவும் தனக்கு பிடிக்கவே பிடிக்காத கணக்கு பாடத்தையும் கணக்கு டீச்சரையும் இம்முறை பரீட்சை மற்றும் அதற்கான மதிப்பெண் என்று சந்திக்கதேவையில்லை. கணக்கு பரீட்சை அன்று வயசுக்கு வந்தது தெய்வ அதிசயமாகவே நினைத்து கொண்டாள்.
ஒரே ஒரு நாள் மட்டுமே மகளோடு இருக்க கலைவாணியின் வேலை அனுமதித்தது. மறுநாள் முதல் மகளுக்கு தன்னால் ஆன சத்தான உணவை சமைத்து வைத்து விட்டு பத்தாததற்கு தனது ஆன்ராய்டு ஃபோனை மகளிடம் கொடுத்து விட்டு எது ஒன்றாக இருந்தாலும் தாத்தா செல்லுக்கு கூப்பிடு, என்று தன் தந்தையின் ஃபோனை வாங்கி கொண்டு வேலைக்கு கிளம்பி விட்டாள்.
இப்போதைக்கு எந்த சடங்கும் சுற்றப்போதில்லை ஒன்பதாம் நாள் முடிந்து மகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய முடிவை கலைவாணியின் பொருளாதாரம் தீர்மானித்தது. ஆனாலும் மகளுக்கு வேறு எதிலும் குறை வைக்கக்கூடாது என்பதில் நல்ல துணிமணிகளை வாங்கிக்கொண்டு
ஏதோ ஒரு மகராசி யூ டியூப் பில் சொல்லிக்கொடுத்த சத்து மாவு பொடியை தயாரிக்க, வேலை செய்யும் இடத்தில் முன் பணத்தை பெற்றுக்கொண்டு வீடு நோக்கி வண்டியை விட்டாள்.
இந்த களோபரம் எல்லாம் முடிந்து வீட்டில் சும்மா இருக்க முடியாத ஹரி பிரியாவின் தாத்தா அவளின் ஜாதகத்தை எடுத்துகொண்டு ஜோசியக்காரரிடம் செல்ல, அவர் இந்த ஜாதகத்திற்கு டா, டி என்ற வரிசையில் பெயர் வைத்திருக்க வேண்டும் ஹரிப்பிரியா என்ற பெயர் இந்த ஜாதகத்திற்கு பொறுத்தமே இல்லை என்று சொல்லி வைக்க, குழம்பிய நிலையில் இந்த செய்தியை மகளுக்கு சொல்ல உடனே அலைபேசி அழைக்கிறார்.
ஏற்கனவே நிறைய பாத்திரங்களுடன் மல்லு கட்டி கொண்டிருந்த கலைவாணிக்கு அப்பாவின் அலைபேசி அழைப்பு ஒரு வித கடுப்பை கிளப்பியது…
இவர் வேற நேரங்காலம் தெரியாமல் என்று முனுமுனுத்துக்கொண்டே…
“என்னப்பா” என்றாள்.
ஜோசியக்காரரின் சொற்பொழிவை எடுத்துவிட்டு பெயர் மாற்றத்தைப் பற்றி கூற,
”இப்போ உன்னைய யாரு இந்த வேலை எல்லாம் பார்க்க சொன்னது… பேரை மாத்து அத்த மாத்து இத்த மாத்துனுட்டு
நீ கம்முனு வீட்டுக்கு வாப்பா” என்றவுடன் அலைபேசி அணைக்கப்பட்டது.
ஜோசியக்காரர் காதில் ஓதிய செய்தி தாத்தாவின் மண்டையில் வண்டாய் குடைந்து பெயரை மாற்றியாக வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்க வைத்தது.
என்ன விளையாடுறியா எல்லாத்துலையும் மறுபடியும் பெயர் மாற்ற எவ்வளவு துட்டு செலவு பண்ணனும் தெரியுமா? என்று தந்தையிடம் சண்டைக்கு நின்றாள் கலைவாணி.
ஹரி பிரியா ன்னு அவ ஸ்கூல் சர்ட்டிபிக்கேட்ல இருக்கட்டும் அதெல்லாம் மாற்ற வேண்டாம். கூப்பிடுறது கூட ஹரி பிரியான்னே கூப்பிடுங்கன்னு அந்த ஜேசியக்காரர் சொல்லிட்டார். ஜாதகத்துக்கு ஒசரம்
தான் இந்த பெயர் மாற்றம் கண்ணு என்று மகளையும் பேத்தி யையும் கரையா கரைத்தார்.
