துதிக்கைத் துழாவல்
இரண்டாம் முறையாக
குளியலறையில் பார்த்தேன்
இருளில் மலர்ந்த ஒளியில்
கருப்பும் மஞ்சளுமாய்
தயங்கி நகர்ந்த உன்னை.
இரண்டாம் முறையாக
கொல். அதை என அதிர்ந்த குரலை
இரண்டாம் முறையும் மறுதலித்தேன்.
இரண்டாம் முறையாக
தீபாவளி சங்கு சக்கரமாய்ச்
சுருண்டிருந்த உன்னை
இரண்டாம் முறையும்
அதே குச்சியால்
அதே சிறு நெகிழி முறத்தில் தள்ளினேன்.
இரண்டாம் முறையும்
காற்றில் உன் துதிக்கைத் துழாவல்
எத்தனை அழகு
இரண்டாம் முறையும்
வீட்டிற்கு வெளியே அதே இடத்தில்
தவழ விட்டுச் சொன்னேன்.
மூன்றாவது முறையாக
குளியலறைக்குள் வராதே
அதிரும் குரலை
மூன்றாவது முறை
நான் இதுவரை மறுதலித்ததில்லை
2
முள்முடியை,
துருவேறிய ஆணிகளை அகற்றுகையில்
கடும் வேதனையில் சுருங்கி மீண்டது
அந்த அழகிய முகம்.
முக ரோமங்களெல்லாம் நனைய நனைய
பருகிய குவளை நீரில் அணைந்தது
அத்தனை வருட தாகம்.
இரத்தம் உறைந்திருந்த காயங்களையெல்லாம்
கழுவித் துடைத்து மருந்திட்டேன்.
புன்னகைத்தபடி அந்த இளைஞன் சொன்ன
வார்த்தைகளின் மொழியெதுவெனத்
தெரியவில்லையானாலும்
நன்றியென்பதை உணர்ந்தேன்.
பரவாயில்லை என்று சிரித்த என்னை
இறுகத் தழுவிக் கொண்டான்.
நானழிந்து
பிரபஞ்சத்தின் ஒரு குறுங் குறுங் துகளாகி
வாழ்வில் இதுவரை நானறியாத
பரவசப் பெருஞ்சுழலில் சுழன்று
நிகழுக்கு வந்த போது
என் உடலில்
அவனது இதமான வெம்மை மட்டுமே மீதமிருந்தது.
சாய்ந்திருந்த,குருதியுறைந்த மர வழவழப்பை
தடவின என் கைகளில்
அதே அதே இதமான வெம்மை.
—
ஜி சிவக்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்.வேதியியலில் முனைவர் பட்டம்
பெற்றுள்ளார்.தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி இயக்குனராகப் பணி
புரிந்து வருகிறார்.கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதோடு,பயணங்கள் செய்வதிலும்
புகைப்படம் எடுப்பதிலும் விருப்பம் கொண்டவர்.ஆனந்த விகடன், கணையாழி, காணி
நிலம்,புரவி இதழ்களிலும், கொலுசு,கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது
கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.புல்லாங்குழல்களைச் சுவைக்கும்
யானை, ஆத்மாநாமின் கடவுள் என்ற இரு கவிதைத் தொகுதிகளையும்,, வெம்புகரி
என்ற சிறுகதைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார்