ஜாலியான சீரியஸ் நேர்காணல்

வா.மு.கோமுவுடன்…

கண்டவர் :- மதன் ராமலிங்கம்

000

ஜாதீய ரீதியாக கள்ளி எழுதியிருக்கீங்க, கூடவே மங்கலத்து தேவதைகள் மாதிரியான படைப்புகளையும் எழுதியிருக்கீங்க வேறு வேறுமாதிரியான முயற்சிகளையும் செஞ்சிருக்கீங்க. சிறுவர்கதைகளையும் எழுதறீங்க. சிறுகதைகளையும் எழுதறீங்க ஜாதீயத்தையும் எழுதறீங்க ஜோவியலாவும் எழுதறீங்க, இந்த உலகத்தை நீங்க எப்படி பார்க்கறீங்க? நீங்க வாழுற சூழல் எப்படி? ஒரு எழுத்தாளர்னா ஒரு டைமன்சன்ல தான் இருப்பாரு. தலித்தியம் பேசுற எழுத்தை எழுதுறவரு அதைதான் எழுதுவாரு. . நீங்க எதுல திருப்தியடையறீங்க?

எனக்கு எதுல திருப்திங்கறதை விட நான் சமயத்துக்கு உண்டான எழுத்தாளன் தானே. நான் குழந்தைகளுக்காக எழுதுறதுன்னா ரெண்டு மாசமா குழந்தைகள் புத்தகங்கள் தான் வாசிப்பேன். யூடியூப்பில் குழந்தைகள் சம்பந்தமாவே பார்ப்பேன். என்னோட மனசு அதுலதான் இருக்கும் இந்த சமயத்துல நான் வழக்கமான இலக்கிய புத்தகங்களை வாசிக்க மாட்டேன்.

நீங்க வட்டார வழக்குல எழுதறீங்க. பல கதைகள் அப்படித்தான் இருக்கு. மண்பூதம் தொகுதியில இருந்து பார்த்தா இப்ப வந்திருக்கிற சமீபத்திய சிறுகதைகள் வரைக்கும் மண் சார்ந்ததாவே இருக்கு. நாவல்களும் அதை தொட்டே தான் இருக்கு. பாலியல் எழுத்தாளர்னு உங்களை சொன்னாங்க. அதுக்கு மறுப்போ பதிலோ நீங்க சொன்னதில்ல! அதுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?

பாலியல்ங்கறது எல்லாப்பக்கமும் நிறைஞ்சு இருக்குறது தான். அதை எல்லாருமே கண்ணை கட்டிக்கிட்டு சூச்சு பார்க்க மாட்டேன், நான் .. சூச்சு வந்து பேச மாட்டேன் அப்படிங்கிற இடத்துல இது இயல்பா இருக்குற ஒரு விசயத்தை இயல்பா எழுதுறேன். திருப்பூரு பனியன் கம்பெனியில நீங்க வேலைக்கு போய் பாருங்க. அங்க பெண்கள் பேசுற பேச்செல்லாம் எழுத்துல கூட எழுத முடியாது. வெளிநாடுகள்ல பாலியல் சார்ந்து பெண்களும் எழுதறாங்க, ஆண்களும் எழுதறாங்க. அவங்களுக்கு மரியாதையும் இருக்குது. அவங்களுக்கு பேரும் கிடைகுது. ஆனா இங்க பாலியல் எழுத்தாளர்னு தள்ளி வச்சுடறாங்க. பாலியல் எப்பவும் சமூகத்தோட ஒன்றிணைந்தது தான். காதை திறந்து வச்சுட்டு டவுன்ல ஒரு கிலோமீட்டர் நடந்தீங்கன்னா உங்களுக்கு கேட்குற சமாச்சாரங்கள் பலது இதைப்பத்தித்தான் கேட்கும். கெட்ட வார்த்தையின்னு நீங்க அகராதியில ஓரமா வச்சிருக்கிற வார்த்தைகள் கண்டிப்பா விழும். போன்கால் ஓரமா நின்னு பேசுறவன் என்ன பேசுவான் யார்கிட்ட பேசுவான்னு எனக்குத் தெரியும். பாலியலை நான் எழுதலை புதுசா. இருக்குறதைத்தான் எழுதினேன். கண்ணுக்கு முன்னால நான் பார்க்குற பிரச்சனைகள் இதே தான். கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், கி.ரா வரை எல்லாருமே எழுதியிருக்காங்க.சமகால எழுத்தாளர்கள் யாரும் எழுதறதில்லையா? எதையோ ஒன்னை சொல்லி ஒரு முத்திரையை குத்தணும். அப்படி குத்துனாங்க எனக்கு. ஒரு முகவரியை அவங்க கட்டமைக்கணும். அதனால அவனை இல்லாம செய்யணும். அதையெல்லாம் தாண்டி நிரூபணம் பண்ணனும்னு நான் பலவிதங்கள்ல எழுதுறேன். நான் இல்லாததை எழுதலை. இருக்கிறதை எழுதினேன். பாலியல் எழுத்தாளர்னு ஒரு அடையாளத்தை பத்துவருசம் முந்தி குடுத்தாங்க. அதை அழிச்சுடணும்னு நான் என் எழுத்து முறைகளை மாத்திக்கலை இப்ப வரைக்கும். அதை இப்பவும் நான் நினைச்சா தொடரலாம். ஆனா எனக்கு எழுத வேண்டிய வேறு விசயங்களும் இருக்கு.