ஹரி பிரியா வுக்கு ஏற்கனவே தன் பெயர் மீது அத்தனை நல் அபிப்பிராயம் கிடையாது. நான் குழந்தையாக இருக்கும் போதே என்னிடம் கேட்காமல் ஏன் இந்த பெயரை வைத்தாய் என்று அம்மாவிடம் அப்பப்போ ஏழரையை கூட்டுவாள்.அன்றைக்கு கண்டிப்பாக ஹரி சொறி என்றோ ஹரி பிரியா சொறி பிரியா என்றோ பள்ளித்தோழமைகளால் கிண்டல் செய்யப்பட்டிருப்பாள்.
எனவே தனது ஜாதகப் பெயராவது தன் இஷ்டப்படி இருக்கட்டுமே என்று சிறு நப்பாசையும் மனதில் உதித்தது.
சரி ட ,டா, டி இந்த வரிசையில் என்ன பெயரை போய் நான் தேடி கண்டு பிடிக்கிறது என்று கலைவாணி சலித்து கொள்ள…
டில்லி குமாரி, டில்லி ராணி, என்று தாத்தா ஆரம்பிக்க ஹரி பிரியா உடனே தாத்தா மரியாதை யா போயிடு இதெல்லாம் ஒரு பெயரா… . என்று கத்த,
”ஏன் கண்ணு… ஏன் இந்த பெயருக்கு என்ன?”
”அப்பா எனக்கு தெரியாது நீ என்ன பெயர் வைப்பியோ அவ எதுக்கு சரின்னு சொல்லுவாளோ… . ஆள விடு”.
கலைவாணிக்கு இந்த பெயர் மாற்றம் ஜோசியம் இதிலெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லாமல் போனதற்கு காரணம் நாத்திக சிந்தனையெல்லாம் கிடையாது. அன்றாட வாழ்க்கை பாட்டில் அவள் கற்றுக்கொண்ட பாடம் . கணவன் இரண்டரை வயது மகளுடன் தன்னை விட்டுச்சென்ற காலம் தொட்டு தான் உழைத்தால் தான் தனக்கு சோறு. அப்பாவோ தம்பியோ அண்ணனோ யாரும் தனக்காக ஒரு நூறு ரூபாய் காசை சும்மா கொடுக்கப் போவது கிடையாது.
இதோ இந்த ஜோசியக்காரனை பார்த்து விட்டு புது கதையோடு வந்த அப்பா கூட அதற்கான காசை இவளிடம் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாய செலவுக்கு காசு போதவில்லை என்று தலை சொறிந்துகொண்டு இரண்டொரு நாளில் வாங்கிக்கொள்ளத்தான் போகிறார். அட அந்த டாஸ்மாக் வரவுசெலவத்தான் சொல்றேன். அந்த காசு தன்னுடைய வண்டி க்கான இரண்டு நாள் பெட்ரோலுக்கு போதுமானது. ஆக இந்த பெயர் மாற்றும் கதையெல்லாம் தண்டச்செலவு என்றே மனது கணக்கிட்டது. எனவே இந்த பெயர் தேர்வு குழுவில் கலைவாணி தன்னை இணைத்து கொள்ளவே இல்லை.
தாத்தாவும் பேத்தியும் மாலை நேரப்பொழுதுகளில் இது சம்பந்தமான பேச்சு வார்த்தையில் தான் ஈடுபடுவர்.
”கண்ணு ….த்ரெளபதி நல்லா தானே இருக்கு”.
”தாத்தா அது திரெளபதி டிரெளபதி கிடையாது… ரெண்டாவது அந்த பெயர் எனக்கு பிடிக்கல அதனால ரிஜெக்டட்…”
”இல்லாட்டி டோரான்னு வச்சுக்கட்டா தாத்தா…” என்ன தான் நீ குமரியாகிவிட்டாய் என்று அவள் உடற் கூறுகள் சொன்னாலும் உள்ளே இருக்கும் குழந்தை மனம் சடாரென டோராவை தேர்ந்தெடுத்தது. தன்னுடைய தலை முடியை டோராவைப்போல வெட்டிக்கொண்டு பள்ளிச் சீருடையில் தன் பெயரை வைத்து கிண்டல் செய்யும் தோழிகள் மத்தியில் என் பெயர் இனி டோரான்னு சொன்னா எவ்வளவு கெத்தா இருக்கும் என்ற காட்சி கண் முன் விரிய,
”அப்போ புஜ்ஜி யாரு?” என்று தாத்தா கேட்டு கனவை கலைக்க
”வேற யாரு நீ தான்” என்று சொல்லிவிட்டு தன் தாத்தா புஜ்ஜியாக மாறி தன்னுடன் பள்ளிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
இவர்கள் அடிக்கும் கூத்தையெல்லாம் இரவு சாப்பாட்டிற்கு காய் அறிந்து கொண்டே கேட்டுக்கொண்டிருந்த கலைவாணி,
”ஏ… பிரியா படிக்கிற வேலையெல்லாம் முடிச்சிட்டியா டி…” காலையில ஏதாச்சும் படிக்கல எழுதலன்னு ஊளை இட்டுட்டு இருந்த நாலு கொட்டு நறுக்கு நறுக்கு னு வாங்குவ… சொல்லிட்டேன்”.
எல்லா வேலைகளும் முடித்து அக்கடான்னு இருக்கலாம் எனும் நேரம் இருக்கே அது மனதுக்கு இதமான நேரம்.
என்ன பண்ணி தொலைக்க அந்த நேரம் எவ்வளவுக்கு எவ்வளவு இனிமையானதோ அதே அளவுக்கு கொடுமையானதும் கூட. கலைவாணி போன்று பொழுதன்னைக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு இரவு நேர தூக்கத்தை பெரும்பாலும் சோர்வும் அசதியும் இழுத்துக் கொண்டாலும் அதையும் மீறி சில நேரங்களில் இனிமையான நினைவுகளும் பல சமயம் தீர ஆசைகளும் ஏக்கங்களும் கவ்விக்கொள்ளும். எப்படி பார்த்தாலும் அது கலைவாணிக்கே கலைவாணி க்கான நேரம்.
அம்மு… எவ்வித அவசரமும் கடுமையும் இல்லாத அமைதியான செல்ல அழைப்பு அது. அம்மாவும் மகளும் ஏதேனும் ஒரு நாள் தாங்களே தங்களை கொஞ்சிக்கொள்ளும் சொல் அது… .
”சொல்லு அம்மு…” இது ஹரி பிரியாவின் அம்மாவிற்கான அம்மு.
”உனக்கு இந்த ஹரி பிரியா ங்கிற பெயர் பிடிக்கலையா ம்மு…” .
”கொஞ்சம் பிடிக்கல தான்… ஆனால் உனக்கு அந்த பெயர் பிடிச்சு தானே எனக்கு வச்ச… அதனால பரவாயில்லை. ஆனாலும் இந்த பெயர் உனக்கு பிடிச்சிருக்கான்னு நீ என்கிட்ட கேட்டுட்டு வச்சு இருக்கலாம்”.
”சரி டி பெரிய மனுஷி இப்போ தூங்கு” என்று மகளின் மூக்கை ஒரு திருகு திருகி விட்டு கண்ணை மூடி உறங்க முற்பட்டாள்.
இப்படியே ட டி வரிசையில் ஒரு நல்ல பெயருக்காக ஹரி பிரியாவும் தாத்தாவும் சல்லடை போட்டுத் தேட, எவ்வித சிரமம் இல்லாமல் கலைவாணி க்கு ஒரு பெயர் வசமாக வந்து மாட்டியது.
”கலை அக்கா எனக்கு நெய் பொடி தோசை ரெண்டு” என்று ரூமுக்குள் இருந்து சூர்யா குரல் கொடுக்க… .
”சரி தம்பி” என்று அடுப்படியிலிருந்து பதில் அளித்தாள்.
வேலைக்கு செல்லும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆறிப்போன டப்பா சாப்பாடு என்றாலும் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் சூர்யாவுக்கு கலைவாணி புண்ணியத்தில் சுட சுட காலை சாப்பாடு கிடைக்கும். அதிலும் கலைவாணி செய்யும் நெய் பொடி தோசைக்கு சூர்யாவின் நாக்கு அடிமை ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.
தோசையுடன் வந்த கலைவாணி சூர்யா வரைந்து கொண்டிருக்கும் ஓவியத்தை பார்த்து…
”இது யாரு தம்பி?”
”இதுவா…..இளவரசி டயானா” என்று சொல்லிவிட்டு தோசையை பிய்த்து வாயில் வைத்தான்.
”கொஞ்ச நாள் முன்னாடி செத்துப் போச்சு னு டீவில எல்லா சொன்னாங்களே அதுவா இது?”
