1

                  23 டிசம்பர் 1964

        தனுஷ்கோடி

தேவாலயம்,இரயில் நிலையம் என

புயற் கடல் உண்ட மீதத்தை

புகைப்படங்களில், தற்படங்களில்

பதிவு செய்கிறார்கள்

பேசாச் சங்கின் இல்லா ஒலியை

காதில் வைத்துக் கேட்கிறார் ஒருவர்

பெண்களை பரிதவிக்க வைக்கிறது

வலுவான மணற் காற்று.

தேவாலய பலிபீடத்தில்

மண்டியிட்டு ப்ரார்த்திப்பவர் முன்

உயிர்த்தெழுகிறது தேவாலயம்

எழுந்து நின்று வெறிக் கூச்சலிடும் கடலைப்

பார்த்து.

காற்றின் சன்னதத்தை,

கரையும் உயிர்களின் பேரோலத்தைக்

கேட்டு அதிர்கிறான்

சிதைந்த சுவரின் மேல் சாய்ந்திருப்பவன்..

உறங்கிக் கொண்டிருப்பவர்களை

விழித்திருப்பவர்களை

இறங்கத் தயாராகிக் கொண்டிருப்பவர்களை

கழிவறைக்குள் இருப்பவர்களை

ஆயிரம் கருங் கரங்கள் நீட்டி

நெருங்குகிறது

அவர்கள் அறிந்திராத கடல்.

2

           தனுஷ்கோடி

           ஆவிகள் நகரம்

வரிசை ஒழுங்கில் நகர்கிற

மணலை வாரித் தூற்றி

ஒலமிடுகிறது காற்று.

சூடான கல்லில் பொரிந்து கொண்டிருக்கின்றன

மணல் மீன்கள்.

திரும்பி நில்லுன்னா கேக்கறியா

கண்ண நல்லாத் திற

மணற் துகளை ஊதியெடுக்கிறார் ஒருவர்.

வாகனங்களில் ஏறுபவர்களின்

தலைகளில்,உடலில், உடைகளில் அமர்ந்திருக்கிறது

அலைகளை, ஆவிகளைப் பார்த்துச் சலித்த மணல்.

ஜி சிவக்குமார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்.வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி இயக்குனராகப்  பணி புரிந்து வருகிறார்.கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதோடு,பயணங்கள் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும் விருப்பம் கொண்டவர்.ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம்,புரவி இதழ்களிலும், கொலுசு,கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. வெம்புகரி என்ற சிறுகதைத் தொகுப்பு  மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை,ஆத்மாநாமின் கடவுள்,தோடுடைய செவியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *