1
சொரசொரப்பான சுருக்கங்கள் உலுக்கித்தான்
காலையில் விழித்தேன்.
நீங்கள்
கடைசியாக எப்போது யானையைப் பார்த்தீர்கள்?
2
பரம்பிக்குள வனத்தில் பார்த்ததும்
திருஆவினன்குடி கோவில் வாசலில் பார்த்ததும்
அதே யானைதான்
அதே யானையல்ல
3
கும்கி திரைப்படத்தில்
நீங்கள் பார்த்தது பொம்மனையா?
அல்லியையா?
நான் பார்த்தது மாணிக்கத்தைத்தான்
4
அத்தனை பெரிய யானையைப்
பின் தொடர்கிறது
அத்தனை சிறிய வண்ணத்துப் பூச்சி
5
பாதை மாறும் குட்டியை
துதிக்கையால் இழுக்கிறது தாய் யானை
நீயில்லாமல்தானே
இப்படியானேன் அம்மா?
6
வளமொன்றின் கல்லறையில் வசிக்கும்
நீங்கள் அறிந்ததில்லை
அது
யானையின் வலசைப் பாதை
7
யானை சாலையைக் கடக்கிறது
என்கிறீர்கள்
அதன் பாதையில்
இரு சக்கர வாகனத்தில் கடக்கின்ற நீங்கள்.
8
வன உலாவொன்றில்
எப்போதாவது பார்க்கிறீர்கள்
வழிகாட்டியின்,உடனிருப்பவர்களின் வார்த்தைகளில்
சதா அசைந்த கொண்டிருக்குமொரு
வன யானையை
9
இவ்வளவு அலைந்தும்
யானையைப் பார்க்கவில்லையே என
சலித்துக் கொள்கிறீர்கள்
இரண்டாவது வளைவிலேயே
யானை உங்களைப் பார்த்ததை அறியாமல்
10
நடக்கும் கால்களில் சங்கிலி இழுபடுகிறது
பரவாயில்லை
குறைந்தபட்சம்
அது
தன் காட்டிலேயே இருக்கிறது
00
ஜி சிவக்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்.வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார்.
வெம்புகரி என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை, ஆத்மாநாமின் கடவுள், தோடுடைய செவியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்