”இல்லை இல்லை அது எலிசபெத்து ராணி. இது அதோட மருமகள் ரொம்ப வருஷம் முன்னாடியே செத்து போச்சு… .
டயானா யோசனையோடே சூர்யா வீட்டு வேலையை முடித்து விட்டு வண்டியை மாதவன் நகருக்கு விட்டாள்.
எந்நேரமும் பேப்பரும் கையுமாக இருக்கும் மாதவன் நகர் பிளாட் எண் 4C யில் வசிக்கும் ராகவன் தாத்தாவிடம் வீடு கூட்டிக்கொண்டே டயானா பற்றி இன்னும் கூடுதல் விவரம் சேகரிக்க மெதுவாக பேச்சு கொடுக்க… அவர் டயானாவை பேரழகி என்று வர்ணிக்க அது சரி ஆண்களுக்கு பெண்களை வர்ணிக்க கசக்குமா என்ன இயற்கையாகவே பெண்ணின் மீது மையல் கொள்ள படைக்கப்பட ஒரு இனம் அசல் அழகியை சும்மாவா விடப் போகிறது. தாத்தா ஆஹா ஓஹோ என்று டயானாவின் புற அழகு அக அழகு சார்லஸின் முன்னாள் பின்னாள் காதல் என்று அத்தனையும் புட்டு புட்டு வைக்க…
தாத்தாவின் மனைவி தன் பங்குக்கு டயானா மற்றும் எலிசபெத் ராணியின் மாமியார் மருமகள் சமையலறை அரசியலை சரி அரண்மனை சமையலறை அரசியலை ஒரு பிரபலமான மெகா சீரியல் அளவிற்கு எடுத்து செல்ல…
கலைவாணியின் மனதில் வாராவாரம் ஒவ்வொரு பிரச்சனை யோடு அல்லல் படும் சீரியல் கதாநாயகியாகவும் அவ்வித துன்பங்களே அவளை மக்கள் மனதில் நீங்கா இடம்பெறச் செய்வது போல ராணியின் பாகுபாடு மற்றும் சார்லஸின் துரோகம் எல்லாம் சேர்ந்து டயானாவை ஆஸ்தான பெண்மணியாக மனதில் இருத்தி வைத்தது. குழப்பத்திற்கும் ஒரு வழி கிடைத்தது.
மாலை வீட்டுக்கு வந்து மகளிடம், ’ப்ரியா உனக்கு ஒரு சூப்பரான பெயர் கிடைச்சிருக்கு’. என்றாள்.
அவளும் குஷியில், ”என்ன பெயர் அம்மு?”…
”டயானா”
”வாவ் சூப்பரு எங்க இங்கிலீஷ் சார் இவங்கள பற்றி சொல்லியிருக்கார்”.
ஆக ஆண்கள் தங்களுக்கு பிடித்த அழகிகளை தங்களால் முடிந்த அளவுக்கு அடுத்த தலைமுறைக்கு விடாமல் எடுத்து செல்ல கடமைபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை ராகவ் தாத்தாவும் இங்கிலீஷ் சாரும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கின்றனர்.
”டயானா வா இந்த பெயருக்கு அந்த ஜோசியக்காரர் ஒத்துக்குவாரா இல்லையா தெரியலையே!” என்று தாத்தா இழுக்க… .
”அந்த ஆள் என்ன ஒத்துக்கிறது டில்லி குமாரி யை தவிர்த்து அந்த ஆளுக்கு ட வரிசையில் ஒரு நல்ல பெயர் கூட தெரியல… . அவருக்கு ட என்று தொடங்கும் ஒரு பெயர் தானே வேணும். அப்போ இதே இருக்கட்டும்” என்று அம்மாவும் மகளும் ஒரே போடாக போட,
என்றோ ஒரு நாள் அச்சடிக்கப்பட இருக்கும் பிரியாவின் சடங்கு பத்திரிக்கையிலோ, திருமண பத்திரிக்கையிலோ வர விருக்கும் ஜாதகப் பெயர்…
“டயானா என்கிற ஹரி பிரியா”
சபிதா பர்வீன்.
இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளேன். கணவருடன் இணைந்து சொந்த வியாபாரத்தில் உள்ளேன். வாசிப்பில் ஆர்வம் உள்ளது. அந்த அனுபவம் தான் எழுதி பார்க்கும் முயற்சியை தூண்டியது. இஸ்லாமிய இதழ்களில் கட்டுரைகள் மற்றும் சிறுகதை எழுதியுள்ளேன்.