இப்பவும் அதையே தான கேட்கறாங்க?

ஆமாம். அவங்க கேக்கட்டும். அவங்க பழைய வாசகர்கள். அவங்ககிட்டயே நான் நிக்க முடியுமா? புதிய வாசகர்களை நான் அடைஞ்சாகணும்ல. ஆனா பழைய வாசகர்கள் கூடவே இணைந்து எழுத்தாளர்களும் விரும்பிப்படிச்சாங்க. அவங்க தான் இப்பவும் புதிய வாசகர்கள்கிட்ட பழைய விசயத்தையே சொல்லி பயமுறுத்தீட்டும் இருக்காங்க. போகப்போக இதெல்லாம் சரியாயிட்டு வருது. பாலியல் எழுத அவசியம் இருக்கிறப்ப கண்டிப்பா மறுபடியும் எழுதுவேன். பாலியல்ல உச்சபட்சமான கொடுமைகள் இங்க நடந்துட்டே இருந்துதுன்னா நான் மறுபடியும் அதே இடத்துக்கு வருவேன். தினத்தந்தி பேப்பருக்கும் மீறி நாம எழுதீட்டமான்னு ஒன்னு இருக்கு.

எல்லா எழுத்தாளர்களும் தங்களுக்கு பதிப்பகம் வேணும்னு இறங்குறதுண்டு. அவங்களுக்குன்னு ஒரு சிறுபத்திரிக்கை வெச்சுக்கிட்டதும் உண்டு. நிறைப்பேரு சிறுபத்திரிக்கை வேண்டாம்னு சொல்லி கையை சுட்டுக்கிட்டதும் உண்டு. அதுல இருந்து பதறி வெளியேறினதும் உண்டு. பதிப்பகத்துல இருந்து வெளியேறினவங்களும் உண்டு. வா.மு.கோமு இன்னமும் பதிப்பகம் இதழ்னு தொடர்ந்து செயல்படுறாரு. திருப்தியாயிருக்கா? பதிப்பகமும் இதழும்?

பத்திரிக்கை நடத்த படைப்புகள் வேணும். முகநூலில் இதழுக்கு படைப்புகளை கேட்கிறேன். பலபடைப்புகள் வருகிறது. படைப்பாளர்கள் முகம்கூட எனக்குத் தெரியாது. நல்ல கதையோ, கவிதையோ எழுதினவங்க படைப்புகள் இதழில் வருது. புதிய ஆட்களை இதழ் மூலமா அறிமுகப்படுத்துறேன். அதன்மூலமா இத்தனை எழுத்தாளர்கள் வந்தாங்க அப்படிங்கற தகவலை சொல்றேன். தொடர்ந்து இதழில் கலந்துக்கறாங்க. இன்னமும் புதிய படைப்பாளிங்களை கண்டுபிடிக்கலாம்ங்கற நம்பிக்கை இருக்கு. மூன்று மாதத்திற்கு ஒரு இதழ் அப்படிங்கறது ஒரு வசதிக்காகத்தான். அதை ரெண்டு மாசத்திற்கு ஒன்னா மாத்த ஆசைதான். ஆனா முடியாது. வந்துட்டு இருக்குற மாத புத்தகங்கள்ல உயிர்மை அவ்ளோ படைப்புகளை தாங்கி வருது. முக்கியமான கட்டுரைகள், கதைகள்னு உயிர்மை வருது. இந்த கிராமத்துல இருந்துட்டு இதழ் கொண்டு வர்றது அவ்லோ சுலபமில்ல. தினமும் கொரியர் செய்ய 7 கி.மீ நான் போய் வரணும்.

இலக்கிய அறிமுகம் இல்லாதவங்களும், வாசக மனநிலையில இருக்குறவங்களும் ஒரு இணைய இதழை ஆரம்பிச்சு வெற்றிகரமா நடத்தீட்டு இருக்குறதை நாம பார்க்குறோம். நடுகல் இதழ் எப்போ அதுக்குள்ள நுழையும்?

கண்டிப்பா நுழையும். எனக்கு நண்பர்கள் உதவி மூலமா இப்பவே துவங்கிடலாம்.ஆனா இதழுக்காக இப்ப வர்ற படைப்புகள் மாதிரி இணையத்துல நான் வெளியிட முடியாது. நடுகல் சிறந்த வாசகர்கள் நேரா உள்ள வர்ற மாதிரிதான் பண்ணுவோம். நெருங்கிய நண்பர்கள் கதை குடுத்து அதை நான் வாசிச்சு கொஞ்சம் நல்லாயில்லன்னு தெரிஞ்சதும் வேணாம்னு சொல்லி வேறு படைப்பை கேட்பேன். அந்த மாதிரி தான் இணையத்துல இயங்கணும். ஏன்னா குறுகிய ஒரு வட்டத்துக்குள்ள இருந்து பெரிய வட்டத்துக்கு போறோம். அப்ப அங்க இலக்கியத்துக்கு ஒரு தரம் இருக்கு. அதுல வர்ற படைப்புகளை பார்த்துட்டு எழுதீட்டு இருக்குற மற்ற படைப்பாளிங்க அதுல வந்தாத்தாண்டா சிறப்பா இருக்கும்னு நினைச்சு வரணும். அடுத்தவங்க பேசணும். எழுதுறவங்க பேசணும். அந்த அளவுக்கு அதை கொண்டு போறதா இருந்தால் மட்டும் தான் இணையத்துல நடுகல் வரும்.

நடுகல் பதிப்பகம் பெரும்பாலும் புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தீட்டு இருக்குது. கவிஞர்கள், கதையாசிரியர்கள் அப்படின்னு முதல் தொகுப்பு போடுறீங்க. இதழும் அதே வேலையைத்தான் செய்யுது.அந்த புதிய எழுத்தாளர்களின் எழுத்துகள் திருப்தியா இருந்திருக்கா உங்களுக்கு?

நடுகல் போடுற அத்தனை புத்தகங்களுமே திருப்தியா இருந்ததாலா தான் போட்டது. பதிப்பகம் ஆரம்பிச்ச புதுசுல நான்கு புத்தகங்கள் கொண்டு வந்தோம். அதுல தஞ்சை ப்ரகாஷின் ‘கள்ளம்’ நாவலை கொண்டு வந்தோம். அந்தப்புத்தகம் மட்டும் முழுசா காலியாச்சு. என்னோட அப்புச்சி வழி அதற்கடுத்து போச்சு. அப்புறம் ரெண்டு புத்தகங்களும் நார்மலாத்தான் போச்சு. இப்ப கொடுங்கோளூர் கண்ணகி புத்தகம் சத்தியப்பெருமாள் பாலுசாமி புத்தகம் தீயா பறந்துச்சு. புதுசா போட்ட என்னோட நாவல் ’நெருஞ்சி’ போச்சு. இப்படி போகப்போக பதிப்பகத்துக்கு ஒரு பேரும் கிடைக்குது வெளியில. எந்த புக்கு எப்போ பேசப்படும்னு நம்மாள கண்டுபிடிக்க முடியாது. சரக்கு இருக்குற புக்கு தன்னால முன்னுக்கு வந்துடும்னு நம்புறேன்.  மொழிபெயர்ப்பு புத்தகங்களை கொண்டு வர்ற பதிப்பகம் ஆரம்பத்துல நாலு ஐந்து புத்தகங்கள் ஹிட் ஆயிடுச்சுன்னு பரவலா பேசப்படுதுன்னு வச்சுக்குவோம். அப்புறம் அவங்க போடுற மொழிபெயர்ப்பு புத்தகங்கள் எல்லாமே நல்லா இருக்கும்னு பரவலா ஒரு பேச்சு உருவாகும். ஆனா அப்படி நடக்காது.

000

மதன் ராமலிங்கம்

விவசாயம் உயிர்மூச்சு என்றிருக்கும் ஈரோடு மாவட்டக்காரர். உங்கள் காட்டில் பூச்சிக்கொள்ளி மருந்தடிக்கணுமா? கூப்பிடுங்கள்! மற்றபடி புத்தக வாசிப்பாளராய் இருந்தவரை நடுகல் எழுத்தாளராக்கி அழகு பார்த்தது சமீப காலங்களில் தான். நடுகல் வாயிலாக ‘தொலாக்கெணறு’ தொகுப்பு வந்திருக்கிறது.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *